எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அப்பாவிடமிருந்து வந்த கடிதம், தாங்கி வந்த செய்தி என்னை நிலைகுலையச் செய்ய, அடுத்த அரை மணி நேரத்தில், ஹைதராபாத்திலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் அந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினேன்.
“இப்பவும் உன் அம்மாவின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் எவ்வளவு விரைவில் உன்னால் வர இயலுமோ அவ்வளவு விரைவில் வந்து உன் அம்மாவின் முகத்தைப் பார்த்துக் கொள்” அப்பாவின் கடித வரிகள் திரும்பத் திரும்ப என் நினைவில் வந்து என்னை சோகப்படுத்திக் கொண்டேயிருந்தன. கனத்த நெஞ்சுடன் ரயிலில் கிடந்தேன்.
அம்மாவுடனான சுவையான நிகழ்ச்சிகளின் சுகந்தமான நினைவுகள் திரும்பத் திரும்ப நெஞ்சுக்குள் வந்து போயின.
இரண்டு நாள் ரயில் பிரயாணத்திற்குப் பிறகு ஊரையடைந்து, டாக்ஸி பிடித்து காலை ஏழு மணிவாக்கில் வீடு வந்து சேர்ந்தேன்.
“ஆண்டவா… அம்மாவுக்கு ஏதும் ஆகியிருக்கக் கூடாது” என்னையேயறியாமல் என் மனம் பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தது.
வாசலில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த அப்பா டாக்ஸியிலிருந்து இறங்கும் என்னைப் பார்த்ததும் தன் வேலையை நிறுத்திவிட்டு என்னிடம் வந்தார். “வாப்பா தியாகு” குரல் கரகரத்திருந்தது.
இருவரும் வீட்டிற்குள் நுழைந்ததும் என் கண்கள் என்னையுமறியாமல் அம்மாவைத் தேட, உள் அறையைக் காட்டினார் அப்பா.
அங்கே கிழித்துப் போட்ட நாராய்க் கட்டிலில் கிடந்தாள் அம்மா. அவளருகே இருந்த டேபிள் முழுக்க மருந்து பாட்டில்கள்… மாத்திரைகள்… எக்ஸ்ரே… ஸ்கேன்… மற்றும் இதர மருத்துவக் காகிதங்கள்.
கண் மூடிக் கிடந்த அம்மாவையே கண்ணீருடன் உற்றுப் பார்த்தபடி அவளிள் குச்சிக்கையை எடுத்து விரல்களைத் தேய்த்தேன்.
விழிகளை நிதானமாய்த் திறந்து என்னைப் பார்த்தவளின் முகம் சட்டென பிரகாசமானது. “எப்ப வந்தே… தியாகு?” சிரமப்பட்டுக் கேட்டாள்.
“இப்பத்தாம்மா வந்தேன்…” என்றபடி நாற்காலியை இழுத்து அவளருகில் போட்டு அமர்ந்தேன்.
“சாப்பிட்டியாப்பா?” தழுதழுத்த குரலில் அம்மா கேட்டாள்.
யாரையும் பார்த்த நான்காவது நிமிடம் “சாப்பிட்டீங்களா?” என்று கேட்கும் அந்த குணம் அம்மாவிடம் இன்னும் மாறாமலேயிருந்தது.
“இல்லைம்மா… இப்பத்தான் வந்தேன்… இனிமேல்தான்”
“போப்பா!… மொதல்ல குளிச்சிட்டு சாப்பிடு! அப்புறம் பேசலாம்” திக்கித் திணறி அம்மா சொல்ல,
அறையை விட்டு வெளியே வந்து அப்பாவைத் தேடினேன். அவர் வாசலில் செடிகளுக்கு நீர் பாய்ச்சும் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
அவரைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் வீட்டின் பின்புறம் சென்றேன்.
ஓன்பது மணி வாக்கில் எல்லா வேலைகளையும் முடித்த பின் அப்பாவிடம் வந்தேன். அவர் தான் படித்துக் கொண்டிருந்த நியூஸ் பேப்பரிலிருந்து தலையைத் தூக்கி “சாப்பிடலாமா?” கேட்டார்.
“அப்பா… நான் சாப்பிட்டு முடிச்சாச்சுப்பா… நீங்க கவனிக்கலையா?” கேட்டேன்.
“ஓ… நான் கவனிக்கலை பேப்பர்ல மூழ்கிட்டேன்!”
நான் ஒரு ஸ்டூலை எடுத்து அப்பாவின் ஈஸி சேர் அருகே போட்டு உட்கார்ந்தேன். “ம்..சொல்லுங்கப்பா… டாக்டர் என்ன சொன்னார்?… அம்மாவுக்கு என்னவாம்?”
விரக்தியாய்ச் சிரித்தவர், “போதும் நீ வாழ்ந்தது… பொறப்பட்டு வந்துடு”ன்னு ஆண்டவன் அவளுக்கு ஓலை அனுப்பிட்டான்ப்பா”
“ப்ச்… கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களேன்..”
“கான்ஸராம்!… இது நாள் வரையில் சினிமாவுல மட்டும்தானே கேள்விப்பட்டிருந்தோம்… இப்ப இங்கியே… நம்ம வீட்டுக்குள்ளாரவே வந்திடுச்சுப்பா”
“ஓ மை .காட்!… அம்மாவுக்கு கான்ஸரா?” என்னையுமறியாமல் என் கண்களில் ஓரத்தில் ஈரம் உற்பத்தியாகி உஷ்ண நீர் கன்ன மேடுகளில் வழிய ஆரம்பித்தது.
என் அழுகை அப்பாவையும் சோகப்படுத்தி விட இத்தனை வருட வாழ்க்கையில் இதுவரையில் காணாத அப்பாவின் அழுகையை முதன் முதலாக கண்டேன்.
“ப்பா… அழாதீங்கப்பா… இப்ப இதுக்கெல்லாம் ட்ரீட்மெண்ட் வந்தாச்சு…அம்மாவை சுகப்படுத்திடலாம்!” சொன்னேன்.
“இல்லைப்பா… இது முத்தின ஸ்டேஜ்… இப்ப அவ தன்னோட நாட்களை எண்ணிட்டிருக்கா!… டாக்டர் ஸ்டெட்மெண்ட்படி அவ இன்னும் முப்பது நாளோ… நாப்பது நாளோ?”அப்பாவின் குரலில் தொய்வு… தளர்வு.
சில நிமிட அமைதிக்குப் பின்,
“ஒரு முயற்சியா… என் கூட ஹைதராபாத் கூட்டிட்டுப் போய் ட்ரீட்மெண்ட் எடுத்துப் பார்த்தாலென்ன?” கேட்டேன்.
“அவளுக்கு இங்க ட்ரீட்மெண்ட் குடுத்த டாக்டரே ஒரு பெரிய கை தேர்ந்த டாக்டர்தான்!.. அவரே சொல்லிட்டார்… “அதெல்லாம் இனி சாத்தியமில்லை”ன்னு, அதனால இப்படியே இருக்கற வரை இருந்திட்டுப் போகட்டும்பா! ஆண்டவன் என்ன நினைச்சு வெச்சிருக்கானோ அப்படியே நடத்தட்டும்!” மேலே பார்த்துக் கை கூப்பி அவர் சொன்ன போது என்னால் பதில் பேச முடியவில்லை.
அம்மாவின் அறையிலிருந்து இருமல் ஒலி கேட்க எழுந்து ஓடினார் அப்பா. நானும் பின் தொடர்ந்து சென்று கவனித்தேன். அந்த வயதான மனிதர் சற்றும் முகச் சுளிப்பின்றி தன் மனைவிக்கு செய்த பணிவிடைகளைக் கண்டு நெக்குருகிப் போனேன். “அப்பா!…அம்மா மேல் உங்களுக்கு இத்தனை பாசமாப்பா?”
அன்று முழுவதும் அவருடனே இருந்து அவர் அம்மாவை கவனித்துக் கொள்ளும் பாங்கினை ஒன்று விடாமல் கவனித்ததில் எனக்கு அப்பாவின் மேல் அதீத பாசமும் மதிப்பும் ஏற்பட்டது.
மறுநாள் இரவு ரயிலுக்குக் கிளம்பினேன்.
வீட்டு வாசலில் வந்து நின்ற டாக்ஸியில் ஏறப் போன என்னை ஏதோ ஒன்று உந்த டாக்ஸியை வெய்ட் பண்ணச் சொல்லி விட்டு அம்மாவின் அறைக்கு மறுபடியும் சென்று அவளின் குச்சி விரல்களை மறுபடி ஒரு முறை பிடித்து “ம்மா!… உடம்பை பத்திரமா பாத்துக்கம்மா… மருந்து மாத்திரையெல்லாம் கரெக்ட்டா சாப்பிடும்மா!… நான் போயிட்டு குழந்தைகளுக்கு பரிட்சை முடிந்ததும் சுமதியையும் குழந்தைகளையும் இங்கியே கூட்டிட்டு வந்திடறேன்!”சொன்னேன்.
“சரிப்பா!… நீ… பாத்துப் போப்பா!… ரயில்ல ஜாக்கிரதை ஏறி…இறங்குப்பா”
நான் பள்ளிக்குக் கிளம்பும் போது, “பஸ்ல பாத்து ஏறி… இறங்குப்பா” என்று சொன்ன அதே வார்த்தைகள்.
மீணடும் டாக்ஸிக்கு வந்து அதன் கதவைத் திறக்கப் போன என்னிடம் வந்த அப்பா “அநேகமா… இனி அவ சாவுக்குத்தான் நீ வருவேன்னு நினைக்கிறேன்!” என் கைகளைப் பற்றிக் கொண்டு அவர் தழுதழுத்தார்..
“சேச்சே!… எதுக்கு இப்படியெல்லாம் பேசறீங்க? அம்மாவுக்கு ஒண்ணும் ஆயிடாது! நீங்க கவலையே படாதீங்க”
“இல்லைப்பா…. எனக்கு நம்பிக்கை போயிடுச்சுப்பா! நீ வேணா பாரு! நீ போன உடனே பின்னாடியே தகவல் வரும் பாரு” சொல்லி விட்டு குலுங்கிக் குலுங்கி அழுதபடி அவர் அந்த இடத்தை விட்டு வேகவேகமாக நகர, பீறிக் கொண்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு, கனத்த நெஞ்சுடன் டாக்ஸிக்குள் புகுந்தேன்.
நான்கு நாட்களுக்குப் பிறகு, இரவு பதினொரு மணியிருக்கும் என் மொபைல் போன் ஒலிக்க எடுத்து எண்ணைப் பார்த்தேன். ஊரிலிருந்துதான் வந்தது.
“திடுக்…திடுக்” என அதிரும் நெஞ்சுடன் பேசினேன்.
“யாரு… தியாகுவா?…. நான் ஊரிலிருந்து சித்தப்பா பேசறேன்பா” என் அப்பாவின் ஒன்று விட்ட தம்பி கரகரத்த குரலில் பேச
“சொல்லுங்க சித்தப்பா…” என் மனம் ஒரு இடியைத் தாங்க தயாராய் நின்றது.
“தம்பி… உங்க… உங்க…” சித்தப்பா எடுத்த எடுப்பில் சொல்லத் தயங்கினார்.
“சொல்லுங்க சித்தப்பா!… அம்மாவுக்கு என்னாச்சு?” நான் தயாராகி விட்டதை அவர் உணரும் விதமாய் அப்படிக் கேட்டேன்.
“வந்து… அம்மாவுக்கு ஒண்ணுமில்லைப்பா! அவ நல்லாத்தான் இருக்கா!.. உங்க அப்பா…”
“அப்பா?… அப்பாவுக்கு என்ன?” குழப்பத்தோடு கேட்டேன்.
“நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னாரு தம்பி! அப்படியே லேசா தலை சாய்ஞ்சவரு… நம்மையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாரு தம்பி.. ”
காலடியில் பூமி நழுவியது.
“அ…ப்…பா”
நான் கத்திய கத்தலில் தூங்கிக் கொண்டிருந்த சுமதியும் குழந்தைகளும் அலறிப்புடைத்துக் கொண்டு எழுந்து என்னிடம் வந்த போது, என் குழந்தைகள் முன்னால் நானும் ஒரு குழந்தையாகி தேம்பித் தேம்பி அழுதேன்.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings