எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“இவ்வளவு சின்ன விலையுள்ள பொருளை எல்லாம் திருடுறாங்களா..?”
குமரன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் முதலாளி ஆச்சரியத்துடன் கேட்டார்.
“ஆமாம் ஸார்” என்ற மேனேஜர் ராகவன்..
“இந்த மாசம் சிசிடிவி பார்த்தப்போ தெரிய வந்துது.. ஒரே மாதிரியான தப்பை அதே வாடிக்கையாளர் இரண்டு மாசமா செய்றார்..”
“பேரு..?”
“சுப்புரத்தினம்.. மாசாமாசம் மொத்தமா தான் சரக்கு வாங்குறார்.. அடுத்த மாசம் பத்தாம் தேதிக்குள்ள உறுதியா வருவார்..”
“ம்ம்.. என்ன செய்யப் போறீங்க..?”
“அடுத்தமாசம் அவரை கவனிப்போம்.. அதே தப்பை திரும்ப செஞ்சாருனா கையும், களவுமா பிடிச்சிட வேண்டியதுதான்..”
“சரி… பிடிச்சா… கூட்டிக்கொண்டு உங்க ரூம்ல தனியா விசாரிங்க… ஜனங்க நிறைய வர்ற இடத்தில தேவையில்லாம பிரச்சினையை பெரிசாக்காதீங்க..”
***
ராகவன் எதிர்பார்த்தபடியே சுப்புரத்தினம் ஒன்பதாம் தேதி தன் மனைவியுடன் அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வந்தார். அவர் டிராலியை எடுத்துக் கொண்டவுடன், ராகவன் தன் பக்கத்தில் இருந்த சிப்பந்தியிடம் சுப்புரத்தினத்தைக் காட்டி, “இவரு மேல கொஞ்சம் சந்தேகம் இருக்கு.. தூரத்தில் நின்னு இவரை கவனி..” என்றார்.
“சரிங்க ஸார்..” என்றவன், சுப்புரத்தினம் சென்ற இடங்களுக்கெல்லாம் பின்னாடியே சென்று, அவரை கவனிக்கத் தொடங்கினான்.
சுப்புரத்தினம் அறுபது வயதுக்கு மேலிருந்தார். திருத்தமாக உடை அணிந்தார். அவரது மனைவியும் சற்றும் குறைகூற முடியாத அளவில்தான் இருந்தார். அவர்களைப் பார்த்தால் பொருட்களைத் திருடுகிறவர்கள் போலத் தெரியவில்லை.
அவர் தன் கையில் உள்ள பட்டியலை வாசிப்பதும், அவரது மனைவி ஒவ்வொன்றாக எடுத்து அவரிடம் கொடுப்பதை, டிராலியில் போட்டுத் தள்ளிக்கொண்டு போவதுமாக இருந்தார்.
மளிகைப் பொருள்களில், விலை உயர்ந்த மிளகு போன்ற பாக்கெட்டில் ஒன்றை எடுத்து, தனது பேண்ட் பாக்கெட்டில் போட்டு மறைத்துக் கொள்வாரோ என எதிர்பார்த்த சிப்பந்திக்கு ஏமாற்றமாக இருந்தது.
சரி, சாக்லெட் பிரிவு போகும்போது ஏதாவது விலையுயர்ந்த சாக்லெட்டை எடுத்து மறைத்துக் கொள்வாரோ என அவன் பார்த்தான். ஆனால் அங்கேயும் அவனுக்கு ஏமாற்றம்தான்.
ஒருவழியாக எல்லாப் பொருட்களையும் எடுத்து முடித்து, அவர் பில்லிங் கவுண்டர் வந்தபோது, ராகவன் அவரை தனது அறைக்கு அழைத்து சென்றார்.
உள்ளே சென்ற சுப்புரத்தினம், ஐந்து நிமிடத்தில் திரும்ப வெளியில் வந்தபோது அவரது முகத்தில் இருந்தது வெட்கமா, வருத்தமா அல்லது இரண்டும் கலந்த கலவையா எனத் தெரியவில்லை.
அவர் கடையைவிட்டு வெளியேறி சென்றதும், மறுபடி வந்த மேனேஜர் ராகவனைப் பார்த்த சிப்பந்தி..
“ஸார்.. என்ன நடந்தது..?” என ஆவலாக கேட்டான்.
“இந்த மாதமும் திருடினார்.. அதுதான் அவரை உள்ளே தனியே கூப்பிட்டு எடுத்துச் சொன்னேன்.. முதலில் திகைத்தவர், அப்புறம் ஒத்துக்கிட்டார்.. விளையாட்டாய் செஞ்சேன்னார்.. இங்கே எல்லா பொருளுக்கும் கணக்கு இருக்கு.. ஏதாவது விடுதல் இருந்தா என்னையும் சேர்த்து எங்க முதலாளி சந்தேகப்படுவார்னு சொன்னேன்..”
“ம்ம்..?”
“சின்ன வயசில இருந்தே இந்த பொருளைத் திருடுறது வழக்கமா போச்சு.. ஸாரி.. இனிமே இப்படி செய்ய மாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டார்..”
“இன்னைக்கும் திருடுனாரா..?”
“ஓ.. நீ கவனிக்கலையா..? சரி.. நீ பார்த்த வரைக்கும் சொல்லு..”
“அவரு லிஸ்ட் வாசிச்சார், மனைவி எடுத்துக் கொடுத்தாங்க, டிராலில போட்டார்… ஒவ்வொரு பொருளுக்கும் அவரு லிஸ்ட்ல பேனாவால டிக் பண்ணிக்கிட்டார்…”
“அந்த பேனா எங்கிருந்து வந்தது?”
சிப்பந்தி திகைத்தான். “அது… அது… கடையில எடுத்ததுதான் போல…”
ராகவன் மெதுவாக சொன்னான்:
“அதுதான் அவர் திருடுறது.. கடைக்கு வந்தவுடனே நம்ம செல்ஃப்ல இருக்கிற புது பேனாவை எடுத்துக்கிட்டு, அது எழுதுதான்னு கிறுக்கிப் பார்த்து, தன்னோட பேப்பர்ல யூஸ் பண்ணுவார்.. பக்கத்தில் யாரும் கவனிக்காம இருக்கும்போது சட்டைப் பாக்கெட்டுல குத்திக்கிடுவார்.. அப்புறம் டிராலில உள்ள சரக்குக்கு மட்டும் பணம் செலுத்திட்டு போய்கிட்டே இருப்பார்..”
“அஞ்சு ரூபாய் பேனாவுக்கா?.. இப்படி?..” என்று சிப்பந்தி கேட்கவும்..
“நம்மகிட்ட உருவாகிற கெட்ட பழக்கத்தை அவ்வளவு சீக்கிரம் அழிக்க முடியாது… அதனால தான் கெட்ட பழக்கத்தை முளையிலேயே கிள்ளி எறியணும்னு சொல்றாங்க..” என்று முடித்தார் மேனேஜர் ராகவன்.
எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings