in ,

விதியா? மதியா? (சிறுகதை) – பானுமதி பார்த்தசாரதி

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ஹாலில் இருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக்கொண்டு இருந்தாள் வத்ஸலா.  டி.வி.யில் பட்டிமன்றம் ஓடிக் கொண்டிருந்தது. ‘விதியா, மதியா எது வெல்லும்’ என்ற விவாதம் காரசாரமாக நடந்து கொண்டிருந்தது.

முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு வத்சலா எதிரில் நின்றுகொண்டு இருந்தாள் அவள் அம்மா கோமளா.

“கோமளா, சும்மா ஏண்டி அவளைத் திட்டிக் கொண்டிருக்கிறாய்? மனதில் ஏதோ வருத்தம். இங்கே இன்னும் ஒரு பத்து நாள் இருக்கட்டும். நாம் வேண்டுமானால் மாப்பிள்ளை வீட்டில் போய் சமாதானம் செய்து விசாரித்து விட்டு வரலாம். பிறகு வத்ஸலாவைக் கொண்டு போய் அவள் வீட்டில் விடலாம்” என்றார் சாரங்கன், வத்ஸலாவின் அப்பா. 

“ஆமாம்… அவள் என்ன சின்னக் குழந்தையா? பள்ளிக்கூடம் போக அடம் பிடிக்கும் குழந்தையைப் போல் இவள் புருஷன் வீட்டிற்குப் போக அடம் பிடிப்பாள். இவளைக்  கொண்டு போய் சமாதானம் செய்து  அங்கு விடுவதற்கு?”  என்று பொரிந்து கொட்டினாள் கோமளா.

“அப்பா, இனிமேல் இதுதான் என் வீடு. நான் உங்கள் மாப்பிள்ளை வீட்டிற்கு இனிமேல் போகமாட்டேன்” என்றாள் வத்ஸலா. 

“வாயைக் கழுவுடி. நினைத்தால் பெட்டியைக் கட்டிக் கொண்டு இங்கே வந்து விடுகிறாய். இது அம்மா வீடுதான், ஆனால் உன் வீடு உன் கணவன் இருக்கும் இடம் தான், ஞாபகம் இருக்கட்டும்.  ராமர் இருக்கும் இடம் தான் அயோத்தி, தெரிந்துகொள்”  என்றாள் கோமளா.

“அம்மா, அவர் ராமனும் இல்லை… அந்த நாற்றம் பிடித்த சிந்தாதிரிப்பேட்டை ஒன்றும் அயோத்தியும் இல்லை” என்றாள் வத்ஸலா வெடுக்கென்று.

“ராமனோ லட்சுமணனோ எனக்குத் தெரியாது. ஆனால் அவர் ஒன்றும் சிகரட் பிடித்துக் கொண்டு, தண்ணி அடித்துக் கொண்டு, பொம்பளைகள் பின்னால் சுற்றும் பொறுக்கியும் இல்லை. குடும்பத்தோடு அட்டாச்மென்ட் உள்ளவர். அவரைப் பற்றி நன்றாக  தெரிந்த பின்னர்தான் ஜாதக பரிமாற்றம் செய்தோம்” என்றார் சாரங்கன்.

“அந்த கெட்ட பழக்கங்களைக் கூட சகித்துக் கொள்ளலாம். எப்போது பார்த்த்தாலும் அம்மா புடவையையே பிடித்துக் கொண்டு, அம்மா, அம்மா என்று சுற்றுவது தான் மகா எரிச்சலாக இருக்கிறது“ என்ற வத்ஸலா, கோபமாக அவள் அறைக்குள் சென்று கதவைப் பட்டென்று சாத்திக் கொண்டாள்.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் அருகில் இருந்த செய்தித்தாளைக் கையில் எடுத்துக் கொண்டார் சாரங்கன். என்ன செய்வதென்று தெரியாமல் கோமளா வழக்கம்போல் தன் சமையலறைக்குள் சென்றாள்.

கைகள் தான் வேலைக்காரி தேய்த்துவிட்டுப் போன பாத்திரங்களை அலமாரியில் அடுக்கிக் கொண்டிருந்தன, ஆனால் மனம் என்னவோ வத்ஸலாவைத் தான் ஆராய்ந்து கொண்டிருந்தது.

வத்ஸலா கோயம்பத்தூர் ஜி.ஸி.டி.யில் படித்துக் கொண்டிருக்கும் போது தான் ரமேஷ் அறிமுகமானான்  இருவரும் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் மாணவர்கள்தான். முதலில் பாடங்களில் சந்தேகம் கேட்பது என்று ஆரம்பித்த நட்பு காதலாக மாறியது்.

வத்ஸலாவின் வீடே கோயம்பத்தூரில் இருப்பதால், அடிக்கடி ரமேஷை வீட்டிற்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லி அழைத்து வந்தாள்.

கோமளாவிற்கு அப்போதே சந்தேகம் தான்., ஆனால் ரமேஷை கோமளாவிற்கு அப்போதே மிகவும் பிடிக்கும். காரணம் அவன் எந்தவித பந்தாவும் இல்லாமல் கோமளாவை ‘அம்மா’ என்றழைத்து அவள் கூடவே சுற்றி வந்ததுதான். அவன் பேச்சிலிருந்து அவனுக்கு அவன் அம்மாவை மிகவும் பிடிக்கும் என்று தெரிந்து கொண்டாள்.

எந்த பையன் அம்மா அப்பாவுடனும் குடும்பத்துடனும் அன்புடனும் ஆதரவுடனும் நடந்து கொள்கிறானோ, அவன் மனைவியுடனும் பிரியமாக இருப்பான் என்பது கோமளாவின் நம்பிக்கை. ஆனால் சாரங்கனுக்கு மகளை ஒரு அமெரிக்க மாப்பிள்ளைக்கு கொடுக்க வேண்டும் என்று ஆசை. 

வத்ஸலாதான் ஒரே பிடிவாதமாக ரமேஷ் தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி விட்டாள். 

பிடிவாதத்திற்கு மருந்து ஏது? எல்லாவற்றிலும் பிடிவாதம் தான். சில நேரங்களில் கோமளாவிற்கே அவள் பிடிவாதம் மிகவும் எரிச்சல் தரும். இவ்வளவு பிடிவாத குணம் கொண்டவள் திருமணம் ஆனபின் பல நேரங்களில் விட்டு கொடுத்துப் போக வேண்டுமே, அவளால் முடியுமா என்று யோசித்தாள்.

ரமேஷ் வீட்டில் எந்த வியாபார நோக்கமும் இல்லாமல் வத்ஸலாவை மருமகளாக ஏற்றுக் கொண்டு பெற்ற பெண்ணாக நடத்தினார்கள். அவன் வீட்டில் அப்பா இல்லை, அம்மாவும் திருமணமாகாத தங்கை நிஷாவும்தான்.

நிஷா போஸ்ட் கிராஜுவேட் முடித்து விட்டு ஒரு கல்லூரியில் ஜூனியர் லெக்சர்ராகப் பணிபுரிகிறாள். கோமளாவிற்கு அவர்கள் யாரும் தப்பானவர்களாகத் தெரியவில்லை, ஆனால் வத்ஸலா தான் ஏதாவது குறை சொல்லிக் கொண்டு இருப்பாள்.

கோமளா வத்ஸலாவைத்தான் கண்டிப்பாள், ஏனெனில் வத்ஸலா கொஞ்சம் தன்னைப் பற்றி ஓவராக நினைத்துக் கொள்பவள். தன்னை யாரும் அறிவிலோ அழகிலோ வெல்ல முடியாதென்று நினைப்பவள். கூட கொஞ்சம் சோம்பேறி.

காலையில் படுக்கையை விட்டு எழுவதற்கே எட்டு மணியாகும். அவள் எழுவதற்குள் நிஷா வேலைக்கே கிளம்பியிருப்பாள். ரமேஷின் அம்மா ஏறக்குறைய எல்லா வேலைகளையும் முடித்து விட்டிருப்பாள்.

நிஷா இவளோடு அதிகம் பேசமாட்டாள். இவள் எழுந்து வருவதற்குள் அவள் பள்ளிக்கூடம் கிளம்பி விடுவாள்.  மாலையில் வத்ஸலா வேலை முடித்து வீடு வந்து சேரவே இரவு மணி எட்டாகி விடும்.

நிஷா அந்த நேரத்தில் டின்னர் முடித்து விட்டு அடுத்த நாள் நடத்த வேண்டிய பாடத்திற்கு தயார் செய்து கொண்டு இருப்பாள். இல்லையென்றால் ஏதாவது டெஸ்ட் நோட்டுகளை திருத்திக் கொண்டு இருப்பாள். இப்படி அவளும் எப்போதும் பிஸியாகவே இருப்பாள். 

வத்ஸலாவிற்கோ, ஐ.டி.வேலையில் இருப்பதால் இன்னும் கொஞ்சம் கர்வமும், ஈகோவும் அதிகம். அதனால் இருவருக்கும் இடைவெளி அதிகமானதுதான் மிச்சம். 

வத்ஸலா திருமணம் முடிந்த சில மாதங்களில் நிஷாவின் திருமணம் நடைபெற்றது. பையன் அமெரிக்க மாப்பிள்ளை.  ஒரு சனியன் ஒழிந்தது என்று முதலில் நினைத்தாள். எரிச்சலும், கோபமும் தான் இவளுக்கு அதிகமாயிற்று.

வீட்டில் வேறு யாரும் இல்லாததால் ரமேஷின் அம்மா வத்ஸலா மேல் அதிக அக்கறை காட்டத் தொடங்கினாள். 

“காலம் மிகவும் கெட்டுக் கிடக்கிறது. அதனால் நேரத்தில் வீட்டிற்கு வரவேண்டும்” என்றாள் .

“நண்பர்களுடன் இரவு டின்னர் சாப்பிடக் கூடாது” என்பாள்.  இதெல்லாம் வத்ஸலாவின் நல்லதற்குத் தான் என்றாலும் இவளுக்கு என்னவோ எரிச்சல்தான் வரும். 

அப்போதுதான் அவளுக்கு அந்த எண்ணம் வந்தது. மாமியார் வீட்டில் இருந்தால்தானே ஏதாவது ‘நொய், நொய்’ என்று சொல்லிக் கொண்டு இருக்கிறாள், இவளைக் கொண்டு போய் ஸீனியர் சிட்டிசன் ஹோமில் விட்டு விட்டால் இருக்கும் ஒரே தொந்தரவும் நீங்கி விடும் என்று நினைத்து ரமேஷிடம் வேறு மாதிரி சொன்னாள். 

அதாவது இருவரும் வேலை முடிந்து வரும் வரை அம்மா ஏன் தனிமையில் இருக்க வேண்டும்? ஓல்ட்ஏஜ் ஹோமில் நிறைய நண்பர்களுடன் ஜாலியாக இருக்கலாம் என்றாள்.

ஆனால் அவனோ, “நீ வேண்டுமானால் வேலையை விட்டுவிட்டு அம்மாவிற்கு கம்பெனி கொடு. அம்மா இந்த வீட்டைவிட்டு வேறு எங்கும் போக மாட்டார்கள்“ என்று கூறி விட்டான் திட்டவட்டமாக. அதிலிருந்து தினம் ஏதாவது ஒரு காரணத்தால், ரமேஷிற்கும் வத்ஸலாவிற்கும் மோதல்.

“இந்த சென்னையும் பிடிக்கவில்லை, உன்னையும் பிடிக்கவில்லை. இந்த வீட்டில் ஒன்று உன் அம்மா இருக்க வேண்டும். இல்லை நான் இருக்க வேண்டும்“ என்றாள் பிடிவாதமாக. 

“படித்த முட்டாளா நீ? இத்தனை வருஷகாலமாய் உயிருக்கு உயிராக வளர்த்த என் அம்மா என்னை விட்டு எப்படி தனியாக இருப்பார்கள். அவர்கள் இந்த வீட்டில்தான் இருப்பார்கள், நான் அவரோடு தான் இருப்பேன்“ என்றான் தீர்மானமாக. 

“அப்படி என்றால் நம் இருவருக்கும் ஒத்துவராது, நான் கோயம்புத்தூருக்கு என் வீட்டிற்குப் போகிறேன்“ என்றாள் வத்ஸலா. 

“தாராளமாக” என்றவன் வெளியே போய்விட்டான்.

வத்ஸலா அம்மா வீட்டிற்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. முதலில் ரமேஷ் இரண்டு முறை வந்து அழைத்தான், இவள் கண்டிஷனில் இருந்து சிறிதும் பின் வாங்கவில்லை. மாமியாரும் ஒருமுறை வந்து அழைத்தாள், அவளிடம் முகம் கொடுத்தே பேசவில்லை. 

கோமளா அவளுக்கு எவ்வளவு உபதேசம்  செய்தும், “கழுதைக்கு உபதேசம் காதில் ஓதினாலும் அவயக்குரல் தவிர அங்கொன்றும் ஏறாது“ என்றாயிற்று. 

“இவ்வளவு பிடிவாதம் செய்து டைவர்ஸ் என்று போய்விட்டால் என்ன செய்வாய்?“ கோபத்துடன் கேட்டாள் கோமளா.  

“அம்மா, உனக்கு இந்த ரமேஷ் பற்றித் தெரியாது. மிகவும் கட்டுப்பாடு கொண்டவன். என்னை விட்டு எங்கும் போக மாட்டான். நீ வேண்டுமானால் பார், அவன் இந்த ஊருக்கே மாற்றலாகி வருவான்“ என்றாள் மிகுந்த தன்னம்பிக்கையுடன். 

“உன் விதி எப்படி இருக்கிறதோ அப்படித்தான் நடக்கும்“ என்றாள் கோமளா வருத்தத்துடன். 

“அம்மா… நாங்கள் எல்லாம் ஆர்ட்டிபிஷியல் இன்ட்டலிஜன்ஸில் வேலை செய்பவர்கள். நாங்கள் விதியை மதியால் வெல்பவர்கள்“ என்றாள் கர்வமாக. 

சில வாரங்களில் ரமேஷ் டைவர்ஸ் நோட்டீஸ் விட்டான். கோமளா சாரங்கன் இருவரும் திடுக்கிட்டார்கள்.

“கடவுள் தந்த மதியாலேயே விதியை வெல்ல முடியவில்லை. உன் செயற்கை மதியால்(artificial intelligence) எதை வெல்ல முடியும்? வாயை மூடிக்கொண்டு வா. நாங்கள் சமாதானம் செய்து உன் வீட்டில் விட்டுவிட்டு வருகிறோம்” என்றாள் கோமளா.

“ஸாரி அம்மா, என்னால் அவனிடம் கெஞ்சிக் கொண்டு அவனோடு வாழ முடியாது“ என்றாள் உறுதியாக. மியூட்சுவலாக இருவரும் சம்மதித்து விவாகரத்தும் கிடைத்து விட்டது.

“விதி யாரை விட்டது? விதி வென்று விட்டது. அதனால்தான் ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்று சிலப்பதிகாரத்தில் சொல்லி இருக்கிறார்கள் போலும்“ என்று கோமளா நடுக்கத்துடன் கூறினாள்.

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பொறாமை (சிறுகதை) – மணிராம் கார்த்திக்

    நாட்காட்டியின் நினைவலைகள் (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்