இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சிவராமன் சில பத்திரிக்கைகளில் கதை எழுதி வரும் இளைஞன்.எல்லா இளைஞர்களை போல சினிமா ஆசை உண்டு,
பல முற்றுகைகளுக்கு பின்னர் ராஜமாணிக்கத்தின் புது கம்பெனி ரைசிங்ஸ்டார் புரொடக்ஷனில் வாய்ப்பு கிடைத்தது. இப்ப அவருடைய புதுப் பட கதை டிஸ்கஷனில் அவன். அவனுடைய கதை தலைப்பு டைரக்டரை ஈர்த்ததில் அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
“ஒரு திருக்குறள் பேஸ் பண்ணி நான் ஒரு வருஷத்துக்கு முன்னால் எழுதின சிறுகதை சார் இது சினிமாக்கு ஏத்த மாதிரி திரைக் கதையா மாத்தலாம்கற நம்பிக்கை எனக்கு இருக்கு.”
ராஜமாணிக்கம், “ எங்கே சொல்லு கேட்போம்”
சிவராமன்,”அந்த கதையே கைல இருக்கு சார் படிக்கவா, கதை சிறிசுதான்.”
எல்லோருமே உற்சாகமா,”படிங்க கேப்போம்”
சிவராமன் தெளிவான குரலில் நேரில் பார்ப்பது போல கதையை படித்தான்.
சினம்
நான் தனஞ்செயன், பாத்திருப்பீங்களே என்னை,ஸ்டார் ஜிம்ல இன்ஸ்ட்ரக்டர் கம் ஓனர் நான்தான் ஸ்டேட் லெவல்ல பாடி பில்டிங் காம்பெடிஷன்ஸ்ல பல பரிசு வாங்கிட்டேன் நேஷனல் லெவல்ல நிறைய பாலிடிக்ஸ், போங்கடா hair னு வந்துட்டேன்.
இப்ப வயசு 68 ஆயிடுச்சு பாடி கூட ரொம்ப லூஸ் ஆயிடுச்சு, பயிற்சிக்கு வர பசங்க பின்னால கிழடு, பெரிசு, முசுடுனு சொல்றது புரியறது. ஆனாலும் ஆசை யாரை விட்டது விடாம ஜிம் போறேன், இப்ப மூத்த பையன்தான் ஜிம்மை பாத்துக்கறான். என்னைக் கண்டா இந்த பசங்களுக்கு பிடிக்கறதில்லை.ரகு சார் வரலையான்றாங்க (அதுதான் என் பையன் ரகுநாதன்)பழைய தனஞ்செயனா இருந்தா ஓங்கி ஒரு அறை விட்டிருப்பேன்.இப்ப வயசாயிடுச்சு கைகால் நடுக்கம் வந்திடுச்சு. ரகு சொல்றான் வீட்லயே இருப்பானு. கேக்கற ஜன்மமா படைக்கலையே என்னை.
உங்களுக்கு பொறுமை இருந்தா என் கதையை சொல்லவா?
கோபம் மனுஷனுக்கு எத்தனை நஷ்டத்தை கொடுக்குது. எத்தனை பட்டாலும் புரியாம காலத்தை ஓட்டறோமே.
பிறப்புலயே சில குணங்கள் வருமோ? அம்மா சொல்லுவா, குழந்தையா இருக்கறப்ப நல்லா சிவப்பா கொழுகொழுனு இருப்பேனாம்.யாராவது ஆசையா தூக்கினா பிராண்டிடுவேனாம், பல் வந்தவுடனே கடிச்சிடுவேனாம்.ராக்ஷசக் குழந்தையை பெத்து வச்சிருக்கையேடினு எல்லாரும் சொல்வாங்களாம். வளற வளற என் குணம் அப்படியே வளர்ந்து கொண்டேதான் போனது. எலிமென்டரி ஸ்கூல் படிக்கறப்பவே அடிக்கறான் கிள்றான்னு தினம் அப்பாக்கு புகார் வரும். அப்பா சாந்த சொரூபி எனக்கு புத்திமதி சொல்வார், அடிக்க மாட்டார்.அம்மாதான் அடித் தொடைல கிள்ளுவா, ரொம்ப தாள முடியலைன்னா.
எனக்கு படிப்பு வரலை, கஷ்டப் பட்டு 9 வது வரை வந்தேன். அதுக்குள்ளே பள்ளிக் கூடத்துல இருந்து, அக்கம் பக்கம் வீடுகள்ல இருந்து, பல புகார் வந்தவண்ணம் இருக்கும். நான் ஸ்கூல் போக மாட்டேன்னு அடம் பிடிச்சு நின்னுட்டேன்.என் வீட்டு பக்கம் இருக்கற மோட்டார் ஒர்க்ஷாப்ல அப்பா சேத்து விட்டார்.
அந்த தடியன் தியாகராஜன், எப்பப் பாரு மண்டைல குட்டுவான். என் கிரீஸ் கையால தலையை தேச்சா தலை பூரா பிசு பிசுனு ஆயிடும். எத்தனை நாள் பொறுத்துக்கறது, ஒரு கஸ்டமர் அவசரமா வேணும்னு கொடுத்த வண்டில என்ஜின் இறக்கி வேலை.ரெண்டு வால்வை எடுத்து முதலாளி தடியன் லன்ச் போனப்ப, பின்னால இருந்த தண்ணித் தொட்டிக்குள்ள போட்டுட்டேன்.நானும் பாக்கறேன் இவன் வண்டியை டயத்துல எப்படித் தறான்னு.
எப்படியோ அவனுக்கு தெரிஞ்சு போய் நல்ல அடி, அதோட ஓடி வந்துட்டேன் ஆனா கடைசி வரை வால்வ் எங்கே போட்டேன்னு சொல்லவே இல்லை, வேற ஸ்பேர் தேடி வாங்க 10 நாளாவது ஆகும். திண்டாடட்டும் நல்லா.
பக்கத்துல இருந்த கோவில் திடல்ல உடற்பயிற்சி கூடம் குருசாமி வாத்யார் கத்துக் கொடுக்கறார். என்னை கூப்பிட்டு பயிற்சி கொடுத்தார். அம்மா, களிசடை எக்கேடு கெட்டு தொலையட்டும்னு விட்டுட்டா.அப்பாதான் பாவம் கடைசி வரை எனக்கு சப்போர்ட். என் 20 வயசுக்குள்ளே நல்லா பாடி பில்ட் பண்ணிட்டேன். குருசாமி வாத்யாருக்கு முதல்ல படு சந்தோஷம்.அப்பறம் என்னாச்சுன்றீங்களா. அலமேலுதான் காரணம். வாத்யாரோட செல்லப் பொண்ணு.
வாத்யாருக்கு காபி, டிபன், சுண்டல், முட்டைனு ஏதாவது சாயந்தரம் கொண்டு வருவாளா, நம்மளை லுக் விடறா மாதிரி தெரிஞ்சது. அவளை எனக்கும் பிடிச்சது.கொஞ்சம் மாநிறம்னாலும் நல்ல செதுக்கி வச்ச அழகு.ஒரு நாள் உள்ளங்கைல ஒளிச்சு வச்சு ஒரு கடலை உருண்டை யாரும் பாக்காதப்ப கைல அழுத்தி வச்சிட்டு ஓடிட்டா.அதுல இருந்து ஒரே லவ்ஸ்தான்.
ஒண்ணே ஒண்ணுதான் பிராப்ளம், அவ காலேஜ்ல பி.யூ.சி யோ என்னவோ படிக்கறா. பாக்கறப்பல்லாம் அழகா சிரிப்பா. அப்ப விட முடியுமா.மெதுவா, கோவில், சினிமானு தள்ளிட்டு போயிட்டேன்.
ஒரு தடவை ஜிம்லயே வச்சு கிஸ் அடிச்சதை பசங்க யாரோ பாத்துட்டு வாத்யார் கிட்ட போட்டு கொடுத்துட்டாங்க.
அவர் சாயந்தரம் வீட்டுக்கே வந்து களேபரம் பண்ணிட்டார்.அம்மா அழறா, அப்பாவுக்கு என்ன சொல்றதுனு தெரியலை.ஒரு வேலை இல்லை படிப்பு இல்லை கல்யாணம் பண்ணி வச்சா அவளை எப்படிடா காப்பாத்துவேன்றா அம்மா.
நீ ஒண்ணும் என்னை காப்பாத்த வேண்டாம் நானே பிளைச்சிப்பேன்னு வீராப்பா வீட்டை விட்டு கிளம்பிட்டேன்.அங்கே இங்கே பீராஞ்சதுல 60 ரூபா தேறிச்சு. திருப்பூர் போற பஸ் பாத்தேன். ஏறி உக்காந்துட்டேன். நிறைய பனியன் பேக்டரி வாசல்ல வேலைக்கு ஆள் தேவைனு போர்டு. உள்ளே போனா ஒரு நா…. வேலை கொடுக்க மாட்டேன்னுது.
வீடு எங்கே, அப்பா யாரு, ரெபரன்ஸ் இருக்கானு. கடைசியா பரிதாபப் பட்டு ஒருத்தர் வேலை கொடுத்தார். அங்கே 6 நாள் வேலை பாத்தேன், ஏழாவது நாள் கூட வேலை பாத்தவனோட வாய்ச் சண்டை முத்தி, அடி துவைச்சு எடுத்துட்டேன்.அப்பறம் என்ன கைல காசு இல்லை ஏதோ கோவில் பிரசாதம் அது இதுனு ரெண்டு நாள் ஓடிச்சு.கள்ள டிரெயின் ஏறி ஊருக்கு திரும்பினேன். காலேஜ் போற வழில அலமேலுவை பாத்தேன். தெருவுலயே கட்டிப் பிடிச்சு அழுதா, எங்கயாவது ஓடிப் போய் கல்யாணம் பண்ணிப்போமான்னா. எனக்கு சிரிப்புதான் வந்தது. தனியா ஓடிப் போயே தாக்குப் பிடிக்கலை.
அவசரப் படாதே ஏதாவது வேலை தேடிட்டு உன்னையை கூட்டிட்டு போறேன்னு சமாதானப் படுத்தினேன்.வீட்டுக்கு திரும்பினேன் இனிமே அம்மா, அப்பாவை வருத்தப் பட வைக்கக் கூடாதுனு தீர்மானத்தோட.ரெண்டு பேரும் என்னை பாத்துட்டு ரொம்ப வருத்தப் பட்டாங்க. எங்கேயாவது பணம் புரட்டித் தரேன் ஏதாவது கடை வச்சு பொளைச்சிக்கோடானு அப்பா முடிவெடுத்தார், எனக்கு, கோபம், அடிதடி தவிர வேற என்ன தெரியும்.
என்னதான் செய்றதுனு யோசிச்சிட்டு இருக்கறப்ப, ஒரு நாள் குருசாமி வாத்யாரே வீடு தேடி வந்தார்.அப்பா, அம்மாவை பாத்து, “ என்னை மன்னிச்சிடுங்க கோபத்துல ஏதோ பேசிட்டு போயிட்டேன், என் மவ உங்க பையனைத்தான் கட்டுவேன்னு பிடிவாதம் பிடிக்குது, சரியா சாப்பிடாம அழுதுட்டே இருக்கு. தனஞ்செயன் நல்ல பையன்தான், என்ன கொஞ்சம் கோவக்காரப் பையன். சரியாயிடுவாரு காலப் போக்குல. நீங்க பெரிய மனசு பண்ணி சீக்கிரம் எங்க அலமேலுவை மருமகளா ஆக்கிக்கிடணும்.”
அப்பா, “அது ஒண்ணுமில்லை பையனுக்கு இன்னும் ஒரு வேலை இல்லை, வருமானம் இல்லை அதான் யோசிக்கிறோம்”
“எங்களுக்கு அலமேலுதான் எல்லாம், என் கூட மாப்பிள்ளை, பயிற்சிக் கூடத்தை பாத்துக்கட்டும். அவருக்கு பிடிச்ச வேலைதான். வருமானம் வரும் எனக்கு மட்டும் வேற யாரு இருக்காக”
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தொடரும்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings