எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அந்த தேசிய நெடுஞ்சாலையில் நல்ல வேகத்துடன், பழைய படத்தின் இனிமையான பாடல் ஒன்றை , காதில் Bluetooth போட்டுக் கொண்டு, பாடலை கேட்டு ரசித்தபடியே சென்று கொண்டிருந்த அந்த விலை உயர்ந்த காரின் ஓட்டுநர் சிவா, தீடிரென பிரேக் போட, பின் சீட்டில் அமர்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்த இருவரின் நல்ல உறக்கம் அந்த அதிர்ச்சியில் கலைந்தது.
“என்ன சிவா..? என்ன நடந்தது”, என்று காரின் உரிமையாளர் சிதம்பரம் கேட்க,
“அய்யா… தீடிர்னு ஒருத்தரு நம்ம காருக்கு நேரா நடந்து வந்தார் , அதனால கார் அவர் மேலே மோதிடுச்சி..! அவர் அப்படியே எகிறி கீழே விழுந்துட்டார்”, என்று ஓட்டுநர் சிவா கூற
“இது எந்த இடம்?” என்று சிதம்பரம் கேட்க,
கார் லைட் வெளிச்சத்தில் நாகர்கோவில் 50 கீ.மீ. என்ற இருந்த மைல் கல்லை பார்த்து “அங்கே பாருங்கய்யா.. “என்றார் சிவா.
“நாகர்கோவில் 50 கீ.மீ” என்று படித்தார் சிதம்பரம் .
“சரி, இறங்கி பாரு சிவா…!” என்று சிதம்பரம் கூற,
“அய்யா, ரோடு இருட்டா இருக்கு..இறங்கி பார்க்க பயமா இருக்கு…!” என்றார் சிவா.
“என்னப்பா நீ…?” என்று கூறி விட்டு தன் மொபைல் போன் லைட்டை ஆன் செய்து கொண்டு கீழே இறங்கி பார்த்தார் சிதம்பரம்.
“என்ன சிவா? யாரும் இல்லையே…!” என்று சிதம்பரம் கூற
“யாரும் இல்லையா..?”என்று சிவா கேட்க
“சிவா, நீயே வந்து பாரு…!”என்று சிதம்பரம் கூற,
“அய்யா யாரையும் காணோமே…!” என்று சிவா பயத்துடன் கூற ,
“நானும் அதானே சொன்னேன்…!” என்றார் சிதம்பரம்.
“அய்யா, அந்த ஆளை பார்த்தேன்யா.! வெள்ளை வேட்டி கட்டியிருந்தாரு.. கண்ணாடி போட்டிருந்தாரு, கழுத்துல சிவப்பு நிற துண்டு இருந்தது, நம்ம கார் அந்த ஆளை இடிச்சு, அவரு கீழே விழும் போது, அந்த துண்டு பறந்து வந்து நம்ம கார் கண்ணாடியில் விழுந்தது”.
“என்ன சிவா சொல்றே…? யாரையுமே காணோமே…! “என்று கோபமாக சிதம்பரம் கூற, அதற்குள் சிதம்பரத்தின் மகன் கோபி,
“என்னப்பா… காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி என்ன பண்றீங்க..?” என்று கேட்டுக் கொண்டே வந்தான்.
அவனிடம் நடந்த விவரத்தை கூறினார் ஓட்டுநர் சிவா.
சற்று அதிர்ச்சி அடைந்த கோபி, கொஞ்ச தூரம் நடந்து சென்று சுற்றும் முற்றும் பார்த்தான். “யாரையுமே காணோமே..!” என்றான். அந்த ரோடில் இவர்களின் கார் மட்டுமே நின்று கொண்டிருந்தது. முன்னும் பின்னும் எந்த வண்டிகளும் வரவில்லை.
ஆமாம், நாம் நெடுஞ்சாலையில் தானே வந்து கொண்டிருந்தோம்….? இது கிராமத்து ரோடு போல இருக்கே…!?” என்று கோபி கேட்க,
“இல்ல தம்பி..இது தேசிய நெடுஞ்சாலை சாலைதான், இங்கே பாருங்க… நாகர்கோவில் 50 கீ.மீ. என்று இருக்கு என்று கூறி, மைல் கல்லை காட்ட திரும்பிய சிவா, தான் பார்த்த மைல் கல்லை அங்கு இல்லாததை கண்டு மேலும் பயந்து, “அய்யா அந்த மைல் கல்லையும் காணோமே..!” என்று கூற, சிதம்பரத்திற்கும் சற்று பயம் வந்தது.
“சரி, வண்டியை எடு போகலாம்” என்றார் சிதம்பரம்.
அப்போது அங்கு ஒரு பெரியவர் கையில் ஒரு லாந்தர் விளக்கைப் பிடித்தபடியே வந்தார். “யாரு நீங்களெல்லாம்..? இந்த நேரத்தில் இங்கு என்ன பண்றீங்க..? ” என்று அந்த பெரியவர் கேட்க
“அய்யா நாங்க மதுரை செல்ல வேண்டும், வழி தவறி இங்கே வந்து விட்டோம்”, என்று சிவா கூற,
“என்ன வழி தவறியா..?” என்று கேட்டு விட்டு சிரித்துக்கொண்டே, “வழியிலே ஏதாவது விபத்து நடந்ததா..? காரை யார் மேலேயாவது இடிச்சிட்டிங்களா…?” என்று லாந்தர் விளக்கை சிவாவின் முகத்திற்கு நேராக வைத்துக் கொண்டு நேரில் பார்த்ததை போல கேட்டார் அந்த பெரியவர்.
ஓட்டுநர் சிவா, அந்த லாந்தர் விளக்கு வெளிச்சத்தில், சிதம்பரத்தை பார்த்து “அய்யா… இவருதான்… !” என்று பயத்துடன் ஏதோ சொல்ல வர
“சொல்லுங்க..” என்றார் அந்த பெரியவர்.
சிவா பயத்துடன், “ஆமாம் பெரியவரே ஒருத்தரை என் கார்ல இடிச்சிட்டேன்” என்று கூறினார்.
“அப்படி உண்மையை சொல்லுங்க, அப்ப தான் உங்க ஊரை போய் சேர முடியும்” என்று கூறி விட்டு, “இந்த நேரத்தில் இங்கே நிற்காதீங்க….! அதோ அங்கே பாருங்க, ஒரு வீட்டில விளக்கு எரியுது பாருங்க.. அங்கே போய் தங்கியிருந்து, காலைல வெளிச்சம் வந்ததும் கிளம்பி போங்க, உங்க கார் அங்கு போகாது, நடந்தே போங்க , அதான், உங்களுக்கு நல்லது” என கூறியபடியே சென்றார். அவர் செல்வதையே பார்த்து கொண்டிருந்த போது தீடிரென்று அவர் மறைந்து விட்டார்.
“இப்ப மணி என்ன?” என்று சிதம்பரம் கேட்க,
“1.00 மணி ஆகுது” என்றான் கோபி.
மூவருக்கும் பயம் இன்னும் அதிகமானது.
“அய்யா அந்த பெரியவர்” என்று சிவா சொல்ல வர
“பேசாம வா… சிவா, எனக்கு பயத்தில் ஜூரம் வரும் போல் இருக்கு”, என்று கூறிக் கொண்டே தன் மகனின் கையை அழுத்தி பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் மொபைல் லைட்டை முன்னே காட்டியபடியே அந்த வீட்டை நோக்கி சிதம்பரம் முன்னே செல்ல, சிவா அவர்களை பின் தொடர்ந்து சென்றார் .
நடக்க, நடக்க வீடு வந்தபாடில்லை. சற்று நின்று தன் வாட்சை பார்த்தான் கோபி, மணி 3.00. மீண்டும் நடக்க ஆரம்பித்தனர். நடந்து கொண்டே இருந்தனர்.
சிதம்பரம் தன் மகனை பார்த்து “கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு போகலாம், என்னால் நடக்க முடியவில்லை” என்று கூறி அந்த மண் தரையில் அமர்ந்து பக்கத்தில் இருந்த பெரிய மரத்தில் சாய்ந்து கொண்டார்.
கோபியும் அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். சிவா நின்றுக் கொண்டே இருக்க, “சிவா நீயும் உட்காருப்பா…” என்று சிதம்பரம் கூற, சற்று தூரம் சென்று அங்கிருந்த மரத்தில் சாய்ந்து அமர்ந்தார் சிவா. அப்படியே மூவரும் தங்களை மறந்து தூங்கி விட்டனர்.
.பறவைகளின் சப்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த சிவா, “அய்யா, அய்யா எழுந்திருங்கள் பொழுது விடிந்து விட்டது” என்று அவரை தட்டி எழுப்ப, அவர் தன் மகனை எழுப்ப, மூவருக்கும் இரவு நடந்தது அப்போது கவனத்திற்கு வர, மூவரும் காருக்கு அருகிலேயே தாங்கள் இருப்பதையும், அங்கே அதே மைல் கல் நாகர்கோவில் 50 கீ.மீ என்று இருப்ப தையும் பார்த்து சிறிது பயத்துடன், அருகில் இருந்த ஒரு டீ கடையில் டீ சாப்பிட சென்றனர்.
டீ சாப்பிட்டுக்கொண்டே, டீ கடைக்காரரிடம், “நேற்று இரவு இந்த கடை இங்கு இல்லையே..?” என்று சிதம்பரம் கேட்க” ,
“ஆமாங்க அய்யா சாயங்காலம் 5.00 மணிக்கே கடையை மூடிவிட்டு வீட்டுக்கு போயிடுவேன். ராத்திரியில் யாரும் இந்த பக்கம் வர மாட்டாங்க.. வெளியூர்காரங்க தான் தெரியாம வந்து மாட்டிப்பாங்க..” என்றார்.
“என்ன சொல்றீங்க? என்று கோபியும், சிவாவும் சேர்ந்து டீ கடைக்காரரிடம் கேட்க,
“பத்து வருஷத்துக்கு முன்னாடி, ஒரு பெரியவர் ரோடுல நடந்து வரும் போது, ஒரு கார் அவர் மேல மோதி, அவர் அந்த இடத்திலேயே செத்துட்டாரு. காரு நிக்காம போயிடுச்சாம்.. அதிலிருந்து அந்த காரை ஓட்டி வந்து அவரை சாகடிச்சவனை, பழி வாங்க அந்த பெரியவர் ராத்திரி நேரத்தில இந்த ரோடில நடமாறதாகவும், பேசிக்கிறாங்க, ஆனால் அது உண்மை தாங்க. இந்த ரோடில வர்ற கார்ல அவரா போய் விழுந்து, கார்ல வர்றவங்கள பக்கத்தில் இருக்கிற, அவரு ஊருக்கு வரும்படி செய்வாராம். அப்பறமா அவர் ஒரு லாந்தர் விளக்கை கொண்டு வந்து நீங்களெல்லாம் யாருன்னு கேட்டு, அவங்க உண்மை சொன்னால் ஏதும் பண்ண மாட்டாராம், பொய் சொன்ன ஒரே அடி, அந்த டிரைவர் காலியாம். லாந்தர் விளக்கு வெளிச்சத்தில அந்த கார் டிரைவரை பார்த்துட்டு, அவரை இடிச்சது அந்த ஆளு இல்லனு தெரிஞ்சா, அருகிலுள்ள ஒரு வீட்டை காண்பிச்சி அங்கே போய் இருந்துட்டு காலைல கிளம்புங்கன்னு, சொல்லிட்டு போயிடுவாராம். போன மாதம் கூட, ஒரு கார் டிரைவர் பொய் சொல்ல, அந்த பெரியவர் அடிச்ச அடியிலே மயக்கமாகி ஆஸ்பத்திரியில் சேர்த்து, பின்னால பொழைச்சிகிட்டார். அவர் சொல்லி தான் இதெல்லாம் எனக்கு தெரியும்” என்று கூறி, தன் மூச்சை இழுத்து விட்டார், டீ கடைக்காரர்.
ஓட்டுநர் சிவா, சிதம்பரத்தை பார்த்து, “அய்யா நான் பேசட்டுமா” என்று கேட்க,
“என்ன நீ ? ராத்திரியிலிருந்து ஏதோ சொல்ல வர்றே…! சரி இப்ப சொல்லு” என்றார் .
“அய்யா, நம்ம கார்ல வந்து விழுந்ததும் , லாந்தர் விளக்கை கொண்டு வந்த பெரியவரும் ஒரே ஆள்தான், நான் ராத்திரி லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் அந்த பெரியவரை பார்த்ததும் சொல்ல வந்தேன். டீ கடைக்காரர் சொல்வது உண்மை தான் போல” என்றார் சிவா.
“சிவா, நல்லவேளை நீ ராத்திரியே சொல்லியிருந்தே, அந்த பயத்திலேயே நான் செத்திருப்பேன். நீயும் அந்த பெரியவர்கிட்ட உண்மையை சொன்னதால உயிர் பிழைச்சே” போல என்றார் சிதம்பரம்.
“இனிமேல் இந்த ராத்திரி வேளையில பயணம் செய்யவே கூடாதுப்பா” என்றான் கோபி பயத்துடன்.
எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings