in ,

விடாது கறுப்பு (சிறுகதை) – விடியல் மா. சக்தி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

இந்த பிரபஞ்சத்தில் ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், நிலம் என்று ஐம்பூதங்களையும் வணங்கி வருகின்றோம். அதேபோல இந்த பரந்த பூமியில் தெய்வ வழிபாடு என்பது அதிகமாக உள்ளது தென் தமிழகத்தில்தான். அதிலும் குறிப்பாக பண்டைய காலந்தொட்டு இன்றுவரை வணங்கப்பட்டு வரும் கிராமத்து காவல் தெய்வங்கள் மிக அதிகமாக உள்ளது.

இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில் கிராமங்களில் வணங்கப்டும் முக்கியமான காவல் தெய்வம் ‘கறுப்புசாமி’. பல கிராமங்களில் இன்றும் ஏரிகளிலும், எல்லைகளிலும் ஊர்மக்களை காவல் தெய்வமாக நின்று காப்பாற்றி வருவது இந்த கறுப்புசாமிதான்.  நகரத்துக்கும் சேராமல் கிராமத்துக்கும் சேராமல் இருந்த ஊர்தான் தோப்பூர். 

“டேய் அந்துவா சீக்கிரமா வாடா கோயிலுக்குப் போகனுல்ல” 

“அம்மா… அம்மா… ப்ளீஸ்ம்மா இவனக் கொல்லாதீங்கம்மா ப்ளீஸ்ம்மா” என்று ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவனான அந்துவன் அவன் அம்மாவிடம் கெஞ்சினான். 

“டேய் தம்பி!, எத்தனவாட்டி சொல்றது இவனக் கொல்லக்கூடாதுன்னா உங்கப்பாக்கிட்டதான் போய் கேட்கனும் ” என்றாள் அவனது அம்மா சாரதா. பெரிதாக முறுக்கு மீசை வைத்து நல்ல கம்பீரமாக இருக்கும் அவனது அப்பா முத்துக்கருப்பனை பார்த்தாலே பயமாக இருக்கும் அந்துவனுக்கு இதைப்பற்றி எப்படி அப்பாவிடம் போய் கேட்பது என்று பயந்து கொண்டே அருகில் சென்றான். அப்போது, 

“டேய் மாறா!, எங்கடா போய் தொலஞ்ச, இன்னைக்கு கோயிலுக்கு வர்றோன்னு சொல்லியிருந்தேன்ல” என்று கோபமாகச் சத்தத்துடன் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார் முத்துக்கருப்பன்.

அந்தச் சத்தத்தைக் கேட்டதுமே அந்துவனுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. ‘எதுக்கும் அப்பத்தாக்கிட்ட போய் சொல்லுவோம் எதாச்சும் வழி கிடைக்கும்’ என்று மனதுக்குள் யோசித்தபடியே அந்துவனோட அப்பத்தா குப்பாயம்மாளிடம் சென்றான். 

“அப்பத்தா!… அப்பத்தா…” என்று பாசத்தோடு அழைத்துக் கொண்டே அப்பத்தாவிடம் சென்றான். 

“என்றா கண்ணு என்ன வேனும்?” என்று வாஞ்சையுடன் கேட்டாள் அப்பத்தா. 

“அப்பத்தா நான் ஒன்னு கேப்பேன் நீ மாட்டேன்னு சொல்லக் கூடாது” 

“என்றா கண்ணு நீ கேட்டு எதாச்சும் அப்பத்தா இல்லேன்னு சொல்லிருக்கேனா கேளு ஒனக்கு என்ன வேனும்?” 

“அதுவந்து…. அப்பத்தா… அது… வந்து” 

” என்னவேனுன்ன்னு கேளு முட்டாய் வாங்கிக்க காசு வேனுமா?” 

“அதில்ல அப்பத்தா…! இவனக் கொல்லக் கூடாதுன்னு அப்பாக்கிட்ட நீதான் சொல்லனும்! ஒரு உயிரைக் கொல்லறது பாவன்னு எங்க வாத்தியாரு சொன்னாரு அப்பத்தா”  என்று அங்கு மரத்தின் நிழலில் நின்றிருந்த ‘கருவாயனை’ காட்டிக் கொண்டே சொன்னான். கருவாயனை திரும்பிப் பார்த்துவிட்டு அப்பத்தா அந்துவனிடம் கூறினாள். 

” அடக்கண்ணு இந்த ‘கருவாயன்’ போனா என்ன, வேறு ஒருத்தன் ஒனக்குக் கிடைப்பான். இவன கறுப்புக்கிட்டக் கொடுக்கறதுன்னு வாக்கு கொடுத்தாச்சுல்ல கண்ணு” என்று மறுத்து பதில் கூறியவுடன் அப்பத்தாவின் கையை வேகமாக உதறி விட்டபடி அழுது கொண்டே ஓடினான் அந்துவன். 

கோவில் பூசை முடிந்து கருவாயனை அழைத்து வரச் சொன்னார் அந்துவனின் அப்பா. ‘கருவாயனை’ காணவில்லை என்று பதறிக்கொண்டே வந்து சொன்னான் மாறன். 

“அதெப்படி காணாம போவான் மரத்தின் நிழலில்தானே இருந்தான் நல்லாத் தேடிப்பாத்தியா?” 

“எல்லாப் பக்கமும் தேடிப்பார்த்துட்டேண்ணே கண்ணுக்கே சிக்கலியே” 

“டேய் நல்லா பாத்த போ.. அந்த வயக்காட்டுப் பக்கமா போயிருப்பான் போய் பாத்துட்டு வா” 

“அங்கயும் பாத்துட்டம்ண்ணே அங்க இல்ல” என்று வேறு ஒருத்தன் சொன்னான். அந்துவனின் அம்மா சாரதாவும், அப்பத்தா குப்பாயம்மாளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 

“ஏன் ஆத்தா அந்துவன் எங்க போய்ட்டான் ரொம்ப நேரமா காணலியே?” என்று சாரதாவிடம் கேட்டாள் அப்பத்தா குப்பாயி. 

“அதான் அத்தை நானும் பாக்கறேன் எங்காச்சும் வெளையாண்டுக்கிட்டு இருப்பான் நான் போயி கூட்டியாறேன் நீங்க இதப் பாருங்க” என்று நகர்ந்தவளிடம் முத்துக்கருப்பன் கேட்டான்,

“ஏய் இந்தா நில்லு!, ஒம்பையனையும் காணோம், கருப்பனையும் காணோம், ஏய் யம்மா! இந்தப்பய செஞ்ச வேலைதான் இது. டேய் மாறா நம்ம தோட்டத்துப் பக்கமாத்தான் போயிருப்பான் போய் பாத்துட்டு வாடா ” என்று கோபமாகக் கூறினான். 

“யப்பா முத்துக்கருப்பா கோவப்படாதே!… அந்துவன் சின்னப்பையன்தான இதப் பத்தியெல்லாம் அவனுக்கு ஒன்னும் தெரியாதுல்ல ” என்று குப்பாயம்மாள் மெதுவாகக் கூறினாள். 

“யம்மா என்னம்மா சொல்ற அவன் சின்னப்பையன்தான், இந்தா இவளுக்கு எங்க போச்சு புத்தி அவனுக்கு சொல்லியிருக்கனுமுல்ல. அந்த கருவாயன் வந்ததில் இருந்தே ரெண்டு பேரையும் ஒன்னா வெளையாட விட்டா இப்ப பாத்தியா அவனக் காப்பாத்த இந்த பய போயிருக்கான். ஆனா, விட்ற மாட்டேம்மா கறுப்பனுக்கு கொடுத்த வாக்கை விட்ற மாட்டேன் ” என்று கோபத்தோடு சொன்னான். 

ஒருமணி நேரம் கடந்தும் கருவாயனை கண்டுபிடிக்க முடியவில்லை அதேசமயத்தில் சிறுவன் அந்துவன் வீட்டில் உள்ள ஒரு நெல் சேகரிக்கும் அறையில் இருந்து கண்டு பிடித்து அழைத்து வந்தனர். சாரதா தன் கணவன் முத்துக்கருப்பனிடம் கெஞ்சினாள், 

“ஏங்க புள்ளய அடிச்சு கிடிச்சு போடாதீங்க அவன் எதுவும் செஞ்சிருக்க மாட்டான்” 

“ஏலேய் அந்துவா எங்க கொண்டு போய் ஒளிச்சு வச்சுருக்க ஒங் கருவாயனை? . விடமாட்டேன் சொல்லுலே!” என்று தனது மகனை அதட்டினான். அந்துவன் பயத்தில் நடுங்கினான். அப்போது அப்பத்தா குப்பாயம்மாள் கேட்டாள், 

“ஏலே இப்படி அதட்டிக் கேட்டா அவன் பயந்துடுவான்ல நாங் கேக்கறம்லே, யப்பா கண்ணு கருவாயனை எங்க கூட்டிட்டு போன சொல்லிடு என் ராசா அப்பத்தா ஒனக்கு கல்கண்டு வாங்கித்தாரேன்?” 

அந்தக் கேள்விக்கு அவன் கண்கள் மிரள பதில் அளித்தான்,

“எனக்கு … எனக்கு தெரியாது அப்பத்தா நாங்கூட்டிட்டுப் போகல”

“ந்தா டேய் உண்மைய சொல்லிப்புடு இல்லன்னா முதுகுத் தோலை உரிச்சுப்புடுவேன் ” என்று மீண்டும் முத்துக்கருப்பன் கோபத்தில் கத்தினான். 

“ப்பா… என…. க்குத் தெரியாதுப்பா… ப்பா எனக்கு தெரி.. யாது” என்று பயத்துடன் நடுங்கிக் கொண்டே தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். 

“ச்சே இந்த பயதான் எங்கியோ கொண்டுபோய் ஒளிச்சு வச்சுட்டான் டேய் மாறா… ஒன்னு செய் நீ தோட்டத்துக்கு போய் அந்த பெரிய கருவாயனை கூட்டிட்டு வா அவன கறுப்பனுக்கு பலி கொடுத்துடுவோம். இந்த கருவாயனை அப்புறமா கவனிச்சுக்குடுவோம்” என்று கூறியதைக் கேட்டு மாறன் வேகவேகமாகச் சென்று பெரிய கருவாயனை கூட்டிட்டு வந்தான். 

உடனடியாக மீண்டும் பூசை தொடங்கப்பட்டு கறுப்பனுக்கு பெரிய கருவாயனை பலி கொடுத்தார்கள். கண் முன்னே பெரிய கருவாயனின் தலை துண்டிக்கப் பட்டதையும், இரத்தம் பீறிட்டு வெளிவருவதையும் கண்ட சிறுவன் அந்துவன் நடுங்கிக் கொண்டே கீழே சாய்ந்தான். 

இரண்டு மூன்று நாட்களுக்கு அந்துவனுக்கு கடுமையாக காய்ச்சல் அடித்தது. அதற்கு மருத்துவரிடம் சென்று காண்பித்தார்கள். மருத்துவரும் ஊசி ஒன்றை போட்டு அனுப்பினார் வீட்டுக்கு வந்து அப்பத்தாவின் மடியில் படுத்திருந்தான். அப்போது அந்துவனின் அப்பா முத்துக்கருப்பன் வந்தார். 

“யம்மா இப்ப எப்படி இருக்கு அவனுக்கு?” 

“தேவலடா கொஞ்சம் கொஞ்சமாய் கொறைஞ்சு வருது காய்ச்சல்” 

“எனக்கு அப்பவே தெரியும்மா, அந்த கருவாயனைத்தான் கறுப்புக்கு பலி கொடுக்கறதா சொன்னோம், இப்போ அவனுக்கு பதிலா பெரிய கருவாயனை பலி கொடுத்ததனால கறுப்புக்கு புடிக்கல அதான் இம்புட்டு காய்சல வரவச்சிருக்கான் கறுப்பு” 

“ஏலே அதெல்லாம் ஒன்னுமில்ல. அவன் சின்னப்பையன் ஏதோ ஒரு உசுற காப்பாத்துனுன்னு நெனச்சிருக்கான் அது தப்பால்லே! அதெல்லாம் ஒன்னுமில்ல காய்ச்சல் சரியாயிடும் நீ போடா அந்தாண்ட” என்று சத்தம் போட்டாள் குப்பாயம்மாள். 

“அப்புறம் என்னாச்சுப்பா? ” என்று விஜய் அவன் அப்பா அந்துவனிடம் கேட்டான். 

“ஆமாப்பா அதுக்கப்புறமா என்னாச்சுன்னு சொல்லுங்கப்பா? அந்தக் கருவாயனை எங்க ஒளிச்சு வச்சீங்க?” என்று அவனது மகள் ஜனனியும் கேட்டாள். 

“ம்ம்… ஒளிச்சு எல்லாம் வைக்கலம்மா அவுத்து உட்டேன் அது எங்கியோ போயிடுச்சு. அப்புறம் ஒரு அஞ்சு நாள் கழிச்சு பக்கத்து ஊருக்குள்ள இருந்துச்சுன்னு கொண்டு வந்து விட்டுட்டுப் போனாங்க”

“மறுபடியும் தாத்தா அதை கொன்னுட்டாறாப்பா?” 

“ஹா ஹா… இல்ல இல்ல கொல்லல அதுக்கப்புறமா அந்த கருவாயன் எங்கூடயே இருக்கட்டுன்னு விட்டுட்டாறு. ஆனா கறுப்பனுக்கு கொடுக்க வேண்டிய பலி ஆட்டை, வீட்ல வச்சுக்கக் கூடாதுன்னும், கறுப்பனோட கோயிலுக்கே கொண்டு வந்து விட்டுறுங்கன்னும் பூசாரி அடிக்கடி வந்து சொல்லுவாறு. இல்லேன்னா நேர்த்திக் கடன் ஆயிறுன்னும் சொன்னாறு”

“அதுக்கப்புறமா அந்த கருவாயன் பூசாரி சொன்னது போல கோயிலிலேயே கொண்டு போய் விட்டுட்டீங்களாப்பா? “

“டேய் போதும் போதும் உங்கப்பாக்கிட்ட கதை கேட்டது போய் படுங்க போங்க” என்று அந்துவனின் மனைவி அமுதா வந்து விரட்டினாள் பிள்ளைகளை. 

“ஏய் புள்ளைங்கள ஏன் வெரட்டற?”

“போதுங்க நீங்க கதை சொன்னது நீங்களும் ஒங்க கருவாயனும் அவங்க போய் படுத்துத் தூங்கட்டும்”

“அம்மா நாளைக்கு சண்டேதான லேட்டா படுத்தா ஒன்னும் பிரச்சனை இல்ல. அப்பா நீங்க சொல்லுங்க கருவாயனை கோயிலுக்கே கொடுத்துட்டீங்களா?” என்று புள்ளைகள் ரெண்டு பேரும் கேட்டார்கள். 

“இல்லடா கண்ணுங்களா அது சாகற வரைக்கும் எங்கூடவேதான் இருந்துச்சு” என்று தனது கருவாயனின் கதையைச் சொல்லி முடித்தான் அந்துவன். 

“அப்பா ரொம்ப இளகிய மனசுப்பா உங்களுக்கு ” என்று சொல்லிவிட்டு இரண்டு பேரும் படுத்துக் கொண்டார்கள். 

_____________________________

குழந்தைகள் இருவருக்கும் பள்ளியின் இறுயாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டது. குழந்தைகள் இருவரின் வற்புறுத்தலின் பெயரில் அந்துவன் அவர்களை அழைத்துக் கொண்டு தனது சொந்த ஊரான தோப்பூருக்குச் சென்றான். 

அங்கே இருந்த அந்துவனின்  பழைய தோப்பு வீட்டிற்கு அருகிலேயே வேறு புதிய வீட்டில் அவனது சித்தப்பா குடும்பத்தினர் குடியிருந்தனர். சித்தப்பா குடும்பத்தினர் இவர்களை அன்போடு வரவேற்று உபசரித்தனர். அவர்கள் புதிய வீட்டில் இருந்தாலும் பழைய வீட்டை வேலை ஆட்களைக் கொண்டு பராமரித்து வந்தனர்.

குழந்தைகள் இரண்டு பேரும் வயல்வெளிகள், தென்னந்தோப்பு, மாந்தோட்டம் என்று சுற்றிச் சுற்றி வந்து ரொம்பவே சந்தோசத்தில் இருந்தனர். சொந்தம் பந்தம் எல்லாம் வந்து அவர்களை விசாரித்து விட்டுச் சென்றனர். அதேபோல குளத்துக் கறுப்பன் கோயிலுக்கு அழைத்துச் செல்லுமாறு குழந்தைகள் கேட்டனர் அடுத்த நாள் அங்கே போகலாம் என்று கூறினான் அந்துவன். 

அவர்கள் அனைவரும் அந்துவனின் அப்பா முத்துக்கருப்பன் கட்டிய தோப்பு வீட்டில் தங்கினார்கள். அந்துவன் தனது மனைவி, குழந்தைகள் இருவரையும் கீழே இருந்த பெரிய அறைக்குள் படுத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு தான் மொட்டை மாடியில் படுக்கிறேன் என்று மேலே வந்தான்.

வெயிட்காலம் என்பதால் தனது பழைய கால மொட்டை மாடியில் படுத்துத் தூங்கிய பழக்கம் வரவே அவனும் மொட்டை மாடிக்கு வந்தான். பொதுவாக கிராமத்து வாசிகளுக்கு வெயிட்காலத்தில் மொட்டை மாடியில் படுத்துத் தூங்குவது என்பது சொர்கம். 

பழையகால வழக்கம் போல் மொட்டை மாடியில் படுத்துத் தூங்குவதற்காகக் கையில் பாய், தலையணை மற்றும் கொசுவர்த்திச் சுருளுடன் வந்திருந்தான். மொட்டை மாடியில் கட்டப்பட்டிருந்த கயிற்றுத் தூக்கில்  ஆடைகள் காயவைக்கப்பட்டிருந்தன. அவைகளை விலக்கிவிட்டு வழக்கமாக தான் படுக்கும் இடத்திற்குச் சென்று அந்த இடத்தை வாஞ்சையோடு பார்த்து விட்டு, வானத்தைப் பார்த்து நன்றாக ஆழ்ந்து மூச்சை இழுத்தான்.

பிறகு மெதுவாக ஆசுவாசமாக ஒரு பெரும் மூச்சை விட்டுவிட்டு கொண்டு வந்திருந்த பாயை விரித்தான். கையுடன் கொண்டு வந்திருந்தத் தீப்பெட்டி உதவியுடன் கொசுவர்த்தியைப் பற்றவைத்து ஓரமாக நகர்த்தி வைத்துவிட்டு பாயில் படுத்து மீண்டும் வானத்தைப் பார்த்தான். 

வானத்தில் நட்சத்திரங்கள் வைரக் கற்கலாக மின்னிக் கொண்டிருந்தன. ஒருபக்கம் நிலாவும் தனது மஞ்சள் ஒளியை வீசிக்கொண்டு வெள்ளை மேகங்களுக்கு இடையே கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது. சித்திரை மாதம் என்பதாலோ என்னவோ வானில் கருமேகங்களுக்கும் வாய்ப்பு இல்லாமல் வானம் வெள்ளையாக இருந்தது. 

அந்துவனுக்கு தனது பழையகால நினைவுகள் திரும்பவும் வந்ததுபோல இருந்ததது. வானத்தில் மேகங்கள் நகர்ந்து, நகர்ந்து அவன் கண்களுக்கு விதவிதமாக காட்சியாளித்துக் கொண்டிருந்தது. ஒரு மேகம் பெரும் ஓநாய் போல வாயைப் பிளந்தபடி நகர்ந்து செல்லும் நிலாவைக் கவ்விப் பிடிப்பதற்காக துரத்துவதுப் போலத் தோன்றிய காட்சியை இரசித்த அந்துவனுக்கு தனது பிரச்சனைகளை எல்லாம் ஓநாயைப் போல கற்பனை செய்து கொண்டான்.

அந்த நிலா போல நாமும் ஓடிக் கொண்டிருக்கிறோம் ஓநாய் நிலாவை விழுங்கி விடுமா? என்று ஆர்வத்தோடு அந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அதற்கு மாறாக மேகஓநாய் சற்று கலைந்து வேறு ஒரு மனித வடிவமாக மாறிட, ஓடிக்கொண்டிருந்த நிலாவும் வேறொரு மேகங்களுக்கு இடையே புகுந்து தன்னை மறைத்துக் கொண்டது. 

இப்படியாக சென்றுகொண்டிருந்த கற்பனைக் குதிரைக்கு முற்றுப்புள்ளி வைத்தது அவனது உறக்கம். அந்துவன் அவனையறியாமல் தூங்கிக் கொண்டிருந்தான். 

அப்போது அவன்மீது யாரோ உட்கார்ந்து அமுக்குவதைப் போல உணர்ந்தான். பட்டென்று விழித்த அவன் எழுந்து கொள்ள முயற்சித்தான் ஆனால் அவனால் எழ முடியவில்லை. உடனே அவன் படுத்தபடியே கை, கால்களை அசைத்துப் பார்த்தான் ஆனால், கை கால்களையும் அசைக்க முடியவில்லை. மீண்டும் ‘ஓவென்று’ சத்தம்போட்டுக் கத்தியும் பார்த்தான், பயனில்லை. அவனுக்கு மூச்சு முட்டுவது போல தோன்றியது.

அவனுடைய உணர்வுகள் தெள்ளத் தெளிவாக வேலைசெய்து கொண்டிருந்தது. அதைவிட அவனது செவிகள் அபாரமாக வேலைசெய்தது. வெளியிலிருந்து ஏதோ ஒரு சத்தம் மட்டும் அவனுடைய செவிகளுக்குத் தெளிவாகக் கேட்டது. அவனும் அத்தச் சத்தம் என்னவென்று அறியச் செவிகளை மேலு‌ம் கூர்மையாக்கிக் கேட்டான்.

அது குதிரை ஒன்றின் குளம்படிச் சத்தம்போல அவனுக்குக் கேட்டது. அவனை அமுக்கிக் கொண்டிருந்ததில் இருந்து பட்டென விடுபட்டதைப் போல தோன்றவே, உடனே எழுந்து மாடியின் விளிம்பிற்குச் சென்றான். அங்கிருந்து நின்றபடியே எட்டிக் கீழே பார்த்தான்,

சற்று தூரத்தில் ஒரு வெள்ளைக் குதிரைமீது ஒரு கறுத்த உருவம் சென்று கொண்டிருந்ததைப் போல தோன்றியது அவனுக்கு. அதன் கையில் இருந்த அறுவாள் மட்டும் பளபளவென்று மின்னியது. அதைப்பார்த்த அவன் பயத்தில் வெலவெலத்துப் போனான். 

இரவில் குளத்துக் கறுப்பன் ஊர்மக்களைக் காவல்காக்க  வேண்டி ஊரைச் சுற்றி வருவார் என்று அவனது அப்பத்தா சொல்லிக் கேட்டிருக்கின்றான். ஆனால் அவனது இத்தனை வருட  அனுபவத்தில் ஒருமுறை கூட இதுபோன்ற ஒரு காட்சியைக் கண்டதில்லை.

தற்போது அந்தக் கறுப்பனை நேரில் பார்த்த காட்சி அவன் கண்முன் படம் போல மீண்டும் மீண்டும் ஓடியது. பயத்தில் சட்டென்று படுத்து போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டான். கறுப்பு நடமாடுவதைப் பார்த்து விட்டால் நம்மையே அமுக்கிவிடும் என்று அப்பத்தா சொல்லியிருந்ததால், அந்த வயதிலும் அவனுக்கு பயத்தில் உடம்பெல்லாம் நடுங்கியது.

சிறிது நேரம்வரை போர்வைக்குள்ளேயே பதுங்கியிருந்த அஙனுக்கு உடம்பெல்லாம் வியர்த்து ஒழுகியது. போர்வையை விலக்கிவிட்டு மெதுவாக எழுந்து உட்கார்ந்தான். ‘ச்சே நமக்கே ரெண்டு குழந்தைங்க இருக்கு இப்படி பயந்துட்டோமே அதுவும் இந்த கம்யூட்டர் காலத்துல ச்சே’ என்று மனதிற்குள் யோசித்தபடியே போர்வையை முழுவதுமாக விலக்கினான் நல்ல சிலுசிலுவென்று காற்று அடித்தது. 

சிறிது நேரத்தில் அப்படியே தூங்கிப் போனான். நல்ல தூக்கத்தில் ஆழ்ந்திருந்த அவனுக்கு மீண்டும் ஏதோ சத்தம் ஒன்று கேட்க, அரை குறை தூக்கத்தில் எழுந்து பார்த்ததும் அதிர்ந்தான். 

மாடியின் சுவரில் கறுப்பு உருவம் ஒன்று அறுவாளுடன் இவனையே பார்த்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் அவனுடைய நாக்கு பயத்தில் மேல் அன்னத்திலேயே ஒட்டிக் கொண்டது. சற்று நேரம் முன்னால் அவனுக்குள் இருந்த தைரியம் எல்லாம் காணாமல் போயிருந்தது. நெஞ்சு படபடத்தது, எழுந்து ஓடிவிடலாமா என்று யோசித்தபடியே மீண்டும் சுவற்றைப் பார்க்க அந்தக் கறுப்பு உருவம் அங்கே இருந்து காணாமல் போயிருந்தது.

‘மாடியில் இனி தூங்க முடியாது’ என்ற பயத்தில் பாயைச் சுருட்டலாம் என்று திரும்பினான். அப்போது அந்த உருவம் பாயில் படுத்துக் கொண்டிருந்தது. பார்த்தவுடன் பயத்தில் ‘ஐய்யோ’ என்று அலறினான். ‘பாயும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம் உயிர் தப்பிச்சா போதும்’ என்று நினைத்துக் கொண்டு படிகளில் வேகமாக இறங்கினான். கீழே வீட்டுக்குள் சென்று படுத்தவன் பயத்தில் அப்படியே தூங்கிவிட்டான். 

அடுத்தநாள் காலை ஒன்பது மணிக்கு அவன் மனைவி அமுதா வந்து எழுப்பவே திடுக்கிட்டு எழுந்தான். 

“என்னங்க இது!, மாடியில போய் படுத்தீங்க, கீழ எப்ப வந்து படுத்தீங்க. சரி காபியைக் குடிச்சுட்டு வாங்க. குழந்தைங்க ரெண்டு பேரும் மாறன் பெரியவருகூட தென்னந்தோப்புக்கு போயிருக்காங்க. அதுவும் உங்க சித்தப்பா வேற வந்துட்டுப் போனாரு இன்னைக்கு கறுப்பன் கோயில்ல ஆடு வெட்டறாங்களாம் அங்க போலான்னு சொன்னாரு ” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள். 

எழுந்து உட்கார்ந்த அந்துவனுக்கு நேற்று இரவு நடந்தது முழுவதும் ஒரு கனவைப் போல தோன்றியது. சற்று காலார நடந்துவிட்டு வரலாம் என்று மாந்தோப்புப் பக்கமாகச் சென்றான். அங்கே அவனது பழைய கால நண்பன் சந்திரனைப் பார்த்தான். அவனை அங்கே கண்ட வியப்பில், 

“வாடா ஜிடி. நாயுடு எப்படி இருக்க? “

“டேய் அந்துவா!, நான் நல்லா இருக்கண்டா நீ எப்படா ஊருக்கு வந்த மனைவி குழந்தைங்களும் வந்திருக்காங்களா?” 

“ம்ம்… ம்ம்ம் நல்லாயிருக்கண்டா, ஆமாண்டா அவங்களும் வந்திருக்காங்க” 

“ஏண்டா ஊருக்கு வந்திருக்க ஒரு வார்த்தை கூட சொல்லல. ஆமா கண்ணெல்லாம் வேற செவந்து இருக்கு … என்னடா!, மாறன் அண்ணன் ஏதாவது வாங்கிட்டு வந்து குடுத்தாரா? ” என்று கேட்டான் சந்திரன். 

“டேய் அதெல்லாம் ஒன்னும் இல்லடா…. அது….. நேத்து….” என்று தொடங்கி இரவு அவன் கண்ட அனைத்தையும் சொல்லிமுடித்தான் அந்துவன். அவன் சொன்னதை முழுவதும் கேட்ட சந்திரன் அதற்கு பதில் அளிக்கத் தொடங்கினான். 

“டேய் அந்துவா ஒரு உண்மையைத் தெரிஞ்சுக்க, தூக்கத்துல அமுக்குறதுங்குறது நீ நெனைக்கறது போல குளத்துக்கறுப்போ, பேயோ இல்ல இதுக்கு அறிவியல்ல ‘Sleep Paralysis’ ன்னு சொல்லுவாங்க” 

“என்னது ‘ஸ்லீப் பாராலிசிஸ்ஸா’ அப்படீனா?” 

“சொல்றேன் கேளு, இதுக்கு முக்கியக் காரணமே நம்ம மூளைதான். உடம்பு டயர்டா இருக்கும்போது தூக்கத்தைக் கட்டுப்படுத்துற நரம்புகள் அதைச் சரிவரச் செய்யாம போறதனால, அடுத்தடுத்த தூக்க நிலைகளுக்குச் கரெக்டா போகாது. விழிப்பு நிலைக்கும், உறக்க நிலைக்கும் நடுவுல இருக்கும். அதாவது நம்மளோட உடம்பு தூக்கத்துல இருக்கும், ஆனா ஆழ்மனசு முழு விழிப்பு நிலையில் இருக்கும்.

தூக்கத்தோட முதல் நிலைதான் ‘REM ஸ்லீப்’ -(கண்கள் மூடிய நிலையிலும் கருவிழிகள் இயங்கும் நிலை) நம்ம உடம்பு அசதியில் தளர்ந்து இருக்கும், தளர்ந்த நம்ம உடம்பு செயல்பட மறுக்கும் ஏன்னா, அதுக்கு அப்ப ஓய்வு தேவை. அதைக் கட்டுக்குள் கொண்டுவரதுக்கு, நம்ம மூளை ஒரு விந்தையை செய்யுது. அதாவது நமக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதுபோல ஒரு பிரமையை ஏற்படுத்துது.

அப்பவும் நம்ம உடம்பு ஒத்துழைக்க மறுத்தா, உடனே, நமது மூளை அடுத்தகட்ட நடவடிக்கையா, நம்ம அறைக்குள் யாரோ இருப்பது போலவும், அந்த உருவம் நம்மைத் தாக்க வருவது போலவும் ஒரு காட்சியை கண் முன்னே ஓட்டிக் காட்டும். அதிலிருந்து தப்பிக்கறதுக்கு, நாம உடனே எழுந்துதானே ஆகனும்? 

நிறைய பேருக்கு இந்த நிலையிலியே உடம்பு இயக்கதுக்கு வந்து எழுந்துடுவாங்க. ஆனா சிலர் எந்திரிக்க மாட்டாங்க, அப்ப மூளை மீண்டும் பயமுறுத்தத் தயாராகும். நமமளச் சுத்தி ஒரு பெரிய ஆபத்து இருக்குற மாதிரி காட்டும். இப்படி பல வழிகளிலும் நம்மை எழுப்ப முயற்சிக்கும் முடிவில் நம்மை எழுப்பிக் காப்பாற்றியும் விடும். உடல் இயக்கத்தையும் சீராக்கியும் விடும். இதுதான் நேத்து உனக்கு நடந்திருக்கு. உன் ஆழ்மனசுல ஏற்கனவே பதிஞ்ச போன, கருவாயனை குளத்துக்கறுப்பனுக்கு பலி கொடுக்காம போன சம்பவத்தையே ஆயுதமா உபயோகிச்சுருக்குடா”

“இப்படியும் இருக்காடா நான் ரொம்பவே பயந்துட்டேண்டா. சரிடா இப்ப கிளீயர் ஆயிட்டேன் வர்றேண்டா ” என்று புறப்பட்டான். 

மாந்தோப்பில் இருந்து வரும்வழியில் குளத்துக்கறுப்பன் கோவில் பூசாரி வந்து கொண்டிருந்தார். அவர் அந்துவனைப் பார்த்துவிட்டு, “என்ன தம்பி, எப்படி இருக்கீங்க? இன்னைக்கு காலைலதான் சொன்னாங்க நீங்க குடும்பத்தோட ஊருக்கு வந்திருக்கிறதா, ரொம்ப சந்தோசம் தம்பி” என்று கூறிவிட்டு சிரித்தார்.

அந்துவனும் அவருடைய நலத்தை விசாரித்து அறிந்தான். பேசிக்கொண்டு புறப்பட்ட பூசாரி அவன் காதில் வந்து கேட்டார், “என்ன தம்பி நேத்து குளத்துக்கறுப்பன பாத்தீங்களாக்கும். அந்த பழைய ‘கருவாயனோட’ வேண்டுதல் பாக்கி இருக்கு  தம்பி நெறைவேத்திருங்க, எத்தினி வருசமானாலும் கறுப்பன் மறக்கமாட்டான்” என்று சொல்லிவிட்டுப் போனார். 

அதைக் கேட்ட அந்துவனுக்கு உள்ளில் பயம் மீண்டும் உருண்டோடி மூச்சுத்திணறியது. 

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அழுவதற்கு நேரமில்லை (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி

    புரிதல் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு