எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த அந்த பஸ்ஸின் படிக்கட்டில் நின்று, “ஈரோடு… ஈரோடு” என்று கத்திக் கொண்டிருந்த கண்டக்டர், ஏற வந்த அய்யாசாமியிடம், “எங்க போகணும்?” கேட்டார்.
“பெருந்துறை”
“ஏறு… ஏறு சில்லறையெல்லாம் கரெக்டா வெச்சுக்கணும்”
தலையாட்டியபடி பஸ்ஸில் நுழைந்த அய்யாசாமி காலியாயிருந்த இருக்கையில் அவசரமாய் சென்று அமர்ந்து கொண்டார்.
பஸ் மெல்லப் புறப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் வேகம் பிடித்து, அவிநாசி ரோட்டைத் தொட்டதும் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தது.
அய்யாசாமி பார்வையை மெல்லமாய்ப் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் மேல் செலுத்தினார். வயது முப்பத்தியேழு, முப்பத்தியெட்டு இருக்கும். கதர் வேஷ்டி, சட்டையுடன், நெற்றி நிறைய விபூதியுடன், “பளிச்”சென்று இருந்தான். கண்களில் இயற்கையாகவே ஒரு கனிவு, அடக்கம், பணிவு. மொத்தத்தில் முகத்தை பார்த்த உடனே அவன் ஒரு அமைதிக்காரன் என்பது அப்பட்டமாய் தெரிந்தது.
“தம்பி எங்கே?… ஈரோட்டுக்கா?” பேச்சுக் கொடுத்தார் அய்யாசாமி.
“ஆமாங்கய்யா!” என்றான் அவன் தணிந்த குரலில். கண்களில் இருந்த அதே கனிவு பேச்சிலும்.
“சொந்த ஊரே ஈரோடுதானா?… இல்ல”.
“ஈரோட்டுக்குப் பக்கத்துல… கொல்லம்பாளையம்” அவன் வார்த்தைகளில் கரைந்திருந்த சாந்தம் அய்யாசாமியை சிலிர்க்க வைத்தது.
“இந்தக் காலத்துல இப்படியொரு பையனா?” நினைத்துக் கொண்டார்.
“கொல்லம்பாளையம்… கேள்விப்பட்டிருக்கேன்”
“ஒரு இருபது… இருபத்தியஞ்சு வருஷத்துக்கு முன்னாடி.. அந்த ஊர் பேரு தினமும் பேப்பர்ல அடிபடும்… அப்போ அந்த ஊர்ல ‘சுருளிபாலு’ன்னு ஒரு பெரிய ரவுடி இருந்தான்!… அந்தக் கதை எல்லாம் உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லைப்பா!… அப்பெல்லாம் நீ சின்னப் பையனா இருந்திருப்பே!”
மெலிதாய் முறுவலித்தவன், “இல்லைங்க ஐயா… அந்த ஆளைப் பற்றி… நானும் கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கேன்!…” என்றான்.
“சாதாரண ஆளில்லை தம்பி அந்த சுருளிபாலு!… ஒரு தடவை கள்ளு எடுத்துட்டு பனை மரத்திலிருந்து கீழே இறங்கிட்டிருந்தப்போ கையும் களவுமாக சிக்கிட்டான்!… அவன் இறங்கி வரட்டும்னு மரத்துக்கு கீழே காத்திட்டிருந்தாரு இன்ஸ்பெக்டர் மறவன்!… அவரும் சாதாரணமானவர் இல்லை!… அவர் பெயரைக் கேட்டாலே போக்கிரிகளுக்கு ஒண்ணுக்கு வந்திடும்… அப்படி ஆளு”
பக்கத்து இருக்கை இளைஞன் அமைதியாய் அவர் வாயையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன பண்ணினான் தெரியுமா சுருளிபாலு?.. மரத்திலிருந்து இறங்கி… மண்ணுல கால் வெச்ச உடனே… கையில் இருந்த அரிவாளை வேகமாய் ஒரு வீசு வீசினான்… இன்ஸ்பெக்டர் மறவனோட தலை மட்டும் தனியாக் கழண்டு போய் தூரத்தில் விழுந்துடுச்சு!… முண்டம் மட்டும் டான்ஸ் ஆடிச்சு!… அடுத்து நிமிஷம் ஆள் பறந்துட்டான்!… அந்த கேஸ்ல எந்த சாட்சியமும் இல்லாததால் வெகு சுலபமா தப்பிச்சுட்டான்!… கில்லாடி!” கண்களை இறுக மூடிக் கொண்டு அந்தக் காட்சியை ஒரு கணம் மனத்திரையில் ஓட்டிப் பார்த்து உடலைச் சிலிர்த்துக் கொண்டார் பெரியவர் அய்யாசாமி.
அந்தச் சம்பவத்தைக் காதில் கேட்டும் எந்தவித மாறுதலும் இல்லாமல் அமைதியாகவே இருந்தான் இளைஞன்.
“தம்பி… உன்னோட இந்த இளம் வயசுல… நீ இன்னும் சின்னக் குழந்தையா… பால் மணம் மாறாத முகத்தோட…. எத்தனை சாந்தமாக… பாந்தமா இருக்கே!… ஆனால் இந்த வயசுல அந்த சுருளிபாலு செத்தே போயிட்டான் தெரியுமா?… முப்பது முப்பத்தியஞ்சு வயசுக்குள்ளார ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிச் செத்தான்!… அட… சாவுதான் நல்ல சாவா?…ம்ஹும்… அதுவுமில்லை… கையைத் தனியா… காலைத் தனியா வெட்டி… ஊரோட இந்தக் கோடிக்கு ஒண்ணு… அந்தக் கோடிக்கு ஒண்ணுன்னு வீசிப் போட்டானுங்க அவனோட விரோதிகள்”
விழிகளைப் பெரிதாக்கி கொண்டு, “அப்படிங்களா?” என்ற அந்த இளைஞன் தொடர்ந்து நெடிய அமைதி காக்க, மீண்டும் அய்யாசாமியே பேச்சைத் துவக்கினார்.
“என்ன தம்பி… திடீர்னு அமைதியாயிட்டே?… பயந்துட்டியா?… இல்லை நான் ரொம்பப் பேசி தொந்தரவு பண்றேனா?”
“சேச்சே!… அப்படியெல்லாம் இல்லைங்க!”
“அது சரி… ஏறினதிலிருந்து நானேதான் பேசிட்டு வர்றேன்… நீ சேர்ந்தாப்பல நாலு வார்த்தை கூடப் பேச மாட்டேங்கிறியே!… ஏன்?… ஏதாவது விரதமா?” சிரித்தபடி கேட்டார் அய்யாசாமி.
“வந்து… அந்த சுருளிபாலோட குடும்பம் வாரிசுகள்ன்னு யாராவது இருக்காங்களா இப்போ?” இளைஞன் கேட்க,
“ம்… ஒரு மகன் இருந்த மாதிரி ஞாபகம்!… நாங்கதான் அந்த ஊரிலிருந்து ட்ரான்ஸ்பர் ஆகி கோயம்புத்தூர் போயிட்டோமே?… அதனால அந்த விவரம் தெரியல!… அப்படியே அந்த மகன் இப்ப இருந்தாலும்… எப்படி இருக்கப் போறான்?… அப்பனுக்குத் தப்பாமப் பிறந்த ரவுடியா… தாதாவா… இல்லேன்னா கந்துவட்டிக்காரனாவோதான் இருப்பான்”. என்றார் பெரியவர்.
“அது எப்படிங்க அவ்வளவு கரெக்டா சொல்றீங்க?”
“இது என்ன தம்பி பெரிய விஷயம்?… விதையொண்ணு சுரையொண்ணா முளைக்கும்?… அந்தப் போக்கிரியோட ரத்தத்துல… யோகியா வந்து பொறப்பான்?… ரவுடி வாரிசு ரவுடியாத்தான் இருப்பான்!”
பெரியவர் சொன்னதை ஏற்றுக் கொள்ள மாட்டாதவனாய் அந்த இளைஞன் தலையை இடவலமாய் ஆட்டினான்.
“என்ன தம்பி நான் சொல்றதுல நம்பிக்கை இல்லையா?… சரி விடு!… ஆனா நான் நம்பறேன்!… அதை நம்பறதுனாலதான் இப்பப் பெருந்துறையை நோக்கிப் போய்க்கிட்டிருக்கேன்!” என்று புதிர் போட்டுப் பேசினார் அய்யாசாமி.
“என்னங்க… சொல்றீங்க?… நீங்க அதை நம்புறதுக்கும்… இப்பப் பெருந்துறைக்குப் போயிட்டிருபதற்கும்… என்னங்க சம்பந்தம்?” இளைஞன் கேட்டான்.
“சம்பந்தம் இருக்கு தம்பி!… பத்து பதினைந்து நாளைக்கு முன்னாடி என் பொண்ணுக்கு பெருந்துறையிலிருந்து ஒரு வரன் வந்துச்சு!… ஜாதகப் பொருத்தம் அது இதுன்னு எல்லாமே நல்லாவே இருந்துச்சு!… ஆனாலும் என் பொண்ணை அந்தப் பையனுக்குக் கொடுக்கறதுல எனக்கு உடன்பாடில்லை!… ஏன்னா அந்த மாப்பிள்ளைப் பையனோட அப்பன் இப்ப உயிரோட இல்லைனாலும்… ஒரு காலத்தில் பெருந்துறையில் அட்டகாசம் பண்ணிட்டிருந்த பெரிய சாராய வியாபாரியாம்!.. சொல்லுங்க தம்பி… எப்படி அவன் மகனுக்கு என் பொண்ணை….”
“ஓ…. அப்பன் மோசம்… சாராய வியாபாரியா ஒரு காலத்துல இருந்தவன் என்பதினால்… மகனும் மோசம்னு தீர்மானிச்சிட்டீங்களா?… தப்புங்க… உங்க எண்ணம் தாப்பான தப்புங்க!” இளைஞன் ஆணித்தரமாய் மறுத்தான்.
“இல்லயில்ல… என் கணிப்பு சரியாய்த்தான் இருக்கும்!… இப்பக் கூட அந்தப் பெருந்துறைப் பையன் வேண்டாம்னு சொல்லத்தான் போய்க்கிட்டிருக்கேன்”
கடந்து சென்ற பஸ்ஸின் ஹாரன் சத்தம் இருவரையும் தற்காலிகமாய் வாயடைத்தது.
இந்த முறை அந்த இளைஞன் ஆரம்பித்தான், “ஐயா இவ்வளவு நேரம் நீங்க என் பெயரை கேட்கலையே?”.
“அட.. ஆமாம் பாரு!… சொல்லு தம்பி உன் பேர் என்ன?”
“தங்கவேலு!… அதாவது கே.எஸ். தங்கவேலு”
“ஆஹா…. முருகப் பெருமான் பேரு”
“அந்தக் கே.எஸ்.க்கு என்ன அர்த்தம் தெரியுங்களா?” புன்னகையுடன் கேட்டான் இளைஞன்.
“சொல்லுப்பா… என்ன அர்த்தம்?”
“கொல்லம்பாளையம்…. சுருளிபாலு” சொல்லி விட்டு அந்த அய்யாசாமி முகத்தையே கூர்ந்து பார்த்தான் இளைஞன்.
“வந்து… நீ… அந்த… சுருளிபாலு…” தடுமாறினார்.
“ஆமாங்க!…. நான்தான் சுருளிபாலுவோட ஒரே மகன்!… இப்ப ஒரு காலேஜ்ல தமிழ்ப் பேராசிரியராய் இருக்கேன்!.”
அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்த அய்யாசாமி, “தம்பி… சத்தியமா என்னால நம்பவே முடியலைப்பா!… அந்த சுருளிக்கு இத்தனை அமைதியா… அடக்கமா… ஒரு மகனா?”
“என்ன சொன்னீங்க?… விதையொண்ணு போட்டா சுரையொண்ணா முளைக்குமா?.. ஐயா… சேத்துலதான் செந்தாமரை பூக்கும்!… சிப்பியில்தான் முத்து பிறக்கும்!” வாயடைத்துப் போய் மௌனி ஆனார் அய்யாசாமி.
“பெருந்துறை டிக்கெட்டெல்லாம் இறங்குங்க!… யோவ்… பெருசு என்ன கனவு கண்டுட்டு இருக்கியா?… பெருந்துறை வந்தாச்சு… இறங்கு!”
அய்யாசாமி அவசரமாய் எழுந்து, அந்த இளைஞனைப் பார்த்துத் தலையாட்டி விட்டு இறங்கினார். இறங்கியவர் அப்படியே திரும்பி கோவை நோக்கிப் புறப்பட்டு கொண்டிருந்த வேறொரு பஸ்ஸில் ஏறி அமர்ந்தார்.
வீட்டிற்குள் நுழைந்த அய்யாசாமியிடம் வந்ததும் வராததுமாய்க் கேட்டாள் மீனாட்சி. “மாப்பிள்ளை வீட்டுக்காரங்ககிட்ட சம்பந்தம் வேண்டாம்னு சொல்லிட்டீங்களா?”
அவர் “இல்லை” என்று தலையாட்ட.
“அடப்பாவி மனுஷா… வேண்டாம்ன்னு சொல்லிட்டு வரத்தானே போனீங்க?…”
“இப்ப வேணும்…னு முடிவு பண்ணிட்டேன்”
“ஏன்?… எதனால?” மீனாட்சி சத்தமாய்க் கேட்க,
“விதையொண்ணு போட்டா… சுரையொண்ணு முளைக்கும்….”
அவள் விழிக்க, அவர் விளக்க ஆரம்பித்தார்.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings