எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
திருவல்லிக்கேணியில் அந்த தெருவில் வலது பக்கத்தில் கடைசி வீடுதான் கோபாலனுடையது. போர்டிகோவில் ஒரு பெரிய ஊஞ்சலையும், ஒரு பைக் விடும் அளவிற்கு இடம் விட்டு பின்னர், மூன்று படிகள் ஏறி வீட்டிற்குள் செல்ல நுழைவாசல் வைத்து கட்டியிருந்தார் கோபாலன்.
மாலை நேரத்தில் கோபாலனும் அவரது மனைவியும் ஊஞ்சலில் அமர்ந்து, மெதுவாக ஆடிக் கொண்டே, தெருவில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தபடியே இருப்பார்கள். எதிரில் அவருடைய நண்பர் கிருஷ்ணமூர்த்தியின் வீடு. இருவரும் ஒரே அலுவலகத்தில் பணி புரிந்து முதலில் கோபாலனும் பின்னர் இரண்டு மாதம் கழித்து கிருஷ்ணமூர்த்தி பணி ஓய்வு பெற்றார்.
ஓய்வு பெற்ற நாளிலிருந்து மாலை நேரத்தில் 6.00 மணி வாக்கில் கிருஷ்ணமூர்த்தி கோபாலன் வீட்டிற்கு வந்து விடுவார். இருவரும் ஊஞ்சலில் அமர்ந்து மெதுவாக ஆடிக் கொண்டே, தங்களின் அலுவலகம் , அரசியல் , மற்றும் தங்களின் குடும்பத்தை பற்றிய பழைய நினைவுகளை பேசியவாறே காபி சாப்பிடுவார்கள்.
கோபாலனுக்கு ஒரு மகள், அவள் ஒரு டாக்டர். அவளை பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடம் இருக்கும் போது தஞ்சாவூரை சேர்ந்த தன் தூரத்து உறவைச் சேர்ந்த டாக்டர் பையனுக்கு திருமணம் செய்து கொடுத்தார். வீட்டில் அவரும் அவர் மனைவி மட்டுமே.
ஆனால் அவர் நண்பர் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி, மகன் கார்த்திக்கு 12 வயது, கோபிக்கு 10 வயதாக இருக்கும் போதே தீடிரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இறந்து விட்டாள்.
அவருக்கு இரண்டு மகன்களில் பெரிய மகன் கார்த்திக், டாக்டருக்கு படித்து திருமணம் ஆகி குடும்பத்துடன் லண்டனில் உள்ளார். இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு முறை தான் இந்தியா வருவார்.
இரண்டாவது மகன் கோபி IT Engineer, திருமணம் ஆகி சென்னையில் தந்தையுடன் இருந்து வருகிறார். கிருஷ்ணமூர்த்தி பணியில் இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. கிருஷ்ணமூர்த்தி பணி ஓய்வு பெற்று வந்த பணம் இருபது லட்சத்தை அவர் சிறிய மருமகள் ரம்யா, தான் கட்டி வரும் வீட்டிற்கு தேவை என்று மாமனாரிடம் நேரடியாக கேட்க, எதற்கும் தன் நண்பர் கோபாலனிடம் ஒருமுறை கேட்டு விட்டு தருவதாக கிருஷ்ணமூர்த்தி கூற, அப்போது ஆரம்பித்தது மாமனார் மருமகள் சண்டை சிறிய அளவில்.
அவள் கணவன் கோபி வந்தவுடன் அவன் மனைவி ரம்யா, தான் மாமாவிடம் நாம் கட்டி கொண்டிருக்கும் வீட்டிற்கு பணம் கேட்டதையும் தர இயலாது, என அவர் கூறியதாகவும் மாற்றி கூற, இதை கேட்ட கோபி, “நீ ஏன் அவரிடம் போய் கேட்டாய் ..? என்னிடம் சொல்லி யிருக்கலாமே , நான் அவரிடம் பக்குவமாக கேட்டிருப்பேனே..! பாவம் அவர் பணி ஓய்வு பெற்று இரண்டு மாதங்கள் தானே ஆகிறது. அவர் இதுவரை நம்மிடம் ஏதாவது கேட்டிருப்பாரா..? அவர் உண்டு, அவர் வேலை உண்டு என்று தானே சென்று கொண்டிருந்தார். போன வாரம் நான் தான் அவரிடம் சென்று அப்பா இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு எங்கள் இருவரையும் அம்மா இல்லை என்ற கஷ்டம் தெரியாமல் வளர்த்து, படிக்க வைத்து, நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்துள்ளீர்கள். இனிமேல் நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வரும் பணத்தை உங்கள் பெயரில் டிபாசிட் செய்து கொண்டு, வரும் வட்டி தொகையை உங்கள் விருப்பம் போல் செலவு செய்து கொள்ளுங்கள் எங்களுக்கு எதுவும் வேண்டாம்” என்று கூறினேன் என்று ரம்யாவிடம் கோபி கூற,
“இதுவரையிலும் நாம் தானே பார்த்துக் கொண்டோம், நம்ம வீட்டில தானே சாப்பிட்டார், நாம ஏதாவது அவரை கேட்டோமா..? ஏன், இனிமேலும் நாம் தானே அவரைப் பார்த்து கொள்ள வேண்டும், அவருக்கு ஏதாவது தேவை என்றால் நாம் தான் செய்ய போகிறோம் , வாங்கி கொடுக்க போகிறோம்” என்று ரம்யா கூற,
“ரம்யா… அவரைப் பற்றி உனக்கு தெரியாது, அவர் யாரிடமும் எந்த உதவியையும் எதிர்பார்க்க மாட்டார். அவர் பணி ஓய்வு பெறும் வரை அவரின் சம்பளத்தில் 90% என்னிடம் கொடுத்து வந்தார். 10% மட்டுமே அவர் வைத்துக் கொண்டு அவருக்கு தேவையானவற்றை வாங்கி கொண்டார். தவிர அந்த 10%ல் அவர் செலவு போக, மீதமுள்ள பணத்தில் மாதம் தோறும் 5000/- வீதம் என் பெயரில் ஒரு Recurring deposit செய்து வருகிறார். வருடத்திற்கு ஒரு முறை அதை எடுத்து என்னிடம் கொடுத்து விடுவார். நீயே சொல்லு, இன்று வரை உன்னிடம் அவர் ஏதாவது கேட்டிருப்பாரா?, இல்லை நீயோ, நானோ தான் அவருக்கு என்ன தேவை என்று கேட்டு, தேவையான வற்றை வாங்கி கொடுத்திருக்கிறோமா? அப்படியிருக்க.. நீ பேசுவது சரியில்லை ரம்யா” என்று கூறினார் கோபி.
“இத்தனை நாள் அவருக்கு மாத சம்பளம் வந்தது, அவருக்கு தேவையானவற்றை அவரே வாங்கி கொண்டார். அவர் நம்ம வீட்டில சாப்பிடுவதற்கு உங்ககிட்ட பணம் கொடுத்து வந்தார் சரி. இனிமேல் அவருக்கு எந்த விதமான வருமானமும் இல்லை. நாம் தானே அவர் தேவைகளுக்கு செலவு செய்ய வேண்டும், சாப்பாடும் போட வேண்டும், ஆஸ்பத்திரி செலவு என்று வந்தால் கூட நாம் தானே செய்ய வேண்டும், அதனால் தான் அப்படி பேசினேன்” என்று ரம்யா கூற,
“உனக்கு ஒரு விஷயம் தெரியாது ? இப்போ நாம் கட்டி வரும் வீட்டின் காலி மனை, அதில் கட்டிவரும் வீடு, எல்லாமே என் அப்பா என்னிடம் தந்த அவருடைய 90% சம்பள பணத்திலிருந்து வந்தது தான். அவர் சொல்லி தான் நான் காலி மனையை வாங்கி வீடு கட்டி வருகிறேன். இது பற்றி இப்போது உன்னிடம் எதுவும் கூற வேண்டாம் எனவும், பின்னர் தேவைப்படும் போது கூறிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார் அப்பா” என்று கோபி கூற
உடனே ரம்யா “என்னை மன்னிச்சிடுங்க, இந்த விஷயம் தெரியாம காலைல உங்க அப்பாவையும் அவர் நண்பர் கோபாலன் சாரையும் சேர்த்து வைச்சு தப்பா பேசி ஒரு சின்ன சண்டை போட்டுட்டேன்” என்று கூறி விட்டு, “நான் போய் மாமா கிட்ட மன்னிப்பு கேட்க போறேன்னு கிளம்பி, நீங்களும் வாங்க” என்று கோபியை அழைத்துக் கொண்டு மாமனார் அறைக்குச் செல்ல, அங்கே கிருஷ்ணமூர்த்தி கண்களை மூடியபடியே, சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறே இயற்கை எய்திருந்தார்.
எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings