எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அடையாறு டிப்போ எதிரில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார் 40 வயதுள்ள கோபி. சுமார் ஒரு மணி நேரமாக, பூந்தமல்லி செல்லும் பேருந்தில் ஏறி, பூந்தமல்லியில் இறங்கி, அங்கிருந்து திருபெரும்புதூர் தொழிற்பேட்டையில் பணிக்கு செல்ல வேண்டி.
வழக்கமாக காலை 7.00 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிடுவார் 9.00 மணி ஷிப்டில் பணி புரிய. அன்று அவருக்கு High BP ன் காரணமாக, சற்று மயக்கமாக இருந்ததால் ஒரு மணி நேரம் தாமதமாக கிளம்ப, கோபியிடம் அவர் மனைவி மஞ்சுளா, “இன்று ஒரு நாள் லீவு போடுங்களேன், உடம்பு வேற சரியில்லை, டைம் வேற அதிகமாயிடுச்சி” என்றாள்.
வாரத்தில் முதல் நாளான திங்கட்கிழமை லீவு போடுவது அவ்வளவு நல்லதல்ல, மறுநாள் வேலைக்கு போனவுடனே சூப்பர்வைசர் சத்தம் போடுவாறுன்னு காரணம் கூறி விட்டு கிளம்பினார் கோபி.
தனது பேக்டரி சூபர்வைசருக்கு போன் செய்து தான் வீட்டிலிருந்து ஒரு மணி நேரம் தாமதமாக கிளம்பியதாகவும், அடையாறு பேருந்து நிலையத்தில் ஒரு மணி நேரமாக பேருந்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறினார்.
எனவே பதிவேட்டில் தனக்கு அரை நாள் விடுமுறை போட்டு கொள்ளும்படி கூறினார். ஆனால் “சூப்பர்வைசரோ நீங்கள் வரும் போது வாங்க, இங்க வந்தவுடன் பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
ஒரு வழியாக காஞ்சிபுரம் செல்லும் பேருந்து வர, அதில் ஏறி ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள கம்பெனிக்கு வருவதற்கு மணி 11.00 ஆகிவிட்டது.
சூப்பர்வைசர் கோபியை பார்த்து, கோபி 2 மணி நேரம் தான் தாமதமா வந்திருக்கீங்க, இதுக்கு போய் அரை நாள் லீவு தேவையா? என்று கூறி விட்டு போய் வேலையை பாருங்க..! சாயங்காலம் இரண்டு மணி நேரம் சேர்த்து வேலை பாருங்க உற்பத்தி தடைபடக் கூடாது” என்று கூறினார்.
“என்ன கோபி லேட்டு, எனக்கு தெரிஞ்சு இந்த பத்து வருஷத்தில நீங்க லேட்டா வந்ததேயில்லையே..!” என்று கோபியுடன் வேலை பார்க்கும் முனுசாமி கேட்க
“நான் வந்ததே லேட்டு, நாம பேசறத சூப்பர்வைசர் பார்த்தா சத்தம் போடுவாரு, லஞ்ச் நேரத்தில் பேசலாம்” என்று கூறி விட்டு தன் மிஷினை ஆன் செய்தார் கோபி.
லஞ்ச் நேரத்தில் கோபி முனிசாமியை பார்த்து “முனிசாமி அண்ணா, தப்பா எடுத்துக்காதீங்க நான் காலைல உங்ககிட்ட சொன்னதை பத்தி, என கூறிவிட்டு காலைல எழுந்ததிலிருந்தே எனக்கு High BP, என் மனைவி இன்னைக்கு லீவு போட சொன்னா.., திங்கட்கிழமை லீவு போட்டா மறுநாள் வேலைக்கு வரும் போது சூப்பர்வைசர் சத்தம் போடுவாறுன்னு சொல்லிட்டு கிளம்பி வந்தேன். பஸ்ஸே வரல, சூப்பர்வைசர்க்கு போன் பண்ணி இரண்டு மணி நேரமாக பஸ் வரல, பதிவேட்டில் எனக்கு அரைநாள் லீவு போடுங்கன்னு சொன்னேன், வேணாம் கோபி, நீங்க வரும்போது வாங்க, பார்த்துக்கலாம்னு சொல்லிட்டாரு சூப்பர்வைசர், அதான் லேட்டு” என்று காரணம் கூறினார் கோபி.
வழக்கமாக ஆறு மணிக்கு ஷிப்ட் முடிந்து வீட்டுக்கு கிளம்பும் கோபி அன்று காலை இரண்டு மணி நேரம் தாமதமாக வந்ததால், மாலை அந்த இரண்டு மணி நேரம் வேலை பார்க்க சொன்னார் சூப்பர் வைசர். கோபியால் சூப்பர்வைசரிடம் மறுப்பு கூற முடியாமல் தன் வேலையை தொடர்ந்தார்.
எட்டு மணி ஆகிவிட்டது. வீட்டிற்கு செல்ல தயாரானார். கம்பெனியிலிருந்து வெளியே வர 8.30 ஆகி விட்டது. பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றார். பேருந்து நிறுத்தம் காலியாக இருந்தது. 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் பெரிய மீசையும், நல்ல வெள்ளை நிறத்தில் பைஜாமா, ஜிப்பா, கழுத்தில் புலி பல் டாலர் வைத்த பெரிய செயினை ஜிப்பாவிற்கு வெளியே தொங்க விட்ட படியே கோபியின் அருகில் வந்து நின்று
“நீங்க எங்க போகணும்” என்று கேட்டார்.
“அடையாறு போக வேண்டும்” என்று கோபி கூற,
“அடையாறுக்கா?” இங்கே அந்த பஸ் வராதே..! என்றார் அந்த பெரியவர்.
“பூந்தமல்லி போய் அங்கிருந்து அடையாறு போவேன்” என்று கோபி கூற,
“நான் கோவளம் போகணும்” என்று பெரியவர் அவராகவே கூறினார்.
9.00 மணிக்கு பூந்தமல்லி செல்லும் பேருந்து வர, முதலில் பெரியவரை ஏற்றி விட்டு பின்னர் கோபி பேருந்தில் ஏறினார். பேருந்தில் கோபியின் பக்கத்தில் வந்து அமர்ந்தார் அந்த பெரியவர். பேருந்தில் நான்கு பயணிகள் மட்டுமே இருந்தனர். கோபி தனக்கு ஒரு டிக்கெட் வாங்கினார். அந்த பெரியவர் வாங்கவில்லை. பேருந்து நடத்துநரும் அவரிடம் எதுவும் கேட்கவில்லை.
கோபி பெரியவரைப் பார்த்து “நீங்க டிக்கெட் வாங்கலையா” என்று கேட்க,
“தான் ஏற்கனவே டிக்கெட் வாங்கி விட்டதாக” கூறினார் பெரியவர்.
கோபி அவரிடம் “நான் தானே உங்களை பேருந்தில் ஏற்றி விட்டேன், எப்ப வாங்கினிங்க?” என்று கேட்க,
“பெரியவர் தம்பி, நான் ஏற்கனவே டிக்கெட் வாங்கிட்டேம்பா” என்று கூற,
நடத்துநர் கோபியை பார்த்து “என்ன?” என்று கேட்டார்.
“ஒன்றுமில்லை” என்று கோபி கூற, பெரியவர் கோபியை பார்த்து சிரித்தார்.
பூந்தமல்லி வந்தவுடன் கோபி இறங்கி, அடையாறு செல்ல வேண்டி, கோவளம் பேருந்தில் ஏற, பெரியவரும் அதே கோவளம் பேருந்தில் ஏறி வந்து கோபியின் பக்கத்தில் சிரித்துக் கொண்டே அமர்ந்தார். அந்த பேருந்தில் பத்து பயணிகள் மட்டுமே அங்கொன்றும், இங்கொன்றுமாக அமர்ந்திருந்தனர்.
நடத்துநர் கோபியிடம் வந்து டிக்கெட் கேட்க, கோபி அடையாறு ஒன்னு என்று கூறி தனக்கு மட்டும் டிக்கெட் கேட்டு வாங்கினார். நடத்துநர் பெரியவரிடம் டிக்கெட் கேட்கவில்லை, பெரியவரும் எதுவும் கேட்கவில்லை.
கோபிக்கு புரியவில்லை. “ஏங்க நீங்க டிக்கெட் வாங்கலையா?’ என்று கேட்க
“நான் ஏற்கனவே வாங்கிட்டேம்பா” என்று பெரியவர் கூற,
நாம் இறங்கும் போது நடத்துநரிடம் பெரியவரைப் பற்றி கூறி விடலாம் என்று எண்ணிக் கொண்டு பேசாமல் வந்தார் கோபி.
“தம்பி உன்னை பத்தி எதுவுமே சொல்லலையே” என்று பெரியவர் கேட்க,
“எனக்கு தூக்கம் வருது” என்று கூறி விட்டு கண்ணை மூடிக் கொண்டு தூங்குவது போல நடித்தார் கோபி.
கிண்டி வந்தவுடன் லேசாக கண்ணை திறந்து பார்த்த போது தன் பக்கத்தில் பெரியவர் இல்லை. நேராக எழுந்து சென்று ஓட்டுநர் இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்த நடத்துநரிடம், “என் பக்கத்தில் இருந்த பெரியவர் எங்கே இறங்கினார்?” என்று கேட்க,
“பெரியவரா..? உங்க பக்கத்தில யாரும் இல்லையே..! நீங்க மட்டும் தானே பூந்தமல்லியில ஏறுனீங்க..!?” என்று கூறினார் நடத்துநர்.
உடனே ஓட்டுநர் சிரித்துக் கொண்டே “இன்னைக்கு அந்த ஜமீந்தார் உங்க கண்ணில் பட்டாரா..?” என்றார்.
“என்ன சொல்றீங்க?” என்று கோபி ஓட்டுநரைப் பார்த்து கேட்க,
“தம்பி அவர் ஸ்ரீபெரும்புதூரில் உங்க கூட பேருந்தில் ஏறினாரா..? வெள்ளை பைஜாமா, ஜிப்பா, புலி பல் டாலர் வைத்த பெரிய செயினை போட்டிருந்தாரா..? அப்புறம் கோவளம் போகணும்ன்னு சொல்லிட்டு உங்க கூடவே வந்திருப்பாரே… டிக்கெட் வாங்கியிருக்க மாட்டாரே.., நீங்க கேட்டதற்கு ஏற்கெனவே டிக்கெட் வாங்கிட்டேன்னு சொல்லியிருப்பாரே..” என்று சிரித்துக்கொண்டே கூற
ஏங்க “என்னங்க சொல்றீங்க? என் கூட இருந்து பார்த்த மாதிரி ” என்று கோபி கேட்க
“அது ஒண்ணுமில்லப்பா, அவரு ஏற்கனவே டிக்கெட் வாங்கிட்டாருப்பா, அதாவது ஸ்ரீபெரும்புதூர் பக்கத்தில இருக்கிற ஏதோ ஊர் சொன்னாங்க, பேரு கவனம் வரல, அந்த ஊர் ஜமீந்தார் அவரு. அவரு இறந்து போய் பத்து வருஷத்துக்கு மேல ஆகுது. அதை தான் ஏற்கனவே டிக்கெட் வாங்கிட்டேன் என்ற அர்த்தத்தில் சொல்லியிருப்பாரு, உங்களுக்கு புரியல. ஒரு காலத்தில அவருக்கு சொந்தமா நிறைய பஸ் இருந்ததாம். சொந்தகாரங்க அவரை ஏமாற்றி எல்லாத்தையும் எழுதி வாங்கிட்டாங்களாம். அதனால் மனசு உடைஞ்சு போய் கிணத்தில விழுந்து தற்கொலை பண்ணிகிட்டாராம். ஸ்ரீ பெரும்புதூர் பக்கமா, இரவு நேரத்தில் வர ஏதாவது ஒரு பேருந்தில் ஏறி நீங்க எங்க போகணும்னு கேட்டுட்டு, அவராகவே தான் கோவளம் போகணும்னு சொல்லுவாராம், இது மாதிரி பல பேர் என்கிட்ட சொல்லியிருக்காங்க. நான் அந்த பக்கமா தான் தினமும் வர்றேன், போறேன். ஆனால் ஒரு தடவை கூட அவர் கண்ணில் தென்பட்டதேயில்லை” என்று கூறினார் ஓட்டுநர்.
ஓட்டுநர் கூறியதை கேட்டதும் கோபிக்கு அன்று காலையில் இருந்த High BP மேலும் அதிகமாகி, பயத்துடன் வியர்த்து கொட்டியது. இனி மேல் எக்காலத்திலும் இரவு நேர பேருந்தில் ஏறுவதில்லை என்ற முடிவுடன் அடையாறில் இறங்கி வேக, வேகமாக வீட்டை நோக்கி நடந்தார் கோபி.
எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings