எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.00 மணிக்கு மதுரை நோக்கி புறப்பட தயாராக இருந்த அந்த ரயிலில்,, ரகுநாதன் தன் மனைவி மற்றும் தன் எட்டு வயது மகனுடன், தான் முன்பதிவு செய்த சீட் நெம்பரை தேடிப் பார்த்து அமர்ந்தார். வண்டி கிளம்பியது.
செங்கல்பட்டு வந்தவுடன் TTR வந்து டிக்கெட்டுகளை சரி பார்த்தார். பின்னர் வண்டி விழுப்புரம் வந்து நின்றது. சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரும், அவருடன் ஒரு முப்பது வயதில் ஒரு பெண்ணும், அந்த பெட்டியில் ஏறி ரகுநாத் எதிரில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தனர். அந்த பெண் ரகுநாத் மனைவியை பார்த்து சிறிய அளவில் புன்னகைத்தாள்.
அந்த பெண் ரகுநாத் மகனை பார்த்து “உன் பேரு என்ன? எங்கே போறீங்க?” என்று கேட்டாள்.
“என் பெயர் பாஸ்கர், மதுரையில எங்க அத்தைக்கு கல்யாணம், நாங்க அதுக்கு தான் போறோம்” என்றான்.
“என்ன படிக்கிறே?” என்று மறுபடியும் கேட்டாள் அந்த பெண்.
“நான் 3rd standard படிக்கிறேன்” என்றான் பாஸ்கர்.
ரயில் விருத்தாசலத்தில் நின்றது. மணி 10.00. அந்த பெண் தன்னுடன் வந்தவரைப் பார்க்க, அவர் எழுந்து சென்று பச்சை வாழைப்பழம் வாங்கி வந்து, அந்த பெண்ணிடம் தர, அவள் ஒரு பழத்தை பாஸ்கரிடம் தந்தாள்.
இரண்டு பழங்களை பாஸ்கர் அம்மாவிடம் தர, மீனாட்சி வேண்டாம் என்றாள்.
வாழைப் பழம் தானே..! என்று அந்த பெண் கூற, மீனாட்சி பழத்தை வாங்கி கொண்டு, ஒன்றை தன் கணவரிடம் தந்தாள். அந்த பெண் வாழைப்பழத்தை சாப்பிட ஆரம்பிக்க, இவர்கள் மூவரும் தங்களிடமிருந்த வாழைப்பழத்தின் தோலை உரித்து சாப்பிட ஆரம்பித்தனர்.
“அம்மா எனக்கு தூக்கம் வருது” என்று பாஸ்கர் கூற,
பாஸ்கரை தன் மடியில் படுக்க வைத்து, அவனை தட்டி கொடுத்துக் கொண்டே அவளும் தூங்கிவிட்டாள். ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த ரகுநாத் ஜன்னலில் சாய்ந்தபடியே உறங்கினார்.
மணி 12.30 ஆகியது. பின்னர் திருச்சியில் ரயில் நின்றது. ரகுநாத் மற்றும் அவரது மனைவி பாஸ்கர் மூவரும் நன்கு உறங்கிய நிலையில் இருந்தனர்.
இவர்களின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் எழுந்து வந்து சுற்றும், முற்றும் பார்த்து விட்டு தன் கட்டை விரலை உயர்த்தி காட்ட, ரகுநாத் எதிரில் அமர்ந்திருந்த அந்த 60 வயது நபர், ரகுநாத் அணிந்திருந்த மோதிரம், செயின், பிரேஸ்லெட் ஆகியவற்றை கழற்றினார்.
அந்த பெண் ரகுநாத் மனைவி அணிந்திருந்த செயின் வளையல், மோதிரம் ஆகியவைகளை கழற்றிக்கொண்டு, அவர்களின் பைகளை ஆராய்ந்து பார்த்தாள். அதிலிருந்த நகைகள் மற்றும் பணத்தையும் எடுத்துக் கொண்டு அந்த மூவரும் திருச்சி ரயில் நிலையத்தில் இறங்கி கொள்ள ரயில் புறப்பட்டது.
ரயில் திண்டுக்கல்லில் நின்றது. அப்போது ரகுநாத்துக்கு தூக்கம் கலைய, பக்கத்திலிருந்த தன் மனைவியை பார்த்து, அதிர்ச்சியுடன், “மீனாட்சி எழுந்திரு, எழுந்திரு” என்று அவள் தோளைப் பிடித்து உலுக்கினார். அவள் மடியில் இருந்த பாஸ்கர் தூங்கி கொண்டே இருந்தான்.
“என்னங்க.. நீங்க, நல்லா தூங்கும் போது இப்படி கத்தறீங்க..?” என்று கேட்டாள்.
“உன் கழுத்தில் இருந்த செயின், கையிலிருந்த வளையல், மோதிரம் எதையும் காணோமே..!?, என்று கூறி விட்டு, பின் தன் கையையும், விரலையும் பார்த்தார் , கழுத்தை பார்த்தார்., எதுவுமே காணவில்லையே..!? எதிரில் இருந்தவர்களையும் காணோமே..?” என்றார்.
அவர் மனைவி “என்னங்க, எப்படிங்க.?” என்று கேட்டு அழுதாள்.
உடனே ரகுநாத் தன் பைகளை திறந்து பார்த்தார். உள்ளே இருந்த நகைகளையும், பணத்தையும் காணவில்லை.
ரயில் மெதுவாக கிளம்ப ஆரம்பித்தது. உடனே ரயிலில் உள்ள அவசர சங்கிலியை பிடித்து இழுத்தார் ரகுநாத்.
ரயில் நின்றது. சற்று நேரத்தில் TTR அங்கு வந்து ரகுநாத்தை பார்த்து “ஏன்? அவசர சங்கிலியை பயன்படுத்தினீர்கள், என்ன நடந்தது?” என்று கேட்க,
ரகுநாத் காணாமல் போன தங்களின் நகைகளை பற்றியும், பணத்தை பற்றியும் கூறினார். தங்களின் எதிரில் அமர்ந்திருந்த இருவரின் அடையாளங்களை கூறி அவர்களையும் காணவில்லை, அவர்கள் மீது தான் சந்தேகமாக உள்ளது என்று கூறினார்.
உடனே “TTR, ரகுநாத்தை பார்த்து எப்படி அவர்கள் மீது சந்தேகப்படுகிறீர்கள்” என்று கேட்க,
“எங்கள் எதிர் இருக்கையில் இருந்தவர் விருத்தாசலத்தில் ரயில் நின்ற போது இறங்கி சென்று பச்சை வாழைப்பழம் வாங்கி வந்து அவர் மனைவியிடம் தந்தார். அவர் மனைவி என் மகனிடம் ஒன்றும், என் மனைவியிடம் இரண்டும் கொடுத்தார். என் மனைவி வேண்டாம் என்று தான் கூறினாள். வாழைப்பழம் தானே வாங்கி கொள்ளுங்கள் என்று அவள் கூற, என் மனைவியும் வாங்கி கொண்டு என்னிடம் ஒன்று தந்தாள். அதை சாப்பிட்ட பிறகு, நாங்கள் மூவருமே நன்கு தூங்கி விட்டோம். திண்டுக்கல் வந்த பின்பு தான் எனக்கு விழிப்பு வர என் மனைவியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அவள் கழுத்தில் இருந்த செயின், கை வளையல்கள், மோதிரம் எதையும் காணவில்லை. என் மனைவி எழுந்த பின், நான் அணிந்திருந்த செயின், பிரேஸ்லெட், மோதிரம் ஆகியவற்றையும் பார்க்க, அவைகளும் என் பையில் வைத்திருந்த நகைகள், பணம் பத்தாயிரம் எதையுமே காணவில்லை. எங்கள் எதிரில் அமர்ந்திருந்த அவர்களையும் காணோம். அதனால் தான் அவர்கள் மீது சந்தேகப் படுகிறேன்” என்று கூறினார் ரகுநாத்.
“ஏன் சார் வெளி ஆட்கள் சாப்பிடும் பொருட்கள் எது கொடுத்தாலும் வாங்க கூடாது என்று எல்லா இடங்களிலும் விளம்பரங்கள் செய்திருக்கிறோமே பார்க்கவில்லையா..? வாழைப்பழத்தில் மயக்க மருந்தை இன்ஜக்ஷன் ஊசி மூலம் செலுத்தி உங்களுக்கு கொடுத்திருப்பார்கள். வாழைப்பழம் சாப்பிட்டவுடன் நீங்கள் மயக்கமாகி விட்டீர்கள். பிறகு என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியவில்லை. உங்கள் எதிரில் இருந்தவர்கள் திருச்சியில் இறங்கி விட்டார்களே.., அவர்கள் முன் பதிவு கூட செய்யவில்லையே..! எப்படி கண்டு பிடிப்பது?” என்று TTR கேட்க,
“நீங்கள் தான் கூற வேண்டும்” என்று ரகுநாத் கூறினார்
அதற்கு TTR ரகுநாத்தை பார்த்து “எதற்கும் நீங்கள் இங்குள்ள ரயில்வே காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்.
ரகுநாத் மனைவி அழுது கொண்டே, “ஏங்க நாம இப்படியே கல்யாணத்துக்கு போக முடியாது, நாம சென்னைக்கு திரும்பி போயிடலாம்” என்று கூற,
“சென்னைக்கு செல்ல கூட என்கிட்ட பணம் இல்லையே” என்று ரகுநாத் கூறினார்.
ரகுநாத் நிலைமையை புரிந்து கொண்டு, “நீங்கள் சென்னைக்கு செல்ல நான் ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறி விட்டு அவர்களின் மற்ற செலவுகளுக்கு ரூ.1000/- கொடுத்து உதவினார் TTR.
எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings