in ,

விழி நீர் பூ (சிறுகதை) – இரஜகை நிலவன்

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

மழைத்தூறல் போட்டுக் கொண்டிருந்தது. அவன் கையில் குடை இல்லாததால் கையில் இருந்த கர்ச்சிப்பை தலையில் போட்டுக் கொண்டு அந்த குறுகிய பாதைக்குள் ஓடி அந்த வீட்டைக் கண்டுபிடித்துக் கதவை தட்டினான்.

பக்கத்து வீட்டிலிருந்து எட்டிப் பார்த்த வயதான பெண்மணி, “பத்மினி வெளியே போயிருக்காங்களே. நீங்க ரெகுலரா வர்ரவரா?…” என்று கேட்டாள்.

“ஆமாம்..” என்று தலையாட்டினான் தினேஷ்.

“அப்படி திண்ணையிலே உட்காருங்க இப்போ வந்து விடுவாள் பத்மினி” என்று சொல்லிவிட்டு மறைந்து போனாள்.

அவனுக்கு அந்தச் சூழ்நிலையில் பத்மினியை சந்தித்தது மிகவும் அருவருப்பைத் தந்தாலும் அவளை எப்படியாவது அந்த சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து மீட்டு விட வேண்டும் என்ற தவிப்பு இருந்தது.

அப்போது ஆட்டோவில் வந்து இறங்கிய பத்மினி அவனைக் கவனிக்காமல் கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.

அவள் பின்னால் உள்ளே நுழைந்த தினேஷை திரும்பிப் பார்த்து “உன்னை எத்தனை முறை இங்கே வராதே என்று சொல்லியிருக்கிறேன்” என்று கத்தினாள்.

“நீ வியாபாரம் செய்கிறாய், நான் உன் தொழில் கஸ்டமர். பணம் தருகிறேன். என்னை வரக் கூடாது என்று சொன்னால் நீ இங்கே தொழில் நடத்தக் கூடாது.”

“என்னைக் கொல்லாதே தினேஷ் நீ எல்லாம் வரக் கூடிய இடமா இது?…”

“அதைத்தான் திருப்பிக் கேட்கிறேன் பத்மினி. நீ எல்லாம் இருக்கக் கூடிய இடமா இது…?”

“ஏதோ சுகம் தேடி வந்தாய் கிடைத்தது. போய் விட வேண்டும். இங்கே எத்தனையோ ஆயிரம் பெண்கள் தொழில் செய்யும் போது என்னை மட்டும் வெளியே வந்து விடு என்கிறாயே இதற்கு என்ன அர்த்தம்?”

“உன் மேலுள்ள தீராத காதல்…”

“மண்ணாங்கட்டி. காதலிக்கிறதுக்கும் காதலிக்கப்படுவதற்கும் கூட சில அருகதைகள் உண்டு தெரியுமா?”

“காதலுக்கு கண்ணில்லை என்பது தெரியுமா?”

“அப்படி என்னிடம் எதைக் கண்டாய்? சுகம் வேண்டுமா? எடுத்துவிட்டு காலி பண்ணு. மேல்மட்ட வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவனின் காம சுகத்திற்கு பலியானதால்தான் நான் இங்கு வந்தேன் என்பது உனக்கே நன்றாகத் தெரியும். வீணாக என் சோகக் கதையை கிளப்பாதே. இது எனக்குத் தொழில் நேரம்….”

“எவ்வளவு பணம் சம்பாதிப்பாய் என்று சொல் நான் தருகிறேன். ஆனால் என் கேள்விக்குப் பதில் தராமல் நான் வெளியே போகப் போவதில்லை. மேல்மட்ட வர்க்கத்தின் ஒருவனுடைய செயலுக்கு நான் பிராயச்சித்தம் தேடி விட்டுப் போகிறேன்..”

“நான் இப்போது சத்தம் போட்டால் இங்குள்ளவர்கள் உன்னை அடித்து துவைத்து விடுவார்கள் தினேஷ் இந்த நாற்றமடிக்கும் உடம்பை இனிக்கழுவி நடுவீட்டில் நடமாட விடலாம் என்று கனவு காணாதே போய்விடு….”

“தாமரைப்பூ சேறு நிறைந்த குளத்தில் தான் பூக்கிறது. வேண்டுமென்றால் சத்தம் போடு எல்லோரும் என்னை வந்து அடித்து துவம்சம் செய்யட்டும். அப்படியாவது பத்மினியின் மேலுள்ள காதல் அவர்களுக்கு நன்றாகத் தெரியட்டும்”

“தினேஷ் இது எப்படிப்பட்ட இடம்? நீ நினைக்கிற மாதிரி என்னை அழைத்துக் கொண்டு போக முடியாது.”

“அது கூட தெரியாத சின்ன பாப்பாவா நான். உனக்கும் ஒரு விலை உண்டு. பணத்தை அள்ளி வீசினால் அவர்கள் தானாகவே அழைத்துக் கொண்டு செல் என்று கூறுவார்கள்.”

“சரி என்ன வேண்டும் உனக்கு..?”

“உன் காதல்…”

“ஓ! அது புனிதமானது அதைக் களங்கப்படுத்தாதே. ஒருமுறை காதலித்ததற்காக அழகான சிவப்பு விளக்குச் சிறைச்சாலை கிடைத்திருக்கிறது, தினேஷ்”.

“என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய்?”

“இங்கிருந்து வெளியே வந்து என்னை மணந்து கொண்டு என் இல்வாழ்க்கை துணைவியாக குடும்பம் நடத்து என்கிறேன்.”

“யோசித்துப் பார்த்தாயா? முதலில் உன் பெற்றோர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்களா? மேலும் காலமெல்லாம் மற்றவர்கள் என்னைப் பார்க்கும் போது வேசியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கிறான் பார் என்று உன் முதுகுக்கு பின்னால் சொல்ல மாட்டார்களா?”

“நன்றாக யோசித்து முடிவு பண்ணிய பின்னர் தான் வந்திருக்கிறேன் பத்மினி…”

“சரி இருந்து சாப்பிட்டு விட்டு தூங்கு. நன்றாக யோசி. நாளைக்கு உன் அப்பா அம்மாவிடம் கேட்டு விட்டு வா… மற்றவைகளைப் பேசிக் கொள்ளலாம்” என்றாள் பத்மினி.

தினேஷின் அப்பா செல்லுலார் போனில் பேசி முடித்து விட்டு தினேஷைக் கூப்பிட்டார்.

“என்னப்பா?”

“அடிக்கடி அந்த ரெட் லைட் ஏரியாவிற்கு போகிறாயாமே உனக்கு வெட்கமில்லையா?”

“இல்லை… நீங்கள் தனியாக பங்களா கட்டி அங்கே பெண்களை ஆடுமாடுகள் மாதிரி வைத்துக் கொண்டு ஆட்டம் போடுகிறீர்களே… அதை விட இதில் வெட்கப்பட ஏதுமில்லை.”

“எதிர்த்தா பேசுகிறாய்? யாரோ பத்மினி என்கிற அந்த வேசி பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள போகிறாயாமே?”

“அவளைக் காதலிக்கிறேன். அவளையே திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.”

“தினேஷ் நம் ஸ்டேட்டஸ் என்ன அந்தஸ்த்து என்ன ஆஃப்டர் ஆல் ஒரு வேசிப் பெண்ணை காதலிக்கிறேன் என்கிறாயே உனக்கு என்ன ஆயிற்று?”

“அந்தஸ்து. எல்லாம் உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு அந்த பத்மினியைக் கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா என்று சொல்லுங்கள்.?”

“யூ ராஸ்கல்” என்றவாறு அவர் கையை ஓங்க, தடுத்தாள் அவர் மனைவி.

“அப்பா.. தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன். நான் உங்களை எதிர்த்து அடிக்க எவ்வளவு நேரம் ஆகும்.?”

“தினேஷ் நம்முடைய பக்கத்து பங்களா ராவ் பகதூர் ஜமீனிலே உனக்கு பெண் தருவதாக சொல்லியிருக்கிறார்கள். கார், பங்களா என்ன வேண்டுமோ வாங்கி தர தயாராக இருக்கிறார்கள் அதை விட்டு…”

“அப்பா சும்மா பணம் காசு என்று சொல்லிப் போரடிக்காதீர்கள் அலுத்துப் போன விஷம் இது. பத்மினியை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா.. முடியாதா?” என்றான்.

செல்போனை எடுத்து ஆன் பண்ணினார் தினேஷின் அப்பா. அருகில் யாருமில்லை என்று தலையைத் திருப்பிப் பார்த்துக் கொண்டு “ஹலோ டி.எஸ்.பி நான் தியாகராஜன் பேசுகிறேன். நான் சொன்ன விஷயம் என்னவாயிற்று?”

“நேற்று முழுவதும் தேடிப்பிடித்து அந்த சிவப்பு விளக்கு பகுதியிலேயிருந்து பத்மினிங்கிற பெண்ணை ராத்திரி பதினொரு மணிக்கு கொண்டு வந்திட்டாங்க…”

”அப்புறம்..”

“உங்களுக்குத்தான் தெரியுமே?”

“கொன்னுடல்லியே…”

“இல்லை சார். காலையிலே பெண்கள் ஜெயிலுக்கு அனுப்பி விட்டோம்.”

“என் பையனுக்கு எக்காரணம் கொண்டும் பத்மினி ஜெயிலில் இருப்பது தெரியக்கூடாது.”

“ஓ.கே..சார்.”

மறுநாள் அந்தச் சிவப்பு விளக்குப் பகுதி முழுவதும் தேடிய தினேஷ் அலைந்து திரிந்து விபரங்களை பணத்தை விட்டெறிந்து தெரிந்து கொண்டு பெண்கள் ஜெயிலுக்கு பத்மினியை பார்க்க கிளம்பினான்.

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காதலில் வீரன் (சிறுகதை) – இரஜகை நிலவன்

    இனியொரு காதல் செய்வோம் (சிறுகதை) – இரஜகை நிலவன்