எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
திருவான்மியூரின் கடற்கரை அருகில், கடலின் அலைகளை ரசிக்கும் வண்ணம் கலைநயத்துடன், கண்களை கவரும் வண்ண மலர்களுடன் கூடிய செடிகளை பல வண்ணநிற தொட்டிகளில் வைத்து, வீட்டிற்கு வருபவர்களை வரவேற்கும் விதமாகவும், உயர்ரக பர்மா தேக்கு மரத்தாலும், பெல்ஜியம் கண்ணாடியால் ஆன கதவுகள், ஜன்னல்கள், இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மார்பில்களால் ஆன தரைகள் என்று மூன்று மாடிகளைக் கொண்டு அமைந்த 200 கோடி ரூபாய் மதிப்புள்ள 1 ஏக்கரில் நடுவில் அழகான ஒரு பங்களா வீடு.
கனடாவில் வசித்து வரும் அந்த வீட்டின் ஓனர் தனசேகரன் தன் பேர பிள்ளைகளுடன் ஒவ்வொரு ஆண்டு விடுமுறையில் மட்டும் சென்னையில் உள்ள அந்த பங்களாவிற்கு வந்து தங்கி, சென்னை மற்றும் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கும், சென்று வந்து இளைப்பாறி விட்டு பின் கனடாவிற்கு புறப்பட்டு செல்வார்.
அந்த பங்களா வீட்டின் வாட்ச்மேன் ஞானவேல் தன் குடும்பத்துடன், அந்த வீட்டின் பின்புறத்தில் தனசேகரன் கொடுத்த வீட்டில் இலவசமாக இருந்து கொண்டு, அந்த பங்களாவை மேற்பார்வையிட்டு நல்ல நிலையில் வைத்து வந்தார். மற்றபடி அந்த வீட்டு ஓனரின் விவரங்கள் எதுவும் தெரியாது ஞானவேலுக்கு.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தனசேகரன் அந்த வீட்டிற்கு வரவில்லை. இதை அந்த தெருவில் இருந்த தாதா குணசேகரன் எப்படியோ தெரிந்துக் கொண்டு வாட்ச்மேன் ஞானவேலை தன் வீட்டிற்கு வரவழைத்து தனசேகரன் பற்றி விசாரித்தார்.
வாட்ச்மேன் ஞானவேல் தன் வீட்டின் ஓனரைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், அவர் வீட்டு போன் எண்ணை மட்டும் ஒரு நோட்டில் எழுதி வீட்டில் வைத்துள்ளதாகவும், ஆனால் இது நாள் வரை அவரிடம் போனில் பேசியதில்லை என்றும் கூறினார்.
அதற்கு குணசேகரன், அந்த போன் எண்ணை கேட்டார்.
ஞானவேல் “ஓனர் தனசேகரன் தன் வீட்டு போன் எண்ணை யார் கேட்டாலும் தரக்கூடாது என்று கூறியுள்ளதாகவும், அதனால் தர இயலாது” என்று கூறினார்.
இதை கேட்ட குணசேகரன் சற்று மிரட்டும் தோனியில் “நான் யார்னு தெரியாதா உனக்கு ? என் கிட்ட வந்து இப்படி பேசறே? நீ இங்கேயே இரு வர்றேன்” என்று கூறி விட்டு, வீட்டிற்குள் சென்று தன் மகன் காதில் ஏதோ கிசு கிசுத்தார்.
பின் திரும்பி வந்து ஞானவேல் பயப்படாதே, இப்படி வந்து உட்காரு, டீ சாப்பிட்டுட்டு போகலாம் என்று கூறி, டீ கொண்டு வரச் சொன்னார்.
ஞானவேல் தரையில் அமர்ந்தார். குணசேகரன் கையில் செய்தி தாளை எடுத்து, படிப்பது போல் பாவனை செய்து கொண்டு தன் வீட்டின் மெயின் டோரையே பார்த்து கொண்டிருந்தார்.
ஒரு மணி நேரம் ஆகியும், ஞானவேலுக்கு டீ வரவில்லை. அவர் மகன் மெயின் கேட்டை திறந்து கொண்டு வந்து, தன் அப்பாவைப் பார்த்து தன் கட்டை விரலை உயர்த்தி காட்ட, குணசேகரன் புரிந்து கொண்டு, ஞானவேல் இன்னும் நீ கிளம்பலையா? என்று கேட்க, “அய்யா டீ சொன்னீங்களே..!”, வரல.. அதான்..
“டீ வரலயா?”
“அப்பா.. நம்ம சமையல்காரன் வீட்டில இல்லப்பா, என்று அவர் மகன் கூற,
“அப்படியா..? சரி, நீ கிளம்பு ஞானவேல்” என்று குணசேகரன் கூறினார்.
கோபத்துடன் வெளியே வந்தார் ஞானவேல். தன் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தண்ணீர் வாங்கி குடித்து விட்டு, சரியான கஞ்சன் என்று திட்டிக்கொண்டே அமர்ந்தார் ஞானவேல்.
அன்றே தன் மகன், ஞானவேல் மனைவியிடம் கேட்டு வாங்கி வந்த அந்த நோட்டில் இருந்த நம்பருக்கு போன் செய்தார் குணசேகரன். கனடாவில், அந்த வீட்டில் இருந்த ஒருவர் போனை எடுத்து அலோ யாரு? என்று கேட்க. “நான் தனசேகரனோட நண்பர் , தனசேகர் கிட்ட பேசணும்” என்றார் குணசேகரன்.
“தனசேகரா..? அப்படி இந்த வீட்டில் நீங்க சொல்ற பேர்ல யாரும் இல்லையே” என்று கூறினார்.
“அப்படியா? சரி, இப்ப நீங்கள் இருக்கிற விலாசம் சொல்லுங்க, சரியான்னு பார்க்கிறேன்” என்று குணசேகரன் கேட்க ,
அவர் விலாசத்தை கூற, குணசேகரன் அதை தன் மொபைலில் பதிவு செய்து கொண்டார். உடனே, “சாரிங்க விலாசம் மாறியிருக்கு” என்று கூறி விட்டு மொபைலை ஆஃப் செய்தார்.
உடனே கனடாவில் இருக்கும் தன் மாப்பிள்ளை ராஜாவுக்கு போன் செய்து அவர்கள் கூறிய விலாசத்தை கூறி, அங்கே சென்று தனசேகரனைப் பற்றி மட்டும் விசாரிக்கும்படி கூறினார்.
மறுநாள் ராஜா அந்த விலாசத்திற்கு சென்று தனசேகரனைப் பற்றி விசாரித்தார். குணசேகரனிடம் போனில் பேசிய அதே நபர் தான் மீண்டும், “ராஜாவிடமும், தனசேகரன் என்று யாரும் இங்கே இல்லை என்றும், தான் ஒரு வருடத்திற்கு முன்பு தான் இந்த வீட்டை வாங்கியதாவும் கூறினார். உடனே இவருக்கு இந்த வீட்டை ஒரு வருடத்திற்கு முன்பு விற்பனை செய்த நபரின் விவரங்களை கேட்டு வாங்கி கொண்டு அங்கு சென்று விசாரித்தார் ராஜா. அவர் தன் பெயர் ஜான்சன், Real Estate Agent என்று சற்று பயத்துடன் கூறி விட்டு, ஆமாம், நீங்க யாரு? எதற்கு? அந்த வீட்டில இருந்த தனசேகரன் பத்தி கேட்கறீங்க என்றார்.
அதற்கு ராஜா போன வருஷம் தனசேகரன் ஐந்து லட்சம் டாலர்கள் தன்னிடம் கடனாக வாங்கியதாகவும் அதை திருப்பி கேட்க வந்துள்ளதாகவும் கூற, உடனே ஜான்சன் ராஜாவை பார்த்து, “என்ன சொன்னீங்க..? தனசேகரன் உங்ககிட்ட போன வருஷம் கடன் வாங்கினாரா? அதுவும் ஐந்து லட்சம் டாலர்கள்! ” என்று நக்கலாக கேட்டார்.
இவர் பேசிய விதம் ராஜாவுக்கு சிறிது அச்சத்தை கொடுத்தது. சமாளித்துக் கொண்டு “ஏன் அப்படி கேட்கறீங்க..? அவர் என்கிட்ட கடன் வாங்கியதுக்கு ஆதாரம் இருக்கு” என்று கூற
மறுபடியும் ஜான்சன் சிரித்துக்கொண்டே “நான் நினைச்சா உங்க மேல போலிஸ்ல புகார் கொடுத்து, இப்பவே கைது செய்ய முடியும்” என்றார்.
ராஜாவுக்கு சற்று கோபமும், பயமும் உண்டானது. “எனக்கும் போலீஸ் தெரியும். சும்மா மிரட்டாதீங்க..! தனசேகரன் எங்கேன்னு மட்டும் சொல்லுங்க” என்றார்.
“அப்படியா..? சரி, நான் ஒரு விலாசம் தர்றேன், அங்கே லாரன்ஸ்ன்னு ஒரு அட்வகேட் இருப்பாரு. அவரைப் போய் பாருங்க, அவர் தனசேகரன் எங்கே இருக்கிறார்ன்னு சொல்லுவார்” என்று கூறினார் ஜான்சன்.
ஜான்சனை முறைத்து விட்டு விலாசத்தை வாங்கி கொண்டு அட்வகேட் லாரன்சை பார்க்கப் போனார் ராஜா. அட்வகேட் லாரன்சை பார்த்து, தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தனசேகரன் தன்னிடம் போன வருஷம் ஐந்து லட்சம் டாலர்கள் கடன் வாங்கியதாகவும், எனவே அவரைப் பார்த்து கடனை திருப்பி வாங்க வந்திருப்பதாக கூறினார்.
அட்வகேட் லாரன்ஸ் ஜான்சனைப் போலவே சிரித்துக்கொண்டே,”மறுபடியும் சொல்லுங்க” என்று கேட்டார்.
ராஜா கோபத்துடன் “என்ன ? என்று லாரன்சிடம் கேட்க ..
உடனே லாரன்ஸ் கோபமாக, “பின்ன என்னய்யா? அவரு எவ்வளவு பெரிய கோடீஸ்வரன் தெரியுமா?. உன்கிட்ட வெறும் ஐந்து லட்சம் டாலர்கள் கடன் வாங்கியதா சொல்றே..? ஆமாம் நீ யாரு..?” என்று மிரட்டலாக கேட்டார்.
ராஜா பயத்துடன், “இல்ல சார், அவர் போன வருஷம் என்கிட்ட பாண்ட் பேப்பரில் கையெழுத்து போட்டு ஐந்து லட்சம் டாலர்கள் கடன் வாங்கினார்” தனசேகரன் எங்கே இருக்கிறார்.. என்று மட்டும் சொல்லுங்க.. நான் அவர்கிட்ட பேசிக்கிறேன்” என்று ராஜா கூற,
லாரன்ஸ் ராஜாவை முறைத்து பார்த்து, ஹலோ, “அவர் செத்து போய் மூன்று வருஷம் ஆகுது, உன்கிட்ட போன வருஷம் ஐந்து லட்சம் டாலர்கள் கடன் வாங்கினாரா..? அவர் எப்படி செத்தார்ன்னு தெரியுமா? நடுவானத்தில பிளைட் தீப்பற்றி, கீழே விழுந்து, அந்த பிளைட்ல வந்த 100 பேரும் எரிஞ்சி செத்துட்டாங்க. போயா வெளியே” என்றார். ராஜா போனவுடன், நானே ஒரு கிரிமினல், அட்வகேட்ன்னு பொய் சொல்லி ஏமாத்தின்னு இருக்கேன்.
லாரன்ஸ் வீட்டை விட்டு வெளியே வந்து தன் மாமானாருக்கு போன் செய்து நடந்த எல்லாவற்றையும் விவரமாக கூறினார் ராஜா. குணசேகரன் தன் மாப்பிள்ளையின் சாமர்த்தியத்தை பாராட்டினார்
அன்றே தாதா குணசேகரன் தன் தம்பி தனசேகரனை அழைத்து, அவனிடம் இறந்து போன தனசேகரனை பற்றி கூறி, தம்பியை அந்த வீட்டின் உரிமையாளர் தனசேகரனாக மாற்றி, 200 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த வீட்டை, தனசேகரன் தனக்கு விற்பனை செய்துவிட்டதாக, பதிவு செய்துக் கொண்டார். அன்றே அந்த வீட்டிற்கு வந்து ஞானவேலுவிடம் தான் இந்த வீட்டை விலைக்கு வாங்கி விட்டதாகவும், நீ இருக்கும் வீட்டை ஒரு வாரத்தில் காலி செய்து விடு என்று கூறினார்.
ஒன்றும் புரியாமல் ஞானவேல் தன் மனைவியிடம், ஓனர் போன் நெம்பர் எழுதி வைத்துள்ள நோட்டை கொண்டு வர சொல்ல, “இரண்டு நாளைக்கு முன்னாடி நீங்க வாங்கி வர சொன்னதா போன் நெம்பர் எழுதின நோட்டை தாதா குணசேகரன் மகன் வந்து வாங்கினு போனாரே”என்று அவன் மனைவி கூற அதிர்ச்சி அடைந்த ஞானவேலுக்கு ஒன்று மட்டும் புரிந்தது.
ஓனர் தனசேகரன் போன் நம்பர் நம்மிடம் இருப்பதை பற்றி சொல்லியிருக்க கூடாது, இல்ல, நாமே நெம்பரை கொடுத்திருந்தால், அந்த நெம்பர் எழுதி வைத்த நோட்டு நம்மிடம் இருந்திருக்கும். அதை கொண்டு ஓனருக்கு போன் செய்திருந்தால், உண்மை என்னவென்று தெரிந்திருக்கும். ம்.. நான் கொடுத்து வச்சது அவ்வளவு தான்..என்றார் ஞானவேல்.
குறிப்பு: இது ஒரு கற்பனை கதை.
எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings