இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இப்படியாக உத்யோகத்தோட பொண்ணு கிடைச்சது.கல்யாணம் ஆச்சு, 3 வருஷத்துல ஒரு பையன், ஒரு பொண்ணு.பயிற்சிக் கூடம், மாடர்னா ஸ்டார் ஜிம் ஆனது. வருமானம் போதிய அளவு வந்தது.ஆத்துப் பாலத்தை ஒட்டி ஒரு தனி வீடு குருசாமி வாத்யாருது, அவர்தான் இப்ப இல்லை.அலமேலு மேல எனக்கு ரொம்ப பிரியம்தான்.ஆனா கூடவே பிறந்த கோபம் அவளையும் விட்டு வைக்கலை.குழந்தைகளுக்கும் எப்பவும் என்னை பாத்தா பயம்தான், சட்னு கை நீளுமே.
என் அம்மா,அப்பா பத்தி சொல்ல மறந்துட்டேனே.கல்யாணம் ஆயி ஒரு 4 வருஷம் சேந்துதான் இருந்தோம்.அம்மா சொல்லுவா, ”டேய் நீ செஞ்ச ஒரே உருப்படியான வேலை அலமுவை என் மருமகளா கொண்டு வந்தது ஒண்ணுதாண்டா”னு.
அப்பாவுக்கும் ரொம்ப சந்தோஷம்தான்,”நாங்களா பாத்திருந்தா கூட இப்படி ஒரு பொண் கிடைச்சிருக்க மாட்டா, நன்னா வச்சு காப்பாத்து”
அவங்களா பாத்தா எவன் பொண்ணு கொடுத்திருப்பான்கறது வேற கதை.
அப்பா, அம்மா போயாச்சு, ரகு பி.எஸ்.சி பிசிகல் எஜுகேஷன் படிச்சிட்டு ஜிம் பாத்துக்கறான், பழைய ஜிம் இல்லை இது, மாடர்னா கருவிகள், ஏர் கண்டிஷன், ஆண்,பெண் தனி தனி செக்ஷன், தனித்தனி இன்ஸ்ட்ரக்டர்ஸ். அப்பப்ப இன்னமும் கோவம் வருது என்ன பண்ண கஷ்டப்பட்டு அடக்கிக்கறேன்.
இன்னிக்கு ரகு எங்கேயோ வெளியே போயிருக்கான், ஒரு ரெண்டு மணி நேரம் ஜிம்மை கவனிச்சிக்கோ, நடமாடாம பேசாம ரூம்ல உக்காந்துக்கோனு சொல்லிட்டுதான் போனான். கஷ்டப்பட்டு ஒரு மணி நேரம் ஏதோ பாடி பில்டர் புஸ்தகங்களை பாத்துட்டு உக்காந்திருந்தேன். கால் கைலாம் ஒரு மாதிரி மரத்த மாதிரி ஆச்சா மெதுவா தடுமாறி எழுந்து வெளியே வந்தேன்.
ரொம்ப வருஷமா பயிற்சி பண்றானே மகேஷ் அவன்தான் புது பசங்களுக்கு சொல்லிக் கொடுக்கறான். கட்டுமஸ்தா கம்பீரமா இருப்பான்.யாரோ ஒரு புது பையனுக்கு பென்ச் பிரெஸ் எப்படி பண்ணணும்னு சொல்லிக் கொடுத்திட்டிருந்தான்.
நல்லாதான் பயிற்சி கொடுக்கறான்னு நான் யோசிக்கறப்பவே புதுப் பையன்கிட்ட சொல்றான், ”பெரிசை கண்டுக்காதே,அது பெருங்காய டப்பா, இப்ப சட்டையை கழட்ட சொல்லு எம்பது வயசு கிழவியாட்டாம் தொங்குது, இதுல மிஸ்டர் இண்டியா கிடைக்கலைனு புலம்பல் வேறே” சொல்லிட்டே பலமா சிரிக்கிறான்.
எங்கிருந்து வந்ததோ கோவம், பக்கத்துல இருந்த 7.5 கிலோ டம்பல்சை கஷ்டப்பட்டு தூக்கி மகேஷை நோக்கி ரெண்டு ஸ்டெப்தான் வச்சிருப்பேன், எது தட்டிச்சோ தெரியலை அப்படியே குப்புற அந்த இன்க்ளைன்ட் பெஞ்சுல விழப்போறோம்னு தெரிஞ்சது, அப்பறம் ஒரே இருட்டு.
திரும்ப ஞாபகம் வந்து அந்த ஆஸ்பத்திரி பெட்ல இருந்து கண் முழிச்சா எதுத்தாத்தாப்பல பெரிசா பிரேமுக்குள்ளே இந்த தாடிக்காரர் சிரிச்சிட்டே ஏதோ ஓலைல எழுதறார். கீழே பிளாக் போர்டுல சாக்பீஸ்ல எழுதியிருக்காங்க
குறள்-305 : தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்.
சிவராமன் படித்து முடித்தவுடன் பலத்த கரகோஷம்.
ராஜமாணிக்கம், “கதை நல்லாதான் இருக்கு ஆனா திரைக்கதையா மாத்த முடியுமா சந்தேகம்தான்.”
வினீத்,” நானும் அதைத்தான் நினைச்சேன், ஹ்யூமர், ரொமான்ஸ், பேத்தோஸ் இன்னும் கூட வேணும்.”
சிவராமன்,”இது பேசிக் கதைதான் சினிமாக்கு தகுந்த மாதிரி மாத்திடலாம் மசாலா எல்லாம் சேத்து.”
ராஜமாணிக்கம், “ஓகே பாக்கலாம், அடுத்து வேற யார் கிட்ட கதை இருக்கு”
சித்த தேவன் இன்னொரு உதவி கதாசிரியர் “சார் சிவராமன் தம்பி சொன்ன கதை நல்லாவே இருக்கு கொஞ்சம் ஆக்ஷன், ஃபைட்டிங், ரொமான்ஸ் சேக்கணும் அவ்வளவுதான்.”
எல்லோரும் சிவராமனுடைய கதைக்கு மெருகேத்தினாலே போதும் என நினைத்தார்கள்.
ராஜமாணிக்கம்,” சரி எல்லாருக்கும் பிடிச்ச இந்த கதையை இன்னும் கொஞ்சம் கிரிப்பிங்கா,காமெடி, காதல், கொஞ்சம் ஆக்ரோஷமான ஃபைட்டிங், செண்டிமெண்ட் கலந்து திரைக்கதையாக்கும் பொறுப்பை சிவராமன்,சித்ததேவன் சேந்து செய்யட்டும்.நடுவுல வேற ஏதாவது இதை விட பெட்டரா யாருக்காவது தோணினா தயக்கமில்லாம சொல்லலாம், ஒவ்வொரு புதன் கிழமை, சனிக்கிழமை இந்த மீட்டிங்கை தொடர்ந்து டெவலப்மெண்டை விவாதிக்கலாம்.
முடிந்தது அன்றைய மீட்டிங். ராஜமாணிக்கம்,”காலை பத்து மணில இருந்து இந்த ரைசிங் ஸ்டார் ஆபீஸ் திறந்திருக்கும் நம்ம பட விஷயமா இங்கே வரலாம் விவாதம் பண்ணலாம் ஒரு மாசம் டைம் கதை ஃபைனல் பண்ணி செட்டியாருக்கு சொல்றோம்.”
பத்து நாள் இடைவிடாத விவாதங்கள்,கதை இலாகாவின் புது புது இடைச் சொருகல்களுடன் ‘சினம்’ அழகாய் உருமாறி புது பொலிவு பெற்றது.காமெடி டிராக் நடுவே சொருகப் பட்டது. 4 பாடல்களுக்கான சிச்சுவேஷன் புகுந்தது.
கிளாமர் டான்ஸ் சிச்சுவேஷன், வெளி நாடுகள் சிலவற்றில் படப்பிடிப்பு நடத்த ஏதுவாய் காட்சிகள் புகுத்தப் பட்டன. இப்போது ரைசிங் ஸ்டார் புரொடக்ஷன்ஸ்சின் அடுத்த படத்துக்கான ஃபைனல் ஸ்கிரிப்ட் அப்ரூவலுக்கு தயார், புரொட்யூசர் , பைனான்ஷியர் அருணாசலம் செட்டியார் அப்ரூவ் பண்ண வேண்டியதுதான், பாக்கி.
தேவிஶ்ரீ குண்டூரு ரங்கய்ய நாயுடுகாருவுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டு ரிஜிஸ்ட்ரேஷன் செய்து கொண்டாள்.
ரிஜிஸ்ட்ரேஷன் இல்லாத சில ஒப்பந்தங்கள் பேப்பர்லெஸ் ஒப்பந்தங்களாயின.ரெண்டு படங்கள் நாயுடுகாருக்கு பண்ணிக் கொடுக்கணும். அச்சாரம் ஹைதரபாத் ஜுபிளி பார்க்கில் ஒரு சொகுசு வீடு. பிரபல தெலுகு ஹீரோவுடன் ஒரு பிரம்மாண்டமான படம் முதலில்.
இந்த ஒப்பந்தம் போடுவதுக்கு முன்னால், தேவிஶ்ரீக்கு கொஞ்சம் பயம்தான், ரூபனுக்கு தெரிஞ்சா என்ன செய்வானோ, சொல்வானோனு. ஆனா போன் பண்ணும் போது கூலா கேக்கறான்,
“என்ன நாயுடுகாருக்கு பெட்ரூம் மட்டும்தான் பெரிசு, போறுமா செளரியமா இருக்கயா, பிரபல ஹீரோவோட தெலுகு படம் பண்றயாமே, ஜாக்கிரதையா இருந்துக்க அலுத்துப் போனா ஈ.சி.ஆர. காட்டேஜ் இருக்கவே இருக்கு எப்ப வேணா வரலாம்”
தேவிஶ்ரீக்கு கொஞ்சம் வெட்கம், வேதனை சூழ்ந்தது, அவளை அறியாமலே ரூபனை மனதுக்குள் ஏற்றி விட்டாள். இவ்வளவும் தன் தாயாரால் வந்ததுதான் என அம்மா மேல் கோபம் வந்தது.அம்மாவின் மடியில் விழுந்து அழுதாள், பாவம்மா ரூபன் மனசொடிந்து விட்டார்னு.
அம்மா,”போடி போ ரூபன் பெரிய கேசனோவா, கூட நடிக்கற பொண்ணுங்க அத்தனை பேரையும் ….. சரி சரி என் வாயை பிடுங்காதே, வருஷத்துக்கு ஒருத்தியை கல்யாணம் பண்ணி அத்து விட்டவன் அவன். இந்த பொம்பளை சவகாசத்தாலயே நடுத் தெருவுல நிக்கப் போறான் ஒரு நாள்”
“என் மேல பிரியமாதானே இருந்தார்”
“உன் மேல இல்லை உன் 20 வயசு மேல”
“போம்மா உனக்கு எப்பவும் பணம்தான் பெரிசு”
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தொடரும்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings