இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“ஆமாம்டி உன் அப்பன் உன்னை வயித்துல கொடுத்துட்டு போன இடம் தெரியாம ஓடிப் போனான் கையில காசில்லை, இருக்க இடமில்லை உன்னை வளத்து ஆளாக்க என்ன பாடுபட்டிருப்பேன். பாத்திரம் கழுவி, மாவாட்டி, கண்டவன் பேச்செல்லாம் கேட்டு என் இளமையை பலி கொடுத்து சீ சீ நினைச்சாலே குமட்டுது.உனக்கு அந்த நிலமை வேண்டாம், பணம்தான் உலகத்துல பெரிசு.உன்னை இந்த கேடு கெட்ட உலகத்துல பணம் இல்லாம தவிக்க விட மாட்டேன். இன்னொரு அஞ்சு வருஷம் பொறு, 25 வயசு ஆனதும் ஒரு நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்து யார் வேண்டாம்னு சொன்னா”
“இனிமே எதுக்கும்மா எனக்கு கல்யாணம் உடம்பு மரத்து ரப்பர் ஆனதுக்கப்பறம்”
விக்கி விக்கி அழுத வண்ணம் அம்மா மடியிலேயே தூங்கிப் போனாள் தேவிஶ்ரீ. அவளுடைய அம்மாவின் கண்களும் கலங்கியது, தன்பெண்ணின் கன்னத்தை துடைத்து படுக்கையில் படுக்க வைத்தாள், ஹாலில் ஃபோன் அலறியது.நிதானமாய் சென்று ஹலோ என்றாள்.
“ஹலோ நடிகை தேவிஶ்ரீ தானே பேசறது?”
“இல்லை அவங்க அம்மா நீங்க யாரு”
“விளையாடாதே தேவி, உன் அம்மா குரல் எனக்கு தெரியும், நீ என்ன பண்ணறே என் கெஸ்ட் ஹவுஸ் பாத்தில்லையே வரயா? கார் அனுப்பறேன்”
“ரங்கய்ய நாயுடுகாரு நான் அம்மாதான் பேசறேன், தேவி தூங்கிட்டா கொஞ்சம் உடம்பு சரியில்லை நாளைக்கு கூப்பிடுங்க” போனை வைத்து விட்டாள்.
கிழவன் என்னவோ கட்டின பொண்டாட்டி மாதிரி நினைச்சிட்டான் போல. கொஞ்சம் கேவலமா கூட இருந்தது. பெத்த மகளை நாமளே பணத்துக்காக கூட்டிக் கொடுக்கறோமேனு.
ஆனா பணம் இல்லாத்தால அவ பட்ட கஷ்டம் அவளுக்குதான் தெரியும். ஓரளவு நல்ல நிலைமை வந்தவுடனே சினிமா சம்பந்தமில்லாத நல்ல பையனை பாத்து கட்டிக் கொடுத்து இந்த நாடே வேண்டாம் வெளிநாட்டில செட்டில் பண்ணி விட்டுடணும்.
ஏதேதோ யோசித்துக் கொண்டு அவளும் உறங்கிப் போனாள். உண்மையில் இந்த உலகம் தனிமையில் ஒரு பெண் இருந்தால் அதுவும் பணமில்லாமல் எப்படி அவளை பந்தாடுகிறது கெளரவமாக வாழ விடாமல் சீரளிக்க முயலுகிறது என்பதுதான் உண்மை.
எப்படியோ தெலுகு பட உலகுக்கு தேவிஶ்ரீ ஒரு புது வரவு. நாயுடுகாரு தெலுகு பத்திரிக்கைகளில் முழுப் பக்க விளம்பரம் கொடுத்து விட்டார்.தெலுகுத் திரையுலகில் கொடி கட்டி பறக்கும் இளம் நாயகனுடன், கனவுத்தாரகை தேவிஶ்ரீ நடிக்கும் உலகத்தரம் வாய்ந்த திரில்லர் ரொமாண்டிக் படம் பூஜை என. விசாகப் பட்டிணம் ராமோஜி பிலிம் சிடியில் பிரம்மாண்டமாக பூஜை போடப்பட்டது.மீடியா கூட்டம் அலை மோதி நடிகர் நடிகைகளை பேட்டி எடுத்தது.
‘மா இன்ட்டி கோடலு’ படம் பல்வேறு நாடுகளில் படமெடுக்கப் பட்டு 10 மாதத்தில் உலகெங்கும் திரையிடப் படும். இளம் நாயகன் ஜீவன்,தேவிஶ்ரீ இணைந்து நடிக்கும் முதல் படம்.எப்படியோ தேவிஶ்ரீ தமிழ் திரையுலகில் இருந்து தெலுகு திரை உலகில் காலடி வைத்தார்.
தமிழ்த் திரையுலகில் வசூல் கிங் ரூபன் அடுத்து என்ன செய்வது என திணறினான். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் ஷூட்டிங் போனது போய், இப்போது ஒரு படம் கூட கையில் இல்லை.சொந்தமாக படம் எடுக்க போதிய பணம் இல்லை கூட்டு சேர்த்து எடுக்க முயற்சி செய்கிறான்.இது வரை ஒன்றும் நடக்கவில்லை
தன் செகரடரி பாபுவைக் கூப்பிட்டு,” என்னடா எதாவது பாசிடிவா தெரியுதா”
“தேவிஶ்ரீ புது படம் நேத்து வைசாக்ல பூஜை போட்டாச்சுண்ணே,அந்த இளம் புயல் ஜீவன்தான் ஹீரோவாம்.”
“டே அவளை பத்தி யாரு கேட்டா, பைனான்சுக்கு விளம்பரம் கொடுத்தோமே அதை கேட்டேன்”
“பெரிசா ஒண்ணும் இல்லண்ணே, துபாய்கார பைனான்ஷியர்தான் ஒத்தர் போன் பண்ணினாரு, உங்க கிட்ட பேசறேன்னாரு”
“ஓ சத்தார் ஷேக்கா, அவன் முதலை ஆச்சே அவன்கிட்ட காலை கொடுத்த மீட்க முடியாதே, சரி பாப்போம்”
“அருணாசலம் செட்டியார்னு செட்டிநாட்டு ஆள் ஒத்தன் இண்டஸ்ட்ரீல குட்டையை குளப்பறானே அந்தாளை பாக்கலாமா”
“அவர்தான் புது படம் வினீத்குமார் சாரை வச்சு எடுக்கறாரே”
“சார் என்னடா மோர், நான் கை நீட்டி தூக்கி விட்ட என் டூப் நடிகன்டா அவன்”
“ஆமாம் ஆனா அவர் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்”
“சரி சரி அதைத்தான் கேம்ப்ளிங் லக்னு சொல்வாங்க, அடுத்த படம் வந்தா தெரியும், ஐய்யா கிட்ட உண்மைலயே சரக்கு இருக்கா இல்லையானு”
“ஆமாம்ண்ணே ஆறே மாசத்துல வரும்னு போன மீட்டிங்ல சொன்னாங்க, பேர் கூட மீடியால வருதுண்ணே, என்னவோ ‘சினம்’ னு வச்சிருக்காங்களாம்.”
“அந்த வினீத்குமார் புகழ் பாடவா இப்ப உன்னை கூப்டேன்., ஏண்டா நம்ம ஆடிட்டரை கன்சல்ட் பண்ணினயா”
“அவரே உங்களை பாக்கணும்னு சொன்னாருண்ணே”
அவன் சொல்லி முடிக்கும் முன்னே கேட்ல இருந்து ஃபோன் ஆடிட்டர் சுந்தரராமன் வந்திருக்கார்னு.
சுந்தரராமன் சென்னையின் புகழ் பெற்ற ஆடிட்டர்களில் ஒருவர்.அவரிடம் தங்கள் கணக்கை ஒப்படைக்க காத்திருப்பவர்களின் வரிசை நெடியது.
ஹலோ ரூபன் குட்மார்னிங்னு சொல்லிய வண்ணம் ஒரு செளகரிமான இருக்கையில் அமர்ந்தார்.
ரூபன்,“என்ன ஆடிட்டர் சார் டாக்ஸ் பூரா கிளியர் பண்ணிட்டோமில்லை இந்த வருஷம்”
“போன வருஷ கணக்கு பேலன்ஸ் பண்ணியாச்சு.இந்த வருஷம் ஓ.டி நிறைய காட்டுது, பேலன்ஸ் டேன்ஜர் லைனுக்கு கீழே போகுது.உடனே ஏதாவது பண்ணுங்க. புது படம் ஏதும் சைன் பண்ணலயா”
“ரெண்டு மூணு படம் டவுனாயிடுச்சு அதனால பைனான்ஷியர்ஸ் பயந்துக்கறாங்க அதான் சொந்த படம் எடுக்கலாமானு பாக்கறேன்”
“ஏதுவோ சீக்கிரம் பண்ணுங்க பர்ஸ்ட் ஆக விடாம”
“ஏன் ஆடிட்டர் சார், நீங்க கூட நம்ம பிராஜக்ட்ல இன்வெஸ்ட் பண்ணலாம், நாலஞ்சு பேர் முதலீடு பண்ணி நானும் கம்மி ரேட்ல ரோல் பண்ணினா நல்ல ரிடர்ன்ஸ் வரும், என்ன சொல்றீங்க”
கடகடனு சிரிச்ச ஆடிட்டர் சுந்தரராமன், ”அவங்க அவங்க தொழிலை அவங்க அவங்க பாக்கிறதுதான் முறை, நமக்கு தெரியாத வேலைல கால் வச்சா சகதில தெரிஞ்சே கால் வச்ச மாதிரி”
“சினிமாத் தொழிலை சகதின்றீங்க அப்படித்தானே”
“அப்படி அர்த்தமில்லை ரூபன், உங்க தொழில் உங்களுக்கு தெரியும் நான் பணம் பாக்க அதுல நுழையறது தப்பு, எதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா நம்ம நட்பு கூட பாதிக்கப் படலாம்.உங்க தொழிலை நீங்க பாருங்க, என் தொழிலை நான் பாக்கறேன், அப்ப வரட்டா” புறப்பட்டார் சுந்தரராமன்.
போறதுக்கு முன்னால, “பாவேஷ் அகர்வால் சென்னைல மல்டிபிளெக்ஸ், ஷாப்பிங் மால் கட்டறார் என் கிளயண்ட்தான். சினிமால இண்ட்ரஸ்ட் இருக்கற மாதிரி தெரியுது, பேசிப் பாருங்க.என் பெயர் வர வேண்டாம்” சொல்லிக் கொண்டே வெளியே நடந்தார்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings