எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கவிதாவை கொன்றுவிடுவதென்று முடிவே செய்துவிட்டான் ராஜன்.
சரண்யாவை முதன்முதலில் சந்தித்த போதெல்லாம் கூட அந்த எண்ணம் உண்டாகவில்லை. ஆனால் நாட்கள் ஓட ஓடத்தான் சரண்யா இல்லாமல் நமக்கு வாழ்க்கை இல்லை என்று உணர்ந்துகொண்டான். ஆனாலும் ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள் எப்படி இருக்க முடியும் என்று யோசனை வந்தபோதுதான் யோசித்துப் பார்த்து விட்டு அந்த முடிவுக்கே வந்தான்.
சரி, எப்படி கவிதாவை கொல்வது… ஒவ்வொரு வழியிலும் ஒரு அபத்தம் வந்து சிரித்தது… யோசித்து யோசித்து கடைசியில் ஒரு வழி கண்டுபிடித்தான். அது…
அந்த வீட்டுக்கு வந்த புதிதில் இரண்டு முறை காம்பவுண்டிற்குள் பாம்புகள் வந்திருக்கின்றன. அப்போதெல்லாம் பாம்பு பிடிக்கும் ஒரு ஆளை கூட்டி வந்துதான் அவைகளைப் பிடித்தார்கள்.
முதல்முறை அந்த வீட்டுக்கு குடி வந்த புதிதில் ஒரு சாரைப் பாம்பு வந்தது. இருவரும் பயந்துதான் போனார்கள். அதிலும் கவிதா ரொம்பவே பயந்து போனாள். இந்த வீட்டிற்கு குடி வந்தது தப்போ என்று கூட புலம்பினாள். யாரோ ஒருவர், பாம்பு பிடிக்கும் ஒருவருக்கு போன் போட்டு வரவழைத்தார். அவரும் வந்து லாவகமாக அந்த பாம்பைப் பிடித்து சாக்கில் போட்டுக் கொண்டு போய் விட்டார்.
சில மாதங்கள் கழித்து மறுபடியும் ஒரு பாம்பு வந்தது. அது கட்டுவிரியன் என்று சிலர் சொன்னார்கள். அப்போதும் அதே ஆளை வரவழைத்தார்கள். அவர் வந்து முன்னைப் போலவே, மிகவும் லாவகமாக அந்த பாம்பைப் பிடித்து சாக்கில் போட்டுக் கட்டி எடுத்துக் கொண்டு போய்விட்டார். அந்தச் சமயத்தில்தான் அவரது மொபைல் எண்ணை வாங்கி வைத்தான் ராஜன், அவசரத்திற்கு ஆகுமே என்று.
அவர் பெயர் நரசிம்மன். நம்பர் 98405xxxxx.
ஆக, ராஜனின் திட்டப்படி அந்த ஆளை தொடர்பு கொண்டு ஒரு பாம்பை வாங்கி வந்து அவளது படுக்கையில் விட்டுவிட்டால் போதும், அது கடித்து செத்துப் போவாள். யாருக்கும் சந்தேகமும் வராது. ஏனென்றால் ஏற்கனவே இரண்டு முறை வீட்டுக்கு பாம்புகள் வந்த சரித்திரம் இருக்கிறது. மக்கள் சாட்சி சொல்லுவார்கள். ராஜனின் மேலும் யாருக்கும் சந்தேகம் வராது. கொஞ்ச நாட்களில் சரண்யாவை கல்யாணம் செய்துகொண்டு…
xxxxxxxxx
கவிதா உட்கார்ந்து யோசித்தாள். ஆரம்பத்தில் கணவர் ராஜன் நன்றாகத்தான் பேசினார், பழகினார். ஆனால் கொஞ்ச காலமாகவே ரொம்பவும் எரிந்தெரிந்து விழுகிறார். அடிக்கடி சாப்பாடு வேண்டாம், பசிக்கவில்லை என்கிறார். முன்பு முகத்தில் புன்னகை தவழும். இப்போதெல்லாம் எரிச்சலை முகத்தில் காட்டுகிறார். கடைக்கோ கோவிலுக்கோ போக வேண்டுமென்றால் கூட நான்கு முறை ஏதாவது காரணம் சொல்லி தள்ளிப் போட்டுவிட்டு, அப்புறம் தான் கூட்டிகொண்டு போகிறார், வேண்டா வெறுப்பாக.
அடிக்கடி ஒரு ஃபோன் வருகிறது. அந்த ஃபோன் வந்தால் மொபைலை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு ஓடிவிடுகிறார்.
ஒருதடவை கவிதாவுக்கு சந்தேகம் வந்து படிகளில் ஏறிப் போய் ஒட்டுக் கேட்டாள். அது கண்டிப்பாக ஒரு பெண்தான் என்று புரிந்துகொண்டாள். சிலசமயம் நினைத்துக் கொள்வாள், அந்தப் பெண் யாரென்று அவனிடம் கேட்கலாமா என்று. ஆனால் கேட்க மாட்டாள். எப்போதாவது அவர் அருகில் இல்லாத சமயம் அந்த ஃபோன் வராதா, நாம் எடுத்து அதில் என்ன பெயர் வருகிறது என்று பார்த்துவிடமாட்டோமா என்று ஏங்கியிருக்கிறாள். அவள் ஆசைப்பட்டது போலவும் நடந்தது.
ஃபோன் அடித்தது. ஓடிப்போய் எடுத்து பார்த்தாள். ‘ சரண் ‘ என்று பெயர் வந்தது. பாத்ரூமிலிருந்து ஓடோடி வந்த ராஜன் மொபைலை அவளிடமிருந்து சட்டென பறித்துக் கொண்டதுடன், ‘ இனிமே என்னைக் கேட்காம மொபைலைத் தொட்டே… நடக்கறதே வேறே… ‘ என்று திட்டிவிட்டான்.
ஆடிப் போனாள் கவிதா. ‘ ஃபோனடிச்சது… உங்களைக் காணோம்… அதான் எடுத்து, நீங்க பக்கத்துல இல்லைன்னு சொல்லலாம்னு எடுத்தேன்… ‘ என்று சமாளித்தாள். ‘ நீ ஒரு ஆணியையும் புடுங்க வேணாம்…போ… ‘ என்றுவிட்டு அங்கிருந்து உடனே மாடிக்குப் போய் விட்டான்.
உட்கார்ந்து ரொம்ப நேரம் அழுதாள். அவனோ ரொம்பநேரம் கழித்துதான் கீழே வந்தான். அந்தப் ஃபோன் வந்துவிட்டால் மட்டும் அவனது முகத்தில் பரவசம் தாண்டவமாடுகிறது. சிரித்து சிரித்து பேசுவதென்ன்ன, கொஞ்சுவதென்ன…
எப்போதும் மாஸ்டர் பெட்ரூமில்தான் இருவரும் படுத்துக் கொள்வார்கள். சமீபகாலமாக அவன் சின்னப் படுக்கையறையில் போய் படுத்துக் கொள்கிறான். பேசிப் பார்த்தாள். அவன் மாறுவதாகக் காணோம். அதனால் நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டு தனித்தே படுத்துக் கொண்டாள். அப்போதெல்லாம் அழுகை முட்டிக்கொண்டு வரும். எப்போதாவது மனம்மாறி இந்த அறைக்கு வந்துவிட மாட்டாரா என்று ஏங்கியதுமுண்டு.
ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது அம்மாவிடம் இருந்து ஃபோன் வரும். எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசுவாள். ஆனால் இதைப் பற்றி மட்டும்வாய் திறக்கக்கூட மாட்டாள்.
யோசித்துப் பார்த்துவிட்டு ஒரு நாள் அவனிடம் கேட்டேவிட்டாள். ‘ ஏங்க, எனக்கு கூடத்தான் ஃபோன் வருது, நான் என்னிக்காவது மொபைலை எடுத்துக்கிட்டு மாடிக்கு ஓடியிருக்கேனா… நீங்க மட்டும் ஏங்க ஓடறீங்க… அப்படி யார்கிட்டே பேசறீங்க… என்ன பேசறீங்க… அப்படி என்ன ரகசியம் வேண்டி கிடக்கு… என்கிட்டே சொல்லுங்களேன்… ‘
ஆனால் மவுனமாக முறைத்துக்கொண்டு போய்விடுவான். சிலசமயம் சொல்லுவான், ‘அது உனக்கு தேவையில்லாத விஷயம்… ‘ என்று.
‘ ஏங்க… நான் உங்க மனைவி… நான் ஏதாவது உங்ககிட்டே சொல்லாம மறைச்சிருக்கேனா… நீங்க மட்டும் ஏங்க இப்படி… ‘ என்று கத்தியுமிருக்கிறாள்.
திடீரென்று ஒருநாள் எதேச்சையாக அவனது பர்ஸில் ஒரு போட்டோவைப் பார்த்து விட்டாள். அது ஒரு பெண்ணின் போட்டோ. யாரென்று தெரியவில்லை. உடனே தனது மொபைலில் அதை போட்டோ எடுத்துக் கொண்டாள். சட்டென ராஜன் வரும் அரவம் கேட்க, ஒன்றும் அறியாதது போல அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.
ஆக, அவரது வாழ்க்கையில் ஒரு பெண் நுழைந்துவிட்டாள் என்று மட்டும் புரிந்தது. நம்முடைய இடத்தில் வேறொருத்தியா… அவன் நடந்து கொள்ளும் விதம் அனைத்துமே இனி அவனை திருத்த முடியாது என்றே உணர்த்தியது. நம்மிடம் ஒரு நிமிடம் பேச கஷ்டமாக இருக்கும் அவனுக்கு அந்த ஃபோன் வந்தால்மட்டும் மணிக்கணக்காக பேசுகிறான். நாம் வேண்டாம் அவருக்கு. அது மட்டும் நன்றாக புரிந்தது அவளுக்கு.
நமக்குத் துரோகம் செய்யும் இவனை என்ன செய்யலாம். கொலை செய்துவிடலாமா… நம்மால் முடியுமா.. இல்லை பேசாமல் நாம் தற்கொலை செய்துகொள்ளலாமா, அவனது நடத்தையில் சந்தேகம் என்று எழுதிவைத்துவிட்டு. அந்த போட்டோவையும் பிரின்ட் எடுத்து சேர்த்து வைத்துவிட்டு. போலீஸ் வந்து குடையட்டும். ‘ மவனே… நீ மனஉளைச்சல் பட்டு நிம்மதியின்றி கம்பி எண்ணி சாகவேண்டும். ‘
அம்மா அப்பாவிடம் சொல்லி அழலாம். பேசாமல் இங்கே வந்துவிடு என்று கூப்பிடுவார்கள். அவர்களுடனேயே போய் இருந்துவிடலாம். ஆனாலும் வாழாவெட்டி என்ற அவப் பெயர் வந்து ஒட்டிக்கொள்ளுமே. அதற்குப் பதிலாக சுமங்கலியாக செத்தே போய்விடலாமே. குழம்பிப்போய் படுத்திருந்தவள், நீண்டநேரம் யோசித்து… நாம் மட்டும் தற்கொலையே செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். நாம் இறந்தபிறகுதான் நமது பிரிவை அவன் உணருவான். உணர்ந்து என்ன பயன்… எக்கேடோ கேட்டுப் போகட்டும் நாம் மட்டும் செத்துப் போகலாம்.
ஆனால் எப்படி… யோசித்தாள்… யோசித்தாள். கடைசியில் அந்த யோசனை வந்தது. அவளுக்குத் தெரிந்த ஒரு பெண் சிநேகிதி இருக்கிறாள். அவள் ஒரு மருந்து கடை ஓனரின் மனைவி. தூக்கம் வருவதே இல்லை என்று சொல்லி அவளிடம் தூக்க மாத்திரை வாங்குவது. நான்கைந்து மாத்திரைகளை ஒரேடியாக போட்டுக்கொள்வது. போதாதா… போய் விடமாட்டோமா…
கொஞ்ச காலத்துக்கு அப்பா அம்மா அழுவார்கள். நாளடைவில் மறந்தே போவார்கள். வருடம் ஒருமுறை நினைவு நாள் வரும்போது நினைத்துக் கொள்வார்கள். ராஜன் நினைத்துக் கொள்வானா… நினைவு நாள் கடைபிடிப்பானா. அவன் ஏன் நினைத்துக்கொள்ளப் போகிறான், அவனுக்குத்தான் சரண் இருக்கிறாளே…
ஷிவானிக்கு போன் போட்டாள், மாத்திரை கேட்டாள். அவள் கடைக்கு வரச் சொன்னாள். போனாள். வாங்கிக்கொண்டு வந்து சேர்ந்தாள்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings