in ,

விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 1) – முகில் தினகரன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

2002ம் வருடம்.

“ஏய்… அப்பா மட்டும் போகட்டும் நீ போக வேண்டாம்” தாய் மகளைத் தடுக்க

“இல்லை முடியாது… நானும் அப்பா கூடப் போவேன்” அந்த நான்கு வயதுச் சிறுமி அடம் பிடித்தாள்.

“எங்கே அந்த வெண்ணிலா?… எங்கே அந்த வெண்ணிலா?… கல்லைக் கனியாக்குவாள்.. முள்ளை மலராக்குவாள்… எங்கே அந்த வெண்ணிலா?” பக்கத்து விட்டுத் தொலைக்காட்சியில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

“சரிடி… அவளும் என் கூட வந்திட்டுப் போகட்டும்… உனக்கென்ன?” தந்தை  மகளுக்கு ஆதரவாய்ப் பேச

“ஏங்க… நீங்க என்ன கோயிலுக்கா போறீங்க? கோழிக்கடைல போய் கறி வாங்கிட்டு வரப் போறீங்க… அதுக்கு எதுக்கு இந்தச் சின்னப்பெண்?” தாய் விடாமல் உறுதியாய் நின்றாள்.

“இருக்கட்டுமே… அதனாலென்ன?… அங்க வந்து பாரு… எத்தனை பொம்பளைக வந்து கறி வாங்கிட்டுப் போறாங்கன்னு… நான் என் பொண்ணை மிலிட்டரில சேர்த்து பெரிய ஆபீசராக்கலாம்னு இருக்கேன்… நீ என்னடான்னா கறிக்கடைக்குக் கூட்டிட்டுப் போக வேண்டாம்கறியே?” சொல்லிக் கொண்டே மகள் பக்கம் திரும்பி, “குட்டிம்மா… நீ வாம்மா என் கூட” என்று சொல்லி, மகளைத் தன் டி.வி.எஸ்-50 வண்டியில் டபிள்ஸ் ஏற்றிக் கொண்டு, கோழிக்கடையை நோக்கி விரட்டினார் அந்த தந்தை.

கோழிக்கடையில், “அய்யா… உங்களுக்கு எவ்வளவு?” கடைக்காரன் கேட்க,

“அதோ… அந்தச் சின்னக் கோழியை எடுத்து வெய்ட் போட்டு… அதையே உரித்துக் குடு” என்றார் தந்தை.

கடைக்காரன் அந்தக் கோழியை எடுத்து, அதன் கழுத்தைத் திருகி, பக்கத்திலிருந்த பெரிய டிரம்முக்குள் போட, அது  அந்த டிரம்மா அதிரும் வகையில் “டங்கு… டங்கு” என்று துடித்தது.

அந்தக் கடைக்காரன் கோழியின் கழுத்தைத் திருகுவதையும், அது ஹீனக் குரலில் கத்துவதையும், பின்னர் டிரம்முக்குள் கடைசி நேரக் காட்சியாய் அது துடிப்பதையும் ஆர்வத்தோடு பார்த்து கைதட்டி ரசித்தாள் அச்சிறுமி. வீடு திரும்பியதும் தாயிடம் அதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தாள்.

“ச்சீய்… வாயை மூடுடி… கோழி கழுத்தைத் திருகுவதைப் பார்த்தா நல்லா இருந்திச்சாம்… டிரம்முக்குள்ளார அது துடிப்பதைப் பார்த்தா குஷியா இருந்திச்சாம்… வெளிய நாலு பேர் கேட்டாங்கன்னா சிரிப்பாங்க” என்றாள் தாய்.

அதுவே தொடர்கதையாகி, ஒவ்வொரு முறை தன் தந்தை கோழிக்கடைக்குச் செல்லும் போதேல்லாம், தாயின் எதிர்ப்பை தந்தையின் ஆதரவோடு முறியடித்து, கோழிகளின் கழுத்துத் திருகலையும், கடைசி நேரத் துடிப்பையும் கண்டு கண்டு மகிழ்ந்திருந்தாள் அந்த நான்கு வயதுச் சிறுமி.

மகளைச் சந்தோஷப்படுத்துகிறோம் என்கிற திருப்திக்காக அந்தத் தந்தையும் மகளை தன்னுடன் அழைத்துச் செல்வதை வழக்கப்படுத்திக் கொள்ள, அது எதிர்கால விபரீதம் என்பது பாவம் அவருக்குத் தெரியாது.

2011ம் வருடம்

அவர் அந்த அலுவலகத்தில் கிளார்க். மற்றவர்கள் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் தன் பணியில் கருமமே கண்ணாயிருப்பவர்.

அப்போது அவர் மேஜையிலிருந்த போன் ஒலிக்க, எடுத்தார். எதிர்முனையில் டெலிபோன் ஆபரேட்டர். “சார்… உங்களுக்கு வீட்டிலிருந்து போன்”. இணைப்பைக் கொடுத்து விட்டு அவள் வெளியேற, அவர் மனைவி லைனுக்கு வந்தாள்.

“உங்க அருமை மகள் ஸ்கூல்ல ஏதோ விஷமம் பண்ணிட்டா… தலைமை ஆசிரியர் உடனே உங்களையும் என்னையும் வரச் சொல்லுறார்… ஆபீஸ்ல பர்மிஸன் போட்டுக்கிட்டு கிளம்பி வாங்க”

மனைவியின் குரலில் கோபமும், பதட்டமும் சரிவிகிதத்தில் கலந்திருக்க, அவள் சொன்னது போலவே ஆபீஸ் மேனேஜரிடம் கெஞ்சி பர்மிஸன் வாங்கிக் கொண்டு அடுத்த இருபதாவது நிமிடம் அவர் வீட்டுக்கு வந்து, காத்திருந்த மனைவியை பைக்கின் பில்லியனில் ஏற்றிக் கொண்டு ஸ்கூலை நோக்கி விரைந்தார்.

போகும் வழியில் மனைவி புலம்பிக் கொண்டே வந்தாள்.  “ஹும்… இந்தச் சனியன் என்ன பண்ணி வெச்சிருக்கோ தெரியலையே?”

“ச்சூ… கொஞ்சம் அமைதியா வர்றியா?” எரிச்சலானான் கணவன்

கேட்டிலிருந்த வாட்ச்மேனிடம் தலைமை ஆசிரியரின் அறை எங்கே என்று கேட்டுக் கொண்டு அவன் காட்டிய திசையில் நடந்தனர் கணவனும், மனைவியும்.

அங்கே காத்திருந்த ஒரு ஆசிரியை, “நீங்கதான் வித்யாவோட பேரண்ட்ஸா?” என்று கேட்டு விட்டு அவர்களை தலைமை ஆசிரியர் அறைக்குள் அனுப்பினாள்.

“உட்காருங்க” என்ற தலைமை ஆசிரியரின் தலையில் சுத்தமாய் முடியே இல்லை. அவருக்கு எதிர் சேரில் இருவரும் அமர்ந்தனர்.  சற்றுத் தள்ளி இரு கைகளையும் கட்டிக் கொண்டு தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தாள் அவர்களின் அன்பு மகள்.

“உங்க பொண்ணுக்கு மனநிலை நல்லாத்தானே இருக்கு?” எடுத்த எடுப்பில் தலைமை ஆசிரியர் அப்படிக் கேட்க,

“என்ன சார்… என்ன கேள்வி இது?… விட்டா என் பொண்ணுக்கு பைத்தியம்ன்னு சொல்லுவீங்க போலிருக்கு” கோபமானார் தந்தை.

இடையில் புகுந்த தாய், “மொதல்ல விஷயம் என்ன?ன்னு சொல்லுங்க சார்” கோபமாய்க் கேட்டாள்.

“இந்த ஸ்கூல்ல ஒண்ணாம் கிளாஸ் படிக்கற முருகன் என்னும் சிறுவன்கிட்ட உங்க மகள், கண்ணைக் கட்டி விளையாடலாம்?ன்னு சொல்லி, அவன் கண்களில் ஹேண்ட் கர்ச்சீப்பைக் கட்டி அவனை நைஸா கூட்டிட்டுப் போய், ஸ்கூலுக்குப் பின்னாடி விளையாட்டு மைதானத்தில் மூலையில் இருக்கற பெரிய எறும்புப் புற்றுல கொண்டு போய் நிறுத்திட்டு ஓடி வந்திட்டா… புற்றிலிருந்த செவ்வெறும்புகள் அந்தப் பையன் உடல் முழுவதும் ஏறி… கடிச்சு… உடம்பெல்லாம் தடிச்சு… அவனை பக்கத்து ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போயிருக்காங்க டீச்சர்ஸ்”

திரும்பி தன் மகளைப் பார்த்து முறைத்த தாய், “ஏண்டி சார் சொல்றது உண்மையா?” கேட்டாள்.

அவள் பதிலேதும் சொல்லாமல் அமைதி காக்க, “தங்கம்… என்கிட்ட சொல்லும்மா…. சார் சொன்ன மாதிரி நீ செஞ்சியா?” தந்தை அன்போடு கேட்டதும், தலையை மேலும் கீழுமாய் ஆட்டினாள் சிறுமி.

“அது மட்டுமில்லை… அந்தப் பையனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிட்டு நான் இவளைக் கூப்பிட்டு விசாரிச்சேன்… அதுக்கு உங்க பொண்ணு என்ன பதில் சொன்னா தெரியுமா?…”

“சொல்லுங்க சார்… என்ன சொன்னா?”

“எறும்புக்கடி தாங்க முடியாம அவன் கையையும் காலையும் உதறிக்கிட்டுத் துடிக்கறதைப் பார்த்தா… கோழிக்கடைல கோழியோட கழுத்தைத் திருகி டிரம்முக்குள்ளார போட்டா அது துடிக்குமே அதே மாதிரியிருக்கு சார்ன்னு சொல்றா” தலைமை ஆசிரியர் சொல்ல, தலையைத் திருப்பி தன் கணவரை முறைத்தாள் அப்பெண்.

மனைவியின் முறைப்புச் சூட்டைத் தாங்க முடியாத கணவர், மகளைப் பார்த்து, “சரிம்மா… அதுல உனக்கு என்னம்மா சந்தோஷம்?” கேட்டார்.

“அப்பா… கோழி துடிக்கறதைப் பார்க்கும் போது எவ்வளவு சந்தோஷமாயிருந்திச்சோ அதே மாதிரிதான் இந்தப் பையன் துடிக்கும் போதும் இருந்திச்சு” சற்றும் தயங்காமல் அச்சிறுமி சொல்ல

“உங்க பொண்ணுக்கு மனநிலை சரியாயிருக்கான்னு நான் கேட்டதுக்கு ரெண்டு பேரும் கோபப்பட்டீங்களே… இப்பச் சொல்லுங்க நான் சொன்னதுல என்ன தப்பிருக்கு?” தனது வழுக்கைத் தலையைத் தேய்த்தவாறே அவர் கேட்க, பெற்றோர்களால் எந்த பதிலும் கூற முடியவில்லை.

“சார் சார்… அவ குழந்தை சார்!… அவ சார்புல நாங்க மன்னிப்புக் கேட்டுக்கறோம்… மன்னிச்சிடுங்க சார்” என்றார் தந்தை.

“இன்மே இந்த மாதிரி நடக்காதபடிக்கு அவளைக் கண்டிச்சு வைக்கிறோம் சார்” என்றாள் சிறுமியின் தாய்.

“இங்க பாருங்க… இதுதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங்!… இனிமே இந்த மாதிரி ஏதாச்சும் நடந்தா… நீங்க உங்க பொண்ணை வேற ஏதாவது ஸ்கூல்ல சேர்த்திட வேண்டி வரும்”

“இல்லை சார்… வராது சார்” என்று சொல்லி அவரைப் பார்த்துக் கும்பிட்டு விட்டு அந்த அறையை விட்டு வெளியேறினர்.

அங்கிருந்து திரும்பியதும் தாயின் அர்ச்சனைகள் முழுவதும் தந்தையின் மீதே விழுந்தன.

“படிச்சுப் படிச்சுச் சொன்னேன்… குழந்தையைக் கோழிக்கடைக்குக் கூட்டிட்டுப் போகாதீங்க போகாதீங்கன்னு என் பேச்சைக் கேட்காம அவளை தெனமும் கூட்டிட்டுப் போனீங்க… இப்ப என்ன ஆயிருக்கு பார்த்தீங்களா?… அந்த ஹெட்மாஸ்டர்… தேங்காத் தலையன்… உங்க பொண்ணுக்கு பைத்தியம்ன்னு சொல்லாம சொல்றான்!… இதெல்லாம் நமக்கு தேவையா?… நாளைக்குப் பெரிசான பிறகும் இதே குணம் நீடிச்சா இவ வாழ்க்கை என்ன ஆகிறது?!… கல்யாண மார்க்கெட்டுல இவளைச் செலுத்தவே முடியாது”

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    செல்வியா கொக்கா (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    முத்துமணிமாலை (சிறுகதை) – கவிஞர் இரஜகை நிலவன்