2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
வருடக்கணக்கில் இழுத்துக் கொண்டிருந்த வழக்கு ஒரு வழியாக முடிந்து, கிராமத்து பூர்வீக வீடு எனக்கே! என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சொத்தின் மதிப்பிற்காக இல்லாமல் போனாலும், பூர்வீகச் சொத்தை இழக்க மனமில்லாமல்தான் இத்தனை காலம் கேஸை இழுத்து, இறுதிக்குக் கொண்டு வந்தேன். மூன்று வக்கீல்கள் மாறிய பின் நான்காவது வக்கீல்தான் நல்லதோரு தீர்ப்பைப் பெற்றுத் தந்தார்.
அடுத்த இரண்டாம் நாளே கட்டிட காண்ட்ராக்டரை கையோடு அழைத்து வந்து அந்த வீட்டை எங்கெங்கு இடித்து, எப்படியெப்படி மாற்றம் செய்ய வேண்டும், என்பதை விலாவாரியாகச் சொல்லி முடித்தேன்.
“அப்பாடா” என்று முன்புற பெரிய திண்ணையில் வந்தமர்ந்த போதுதான் கவனித்தேன். சற்று தூரத்தில் கிட்டத்தட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் என்னையே உற்றுப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர்.
“இவங்க எதுக்கு என்னையே பார்த்திட்டு நிக்கறாங்க?” யோசனையுடன் அவர்களை அருகில் அழைத்தேன். தயங்கியபடியே வந்தனர்.
“என்ன விஷயம்? எதுக்கு என்னையே பார்த்திட்டு நிக்கறீங்க?” கேட்டேன்.
“அது… வந்து… மொதல்ல இந்த தெருல அஞ்சு வீட்டுல பெரிய திண்ணை இருந்திச்சு…. அதுல… நாலு வீட்டுல… அதையெல்லாம் மறைச்சு… ரூம் ஆக்கிட்டாங்க!… இந்த ஒரு வீட்டுல மட்டும்தான் திண்ணை இருக்கு… இதையும் நீங்க இடிக்கப் போறதா ஊருக்குள்ளார பேசிக்கறாங்க…” இருப்பதிலேயே சற்றுப் பெரியவனாய் இருந்த ஒரு சிறுவன் சொல்ல
“ஆமாம்… இடிக்கப் போறோம்!… இடிச்சு இந்த வீட்டை புதுசா மாத்தப் போறோம்!… அதுக்கென்ன இப்ப?”
“அதான்… இதை இடிக்க வேண்டாம்னு சொல்ல வந்தோம்!” எல்லோரும் கோரஸாய் சொல்ல,
எனக்கு சிரிப்புத்தான் வந்தது. நான்தான் அந்த வீட்டின் உரிமையாளன், அதை இடிக்கும் உரிமை உள்ளவன், என்னை யாரும் கேட்கவும் முடியாது, தடுக்கவும் முடியாது, என்பதையெல்லாம் சற்றும் உணர்ந்திடாத அந்தக் குழந்தைகளின் அறியாமை எனக்கு தமாஷாய்த் தோன்றினாலும், அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், “ஏன்… ஏன் அப்படிச் சொல்லுறீங்க?” கேட்டேன்.
“நாங்க சந்தோஷமா வெளையாடறதுக்கும்… அப்பப்ப படுத்து உருள்றதுக்கும்… ஒவ்வொருத்தர் வீட்டிலிருந்தும் ஒவ்வொரு பொருள் எடுத்திட்டு வந்து… கூட்டாஞ்சோறு சமைக்கறதுக்கும்… சமைச்சதைப் பந்தி போட்டு… உட்கார்ந்து சாப்பிடறதுக்கும்… எங்களுக்குன்னு இருக்கறது இந்த ஒரு திண்ணைதான்… அதையும் நாங்க இழந்திடக் கூடாது!ன்னு தான்… உங்ககிட்ட இதை இடிக்க வேண்டாம்னு சொல்ல வந்தோம்!” என்றாள் ஒரு சிறுமி.
என்னுடன் வந்திருந்த கட்டிட காண்ட்ராக்டர் கடுப்பானார். “ஏண்டா… உங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லையா?… வந்திட்டானுக… “திண்ணையை இடிக்காத… தேங்காயைப் பறிக்காதே”ன்னு பேசிக்கிட்டு… போங்கடா… வெளையாட இடமில்லேன்னா போயி… இட்டேரில வெளையாடுங்கடா!”
நான் அவரைத் தடுத்தேன். “துரை… கொஞ்சம் பொறுங்க… இவங்க கேட்டதுல என்ன தப்பிருக்கு?… இந்த வயசுல அவங்க அனுபவிக்கற… அனுபவிச்சிட்டிருக்கற ஒரு சந்தோசம் பறி போகுதுங்கற போது அதைக் கேட்கறதுல என்ன தப்பு?… சொல்லப் போனா… யாருடைய சந்தோஷத்தையும்… யாரும் தட்டிப் பறிக்க முடியாது… தட்டிப் பறிக்கவும் கூடாது!”
“என்ன விஸ்வநாதன் சார் நீங்க?… இதுக சொல்லுதுகன்னு….” சொல்லி விட்டு அந்தக் குழந்தைகளைப் பார்த்து முறைத்தார் காண்ட்ராக்டர்.
“இல்லை துரை… யோசிச்சுப் பார்த்தேன்… நானும் என்னோட சின்ன வயசுல இது மாதிரி பல சின்னச் சின்ன சந்தோஷங்களை பறி கொடுத்திருக்கேன்! அப்பெல்லாம் எதுவும் செய்ய வகை தெரியாம… அழுதிருக்கேன்! இன்னிக்கு இதுக என்னைப் போல் அழுதிட்டுக் கிடக்காம… நேர்ல வந்து தைரியமா கேட்குதுக பாரு… அதைப் பாராட்டணும் முதல்ல!.. நமக்கு வேணும்கறதை நாமதான் கேட்டுப் பெறணும்… அதுகளுக்குத் தெரிஞ்சிருக்கு பாரு… அதுதான் எழுச்சி…”
“சரி சார்… அதுக்காக… நாம அதுக பேச்சைக் கேட்கணுமா?”
“கேட்டாத் தப்பில்லையே?…” என்று நான் சொல்ல, என்னை வினோதமாய்ப் பார்த்தார் காண்ட்ராக்டர்.
“அதனால நீங்க என்ன பண்றீங்க?… அந்த திண்ணையை மட்டும் அப்படியே விட்டுட்டு மத்ததை எல்லாம் நான் சொன்ன மாதிரி இடிச்சுக் கட்டிடுங்க!” என்றேன் நான்.
“ஹைய்ய்ய்ய்யா” கத்தியபடி ஓடிய சிறுசுகளைப் பார்க்க, எனக்குள் ஒரு நிறைவு ஏற்பட்டது. வழக்கு என் பக்கம் தீர்ப்பாகிய போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட அதிக மகிழ்ச்சியை என் உள்ளம் அனுபவித்தது.
காண்ட்ராக்டர் மட்டும் எதுவும் புரியாமல் “திரு…திரு”வென்று விழித்துக் கொண்டு நின்றார்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings