இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மும்பை ஏர்போர்ட்டின் எக்சிக்யூடிவ் லவுன்ஜில் கனெக்டிங் விமானத்துக்காக அமர்ந்திருந்த வினீத்குமாரின் கண்கள் கலங்கியதை கவனித்த நடிகை வனிதா, என்னாச்சு வினீத்னு ஆதரவாக கேட்டாள்.
வினீத்,”இல்லை அம்மாவின் ஞாபகம் வந்தது நான் இந்த நிலைக்கு வருவதற்குள் என் தாயார் பட்ட பாட்டை நினைத்தேன் அதுதான் ,இந்த ஏர்போர்ட், இந்த பணம், வசதி எல்லாமே என் தாயாரின் கடின உழைப்பு மற்றும் ஆசீர்வாதத்தால்தான்.”
வனிதா,”வாழ்வின் கடைசி நொடி வரை இந்த நினைவு இருந்தால் போதும், உங்களுக்கு தாயார் மாதிரி எனக்கு தகப்பனார்.ஆனால் எங்களுக்கு அவ்வளவு கஷ்ட ஜீவனம் இல்லை, என்னை நல்ல நிலையில் பார்க்கணும்னே எல்லாம் கற்றுக் கொடுக்க ஏற்பாடு பண்ணின என் அப்பா, என் முதல் படத்தை பார்க்க கூட உயிருடன் இல்லை” தன் பனித்த கண்களை வனிதா நாசூக்காய் துடைத்துக் கொண்டாள்.
“ஏய் வனி, டேக் இட் ஈசி, இந்த படமும் நம் கூட்டணியில் வெற்றி அடையட்டும், நாம் தனியே அம்மாக்களை கூட்டிக் கொண்டு யூரொப் பயணம் வருவோம், இப்ப கண் கலங்காம வாழ்க்கையை வருவது போல ஏற்று சந்தோஷப் படுவோம் சியர்அப்”
மும்பை ஏர்போர்ட்டில் இமிக்ரேஷன்,செக்யூரிடி செக் அப் முடிந்து அந்த பிரம்மாண்ட ஏர் இந்தியா விமானத்தில் சந்தோஷமாக அமர்ந்தது ராஜமாணிக்கத்தின் தலைமையில் அந்த படப்பிடிப்பு குழு. சுமார் 8 மணி நேரம் அமைதியாக பறந்தது விமானம் , விமானியின் அறிவிப்பு நாம் லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இறங்க தயாராகிறோம் என.வெளியே சீதோஷ்ண நிலை 10 டிகிரி செண்டிகிரேட், தெளிவான வானிலை.
மும்பை ஏர்போர்ட்டை பார்த்தே பிரமித்த நமது படப்பிடிப்பு குழு லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தின் பரபரப்பையும், அழகான அமைப்பையும், தக்காளிக் கூடை கவிழ்ந்தது போல உருண்டு ஓடும் அந்த செக்க சிவந்த பள்ளிக் குழந்தைகளின் குரூப்பையும் பாத்து வியந்தே போனது.ஆங்கிலம் நமது நாட்டில் நன்கு பேசும் மக்கள் கூட இங்கு பேசப்படும் அதிதுரித ஆங்கிலம் புரியாமல் விழித்தனர்.
நம் குழு இங்கு 4 மணி நேர காத்திருப்புக்கு பின் வேறு விமானம் ஏறவேண்டும். அனைவரும் சற்றே களைத்தே போயினர்.வசதியான லவுன்ஜில் ஓய்வு, காபிக்கு பெயர் போன ஸ்டார்பக்ஸ் காபி காக்கிக் கலர் பேப்பர் கப்பில் மூடியுடன் வழங்கப் பட்டது. கேமராமேன் சம்சத் பாய்,” காபி சூப்பரா இருக்கில்லை, சக்கரைதான் கம்மி”
அசிஸ்டண்ட் டைரக்டர் ரவி: “ஏன் இருக்காது 320 ரூபா ஒரு காபி, சக்கரை மருந்து பொட்டணம் மாதிரி நிறைய வச்சிருக்கான் பாருங்க எவ்வளவு வேணா போட்டுக்கலாம்.
கோரசான குரல்கள் “என்னது 320 ரூபாயா?” இப்ப காபி ரொம்ப கசந்தது.
லண்டன் ஏர்போர்ட் லவுன்ஜ்ல் 4 மணி நேர அரைத் தூக்கத்துக்கு பிறகு அடுத்த பிளைட் ஆனால் அது ஒண்ணரை மணி நேரத்தில் ஆம்ஸ்டர்டாம் ஷிஃபோல்(Schiphol)விமான நிலையத்தை அடைந்தது.
ஒரு நிமிடம் மூச்சை இழுத்தி நிறுத்தி வைக்கும் அழகிய நகரம் ஆம்ஸ்டர்டாம். தெருவெங்கும் வண்ண வண்ண சைக்கிள்களில் இளைஞர்கள், யுவதிகள். ஊர்ந்து செல்லும் அழகிய டிராம் வண்டிகள்.
ஆரோக்யமான குளிர் காற்று ஊரையே ஏர்கண்டிஷன் பண்ணி வைத்திருந்தது. ஊருக்குள் வளைந்து நெளிந்து ஓடும் இது நதியா , செயற்கை ஓடைகளா.( நதிதான் ஆம்ஸ்டெல் என்பது நதியின் பெயராம் )அதில் வண்ண வண்ண படகுகள்.படகுகளுடன் போட்டி போட்டு நீந்தும் பிரம்மாண்ட வெண்ணிற வாத்துகள்( ஒரு வேளை ரவி வர்மாவின் அன்ன பட்சி இதுதானோ) கரையோர மர பெஞ்சுகளில் இளங்காதலர்கள், நிமிடத்திற்கொருமுறை முத்தமிட்டுக் கொண்டு ஐஸ்கிரீம் கோன் சப்பினார்கள். கரையொட்டிய புல் பாதையில் வயதானவர்கள் பளபளக்கும் தம் கைத்தடிகளை வீசி வீசி நடந்தனர்.ஊரே உற்சாகமாக, கழுவி விட்ட சுத்தத்துடன் இருந்தது.
நகரத்துக்கு சற்று வெளியே இருந்த ஒரு ஹோட்டலைப் போய் நம் திரைப்பட குழுவினர் அடைந்த போது மதிய சூரியன் வானில் பளபளத்துக் கொண்டிருந்தான்.அன்றைய தினம் இந்த ‘சினம்’ திரைப்பட குழுவினருக்கு ஓய்வு.
மறுநாள் காலை எட்டுமணி குழுவினர் அனைவரும் ரெஸ்டாரண்ட் அறையில், செல்ப் சர்வீஸ்.அடுக்கடுக்காய் ஸ்லைஸ் பிரெட்கள், அருகிலியே எலக்ட்ரிக் டோஸ்டர். பக்கத்திலேயூ சின்ன சின்ன பாக்கட்களில் வெண்ணை, ஜாம். ரொட்டியை நாமே எடுத்து டோஸ்ட் பண்ணலாம். ஆரன்ஜ், தர்பூசணி பழச்சாறு பெரிய பெரிய கண்ணாடி ஜாடிகளில்.
பக்கத்துலயே ஜூஸ் கிளாஸ்கள், வித விதமான செரியல்ஸ், நறுக்கிய பழத் துண்டுகள், பால். டீ, காபி வெண்டிங் மெஷின்கள். அவரவர்களுக்கு வேண்டியதை பிளேட்டில் எடுத்துக் கொண்டு காலை உணவை முடித்தனர். சரியாக 9 மணிக்கு எல்லாரும் வேனுக்கு வந்துவிட வேண்டும் என ராஜமாணிக்கம் கேட்டுக்கொண்டார்.
அன்றைய ஷூட்டிங் ஸ்பாட்டாக தேர்ந்தெடுக்கப்பட்ட க்யுகென்ஹாப் ட்யூலிப் கார்டன் இவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து சுமார் 45 கி.மீட்டர் தூரம். வழி நெடுக விரிந்திருந்த இயற்கை செல்வங்களையும், மனிதர்களால் உருவாக்கப் பட்ட செயற்கை அழகுகளையும் ரசித்த வண்ணம் அந்த வேன் ஷூட்டிங் ஸ்பாட்டை அடைந்த போது மணி 9.45.
டூர் அரேன்ஜர் அதிகாலையிலேயே வந்து தேவையான அனுமதி பேப்பர்களை அதிகாரிகளிடம் காட்டி உடனே ஷூட்டிங் தொடங்க ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
உள்ளே நுழைந்தவுடனேயே அந்த வண்ண உலகம் கண்ணை பறித்தது.இத்தனை மலர்கள் இத்தனை வண்ணங்கள் இங்கு மட்டும் எப்படி, இதை பயிரிட்டு பாதுகாக்க எவ்வளவு முயற்சி வேண்டும் என வியப்புதான் எல்லார் மனதிலும். கலை உணர்வுடன் அந்த ஓடும் கால்வாய்க் கரைகளில் அமைந்த பிரம்மாண்ட ட்யூலிப் தோட்டங்கள் வானவில்லின் ஜாலங்கள் ஒன்றுமில்லை என பரையறிவித்தது. வரிசை வரிசையாய் ஒரு ஒழுங்குடன் மலர்ந்து குலுங்கிய ட்யூலிப் வரிசைகள் ஒரு மயக்கத்தையே கொடுத்தது.
டூர் அரேன்ஜர் பெருமையாக சொன்னார், இந்தி பட பிரபல நடிகர், அமிதாப் பச்சன் ஸில்சிலா என்கிற வெற்றிப் படம் ஷூட்டிங் பண்ணின இடம் இது, மேலும் ஷாரூக் கான் போன்ற பிரபல நடிகர்கள் விரும்பும் ஷூட்டிங் ஸ்தலம் இது என்று.
வினீத் குமார், வனிதா சேர்ந்து நடித்த பாடல் காட்சி விடாமல் 6 மணி நேர ஷூட்டிங் எடுக்கப் பட்டது.அடுத்த நாள் அதே ட்யூலிப் கார்டன் அதே பாட்டு தொடர்ந்து நாலு மணி நேர ஷூட்டிங்.
மூன்றாவது, நாலாவது நாட்களில் பெயர் பெற்ற ஒயின் தயாரிக்கும் இடங்கள், அதன் ஒயின் பேரல்கள் அடுக்கி வைக்கப் பட்ட இடங்களில் சில சண்டை காட்சிகள் படமாக்கப் பட்டன. ஐந்தாவது நாள், திரும்ப ஆம்ஸ்டர்டாமின், ஷிஃபோல் விமான நிலையம், லண்டன் ஹீத்ரூ ஏர்போர்ட், மும்பை, சென்னைனு திரும்ப இந்தியாவுக்குள் வெகு சந்தோஷமாய் நுழைந்தது அத்த படக் குழு.
டைரக்டர் ராஜமாணிக்குத்துக்கு ஒரே டென்ஷன், படமெடுத்த காட்சிகளை எடிட்டிங் செய்து, உடனே பார்த்து விட வேண்டும்.கேமராமேனுக்கு படு திருப்தி, இதுவரை இல்லாத முறையில் புதிய கோணங்களில், நெதர்லாண்டை படமாக்கிய திருப்தி. இன்னும் நான்கு மாத கெடு பாக்கி இருக்கு, தீபாவளிக்கு ‘சினம்’ படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings