எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சரண்யா உட்கார்ந்து யோசித்தாள். பாட்டி சொல்வதும் சரிதானோ என்று பட்டது.
‘பாப்பா, எவ்ளோ காலம்தான் நாம இப்படியே ஓடிக்கிட்டே இருப்போம்… ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணத்தப் பண்ணிக்கிட்டு ஒரே இடத்துல செட்டிலாகிடலாமே… கொஞ்சம் யோசியேன்… ‘ இதுதான் பாட்டி சொன்னது.
இதுவரை ஒருத்தனை மடக்கினோமா, பணம் நகைகளை கறந்தோமா, கழற்றிவிட்டுவிட்டு பறந்தோமா என்று வாழ்ந்தாகிவிட்டது, இனி பாட்டி சொன்னமாதிரி எங்காவது எவனுடனாவது போய் செட்டில் ஆகிவிடவேண்டியதுதான் என்று முடிவு செய்து கொண்டாள்.
இப்பொது இருக்கும் மாணிக்கம் கூட கொஞ்சம் சலிப்புத் தட்டித்தான் போனான். முடிந்தளவுக்கு அவனிடமும் கறந்தாகி விட்டது. அடுத்து ராஜன்தான். அவனைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போது சிரிப்பு தானாக வந்தது சரண்யாவுக்கு.
கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக கடலை போட்டுக்கொண்டிருக்கிறான் அவன். கொஞ்சம் பசை உள்ள பேர்வழிதான். அவனிடமும் பணம், நகைகள் என்று நிறைய கறந்துவிடலாம். போன மாதம் பிறந்த நாள் என்று சொல்லி ராஜனிடமிருந்து ஒரு மோதிரத்தை கறந்தாகி விட்டது. சொன்ன உடனேயே கடைக்குக் கூட்டிக்கொண்டு போய் வாங்கிக் கொடுத்து விட்டான்.
ஒரு நெக்லஸ் கேட்டிருக்கிறாள். கொஞ்சம் கடன்கள் இருக்கின்றன, இரண்டு லட்சம் பணம் வேண்டும் என்றும் கேட்டிருக்கிறாள். அவள் மேல் அவனுக்கு இருக்கும் தீராத காதலுக்கு அவள் கேட்டதை கண்டிப்பாக கொடுத்தேவிடுவான் அவன். அடுத்த வாரம் பணம் மூன்று லட்சம் தருவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறான்.
ஏற்கனவே சொல்லி விட்டாள் இவள், கோவிலில் வைத்துதான் தாலி கட்டிக்கொள்வேன் என்று. பதிவு செய்வதெல்லாம் ஆகாது என்றும்.. மேலும் அவனது வீட்டுக்கெல்லாம் வர முடியாது என்றும், புதிதாக ஒரு வாடகை வீடு எடுத்து குடிபோய்விடலாம் என்றும் சொல்லி விட்டாள். அவனும் ஒப்புக் கொண்டான்.
யோசித்துப் பார்த்தபோது, இந்த ராஜன் கூட நன்றாகத்தான் இருக்கிறான். மன்மதனே இவனிடம் பிச்சை எடுக்க வேண்டும். ஆனாலும் கல்யாணம் ஆனவன். இவனை நிரந்தரமாக்க வேண்டுமென்றால் அதில் நிறைய நடைமுறை சட்டச்சிக்கல்கள் எல்லாம் வரும். அதனால் ராஜன் ஆறுமாதமோ எழுமாதமோ தான்.
இடையில் எவனாவது கல்யாணம் ஆகாவதவனாகப் பார்த்து நிஜமாகவே கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடவேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டபோது, ஒருநாள் மாலில் நடக்கும்போது சிறு வயது மாதவன் கணக்காக ஒருத்தன் இடித்துவிட்டு மூன்று நான்கு தடவை ஸாரி கேட்டுக்கொண்டு போனானே, அவனைப் போல ஒருத்தனை மடக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
அவ்வளவு ஏன், எங்காவது அவனைப் பார்த்துவிட்டால் அவனையே மடக்கிவிடலாம் என்றும் பேராவல் வந்து அதே மாலுக்கு திரும்பத் திரும்ப போக ஆரம்பித்தாள். ஒரு நாளைக்கு கிடைக்காமலா போவான் என்ற ஆவலில்..
xxxxxxxxx
இருபதினாயிரம் பணத்தைக் கொடுத்து அந்த சாக்குப் பையை வாங்கிக்கொண்டான் ராஜன். கொஞ்சம் குட்டிபாம்புதான். ஆனாலும் அது கடித்தாலே சாவு நிச்சயம் என்று சொல்லியிருந்தான் நரசிம்மன்.
வீட்டுக்கு கொண்டு வந்து அந்தப் பையை தனது படுக்கையறையில் ஓரமாய் வைத்திருந்தான். சரியாக கட்டப்பட்டிருக்கிறதா என்று மறுபடி மறுபடி பார்த்துக் கொண்டான். அது வெளியே வந்து இவனைக் கடித்துவிடக் கூடாதல்லவா.
இரவு வரும் வரை காத்திருந்தான். இரவும் வந்தது. சாப்பிட பிரியாணி ஆர்டர் போட்டிருந்தான். பார்ஸல் வந்தது. இருவரும் சாப்பிட்டார்கள். பத்து மணிக்கெல்லாம் கவிதா படுத்துவிடுவாள்.
பத்தரை வரை காத்திருந்தான். பிறகு மெல்ல சாக்குப்பையை எடுத்துக்கொண்டு போனான். அவளது அறையின் கதவு லேசாய் திறந்துதான் இருந்தது. பையை மெல்லத் திறந்தான். நெழுநெழுவென்று வெளியே வந்து அவளது படுக்கயறைக்குள் நெளிந்தது அந்த அரவம் உள்ளே போனதும், இவன் அரவமின்றி திரும்பி விட்டான்.
விடியும் வரைக் காத்திருந்தால் பிறகு சுதந்திரம்தான்.
‘ ஓ… சரண்யா… என் அன்பே… ஆருயிரே… என் கண்ணே… ‘
‘ வா வசந்தமே… என்னோடு சேர்ந்துவிடு… நீயின்றி நானில்லை… ‘
‘ விடியும் வரை காத்திரு… கண்ணே… கனியமுதே… என் கலைமானே… ‘
xxxxxxxxx
மூன்று மாத்திரைகள் கொடுத்திருந்தாள் ஷிவானி. பத்தேகால் வரை அழுது அழுது முக வீங்கிப் போய், பிறகு எழுந்து உட்கார்ந்தாள் அவளுக்கு மிக்ஸர் என்றால் ரொம்பவும் பிடிக்கும். முன்பெல்லாம் அடிக்கடி வாங்கிக்கொண்டுவந்து கொடுத்திருக்கிறான் அவன். சாவதற்கு முன்னாள் மிக்ஸர் சாப்பிட ஆசைப்பட்டாள். சாயங்காலேமே கடையில் இருந்து அவளாகவே போய் கால்கிலோ மிக்ஸர் வாங்கிக்கொண்டு வந்திருந்தாள்.
அந்தப் பொட்டலத்தை எடுத்தாள். ஸ்டாப்ளர் பின்னை விலக்கி எடுத்து தூர எறிந்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாய் சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பிட்டு முடித்ததும் மெத்தை மேல் வைத்திருந்த மூன்று மாத்திரைகளையும் ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டுக்கொண்டு வாட்டர் பாட்டிலைத் திறந்து தண்ணீரையும் குடித்துவிட்டு மீதத் தண்ணீருடன் பாட்டிலை தூக்கிப் போட்டுவிட்டு அப்படியே படுத்துக் கொண்டாள்.
கொஞ்ச நேரத்தில் தூக்கம் கண்களை அழுத்த ஆரம்பிக்கவும் மாத்திரைகள் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டன என்று புரிந்தது. கண்களை வலுக்கட்டாயமாய் மூடிக் கொண்டாள். தனது இஷ்டதெய்வத்தை முணுமுணுத்துக் கொண்டாள்.
xxxxxxxxx
ரொம்ப நேரமாக தூங்காமல் முழித்திருந்து பார்த்திருந்துவிட்டு இன்னும் கவிதா சத்தம் போடக் காணோமே என்று யோசித்து… மெல்ல எழுந்து வந்தான் ராஜன். பம்மி பம்மி நடந்தான்.
பாம்பு இதுவரை மெத்தை மேல் ஏறி அவளை கடிக்காமலா இருந்திருக்கும். ஏன் அவள் இன்னும் கத்தவே இல்லை என்று தனக்குள் கேட்டுக்கொண்டே வந்தான். கதவு கொஞ்சமாக திறந்தே இருந்தது. மெல்ல அடியெடுத்து வைத்தான்.
‘ஐயோ… ‘ என்று கத்தினான். ‘ பா…ம்…பூ…. ‘ என்று அலறினான். காலை தூக்கிக்கொண்டு கைகளையும் உதறினான்.
அலறியடித்துக் கொண்டு எழுந்து கொண்டாள் கவிதா. புருஷன் காலைத் தூக்கிக் கொண்டு உதறுவதைக் கண்டு மிரண்டாள். ஆனாலும் எழுந்து அவனை நோக்கி ஓடி வந்தாள்.
‘ என்னாச்சுங்க…. ‘ என்று பதறினாள்.
‘பாம்பு கடிச்சிடுச்சு… சீக்கிரம் என்னை ஆஸ்பத்திரிக்கி கூட்டிட்டுப் போ… ஐயோ… ’ என்றபடியே சரிந்தான்.
நாம் அவளைக் கடிக்க விட்ட பாம்பு நம்மை பதம் பார்த்துவிட்டதோ என்று நினைத்துக் கொண்டே மயங்கிப் போனான். அவசரமாக ஓடிப்போய் காரை எடுத்தாள் கவிதா.
பரிசோதித்த டாக்டர், ‘இது பாம்பு கடிச்ச மாதிரி தெரியலை மேடம்… இது ஏதோ ஊசி குத்தின மாதிரி இருக்கு. ஆனால் ரெண்டு குத்து இருக்கே…. ‘ என்று புருவங்களை சுருக்கினார்.
சட்டென அவளுக்கு ஞாபகம் வந்தது. ‘ஓ ஆமா டாக்டர்… நாந்தான் மிக்ஸர் பொட்டலத்துலேர்ந்து ஸ்டேப்ளர் பின்னைக் கழற்றி தூக்கி எறிஞ்சேன். அவர் உள்ளே வரும் போது அதுதான் குத்தியிருக்குமோ… ‘ என்றாள்.
xxxxxxxxx
பாம்பை கொடுத்தனுப்பிய பாம்புபிடி நரசிம்மன் உட்கார்ந்து யோசித்தான். பாம்பு கடித்து அந்தாளின் மனைவி இறந்து போனால் பிறகு நாம்தான் பாம்பைக் கொடுத்தோம் என்று அந்தாள் உளறிவிட்டால், அப்புறம் நாம் கம்பி என்ன வேண்டியிருக்கும் என்று பயந்து, அதனுடைய பல்லை பிடுங்கிவிட்டே கொடுத்தனுப்பினான்.
இப்போது அது கடித்தாலும் சாக மாட்டாள். ஒருவேளை அவள் ஏன் சாகவில்லை என்று அவன் வந்து கேட்டால் அது குட்டிபாம்புதான், அத்துடன் உங்கள் மனைவிக்கும் உடம்பிலே எதிர்ப்புசக்தி அதிகம் இருந்திருக்கலாம் என்று சொல்லி சமாளித்து விடலாம் என்று யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் நரசிம்மன்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings