எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“ஏங்க நான் ஒன்னு சொல்லவா..? கொஞ்சம் லேட்டாகும், நீங்க கோபித்துக் கொள்ள கூடாது” என்று ரேகா தன் கணவனிடம் கேட்டாள்.
“என்ன காலையில பீடிகை போடறே..? சரி சீக்கிரமா சொல்லு ஆபீஸ்க்கு லேட்டாகுது” என்றான் சரண்.
“என்ன சீக்கிரமாவா..? இது அவசரமா நான் சொல்லி, நீங்க கேட்க வேண்டிய விஷயம் இல்ல. ஆபீஸ் போயிட்டு சாயங்காலம் வாங்க, நிதானமா உட்காருந்து பேச வேண்டிய முக்கியமான விஷயம்” என்று கூறினாள் ரேகா.
“அடேங்கப்பா? அவ்வளவு முக்கியமான விஷயமா? சரி.. சரி..! Evening பேசிக் கொள்ளலாம்” என்று கூறி விட்டு கிளம்பினான் சரண்.
அன்று இரவு 9.00 மணிக்கு தான் வீட்டிற்கு வந்தான் சரண். வந்தவுடன் தலைவலிக்குது எனக்கு சாப்பாடு வேண்டாம், ஒரு காபி மட்டும் போட்டு கொடு என்று கூறினான். காபி குடித்து முடித்தவுடன் good night என்று கூறி விட்டு உறங்க ஆரம்பித்தான்.
ரேகாவிற்கு கோபம் வர, அடக்கி கொண்டு good night என்றாள். இதேபோல் ஒரு வாரம் சென்றது.
சரண் ஆபீஸ்க்கு கிளம்ப ,”ஏங்க இன்னிக்காவது சீக்கிரம் வருவீங்களா..? இல்ல வழக்கம் போல 9.00 மணிக்கு தானா..?” என்று ரேகா கேட்க.
என்ன நீ ” நான் வேணும்னே இரவு 9.00 மணிக்கு வர மாதிரி கேட்கறே” என்று கோபமாக கேட்டான் சரண்.
“ஒரு வாரமா நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு பார்க்கறேன் சொல்ல முடியல, அதான் அப்படி கேட்டேன்” என்று ரேகா கூற,
“ஓ.. அப்படியா ..? சரி , கோபப்படாதே..! நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு தான், உட்கார்ந்து நிதானமா கேட்கிறேன், அப்ப சொல்லு” என்று கூறி விட்டு கிளம்பினார் சரண்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ரேகா காலையில் சீக்கிரமே எழுந்து சரணை எழுப்ப, “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை தானே எதுக்கு இவ்வளவு சீக்கிரம் எழுப்பறே” என்று சரண் கேட்க ,
சற்று யோசித்த ரேகாவின் பார்வை தின காலண்டரில் செல்ல, உடனே ரேகா “யார் சொன்னது இன்று ஞாயிற்றுக்கிழமைனு, அங்கே பாருங்க காலண்டரில் திங்கட்கிழமை காட்டுகிறது” என்றாள்.
தின காலண்டரில் அன்றைய தேதியை பார்க்காமல்! “அட…ஆமாம்.. இன்றைக்கு திங்கட்கிழமை தான் ” என்று அவசர அவசரமாக எழுந்து குளித்து விட்டு வந்தான் சரண்.
ரேகா மனதிற்குள் சிரித்துக் கொண்டே அவனுக்கு காபி கொடுத்தாள்.
“டிபன், சாப்பாடு ரெடியா?” என்று கேட்டுக் கொண்டே காப்பியை குடித்தான் சரண்.
கொஞ்சம் இருங்க வர்றேன், என்று கூறி விட்டு தின காலண்டரை கையில் வைத்துக் கொண்டு “நேற்று என்ன கிழமை, என்ன தேதி?” என்றாள் ரேகா.
“காலண்டரை பார்த்தபடியே, இன்று தேதி 11 திங்கட்கிழமை, அப்ப நேற்று ஞாயிற்றுக்கிழமை, தேதி பத்து” என்றான் சரண்.
“அப்ப இன்னிக்கு?” என்று ரேகா கேட்க,
“என்ன நீ காலைல டீச்சர் மாதிரி மாத்தி, மாத்தி கேள்வி கேட்கறே..? ஆஃபீஸ்க்கு டைம் ஆகுது” என்றான் சரண்.
“என்ன வேலை செய்றீங்க.., ஆபீஸ்ல ..? கிழமையும், தேதியும் தெரியாம..?” என்றாள் ரேகா . “உங்க மொபைல எடுத்து பாருங்க, இன்னிக்கு தேதி 10, ஞாயிற்றுக்கிழமை. தேதி கிழிக்கும் போது தெரியாமல் இரண்டு தேதி ஒன்னா வந்துடுச்சு. நான் திங்கட்கிழமைன்னு சொன்னவுடனே காலண்டரில் கிழமையை பார்த்தீங்களே..! தேதியை பார்த்தீங்களா..? என்று ரேகா கேட்க
சரண் முகத்தில் அசடு வழிய, தன் மொபைலை எடுத்து பார்த்து “ஆமாம்.. ஞாயிற்றுக்கிழமை, தேதி 10, அப்ப எதுக்கு? என்னை சீக்கிரம் எழுப்பி, நான் குளிச்சிட்டு வர வரைக்கும் பேசாம இருந்தே” என்று சரண் கேட்க,
“ஒரு வாரமா உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்லிட்டு இருக்கேன், காலைல லேட்டா எழுந்து அவசர, அவசரமாக குளிச்சிட்டு டிபனை சாப்பிட்ட உடனே ஆபீஸ்க்கு டைம் ஆச்சு, evening வந்து கேட்கிறேன்னு சொல்லிட்டு நீங்க இராத்திரி 9.00 மணிக்கு வந்துட்டு தூங்க போயிடுறீங்க, நான் எப்ப தான் உங்ககிட்ட நிதானமா உட்கார்ந்து பேசறது? அதுக்கு தான் நீங்க எழுந்து குளிச்சிட்டு வர வரைக்கும் பேசாம இருந்தேன், இப்படி உட்காருங்க” என்று கூறினாள் ரேகா
“சரி சொல்லு அப்படி என்ன முக்கியமான விஷயம்?” என்று சரண் கேட்க
“எங்கப்பா ஒரு அபார்ட்மெண்ட்டில நமக்கு ஒரு வீடு பார்த்து வச்சிருக்காராம். நீங்க இரண்டு பேரும் போய் பார்த்துட்டு சொல்லுங்க, உங்களுக்கு பிடிச்சிருந்தா வாங்கி தர்றேன்னு சொன்னாரு. நேற்று போன் பண்ணி ஏம்மா உனக்கு அந்த வீடு பிடிக்கலை யான்னு? கேட்டாரு. இல்லப்பா நாங்க இரண்டு பேரும் இந்த ஞாயிற்றுக்கிழமை போய் பார்த்துட்டு வந்து சொல்றோம்னு சொன்னேன். அதுக்கு தான் உங்கள காலைல எழுப்பி குளிச்சிட்டு வர வரைக்கும் பேசாம இருந்தேன். டிபன் சாப்பிட்டு விட்டு, போய் அந்த வீட்டை பார்த்துட்டு, அப்படியே எங்க வீட்டுக்கு போய் அப்பாகிட்ட சொல்லிட்டு வரலாம்” என்று மூச்சு வாங்க பேசி முடித்தாள் ரேகா.
“அப்படியா..? இத பத்தி நீ எனக்கு போன்ல கூட சொல்லியிருக்கலாமே..! ஆறு நாள் லேட்டாயிடுச்சே.. மாமா என்னை தப்பா நினைச்சிக்க மாட்டாரு..? நீ ஏதோ செலவு வைக்க போறியோன்னு நினைச்சு தான் நான் சீக்கிரமா சொல்லுன்னு அன்னைக்கு சொன்னேன். சரி சரி கிளம்பு, டிபனா முக்கியம்? முதல்ல அந்த வீட்டை போய் பார்த்துட்டு, அப்புறமா ஓட்டலில் டிபன் சாப்பிட்டுக் கொள்ளலாம்” என்று கிளம்பினான் சரண்.
ரேகா சிரித்துக்கொண்டே “எனக்கு ஒரு பழமொழி தான் இப்ப ஞாபகத்திற்கு வருகிறது” என்றாள்.
“என்ன பழமொழி?” என்று சரண் கேட்க,
‘அதுவா குதிரை கொள்ளுன்னா வாயை திறக்குமாம், கடிவாளம் என்றால் வாயை மூடிக் கொள்ளும்’ என்ற பழமொழி தான் என்று மனதிற்குள் கூறிக் கொண்டு, “சரியா சொல்ல தெரியல” என்று மழுப்பினாள். “போய் வந்து ஞாபகப்படுத்தி சொல்றேன், இப்ப கிளம்பலாம் வாங்க” என்று கூறினாள்.
எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings