எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சைக்கிளில் அலுவலகம் செல்லும் போது திரும்பவும் நினைவு வந்தது.
“கிறிஸ்துமஸ் வரப் போகிறது. இரண்டு வருடமாக பட்டுச்சேலை கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த கிறிஸ்துமஸ்ஸூக்காவது ஒரு சேலை வாங்கிக் கொடுங்கள். அவனவன் மனைவிக்கு நகை என்ன, பட்டுப்புடவை என்ன என்று வாங்கித் தள்ளுகிறான். நீங்கள் ஒரு கஸ்டம்ஸ் அதிகாரியாக இருந்து கொண்டு ஒரு சேலை கூட வாங்கித் தர முடியாமல் இருக்கிறீர்கள்” என்று நேற்று உணவருந்தும் போது மனைவி தெரசா சொன்னது நினைவிற்கு வந்தது.
மகன் டேவிட், “அப்பா இந்த வருடக் கர்த்தர் பிறப்பிற்காவது எனக்கு கோட் சூட் தைத்துத் தருவீர்களா?” என்று தினமும் நச்சரித்துக் கொண்டிருபப்து எதிரே ஒரு ஆட்டோ ரிக்ஷா வர கலைந்து போனது.
வருகின்ற சம்பளத்தில் வீட்டு லோன், டி.வி. லோன், பிரிட்ஜ் லோன் என்று பாதிப் பணமும், போய் விடுவதால், சாப்பாட்டிற்கே சரியாக இருக்கிறது. இதுவரை லஞ்சம் வாங்காத உண்மையான அதிகாரி என்று பெயர் வாங்கியாகிவிட்டது.
“பெரிய கஸ்டம்ஸ் ஆபிசர், வீடு மனை எல்லாம் வாங்கிக் கொடுப்பார்னு பொண்ணைக் கட்டிக் கொடுத்தால் லஞ்சம் வாங்காத ஆபீசர்னு பேர் மட்டும் வாங்கிட்டு வந்து நிக்கறீங்களே மாப்பிள்ளே. பேரு உங்களுக்கு ஸ்கூட்டராவது காராவது வாங்கித் தந்ததா? உங்களுக்குக் கீழே இருக்கிற குமாஸ்தா சியலோ காரிலே போகிறான். நீங்கள் இன்னும் சைக்கிளிலேயே போய்க் கொண்டிருக்கீங்க” போன வாரம் வந்து தெரசாவின் அப்பா மரியாதையில்லாமல் பேசி விட்டு போனது திரும்பவும் நினைவிற்கு வர, சைக்கிளிலிருந்து இறங்கி அலுவலகத்திற்கு வந்தார் சுங்க இலாகா மூத்த அதிகாரி ஜோசப்.
எல்லோரும் குட்மார்னிங் சொல்ல பதில் வணக்கம் சொல்லி விட்டு நேராக அலுவலக அறைக்கு வந்த போது மலைச்சாமி அவர் அறையில் காத்துக் கொண்டு இருந்தார்.
மலைச்சாமி பெரிய தொழிலதிபர். நிறைய ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்பவர். நேற்றும் தன்னிடைய தொழிற்சாலைக்குத் தேவையான ஒரு எந்திரம் இறக்குமதியாகி இருப்பதை தெளிவுபடுத்தி விளக்கமாகச் சொல்லி விட்டுப் போயிருந்தார்.
இரவில் அந்த எந்திர இறக்குமதி கோப்பை ஜோசப் வாசித்துப் பார்த்தபோது தான் அவர் சுங்க வரியை ஏமாற்றுவதற்காக கோல்மால் வேலை எல்லாம் செய்து எந்திரத்தின் பெயரை மாற்றியிருப்பது புரிந்தது.
“என்ன சார் காலையிலே வந்திட்டீங்க, என்ன விஷயம்?” ஜோசப் மலைச்சாமியிடம் கேட்டார்.
“சார், ஏற்கனவே இறக்குமதியான எந்திரத்திற்கு அளவிற்கதிகமான துறைமுக வரி ஏறிக் கொண்டு போகிறது. நாங்கள் அதை விரைவில் வெளியே எடுக்கவில்லை என்றால் எந்திரத்தின் விலையை விட கப்பல் கம்பெனிக்கும் துறைமுகத்திற்கும் அதிகமான பணம் கட்ட வேண்டி வரும். நாங்கள் இறக்குமதி செய்த எந்திரத்தைப் பற்றி நான் நேற்றே உங்களுக்குத் தெளிவாக விளக்கியிருந்தேன். உங்களுடைய கையெழுத்து மட்டும் தான் தேவை” என்றார் மலைச்சாமி.
“நீங்கள் நெய்வதற்கான எந்திரத்தை நூல் கோப்பதற்கான எந்திரம் என்று பெயரிட்டு வாங்கியிருக்கிறீர்கள். இது அந்த கோப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. நீங்கள் நெய்வதற்கான எந்திரம் என்று குறிப்பிட்டிருந்தால் ஏறக்குறைய பனிரென்டு லட்ச ரூபாய் சுங்க வரி கட் டவேண்டியதிருக்கும் உங்களுக்கு இது தெரியும்” என்று நினைக்கிறேன்.
“சார் அது வந்து… நீங்கள் கோபப்படவில்லை என்றால் ஒன்று சொல்லட்டுமா?”
“ம்…”
“ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன். நீங்கள் கையெழுத்துப் போட்டு விட்டால் வேறு யாரும் இதைப் பற்றிக் கேட்கப்போவதில்லை”
கோபம் மூக்கிற்கு வர, “என்னை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். சாயங்காலம் வாருங்கள். யோசித்துப் பதில் சொல்கிறேன்” என்றார் ஜோசப்.
மலைச்சாமி வெளியே சென்றதும் எனக்கே ஆச்சரியமாக இருக்கின்றது. “எனக்கு உங்கள் பணம் தேவையில்லை இதைக் குறிப்பிட்ட துறைக்கு கொடுத்து ஆராயச் சொல்லப் போகிறேன் என்று நான் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்காமல் ஏன் இன்னும் அவரை திரும்பவும் வரவழைத்தேன். கர்த்தரே என் வீட்டுப் பிரச்சனகளால் எனக்கு பண ஆசையை தந்து சோதிக்கிறிரா” என்று மனதிற்குள் பேசியவாறு நெஞ்சைப் பிடித்தார் ஜோசப்.
திருமணத்தின்போது மாமனார் அணிவித்த தங்கச் சங்கிலித் தட்டுபட்டது. உடனடியாக மணியடித்து பியூனைக் கூப்பிட்டார்.
“என்ன சார் கூப்பிட்டீங்களா?”
“மாணிக்கம், இனி மலைச்சாமி என்னைப் பார்க்க வந்தால் உள்ளே அனுப்ப வேண்டாம். அவருடைய கோப்பு இப்போது சி.பி.ஐ துறையில் உள்ளது. அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து தக்க வரி கட்டி அவருடைய எந்திரத்தை துறைமுகத்திலிருந்து எடுப்பதற்கு ஏற்பாடு செய்யச் சொல்லுங்கள்”
“சரி சார்”
“நீங்கள் தங்க நகைகள் வாங்கிக் கொண்டு வட்டிக்கு பணம் கொடுப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த தங்கச் சங்கிலியை வைத்து கொண்டு எனக்கு மூவாயிரம் ரூபாய் பணம் தர முடியுமா?” என்று கேட்டார் ஜோசப்
“சார்.. வந்து… நகை வேண்டாம். பணம் தருகிறேன். எப்போது வேண்டுமானாலும் திருப்பிக் கொடுத்து விடுங்கள்”
“இல்லையில்லை. செயினை வைத்துக கொண்டு பணம் தாருங்கள்” என்று செயினைக் கொடுத்து பணம் வாங்கிக் கொண்டவர் சக அதிகாரியிடம் அரை நாள் விடுமுறைக்கு சொல்லிக் கொண்டு துணிக்கடைக்கு கிளம்பினார் மனதிருப்பதியுடன்.
எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings