2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
மனோன்மணியால் நம்பவே முடியவில்லை. அந்த வழியாக தினமும் போகும் போதும் வரும் போதும் அந்த பங்களா வீட்டைப் பார்த்துப் பார்த்து வாய் பிளப்பாள்.
“அம்மாடியோவ்!… இது என்ன வீடா?… இல்லை மாளிகையா?” என்று.
பெரிய கம்பீரமான முரட்டு இரும்பு கேட். முகப்பிலேயே அழகிய சிறிய பூந்தோட்டம். அதைத் தாண்டியதும் அகண்ட போர்ட்டிக்கோ. அதனடியில் ரதம் போல் இரண்டு கார்கள்.
“ஹும்… சேர்ந்தா இந்த மாதிரி ஒரு பங்களா வீட்டில் வேலைக்காரியாய்ச் சேரணும்! அதை விட்டுட்டு… பிச்சைக்காசுக்காக வீடு வீடாய்ப் போய் பத்துப் பாத்திரம் தேய்ச்சுக்கிட்டு… ச்சை…. என்ன பொழப்பு என் பொழப்பு?” தன்னைத் தானே நொந்து கொண்டபடி அந்த வீட்டைக் கடப்பாள்.
சில தினங்களுக்குப் பிறகு, ஏதோ ஒரு திசையில்… ஏதோ ஒரு கணத்தில்… அதிர்ஷ்ட தேவதையானவள் அவள் ஆசையை அங்கீகரித்து விட, உண்மையிலேயே அவளுக்கு அந்த மாளிகை வீட்டில் வேலைக்காரி உத்தியோகம் கிடைத்தது.
மனோன்மணியால் இன்னும் கூட நம்பவே முடியவில்லை. “ஏய்… அமுதா விஷயம் தெரியுமா அந்த கடைசித் தெரு புது பங்களா வீடு இருக்குல்ல?… அதாண்டி அந்த கருப்பு கேட்டு!… அங்கே என்னையை வேலைக்காரியா சேர்த்துக்கிட்டாங்க!… அடுத்த வாரம் வேலையில சேரப் போறேன்” பொறாமையால் முகம் சுண்டும் அமுதாவை மேலும் பொறாமைப்படுத்தும் விதமாய், “எப்பேர்ப்பட்ட பங்களா தெரியுமா அது?… அரண்மனையாக்கும்!… எடுத்த எடுப்பிலேயே மாசம் அஞ்சாயிரம் ரூபாய் சம்பளம்!… என்னைய மாதிரி அங்கே ஏழெட்டு பேர் இருக்காங்க!”
அடுத்த வாரத்தில் வேலைக்கு சேர்ந்த மனோன்மணி தனக்கு கிடைத்த அந்த வேலையை ஒரு மாபெரும் பொக்கிஷமாய் கருதிக் கொண்டு, படு சிரத்தையுடன் உழைக்க ஆரம்பித்தாள். வீட்டின் ஒரு ஒரு அங்குலத்தையும் ரசித்து ரசித்து சுத்தப்படுத்தினாள்.
பணத்தை இறைத்து படு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட விஸ்தாரமான முன்புற ஹால். பார்த்துப் பார்த்து மெருகூட்டப்பட்ட பல்வேறு அறைகள். டைனிங் ஹால், பூஜை அறை, என பணக்காரத்தனம் மிளிரும் எல்லா அறைகளுக்குள்ளும் சுதந்திரமாய் சென்று சுத்தம் செய்யும் மனோன்மணிக்கு அந்த வீட்டின் முதலாளியும் முதலாளியம்மாவும் உறங்கும் படுக்கை அறைக்குள் செல்ல மட்டும் ஏனோ தயக்கமாய் இருந்தது.
“என்னதான் இருந்தாலும் ஒரு புருஷன் பொண்டாட்டி படுத்துத் தூங்கும் தனி அறை… அதுக்குள்ளார நாம போறது அவ்வளவு நாகரிகமில்லை!” தனக்குத்தானே ஒரு கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டு அந்த அறைக்குள் செல்வதையே தவிர்த்து வந்தாள்.
அவள் தயக்கத்தினை போக்கும் விதமாய் முதலாளியம்மாவே நேரில் அழைத்து, “இந்தாம்மா… இங்க வாம்மா!… உன் பெயர் என்ன?” கேட்க,
“மனோன்மணி”ங்க!”
“நான் தினமும் கவனிச்சிட்டுத்தான் வர்றேன்!… நீ ரொம்ப நல்லா… பொறுப்பா வேலை செய்யறே!… வெரி குட்!… அப்படித்தான் இருக்கணும்!”
சந்தோஷத்தில் குளிர்ந்து கூச்சத்தில் நெளிந்தாள் மனோன்மணி.
“அதனால நீ என்ன பண்றே?… இனிமேல் எங்க பெட் ரூமையும் நீயே சுத்தம் பண்ணிடு!… என்ன புரிஞ்சுதா?”
“சரிங்கம்மா” என்றாள் வாயெல்லாம் பல்லாக.
இது நாள் வரையில் உள்ளே சென்று கூடப் பார்த்திராத அந்தப் படுக்கை அறைக்குள் தயங்கித் தயங்கி நுழைந்தாள் மனோன்மணி.
நல்ல கலாரசனையோடு செதுக்கப்பட்ட தேக்கு மரக்கட்டில். அதன் மேல் வெளிர் ஊதா நிறத்தில் வெல்வெட் மெத்தை. வெண்பஞ்சு மேகத்தை கொஞ்சமாய் பிரித்து எடுத்து வந்து போட்டது போல் தலையணைகள். கட்டிலின் அருகாமையில் அழகான சிறிய மேஜை. அதன்மேல் கண்ணை உறுத்தாதபடி மெலிதாய் எரியும் விடிவிளக்கு. பக்கத்தில் குட்டி போன். கண்ணாடி வாட்டர் ஜக்.
கட்டிலை விட்டுக் கொஞ்சம் தள்ளி ஆளுயர நிலைக் கண்ணாடி பொருத்தப்பட்ட டிரெஸ்ஸிங் டேபிள். அதன் தலையில் ஒளி உமிழும் சிறிய மின்விளக்கு. டிரெஸ்ஸிங் டேபிள் மீது பலவகையான ஒப்பனைப் பொருட்கள். வாசனைத் திரவியங்கள். தரை விரிப்பின் மென்மை உள்ளங்கால்களுக்கு ஒத்தடம். விரித்த விழிகளை சுருக்கவே முடியவில்லை மனோன்மணிக்கு.
“ஆஹா படுக்கையறைன்னா இது படுக்கையறை!… இந்த மாதிரி ஒரு அறைக்குள்ளார… இந்த மாதிரி ஒரு வெல்வெட் மெத்தைல… நானும் என் புருஷனும் என்னைக்குப் படுக்கப் போறோமோ?” ஏக்கத்தில் அவள் வெளிப்படுத்திய பெருமூச்சின் உஷ்ணம் ஏசி ஜில்லிப்பையே தோற்கடித்தது.
தன் வீட்டில், தான் படுத்துறங்கும் சூழல் ஞாபகத்திற்கு வந்தது. மேலே பல்லிகள் ஓடிப் பிடித்து விளையாடும் ஓட்டுக்கூரை. அவ்வப்போது அதில் ஒன்று கீழே படுத்திருப்பவரின் மீது விழுந்து அவரை துள்ளியெழச் செய்யும். மூத்திர வாடையுடன் கூடிய கிழிந்த பாய் மற்றும் பெட்ஷீட். உறையே கண்டிராத அழுக்கு மூட்டைத் தலையணை. ஒரு பக்கம் வியர்வை நாற்றப் புருஷன். மறுபக்கம் படுக்கையிலேயே ஒன்று… இரண்டு என எல்லாவற்றையும் முடித்துக் கொள்ளும் மூன்று வயது மகன்.
இரவில் ஆசை அலைகளின் வேகத்திற்கு தடையாய் பையனின் தடங்கல்கள். “ஹும்… எல்லாம் என் விதி” அருவருப்பில் முகம் சுளித்தாள்.
அன்று மாலை வீடு திரும்பியவளின் ஞாபகத்தில் திரும்பத் திரும்ப அந்த பங்களா வீட்டு படுக்கையறையே வந்து வந்து போனது. “நாம குடுத்து வெச்சது அவ்வளவுதான்!… அடுத்த ஜென்மத்திலாவது அப்படியொரு வாழ்க்கை நமக்கு அமையட்டும்”.
இரவு.
மங்கலாய் எரியும் புகை படிந்த விடிவிளக்கின் சோபையான வெளிச்சத்தில் கூரையே பார்த்தபடி கிடந்த மனோன்மணியின் மனம் லஞ்ஜையே இல்லாமல் வெல்வெட் மத்தியில் கட்டிக் கொண்டு கிடக்கும் முதலாளியையும் முதலாளியம்மாவையும் கற்பனை செய்து பார்த்தது.
“ஹும்… அந்த அறையே ஒரு சொர்க்கம்!… அந்த வெல்வெட் மெத்தையோ இன்னொரு சொர்க்கம்… அதில் அவர்கள் காண்பது மூன்றாவது சொர்க்கம்!… கொடுத்து வச்ச ஜீவன்கள்!” நீண்ட பெருமூச்சொன்று அவளையும் மீறி வெளியேறியது. தூக்கம் தொலைவில் நின்று நின்று கொண்டு எக்காளமிட்டது.
அதே நேரம் அந்த பங்களா வீட்டுப் படுக்கையறையில், அந்த வெல்வெட் மெத்தையில்…
பணத் தேடலில் அலைந்த அசதியின் பொருட்டு அருந்திய மதுவின் போதைத் தாலாட்டில் கணவனும்,
பல்வேறு வியாதிகளின் பொருட்டு பக்குவமாய் விழுங்கிய மாத்திரைகளின் மதமதப்பில் மனைவியும்,
தனித்தனியே கிடப்பது பாவம், மனோன்மணிக்கு எப்படித் தெரியும்?.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings