in , ,

விசித்திர உலகம் (பகுதி 5) – சுஶ்ரீ

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அதெல்லாம் பழைய கதை, ஏதோ ஒரு வைராக்யத்தில் ஆரம்பிச்சது இவ்வளவு அள்ளிக் கொடுக்கும்னு அவரே எதிர்பாக்கலை. அவருக்கு உற்சாகம் பற்றிக் கொண்டது, இப்ப இன்னிக்கு ரெண்டாவது படத்துக்கு நெப்ட்யூன் ஸ்டுடியோல டிஸ்கஷன்.

செட்டியார் கம்பீரமா உள்ளே வந்தவுடனேயே எல்லோரையும் ஆர்வமும் உற்சாகமும் தொற்றிக் கொண்டது.நடுநாயமாக ஒரு சேரில் அமர்ந்து கொண்டார் செட்டியார். சுற்றியிருந்த ஒவ்வொருவரையும் கூர்ந்து பார்த்தார். கடைசியா டைரக்டர் ராஜமாணிக்கத்தை பார்த்து ஒரு புன் முறுவல் பூத்தார்.

“என்ன எல்லாரும் போன பட வெற்றியை கொண்டாடி முடிச்சாச்சா, அடுத்த படத்தைப் பத்தி பேசலாமா?”

ராஜமாணிக்கம்,” ஐய்யா, உங்க தயவுல நாங்க முதல் பட வெற்றியை சந்தோஷமாதான் கொண்டாடினோம், ஒரு குறை வைக்கலை நீங்க. அடுத்த நம்ம படம் இதை விட அமக்களமா கொண்டாடப் படும்ன்ற நம்பிக்கையோடதான் வந்திருக்கோம்”

“சரி எல்லாரும் சேந்து வேலை பண்ணுங்க, அதுக்கான பலனுக்கு நான் உத்தரவாதம்”

எல்லாருக்கும் காலை உணவு வழங்கப் பட்டது.அடுத்த படத்துக்கு தன்னிடமுள்ள கதைகள் இரண்டை ராஜமாணிக்கம் விவரித்தார், சீரியசான கதை ஒண்ணு, சற்றே லைட் சப்ஜெக்ட் காமெடி, காதல், செண்டிமெண்ட் கலவையுடன். செட்டியார் ரிஸ்க் இல்லாம லைட் கதையை இப்ப எடுக்கலாம் என தீர்மானித்தார், அதில் எல்லாருக்கும் உடன்பாடுதான்.

மாற்றமின்றி அதே யூனிட் ஹீரோ ஹீரோயின் உட்பட வேலை செய்யும் என தீர்மானிக்கப் பட்டது.திரைக்கதை ஸ்கிரிப்ட் 15 நாளைக்குள் தயாராக வேண்டும், அடுத்த மாதம் ஒரு வெள்ளிக்கிழமை பூஜை போட தீர்மானிக்கப் பட்டது. படத்தின் பெயர், முதல் விளம்பரம், 5 நாளில் தயாராகணும்னு முடிவு செய்யப் பட்டது. அன்றைய தின மீட்டிங் மதிய உணவுடன் முடிந்தது.

செட்டியார் ராஜமாணிக்கம், வினீத்,மற்றும் சில முக்கிய நடிகர்களை, டெக்னீஷயன்களை தனியே கூப்பிட்டு, ரெண்டாவது படத்துக்கான சன்மானம் அவர்கள்எதிர் பார்ப்பதை விட அதிகமா இருக்கும்,படம் வெற்றியடைந்தால் போதும்,போதும் என்கிற அளவு  உபரி பரிசுகள் உண்டு ஆனால் படம் 6 மாதத்தில் திரைக்கு வரவேண்டும் எனக் கூறி விடை பெற்றார்.

ராஜமாணிக்கம் தன் ஆபீசில் அமர்ந்து ஸ்கிரிப்டை மெருகேற்றிக் கொண்டிருந்தார். அருகிலிருந்த ஃபோன் செல்லமாய் சிணுங்கியது. எடுத்து, “ ராஜமாணிக்கம் ஹியர் “ என்றார்.

அடுத்த முனை “ சார் ரூபன் பங்களால இருந்து பேசறேன் சார், கொஞ்சம் இருங்க சார், ஐய்யா உங்க கிட்ட பேசணும்னார்”,

ஒரு நிமிட காத்திருப்புக்கு பின், “ஹல்லோ நான் ரூபன் பேசறேன் பாராட்டுக்கள், உங்க படம் பயங்கர வெற்றி பெற்றதுக்கு. நேர்ல வந்து பாராட்ட நினைச்சேன், ஆனா ரொம்ப டைட், டயமே இல்லை”

“ரொம்ப நன்றி ரூபன் சார் என்னை ஞாபகம் வச்சு பாராட்டினதுக்கு”

“ஓ யு ஆர் வெல்கம், அடுத்த படம் பிளான் பண்றீங்க போல இருக்கு,எனக்கு 5 மாசத்துக்கப்பறம் கொஞ்சம் கால்ஷீட் வேகண்ட் காட்டுதுனு செகரடரி சொன்னான்.அட்ஜஸ்ட் பண்ணி உங்களுக்கு கால்ஷீட் புக் பண்ணலாம்னு நினைக்கறேன். செகரட்டரி பாபுவை அனுப்பவா? சீக்கிரம் முடிவு பண்ணுங்க, செகரடரி அவன் பாட்டுக்கு வேற யாருக்காவது கொடுத்துடப் போறான்”

“ஓ தேங்க் யூ ரூபன், ஆனா 6 மாசத்துல என் படமே வந்துடணும்னு என் புரொட்யூசர் சொல்லி இருக்கார், உங்க பிசி ஷெட்யூல்ல அது முடியாது. அப்பறம் லக் இருந்தா பாப்போம்”

“அப்படியா, டேட் வேணா அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் அர்ஜெண்ட்னா”

“இல்லை ஆர்டிஸ்ட் எல்லாம் ஏற்கனவே புக் பண்ணியாச்சு ரூபன்.”

“அப்படியா நோ பிராப்ளம், உங்களுக்கும் டேட்ஸ் கொடுத்து ஒரு பிரேக் கொடுக்கலாம்னு பாத்தேன், எனிஹவ் பெஸ்ட் ஆப் லக்” போனை பதில் எதிர் பார்க்காமல் கட் பண்ணினான் வசூல் கிங் ரூபன்.

எதிரில் இருந்த செகரடரியிடம் “ பாத்தியாடா பாபு ஒரு படம் ஹிட் ஆனவுடனே இந்த டைரக்டர் பயலுக்கு வந்த திமிரை, அவனவன் என் கால்ஷீட்டுக்கு தொங்கறான், வலிய போய் கேட்டா வேற ஆள் போட்டாச்சுன்றான்”

பாபு, “பாதி ஷூட்டிங்ல உள்ள ‘பாதாள வேதாளம்’ படம் தவிர புது புக்கிங் எதுவும் இல்லை அண்ணே”

“அந்த தெலுங்குகார புரொட்யூசர் பிரபாகர ரெட்டி பின்னாலயே விழுந்தானே அவனை கூப்டு டேட்ஸ் கொடுத்துடு”

“நேத்தே ஃபோன் பண்ணினேன் அண்ணே அவருக்கு அப்பறம் சொல்றேன்னு கட் பண்ணிட்டார்”

“நேரம்டா, ரெண்டு படம் ஊத்திக்கிச்சு அதான் இப்ப எல்லாம் உதறறானுங்க,போகட்டும் நம்ம இ.சி.ஆர. காட்டேஜை கிளீன் பண்ணி வைக்க சொல்லு ஒரு வாரம் ஃபிரீயா இருக்கணும்,எல்லாம் ஸ்டாக் தயாரா இருக்கட்டும், ஆமாம் அந்த தேவிஶ்ரீயோட அம்மா ஃபோன் பண்ணினாங்களா”

“இல்லேண்ணே, நானே காண்டாக்ட் பண்ணறேன்.”

“சரி,இல்லைன்னா வேற ஏற்பாடு பண்ணணும், அடுத்த படம் யாராவது கால்ஷீட் கேட்டா ஹீரோயின் தேவிஶ்ரீதான்னு சொல்லிடு”

பாபு மனசுக்குள்ளே ‘எவன் இப்ப கால்ஷீட் கேக்க வரான், அண்ணன் வேஷம், ரெண்டாவது ஹீரோ பார்ட் கிடைச்சாலே பெரிசு, நானே வேறே யாராவது புது ஹீரோ கிட்ட போலாமானு பாக்கறேன், இந்த ஆளுக்கு மாமா வேலை பண்றதை விட்டுட்டு’

“என்னடா முணுமுணுக்கறே”

“இல்லைண்ணா, ஒரு தெலுங்கு படத்துல நெகடிவ் ரோல்க்கு கேட்டாங்களே டேட் கொடுத்துடவா”

“என்னடா வில்லன் வேஷம் போடச் சொல்றயா? வெய்ட் பண்ணு ஒரு ஹிட் வந்தா புரொட்யூசர் கூட்டம் அம்மும், சரி அந்த வேலைக்கார குட்டியை என் ரூம் கிளீன் பண்ண அனுப்பு” சொல்லிட்டே மாடி ஏறிப் போயிட்டார் ஹீரோ.

திரும்ப பாபு மனசுக்குள்ளே’என்ன பொழப்புடா இது , எம்.எஸ்.சி படிச்சிட்டு இந்த வேலைல மாட்டிட்டோமே’

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

 தொடரும்.

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விசித்திர உலகம் (பகுதி 4) – சுஶ்ரீ

    விசித்திர உலகம் (பகுதி 6) – சுஶ்ரீ