இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இந்த ரூபன் ஒரு பெரிய கேமரா மேனின் பையன்தான், அப்பா கூட காலேஜ் விடுமுறை நாட்களில் ஷூட்டிங் போய்,போய் முதல் பட சான்ஸ் கிடைத்தது. அது ஒரு ஹிட் ஆனதால், வரிசையா படங்கள் 30 வயதுக்குள் 14 படம். 26 வயதில் ஒரு எக்ஸ்ட்ரா நடிகையை லவ் பண்ணி வேற வழி இல்லாம 27 வயதில் கல்யாணம்.
ஒரே வருஷத்தில டைவர்ஸ். அடுத்த வருஷமே தெலுங்கு நடிகை நந்தினியுடன் கல்யாணம் படு அமர்க்களமாய், மிகப் பெரிய அளவில்.தமிழ்த் திரையுலகம், தெலுங்கு திரையுலகம் திரண்டு வந்து பல லட்சங்களை விழுங்கிய சம்பவம்.
இதுவும் ஒரு வருடத்தில் முடிவுக்கு வந்தது. சம்பாதிச்சதுல பாதிக்கு மேலே டைவர்ஸ் பண்ணியே போச்சு.அதனால பெர்மனண்ட் பந்தத்துல இணைவதில்லை என முடிவுக்கு வந்தான்.இப்ப 35 வயசாச்சு நினைச்சா கல்யாணம்தான், அதுக்காகவே ஈ.சி.ஆர்ல ஒரு தனி காட்டேஜ்.
ரசிகர்கள் கொண்டாடின காலம், மெதுவாய் கரைகிறது. தொடர்ந்து படங்களும் சரியாக ஓடாததால் என்ன செய்யலாம் சொந்தமா படம் எடுக்கலாமானு கூட யோசிக்க வேண்டியதா போச்சு.தன் பேங்க் மேனேஜருடன் பேசினான் அவர் சொன்னது அதிர்ச்சியா இருந்தது பேலன்ஸ் இருப்பு வேகமாக கரைஞ்சிட்டு வருது, ஒரு வருஷமா வரவு பக்கம சூன்யம், செலவு பக்கம் கூடிட்டே போறது. இப்படியே போனா இன்னும் ரெண்டு வருஷம் தாங்காது.உடனடியா எதாவது பண்ணுங்க ரூபன்றார். படம் எடுக்கணும்னா அவ்வளவு பணம் பேங்க்ல பெயராது எனத் தெரிந்தது.
“டே பாபு கிர்தாரிலாலுக்கு ஃபோன் போட்டு கூப்டுடா அடுத்த வாரம், நான் ஈ.சி்.ஆர் காட்டேஜ்ல இருந்து திரும்பினவுடனே மீட்டிங் ஏற்பாடு பண்ணு”
பாபுவுக்கும் தெரியும் பணம் எப்படி வேகமாய் கரைகிறதுனு,
ஆனா இந்த லைஃப்ஸ்டைலை மெயின்டெயின் பண்ணனும்னா எல்லா செலவும் கட்டாயம்.ஆடி காரை விட்டு மாருதி கார்லயா போக முடியும், மாதம் ஒரு பார்ட்டி கொடுக்கணும், பங்களா மெயின்டெய்ன் பண்ணணும், இந்த பங்களா போக, காட்டேஜ், அங்கே மாசம் ரெண்டு தடவை வரவங்களுக்கான பெரும் செலவு.இந்த தேவிஶ்ரீக்கே இது வரை 30,40 லட்சம் செலவு பண்ணியாச்சு, இதுல அவ அம்மா வேற கேரளால சின்ன எஸ்டேட்டு ஒண்ணுனு தொந்தரவு பண்ணறா. இந்த தடவையோட சீக்கிரம் வெட்டி விடணும்னு தீர்மானம் பண்ணினான் ரூபன்.
ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லைனும் தெரியும். ‘சினிமா புதிர்’ பத்திரிகைக்காரன் மோப்பம் பிடிச்சிட்டான். கேமராவோட ஒரு ஆள் காட்டேஜை சுத்தறான்னு போன மாசமே காட்டேஜ் கேர்டேக்கர் சொன்னான். அங்கே பால் பாக்கெட் போடற பையன் கேட்டானாம் என் தங்கையை தேவிஶ்ரீ அக்காவோட போட்டோ எடுக்க விடுவாங்களானு.இத்தனைக்கும் உடம்பு பூரா மூடி புர்க்கால வராங்க நைட் 9 மணிக்கு மேலே, விடியக்காலம் 4.30க்கு கார்ல கிளம்பிடுவாங்க. ரூபனுக்கு டவுட் என்னன்னா அந்த நிருபர்தான் பால் காரனை விட்டு விவரம் தோண்டப் பாக்கரான்னு. இல்லை, கூட வர அம்மாவே ரூபனை கிரிப்ல வச்சிக்க இதெல்லாம் பண்றானு கூட சின்ன டவுட்.
எப்படியோ இவ்வளவு பிராப்ளத்துலயும் ரூபனுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம்.தேவிஶ்ரீ புடவைக் கடை திறக்க வேலூரும் போகலை, பேளூரும் போகலை தெலுங்குப் பட புரொட்யூசரோட தாஜ் கோரமாண்டல்ல டின்னர் சாப்பிடப் போனானு தெரிஞ்சது. ரூபனுக்கு ஒரு விதத்துல ஏமாற்றமும் கோபமும் வந்தாலும் இந்த பண நெருக்கடி நேரத்துல விலகி இருக்கறது நல்லதுதான்னு பட்டது.
அங்கே தேவிஶ்ரீயோட அம்மா குண்டூரு ரங்கய்ய நாயுடுகாரிடம் கிட்டத்தட்ட பேரம் பேசினாள். 2 படத்துக்காவது பெண்ணை ஹீரோயினா போடணும், சம்பளம் போக ஹைதரபாத்ல பங்களா வேணும்னு. ரங்கய்ய நாயுடுகாருவுக்கு 49 வயசு மனைவியை இழந்தவர் தேவிஶ்ரீயின் ஏதோ படம் பாத்து பித்தானவர். கிடைச்சா போதும்னு எல்லாத்துக்கும் தலையாட்டினார்.
தேவிஶ்ரீ கொஞ்சம் முரண்டு பிடித்தாள், ரூபன் நம்மளை நல்லாதானே வச்சிருக்கார், இந்த கிழவன் எதுக்கு இப்பனு.
அவ அம்மா போடி பைத்தியம் ரூபனுக்கு மார்க்கெட் போச்சுனு இண்டஸ்ட்ரீல எல்லாரும் பேசறான்க. இது வரை கிடைச்சது போதும் கழட்டி விட்டுருவோம்.நாயுடுகாரு பெரிய கோடீஸ்வரர், அள்ளி அள்ளி கொடுப்பார், நீ அட்ஜஸ்ட் பண்ணிக்கோ வயசானவர்தானே ஜாஸ்தி தொந்தரவு இருக்காதுன்னா.எப்படியோ வசூல் மன்னன் ரூபனுக்கு விடுதலை.
திங்கள் கிழமை காலை ரூபன் அசாத்திய ஏமாற்றத்தில் இருந்தான், காட்டேஜை உபயோகப் படுத்த முடியாத ஏமாற்றம், கையிலிருந்த அரைகுறைப் படமும் தொடராமல் நிறுத்தி வைக்கப் பட்ட ஏமாற்றம், இன்கம்டாக்ஸ், சொத்து வரினு பணம் போறது வருமானம் இல்லையேனு பயம். ஒரு நிமிடம் அந்த வில்லன் ரோலை பண்ண ஒத்துக்கலாமான்ற எண்ணம் கூட வந்தது.
10 மணி வாக்கில் பாபு கிர்தாரிலால் சகிதம் வந்தான். வாங்க சேட்டுனு அவனை வரவேற்ற ரூபன் பங்களாவின் பரந்த வரவேற்பறையில் அவரை அமர வைத்தான். ரூபன்,”என்ன சேட்டு தொழில் எப்படி போகுது”
கிர்தாரிலால், “ ஏதோ பகவான் அருள் , உங்க மாதிரி ஆட்களோட நட்புனால, நல்லா ஓடுது”
ரூபன், “ நான் சொந்தமா ஒரு படம் எடுக்கலாம்னு பாக்கறேன், நல்ல ரிடர்ன் வரும்.”
“ரொம்ப நல்ல சமாசாரம் எடுங்க சார், என்னால ஆன உபகாரம் பண்ணறான்”
“ஆமாம் ரொம்ப நல்ல சப்ஜெக்ட், கண்டிப்பா வசூல் எகிறும், நீங்க பைனான்ஸ் பண்ணுங்க ரிடர்னுக்கு நான் கியாரண்டி”
“அதுல என்ன இருக்கு என் தொழில் அது,நீங்க அடகு வச்சு அதுக்கு தகுந்த மாதிரி எப்ப வேணா பணம் வாங்கிக்கலாம்”
“இல்லை சேட், வட்டிக்கு பணம் கேக்கலை நீங்க முதல் போட்டு புரொட்யூஸ் பண்ணலாமேனு கேட்டேன்,வட்டிப் பணத்தை விட அதிகம் பாக்கலாம்”
“ஓ அதுக்குனு ஆளு இருக்கறாங்க, நம்ம தொழில் அது இல்லை வட்டிக்கு பணம் கொடுக்கறான் அவ்வளவுதான்”
“இல்லை சேட்டு 40,50 கோடியாவது முதலீடு பண்ணினாதான் இப்பல்லாம் படம் எடுக்க முடியும், அடகு வச்சு பணம் புரட்ட முடியாது நீங்க மனசு வச்சா முதலீடு பண்ணி படம் எடுப்போம், நீங்க எனக்கு சம்பளம் மாதிரி போட்டு கொடுங்க, லாபம் பூரா உங்களுக்கு”
“தப்பா நினைக்காதீங்க,நமக்கு சரி வராது கடன் வேணா கொடுக்கலாம், ஏன் வேற தயாரிப்பாளர் கிடைக்கலயா, செட்டிநாட்டுகாரவக நிறைய பேர் படத்துல பணம் போட இருக்காகளே”
“சரி சேட்டு பாப்போம் வேற எங்கயாவது டிரை பண்றேன்,
நல்ல சப்ஜெக்ட் வேற யாருக்கும் கொடுக்க மனசில்லை அதான் தெரிஞ்சவங்களுக்கு சான்ஸ் கொடுக்கலாம்னு பாத்தேன்.”
சேட்டு அவரோட முடிவுல ஸ்ட்ராங்கா இருந்தார். போறப்ப இந்த பங்களா என்ன பெறும்ன்ற கணக்கு போட்டுட்டே நகர்ந்தார்.
பாபுவை கூப்பிட்டு, “தேடுடா வேற யாராவது பணம் போட மாட்டுவாங்களானு, வேணும்னா பேப்பர்ல ஒரு விளம்பரம் போடு, நம்பர் ஒன் தமிழ் நடிகருடன் இணைந்து படம் தயாரிக்க தயாரிப்பாளர் தேவைனு”
அவர்கள் தயாரிப்பாளரை தேடட்டும், நாம ராஜமாணிக்கம், வினீத் கூட்டணி என்ன செய்றாங்க பாப்போம்.கதை டிஸ்கஷன் முதல்ல, ராஜமாணிக்கம் , நாலு அசிஸ்டண்ட், ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டர்னுஒரு சின்ன குரூப்.
ராஜமாணிக்கம், “முதல்ல நல்ல கேட்ச்சி டைடில் சொல்லுங்க அதுக்கு தகுந்த மாதிரி கதை பண்ணுவோம்.”
உடனே ஒரு துடிப்பான அசிஸ்டண்ட் சொன்னான் “சினம்” இன்னொரு அசிஸ்டண்ட், “ பழம் தின்னி கழுகுகள்”
வினீத், “ சுரா”
ராஜமாணிக்கம் “ஏய்யா உன் பேரென்ன, சிவராமன்தானே, ‘சினம்’ தலைப்பு நல்லா இருக்கே அதுக்கு பொறுத்தமா கதை ஏதாவது மனசுல இருக்கா, இல்லை அப்படியே சொன்னயா”
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தொடரும்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings