in , ,

விசித்திர உலகம் (இறுதி அத்தியாயம்) – சுஶ்ரீ

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

பாவேஷ் அகர்வால் ரூபனுடைய பங்களாவுக்கு சொன்னபடி வந்தார். ரூபன் அவரை வாயிலில் இருந்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றான். முதலில் ஆரஞ்ச் ஜூஸ்ஸோட ஆரம்பிச்சது பேச்சு. ரூபன் தன் நிலையை ஒளிவில்லாமல் சொன்னது பாவேஷ் அகர்வாலுக்கு பிடிச்சது.

ரூபனுடைய பங்களாவின் பரந்து விரிந்த டைனிங் ஹாலில், குஜராத்தி வகை காய்கறி உணவு, மூன்று நெய் இனிப்புகளுடன் பறிமாறப்பட்டது. பாவேஷ் அகர்வால் ரசித்து சாப்பிட்டார். மெதுவாக தன் கருத்தை சொன்னார் பாவேஷ் 6 மாசத்துக்குள்ள ஒரு படம் பண்ணணும்.

பணம் லிமிட் இல்லை ஆனால் நல்ல டைரக்டர், வடநாட்டு ஹீரோயின், ஹீரோவாக ரூபன். பிரபல காமெடி நடிகர், வில்லனாக பிரபல வடநாட்டு நடிகர், பிரபல இசை அமைப்பாளர் எல்லாம் கிராண்டா இருக்கணும்.

ஒரே கண்டிஷன் படம் 6 மாசத்துல முடியணும் பொறுப்பு பூரா ரூபனுடையது, ஒவ்வொரு மாதமும் ரிபோர்ட் வேணும் எதுவரை நடந்திருக்குனு.

உடனே படப்பிடிப்பை தொடங்கலாம் பெங்காலி கதை இருக்கு நல்ல கதை பிடிச்சிருந்தா அதை எடுக்கலாம், இல்லைன்னா டைரக்டர் சாய்ஸ். அவ்வளவுதான், என் வக்கீல் வருவார் கான்ட்ராக்டோட. ஓகேயா தடதடவென பேசினார். ரூபன் சம்பளமாக வாங்கிக் கொள்ளலாம், இல்லை ஒரு ஸ்டேட் வினியோக உரிமை எடுத்துக் கொள்ளலாம். சரியா மீதியை வக்கீல் கிட்ட பேசிக்கங்க, நான் வரட்டா போயே விட்டார் கார் ஏறி.

இப்படி மின்னல் வேக பிசினஸ் ஆட்களுடன் ரூபன் எப்பவும் வேலை செய்ததில்லை இப்ப வேற வழியில்லை. பாவேஷுடைய வக்கீலுக்கு காத்திருந்தான் ரூபன்.

மறுநாள் காலை ஒன்பது மணிக்கெல்லாம் பாவேஷ் அகர்வாலின் வக்கீல், ரூபனின் பங்களாவில் ஆஜர், அடுத்த ஒரு மணி நேரம் அனைத்து கண்டிஷன்களுடன் பத்திரம் தயாராகி கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தால் ரூபன் மீண்டும் மூழ்கி வரும் தன் தொழிலை மீட்டெடுப்பானா, பாவேஷ் அகர்வாலின் மிடாஸ் டச் இந்த கோடம்பாக்கம் கோலிவுட்டிலும் செயலாகுமா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜெய்பூரிலிருந்து படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ‘மா இண்டி கோடலு’ டீம் மீண்டும் விசாகபட்டிணம் வந்தது. தீபாவளிக்குள் படம் முடிக்கும் தீவிரத்துடன் வேலைகள் நெருக்கப்பட்டன.

தேவிஶ்ரீ ஹைதரபாத் வீட்டுக்கு வந்தபோது அவள் தாயார் வீட்டில்தான் இருந்தார், கார் சத்தம் கேட்டு மாடி பால்கனி வழியே பார்த்த போது கண்ட காட்சி அவர் வயிற்றை கலக்கியது.

வேக வேகமாய் கீழே வந்தாள், டிரைவர் ஒரு பெரிய சூட்கேசை தூக்கி வர ஒரு வேனிடி பேக்குடன் தேவி பின்னால் வந்தாள்.

15, 20 நாளுக்கு முன்னால் தாயும் மகளும் பார்த்துக் கொண்டது. தாயார் சட்டென மெலிந்து நோய்வாய் பட்ட மாதிரி காட்சி அளித்தாள். மகள் முகத்தில் மெருகு கூடி எப்பொழுதையும் விட அழகாக தெரிந்தாள். அகத்தின் அழகு முகத்தில் விகசித்தது.

அம்மா என்று ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.தாயாரின் முகத்தில் இறுக்கம். தேவியைப் பார்த்து, ”யார் அது அந்த தாடிக்காரன் உன் கூட வந்தது.மிக சொந்தமாய் உன்னை அணைத்து விடை கொடுக்கிறான்”

“அம்மா, எல்லாம் நானே சொல்றேன், முதல்ல நல்லா வென்னீர்ல ஷவர் எடுக்கணும், உன் கையால பெசரட் தோசை சாப்பிடணும், பத்தே நிமிஷம் இரு வரேன்”. வேனிடி பேக்கை சோஃபாவில் எறிந்துவிட்டு மாடிப் படிகளில் துள்ளி ஏறினாள் தன் அறையை நோக்கி. இந்த தேவியை அவள் அம்மா பார்த்ததில்லை.

சமையல்காரியிடம், பெண்ணுக்கு தேவையானதை சொல்லி விட்டு சோபாவில் தொப்பென உக்காந்தாள், கையில் இருந்து ஏதோ நழுவி விழுந்து உடையப் போவது போல உணர்ந்தாள்.

அரைமணி நேரத்தில் கீழே வந்த தேவியின் முன் சூடாக பலகாரத் தட்டு வந்தது. நாசூக்காய் கிள்ளி வாயில் போட்ட வண்ணம் தாயாரிடம் அமர்ந்தாள். “அம்மா ஐயாம் இன் லவ்”

“என்ன கருமம்டி, சினிமா வசனம் போல பேசறே, நாயுடுகாருக்கு நான் என்ன பதில் சொல்றது”

“அது உன் பாடு, இந்த ‘மா இண்டி கோடலு’ என் கடைசி படம் நான் மோகனனை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.”

“யாருடி அது, காலைல உன் கூட வந்த தாடிக்கார பையனா”

“ஆமாம் அதுதான் உன் மாப்பிள்ளை, அடுத்த வாரம் கோழிக்கோடு போறோம் நாம அவன் அம்மாவை பாக்க”

“இப்பதான் உன் சினிமா சூடு பிடிக்க ஆரம்பிக்குது இப்படி பண்றது சரியில்லை. நாயுடுகாரு உனக்காக ஏதேதோ பிளான் வச்சிருக்கார்”

“அதைப் பத்தி பேசாதேம்மா அந்த ஆள் வக்கிரமானவன், என் உடம்புதான் வேணும் அந்தாளுக்கு, இந்த படம்தான் கடைசி அது என் தீர்மானமான முடிவு. நீ கேரளா பாத்ததில்லைதானே ஞாயித்துக் கிழமை காலைல ஃபிளைட் ஜூஊஊஊம். தயாரா இரு”

சென்னைல இருந்து புறப்பட்ட அந்த சிறிய பட்ஜெட் விமானம் அந்த மூவரையும் சுமந்து ஒண்ணேகால் மணி நேரத்தில் கொச்சி இன்டர்நேஷனலை அடைந்தது. அங்கிருந்து ஒரு டாக்சி, ஆலப்புழா போகும் வழியில் முல்லக்கால் கிராமம் ஒரு 40 நிமிட பயணம்.

டாக்சி அந்த ஓடு வேய்ந்த பெரிய வீட்டின் முன் நின்றது. மோகனனின் தாயார் வலசம்மா, ஏற்கனவே தெரிவித்திருந்ததால் தயாராக இருந்தார். ஆலத்தி எடுத்து வரவேற்றார். அதுவரை முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு பேசாமல் வந்த தேவியின் தாயார், அந்த அழகான வீட்டையும் பின்னால் இருந்த தோட்டத்தையும் பார்த்து மயங்கி விட்டாள். மேலே என்ன மோகனன் ஏற்றுக் கொள்ளப்பட்டான்.

வலசம்மா மருமகள் சினிமாவில் நடிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். இந்த தீபாவளி முடிந்ததும் ஒரு நல்ல நாளில் குருவாயூரில் கல்யாணம் வைத்துக் கொள்ள தீர்மானம் செய்யப்பட்டது.

மதிய உணவுக்குப் பின் அந்த ஊரை ஒரு சுற்று வந்தார்கள. கேரள அழகில் தாயும் மகளும் மயங்கித்தான் போனார்கள்.

நாட்கள் ஓடியது மிக வேகமாக, பலர் வாழ்வில் அந்த தீபாவளி ஒளி ஏற்றியது. ராஜமாணிக்கத்தின் ‘சினம்’ படம் பெரிய எதிர்பார்ப்புக்கிடையே தமிழகமெங்கும், மற்றும் இந்தியாவின் பல முக்கிய நகரங்கள், உலகின் தமிழர் வாழும் முக்கிய நகரங்களில் வெளியானது. எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பு, மெகா வெற்றி. கண்டிப்பாக வெள்ளி விழா காணப்போகும் படம் என விமர்சகர்களால் கணிக்கப் பட்டது.

தெலுகு தேசத்தில் ‘மா இண்டி கோடலு’ சக்கைப் போடு போடுகிறது. அதுவும் பல மொழிகளில் டப்பிங் உரிமை விற்கப் பட்டு விட்டது.

இதோ தீபாவளி முடிந்து 10 நாளாகியும் ‘சினம்’ தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. ஹீரோ வினீத் அனைவராலும் கொண்டாடப்பட்டான். விழுப்புரம் ராசி கல்யாண மண்டபம் வேகமாக வண்ணமடித்து புதுப்பிக்கப்படுகிறது. மக்கள் நடிகர் வினீத்குமாரின் திருமணம் அங்கு நடக்கப் போகிறதே.

அந்த தினமும் வந்தது, விழுப்புரம் நகரமே குலுங்கியது தமிழ் திரையுலகமே அங்கு திரண்டதால். ராசி கல்யாண மண்டபம் போதவில்லை விருந்தினர் கட்டுக்கடங்காமல். ஒரு வழியாக வினீத்குமார், அமலாவின் திருமணம் முடிந்தது. முதல் இரவு தாமோதரனின் பங்களாவில், முதல் மாடியில், அமலாவின் அறை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஒத்தைக் கட்டில் ,ரெட்டை கட்டிலாக மாற்றப்பட்டிருந்தது. அந்த இரவை நாம் வர்ணிக்க வேண்டியதில்லை அது அவர்கள் பிரத்யேக இரவு.

அதே நாளில் தெலுகு தாரகை தேவிஶ்ரீன் திருமணம் குருவாயூர் கோவிலில் ஆடம்பரம் ஏதுமின்றி, மாப்பிள்ளை மோகனன் தன் திரையுலக நண்பர்களை அழைத்திருந்தான்.

தயாரிப்பாளர் நாயுடுகாரு வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர், மிகப் பெரிய பரிசுகளுடன். முல்லக்கால் மோகனன் வீட்டில் முதல்இரவு. தேவியின் வாழ்க்கை இனிதே தொடங்கியது அங்கே.

ரூபன் தன் படத்தை ஆடம்பரமாக பூஜை போட்டு தொடங்கியாச்சு. மிகப் பெரிய முதலீட்டில் மாபெரும் படம் என அறிவிப்பு வெளியாகியது. அகர்வால் புரொடக்‌ஷனின், மிடாஸ்டச் கம்பைன்ஸ் அளிக்கும் புதிய சினிமா தமிழ்பட உலகில் முதல் முறையா உலகத் தரத்தில் பிரம்மாண்டமான படம் என எல்லா பத்திரிகைகளும் முழு பக்கத்தில் முழங்கியது.

கோடம்பாக்கம் கோலிவுட்டில் சம்பவங்கள், பல கதைகள் சினிமாவை மிஞ்சி இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த வி..சித்திர உலகை புரிந்து கொள்வது மனிதர்களுக்கு சாத்தியமில்லை. ஏன் அந்த கடவுளுக்கே இது வி…சித்திர உலகம்தான் போல.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விசித்திர உலகம் (பகுதி 15) – சுஶ்ரீ

    பயமுறுத்தும் வருங்காலம் (சிறுகதை) – சுஶ்ரீ