எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பயணிகள் கவனத்திற்கு , கோயம்புத்தூர் வரை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் நான்காவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட தயாராக உள்ளது’ .
கால் டாக்சியை விட்டு கீழே இறங்கும் போதே இச்செய்தி காதில் விழ, கால் டாக்சி டிரைவரருக்கு Gpay மூலம் பணம் அனுப்ப வேண்டி, அவசர, அவசரமாக தன் மொபைலை எடுத்து மொபைலை ஆன் செய்து, பின்னர் மொபைல் நெட்வொர்க் ஆன் செய்தான் பிரவின். நெட் கனைக்ட் ஆகவில்லை. “டிரைவர் சார், எவ்வளவு” என்று பிரவின் கேட்க ,
‘தன்னை டிரைவர் சார்’ என்று அழைத்த பிரவினை ஆச்சரியமாகப் பார்த்தார், கால் டாக்சி டிரைவர் குமார்.
“சார் 450/-” என்று கால் டாக்சி டிரைவர் குமார் கூற,
பிரவின் தன் மணிபர்சை திறந்து பார்க்க, அதில் இரண்டு நூறு மட்டுமே இருந்தது. இங்கேயே ஐந்து நிமிடம் ஆகிவிட்டது. தன் இரண்டு சூட்கேஸ் மற்றும் ஒரு தோள் பேக் இவைகளை எடுத்துக் கொண்டு பிளாட்பார்ம் படி ஏறி, இறங்கி, ரயிலில் ரிசர்வேஷன் பெட்டியை தேடிப் பார்த்து அமர வேண்டும் என்று நினைக்கும் போதே நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது பிரவினுக்கு. பிரவின் அகத்தில் ஏற்பட்ட துடிப்பை, அவன் முகம் காட்டி கொடுக்க, இதை கவனித்த கால் டாக்சி டிரைவர் குமார்,
சார், ” டென்ஷன் ஆகாதீங்க, நானும் கூட வருகிறேன்” என்று கூறி காரை பார்க்கிங் செய்து விட்டு, தோள் பையை தன் தோளில் மாட்டிக் கொண்டு, இரண்டு கைகளில் இரண்டு சூட்கேசுகளை நகர்த்தி கொண்டு முன்னே செல்ல, பிரவின் தன் மொபைலில் நெட் கனைக்ட் ஆகிறதா என்று பார்த்துக்கொண்டே அவரின் பின்னே செல்ல, ஒரு வழியாக இருபது படிகள் ஏறி, நடந்து வந்து மீண்டும் இருபது படிகள் இறங்கி, நான்காவது பிளாட்பாரத்தில் வந்து ரிசர்வேஷன் செய்திருந்த ‘எல்’ பெட்டியை கண்டு பிடித்து, பிரவினை அவரது ரிசர்வேஷன் எண் கொண்ட சீட்டில் அமர வைத்தார் கால் டாக்சி டிரைவர் குமார். அதுவரையிலும் பிரவின் மொபைலில் நெட் கனைக்ட் ஆகவேயில்லை . வண்டி கிளம்ப ஆரம்பித்தது.
டிரைவர் சார், தப்பா எடுத்துக்காதீங்க..! இந்த இருநூறு ரூபாயை வைத்துக் கொள்ளுங்கள். நெட் கனைக்ட் ஆனவுடன் மீதமுள்ள 250/- அனுப்பி விடுகிறேன்” என்று பிரவின் கூற,
“பரவாயில்லை சார், நீங்க மொத்தமாவே நெட் கனைக்ட் ஆனவுடன் அனுப்பி வையுங்கள், ஒன்னும் அவசரம் இல்லை. வண்டியில் உங்களின் அவசர செலவுக்கு இந்த இருநூறு தேவைப்படும்” என்று கால் டாக்சி டிரைவர் குமார் கூற,
வண்டி வேகமெடுக்க, பிரவினுக்கு “Wish you Happy Journey sir” என்று கூறியபடியே கையை ஆட்டினார் குமார்.
பிரவினுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது, ‘இப்படியும் நல்ல கால் டாக்சி டிரைவர்களும் இருக்கின்றார்களே’ என்று.
கோவை சென்று சேர்ந்த பின்பு தான் பிரவின் போனுக்கு சிக்னல் கிடைத்து, நெட் வேலை செய்ய ஆரம்பித்தது. அப்போது இரவு மணி 10.30 .
‘குமார் தன் வீட்டிற்கு மதிய உணவு சாப்பிட வர’, அவர் மனைவி குமாரிடம்
ஏங்க ஒரு ஐநூறு ருபாய் தாங்களேன், பையனுக்கு இன்னிக்கு ஸ்கூல் பீஸ் கட்ட கடைசி தேதி, சாயங்காலம் கட்டிடறேன் என்று கூற, அன்று தனக்கு கிடைத்ததே ஒரேயொரு டிரிப் தான் என்றும், காலையில் முதலில் டிரிப்பில் நடந்த வற்றை குமார் தன் மனைவியிடம் கூற,
குமார் மனைவி, குமாரை பார்த்து, “ஏங்க, நீங்க இப்படி ஏமாளியாக இருக்கறீங்க? ஃபோன்ல நெட் கனைக்ட் ஆகலையாம், அதனால கோயம்புத்தூர் போறவர் போற வழியிலே பணம் அனுப்பறேன்னு சொன்னாராம், இவரும் அதை நம்பி வந்துட்டாராம், ஏங்க நம்பற மாதிரியா இருக்கு?” என்று கோபமாக கேட்டாள்.
“இல்லம்மா அவர் என்னை டிரைவர் சார்னு கூப்பிட்டார், இதுவரைக்கும் என்னை யாரும் டிரைவர் சார்னு கூப்பிட்டதேயில்லை. படிச்சவர் மாதிரி இருந்தாரு, மரியாதை தெரிந்தவர், ஏமாற்ற மாட்டார் , கட்டாயம் அனுப்பிடுவார்” என்று குமார் கூற,
ஆமாம் “அவர்கிட்ட உங்க நம்பரை கொடுத்தீங்களா?” என்று குமார் மனைவி கேட்க,
அட ஆமாம், “என் நம்பரை அவரும் கேட்கல, நானும் கொடுக்கலையே..” என்று குமார் கூற,
“பார்த்தீங்களா..? அவர் ரொம்ப நல்லவர், உங்களை டிரைவர் சார்னு கூப்பிட்டாரு, மரியாதை தெரிஞ்சவர், படிச்சவர் மாதிரி இருந்தார்னு சொன்னீங்க, உங்க நெம்பர் தெரியாம, எப்படி பணம் அனுப்புவாரு? உங்க மரியாதை தெரிஞ்ச சார்,” என்று குமார் மனைவி கிண்டலாகவும், கோபமாகவும் கேட்க ,
சற்று குழப்பமடைந்த குமார், “வண்டி கிளம்பின அவசரத்தில நெம்பர் கேட்க மறந்திருப்பார், சரி பரவாயில்லை விடு,” என்று குமார் கூற ,
“ஏங்க பையனுக்கு இன்னிக்கு ஸ்கூல் பீஸ் கட்ட கடைசி நாளுன்னு சொல்றேன், நீங்க என்னவோ பெரிய வள்ளல் மாதிரி, பரவாயில்லை விடுன்னு சொல்றீங்க” என்று கோபமாக கேட்டாள்.
சரி, ” இப்ப என்ன பண்ண சொல்றே?, நாளைக்கு தர்றேன், இன்னிக்கு ஒருநாள் பொறுத்துக்கோ” என்று கோபமாக கூறி விட்டு சாப்பிடாமல் சென்றார் குமார்.
அன்று இரவு 11.00 மணிக்கு குமாருக்கு போன் வர, போனில் பிரவின் பேசினார்.
“நீங்க கால் டாக்சி டிரைவர் குமார் சார் தானே” என்று கேட்டார்?
தூக்க கலக்கத்தில், ஆமாம், “குமார் தான் பேசறேன், என்ன விஷயம் சொல்லுங்க” என்று குமார் கேட்க ,
“இந்த நேரத்தில் டிரைவர் சாருக்கு யார்கிட்டேயிருந்து போன்” என்று கிண்டலாக குமாரின் மனைவி கேட்க,
குமார் சார், “காலைல கோவை எக்ஸ்பிரஸில் என்னை ஏற்றி வீட்டீர்களே, மொபைலில் நெட் கனைக்ட் ஆகாமல் பணம் கூட தரவில்லையே” என்று பிரவின் கூற ,
“பரவாயில்லை சார்” அதுக்கு போய் இந்த நேரத்தில்.. என்று குமார் கூற,
சாரி குமார் சார், “இப்ப தான் என் போனுக்கு நெட் கனைக்ட் ஆனது, ஏதோ மொபைல் கம்பெனி சர்வரில், டவரில் பிராப்ளமாம், அதனால் தான்..
“ஆமாம் சார்..!, என் நெம்பர் உங்களுக்கு எப்படி கிடைத்தது?” என்று குமார் கேட்க,
“உங்க கால் டாக்சி ஆஃபீஸ்ல கேட்டு வாங்கினேன்” என்று பிரவின் கூற
“குமார் சார் காலைல எவ்வளவு சொன்னீங்க?” என்று பிரவின் கேட்க
“ரூ.450/-” என்று குமார் கூற ,
உங்க நல்ல எண்ணத்தை பாராட்டி ஒரு ஜீரோ சேர்த்து 4500/- அனுப்பி வைக்கிறேன். நீங்க வேண்டாம்னு சொன்ன அந்த இரண்டு நூறு ரூபாய் தான், வழியில் என் அகோர பசியை தீர்க்க உதவியது. இதை என் வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டேன். எப்போதும் பர்சில் அவசர, அவசிய செலவுகளுக்கு பணம் வைத்திருக்க வேண்டும் என்பதை உணர்த்திய உங்களுக்கு நன்றி குமார் சார். எல்லோரும் உங்களைப் போல் இருக்க மாட்டார்கள். நன்றி குமார் சார். எனவே என் அன்பளிப்பாக இந்த தொகை அனுப்பி வைக்கிறேன் என்று கூறி 4500/- அனுப்பி வைத்தார் பிரவின்.
“வேண்டாம் சார் நீங்க 450/- மட்டும் அனுப்பி வையுங்கள் போதும்” என்று குமார் கூறினார். ஆனால் பிரவின் அவர் கூறியபடியே ரூ.4500/- அனுப்பி வைத்தார்.
‘இதை பக்கத்தில் இருந்து ஒட்டு கேட்டு கொண்டிருந்த, தன் மனைவியிடம் தன் போனில் ரூ.4500/- வந்திருப்பதை காண்பித்தார் குமார்.
“எல்லாரையும் ஒரே மாதிரியாக நினைத்து பேசியது தவறு தான்” என்று கூறிய குமாரின் மனைவி, குமாரிடம் மன்னிப்பு கேட்டாள்
எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings