இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வினித் சென்னைக்கு வந்தது எப்படியும் ஒரு சினிமாவிலாவது தலை காட்டிடணும்னுதான். என்ன இப்ப ஒரு 2 வருஷம் இருக்குமா?
சேலம் ஆத்தூர் பக்கம் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் ராஜதுரை. அப்பா விவசாயி 5 ஏக்கர் தோட்டத்தின் நடுவுலயே வீடு. ஆத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளில 10 வது முடிச்சு சேலம் வித்யோதயால 11வது சேந்தப்ப வந்த ஆசை.
பசங்கள்லாம் “டேய் ராஜா, நீ கமல் மாதிரி இருக்கேடா, ஒரு சாயல்ல அஜீத் மாதிரி இருக்கேனு“ ஏத்தி விட்டதுல அவனோட தலை அலங்காரம், ஆடை அலங்காரம் மாறியே போனது.
அவனோட அப்பாவுக்கும் பெருமைதான் அவனுடைய வித விதமான அலங்காரங்களை பாத்து. அவன் கேக்கும் போதெல்லாம் பணம் புரட்டிக் கொடுத்தார், பையன் படிச்சு கலெக்டர் ஆயிடுவான்னு எண்ணம்.
சேலத்துல அவனோட அபிமான நடிகர் ரூபன் நடித்த எந்த படம் ரிலீசானாலும் முதல் நாள் முதல் ஷோ பாத்தாகணும். புகழின் உச்சியில் இருந்த ரூபனோட ரசிகர் மன்றத்தின் சுறுசுறுப்பான உறுப்பினரில் ஒருவனானான். புது படம் வெளி வரும் போது பெரிய பெரிய பேனர் கட்அவுட்களில் சின்னதாய் இவன் படமும் கீழே இடம் பெறும் ரசிகர் மன்ற சார்பில்.
அப்போதே பெரிய நடிகனாகிவிட்ட பெருமை அவனுக்கு. 11வது பார்டர்ல பாஸ், 12வது காபி அடிக்க தோதுபடலை, இரட்டை டிஜிட் மார்க் கூட வரலை. ராஜதுரை வினித் குமாராகி சென்னைக்கு ரெயிலேறினான்.
அப்பா, சென்னையில் பையன் கல்லூரிப் படிப்பு படிக்கிறான் என ஒவ்வொண்ணாய் விற்று பணம் அனுப்பி வந்தார் கடன் தொல்லை தாங்காமல் 3 மாதங்களுக்கு முன்னால் மாரடைப்பில் மறைந்து போனார். தாயாருக்கு மிஞ்சியது அரை ஏக்கர் நிலமும் குடிசை வீடும்தான். ஊர்ல இருந்த பணம் வரது நின்னு போனது.
வினித் குமார் கோடம்பாக்கம் லாட்ஜ் ரூமை காலி பண்ணி, 4 பேருடன் ஒரு கே.கே.நகர் வீட்டின் மொட்டை மாடி கூரை ரூமுக்குள் அடைக்கலமானான். மூணு வேளை சாப்பாடாய் இருந்தது, ரெண்டு வேளை ஏதையாவது சாப்பிட்டு வயித்தை நிரப்பும் படி ஆனது. கோடம்பாக்கம் ஸ்டுடியோக்களுக்கு நடந்து நடந்து செருப்புதான் தேய்ந்தது.
எப்படியோ காலைப் பிடிச்சு கையைப் பிடிச்சு தன் அபிமான நடிகர் ரூபனின் உதவியாளர்களில் ஒருவருக்கு உதவியாளனா இடம் பிடிச்சான். சம்பளம் ஒண்ணும் இல்லை ரெண்டு வேளை சாப்பாடு கிடைத்தது, ஸ்டுடியோக்களுக்குள் வாச்மேன் விரட்டாமல் நுழைய முடிந்தது அவ்வளவுதான்.
நவரச நடிகர் ரூபன் ஒரு காதல் காட்சியில் நடித்துக் கொண்டு இருந்த உல்லாச நேர இடைவேளையில், நம்ம வினீத் கண்ல பட அவனைக் கூப்பிட்டு “நீ என்னை மாதிரியே கிராப்ல்லாம் வச்சிட்டு என் ஜாடைல இருக்கயே, இந்த படத்தில் எனக்கு டூப்பா நடிக்கறயா, ரெண்டு மூணு ரிஸ்கான சீன்ல”
கேட்டவுடனேயே வினீத் புளகாங்கிதம் அடைந்து விட்டான். தன்னை கூப்பிட்டு தலைவர் பேசிட்டாரேனு.தயங்காமல் பதில் அளித்தான், “உங்களுக்காக மலைல இருந்து குதிப்பேன் அண்ணா”
உடனே டைரக்டரை கூப்பிட்டு சொன்னார் நடிகர் ரூபன், “இந்த பையனை நம்ம பைக் ரேஸ் சீன், மலைல இருந்து உருண்டு விழற கிளைமாக்ஸ் சீனுக்கு யூஸ் பண்ணிக்கங்க”
டைரக்டர். ராஜராணிக்கம், “இந்த பையனா இவன் உங்களை விட உயரமும் ஜாஸ்தி, கலரும் ஜாஸ்தி சரியா மேட்ச் ஆகாதே நம்ம பழைய டூப் போதுமே”
“யோவ் நான் சொல்றதை நீ செய், மேக்அப், டிஸ்டன்ஸ் ஷாட்ல சரி செய்ய தெரியாட்டா நீ என்ன டைரக்டர், இவன்தான் டூப், புரிஞ்சதா அட்வான்ஸ் வாங்கி கொடுத்துட்டு தயார் பண்ணு இவனை. சரி ஸ்நேகலதாவோட லிப்லாக் சீன் ஒண்ணு வை, படம் எகிரிக்கும்”
“சரி சார்”, முனகினார் டைரக்டர் ராஜமாணிக்கம் தன் மனசுக்குள்ளே கேவலப்படுத்தறானே இவன் என்கிற துக்கத்துடன்.
வினித்தை தனியாக கூட்டி சென்று, “உனக்கு இன்னிக்கு நல்ல நாள்டா, பாத்து நடி 3 நாள் வேலைதான், 2000 ரூபா வாங்கித் தரேன், திறமை இருந்தா , லக் இருந்தா நிறைய சான்ஸ் கிடைக்கும்.”
அடுத்த 4 நாள் பரங்கி மலைல இருந்து உருண்டான் வினீத், ஒரு மொட்டை மாடியிலிருந்து அடுத்த ஓட்டு வீடு அதிலிருந்து ஓடும் லாரி என தாவி சண்டையிட்டான், கிண்டி ரேஸ்கோர்ஸில் மோட்டர் பைக் சாகசம் சில பல காயம் ஏற்பட்டாலும் ஒரே ஷாட்டில் காட்சி ஓகே ஆனது.
ஸ்நேகலதாவுடன் வழிந்து கொண்டிருந்த ஹீரோ டைரக்டரைப் பாத்து, “ நல்லா பண்றான் இல்லே நான் சொன்ன பையன், அவன் நல்லா பண்றான்னு லவ் சீனுக்கெல்லாம் அவனை கூப்பிட்டுறாதே”
பெரிய ஜோக் சொன்ன மாதிரி கடகடவென சிரித்துக் கொண்டே பக்கத்திலிருந்த ஹீரோயினை கட்டி அணைத்துக் கொண்டான்.
அந்த இளம் புது டைரக்டர் ராஜமாணிக்கம் முதல் படம் என்பதால் ஹீரோ படுத்திய பாட்டை பொறுத்துக் கொண்டார், இரு இந்த படம் ஹிட் ஆகட்டும் உன்னை பாத்துக்கறேன், கருவிக் கொண்டார் மனசுக்குள். அடுத்த பொங்கலில் வெளியான “காதல் களவாணி” படம் சூப்பர் டூப்பர் ஹிட். வசூலில் சாதனை படைத்தது.
அந்த சாதனையை உபயோகித்து தங்கள் பணப்பையை நிரப்ப தயாரிப்பாளர்கள் நடிகர் ரூபனையும் , அந்த புது டைரக்டர் ராஜமாணிக்கத்தையும் முற்றுகை இட்டனர். டைரக்டர் பழைய நடிகர்களை வைத்து படம் பண்ண மாட்டேன் நல்ல கதை இருக்கு புது நடிகரை போட்டு எடுப்பதென்றால் தயார் என சொல்லி விட்டார்.
நடிகர் ரூபனோ சம்பளத்தை கோடிகளில் உயர்த்தி விட்டார், எவனை வேணா டைரக்டரா போடு என்னோட நடிப்பாலதான் படம் வசூல் கொடுக்கிறது என பட்ஜெட்டில் பாதி பணத்தை பறித்துக் கொள்ள தயாரானார்.
நடிகர் ரூபன் என்ற குதிரை மேல் ரேஸ்ல பணம் கட்டத் தயாரானார் ஒரு பெரும் ஆந்திர தயாரிப்பாளர் பணத்தை கொட்டினார்,
பேர் பெற்ற டைரக்டர், புகழ் பெற்ற நடிகை உப நடிகர்களுடன் படம் பூஜை போடப்பட்டது. இதே வேளையில் ஒரு செட்டிநாட்டு பெரிய பணக்காரர் டைரக்டரை நம்பி பணம் முதலீடு செய்யத் தயாரானார். ராஜமாணிக்கத்துக்கு கணிசமான் பட்ஜெட்டை கொடுத்து பொறுப்பை கொடுத்தார்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தொடரும்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings