எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“அம்மா.. நான், உங்க மருமக, பேரன் கமல் மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்களும் வர்றீங்களா?” என்றேன்.
“என்னால உங்களுக்கு ஈடா நடந்து வர முடியாதுப்பா.. வயசாயிடுச்சு, கால் வலி ,முட்டி வலி வேற படுத்தி எடுக்குது. நீங்க எல்லாம் பத்திரமா போயிட்டு வாங்க!, நீங்க சந்தோஷப்பட்டா அதுவே எனக்கு பெரிய சந்தோஷம் “என்று கூறினாள் என் அம்மா.
” பாட்டியும் ஷாப்பிங் மாலுக்கு வரணும்’’ என என் மகன் கமல் அடம் பிடித்தான்.
“பாட்டியால அங்க எல்லாம் ஏறி இறங்க முடியாது கமல். நடந்து வந்தா அவங்களுக்கு கால் வேற வலிக்கும். எஸ்கலேட்டர்ல ஏறத் தெரியாது அவங்களுக்கு.. சொன்னா புரிஞ்சிக்கோ. அது இல்லாம, அவுங்க பார்த்து சந்தோஷப்படுறதுக்கு அங்கே பெரிசா ஒண்ணுமில்ல. அவுங்களுக்கு கோயிலுக்கு போறதுதான் பிடிக்கும்’’ என்று என் மனைவி கூறினாள்.
பாட்டியும், ‘‘ஆமாம் டா தங்கம்’’ என்று ஆமோதித்தார்.
“பாட்டி நீ வரலைன்னா நானும் மாலுக்கு போகலை” என்று அடம்பிடித்தான் பேரன் கமல்.
பாட்டி விருப்பமில்லை என்று சொன்னாலும், பேரன் கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தான் . ஒரே செல்ல பேரன் தொடர்ந்து அடம் பிடித்ததால், அவன் விருப்பத்துக்கு ஏற்ப பாட்டியும் ஷாப்பிங் மால் வர ஒப்புக் கொண்டார்.
பேரன் துள்ளிக் குதித்தான். பாட்டியும் தயாரானாள். நானும் என் மனைவியும் புறப்பட ரெடியாகும்போது, பேரன் பாட்டியை அழைத்துக் கொண்டு கார் போர்கோடிவில் கலர் சாக்பீஸால் ஒரு அடி அகலத்துக்கு இரண்டு கோடுகள் போட்டான்.
“பாட்டி… இங்க பாருங்க. இது ஒரு சின்ன விளையாட்டு. இந்த இரண்டு கோடுகளுக்கும் நடுவுல உங்க வலது காலை வைத்து, உடனே இடது காலை லேசா தூக்கி வைச்சா போதும்” இப்ப நான் சொன்ன மாதிரி செய்யுங்க பார்க்கலாம்” என்றான் பாட்டியின் பேரன்.
“இப்ப இது எதுக்கு கமல்? நாம வெளியே கிளம்பலாம்’, என்றாள் என் அம்மா
“இது ஒரு விளையாட்டு பாட்டி. நான் செய்யறேன், நல்லா பாருங்க, அதே மாதிரி நீங்களும் செய்யணும்” என்று பாட்டியின் கையை அழுத்தி பிடித்து கொண்டு செய்து காட்டினான் கமல். என் அம்மா உற்று கவனித்தாள் தன் பேரன் செய்வதை.
பாட்டியும் பேரனும் சில முறைகள் அந்த விளையாட்டை விளையாடிப் பார்த்தனர். பின்னர் ஷாப்பிங் மாலுக்கு காரில் கிளம்பினோம். காரின் பின் சீட்டில் பாட்டியும் பேரனும் சந்தோஷமாக அமர்ந்துகொண்டு, ஏதேதோ பேசிக் கொண்டே வந்தனர்.
ஷாப்பிங் மால் வந்தடைந்தோம். காரின் கதவைத் திறந்து பாட்டியின் ஒரு கையை பிடித்து மெதுவாக கீழே இறக்கினான் பேரன். காரை பார்க்கிங் செய்து விட்டு வந்தேன். அங்கே நகரும் படிக்கட்டுகள் நகர்ந்து கொண்டிருந்தன.
‘இதில் எப்படி பாட்டி ஏறுவார்’ என்று நானும் என் மனைவியும் யோசித்துக் கொண்டிருக்கும் போதே பேரன் தன் பாட்டியின் ஒரு கையை அழுத்தி பிடித்து கொண்டு நகரும் படிக்கட்டு முன்னால் செல்லமாக இழுத்து வந்து நிற்க வைத்தான்.
“பாட்டி.. இதுல பயப்பட எதுவுமில்லை. நம்ம வீட்டில ஒரு விளையாட்டு விளைடினோம் இல்ல, அது போல இப்ப நீங்க ஒரு விளையாட்டு விளையாடுங்க’’ என்றான் கமல்.
பாட்டி கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு, வலது காலை நகரும் படிக்கட்டில் வைத்து இடது காலை மேலே தூக்கி அந்த படிக்கட்டில் வைத்து கொண்டு இரண்டு காலால் நின்றார். எஸ்கலேட்டரில் அம்மா பூப்போல பேரனுடன் நகர்வதை நானும் என் மனைவியும் பார்த்து வியந்தோம்..
பாட்டி உற்சாகமாகிவிட்டார். அடுத்த அடுத்த எஸ்கலேட்டர்களில் மிகவும் மகிழ்ச்சியாக பயமின்றி ஏறினார் என் அம்மா. அதைப் பழகிக்கொள்ளவே பாட்டியும் பேரனும் கீழே இறங்கி, மறுபடியும் ஏறினார்கள். என் அம்மாவிற்கு சற்று குளிர்வது போல் இருந்தது. இதனை கவனித்த பேரன் தன் பையில் வைத்திருந்த சால்வையை பாட்டிக்குக் கொடுத்தன்.
“இதை எப்போ கொண்டு வந்தே?’’ என்று என் அம்மா கேட்டதற்கு,
‘‘ஆல் டீடெய்ல்ஸ் ஐ நோ அபோட் யூ பாட்டி’’ என்றான் குறும்பாக, சிரித்த படியே.
மாலில் ஒரு ஓட்டலுக்கு சென்றோம். ‘‘அம்மா, உங்களுக்கு என்ன ஆர்டர் பண்ணட்டும்?’’ என்றேன்.
உடனே கமல் மெனு கார்டைப் பிடுங்கி, ‘‘ஏன்? பாட்டிக்கு படிக்கத் தெரியாதா?, அவுங்க கிட்ட மெனு கார்டைக் கொடுத்தா அவங்களுக்கு பிடிச்சதை அவுங்க ஆர்டர் பண்ணுவாங்க’’ என்று மெனு கார்டை தன் பாட்டியிடம் தந்தான்.
பாட்டிக்கு பெருமை பிடிபடவில்லை தன் பேரனின் செயலைப் பார்த்து.மெனுவைப் படித்து பார்த்து என்னிடம் கூற, “எனக்கும் அதையே ஆர்டர் பண்ணுப்பா”, என்றான் என் மகன்.
ஆர்டர் கொடுத்த உணவுகள் வர, பேரன் பாட்டிக்கு ஊட்ட, பாட்டி பேரனுக்கு ஊட்டி விட பேரனும் பாட்டியும் ஆர்வமாக சாப்பிட்டார்கள். பின் மாலில் வீடியோ கேம் விளையாட்டுகளை பேரன் விளையாட, அவன் பக்கத்தில் நின்று கொண்டு அதை அவன் பாட்டி பார்த்து மிகவும் சந்தோஷம் அடைந்தார்.
‘’அப்பா.. அதோ பாருங்க… அங்கே ஒரு பாட்டியை அவரோட மகன் எவ்வளவு பத்திரமா கையை பிடிச்சினு அழைச்சினு போறார்னு. பாட்டியை வெளிய கூட்டிட்டு போகும்போது பாட்டியை கவனிக்க நீங்களும் அக்கறை எடுங்க. அதை ஏன் செய்றதில்லை? எல்லோருக்கும் ஷாப்பிங் மால் பாக்க ஆசையாதான் இருக்கும். நீங்களாவே வயசானவங்க கோயிலுக்குதான் போவாங்க, அதான் பிடிக்கும், மாலுக்கு வந்தா ஜாலியா இருக்க மாட்டாங்கன்னு நினைச்சிக்காதீங்க. அவுங்க வரலண்ணாலும், மனசுக்குள்ளே ஆசை இருக்கும். நீங்க கட்டாயப்படுத்தி கூப்பிட்டா வருவாங்க, இப்ப பாருங்க பாட்டி முகத்தில எவ்வளவு சந்தோஷம், அவங்க கால் வலி எல்லாம் காணாம போச்சு”, என்றான்.
என் மகனிடம் நான் புதிதாகக் கற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் நெகிழ்ந்தேன். தன் தந்தைக்கே உபதேசம் செய்த சுவாமி மலை முருகனாக என் கண்களுக்கு தெரிந்தான் என் மகன்.
எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings