எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
குணாவின் அன்பு தலைவரும், தமிழ் திரையுலக பிரபல நடிகருமான ராஜ்திலக்குமாரின் படம் மறுநாள் வெளியாக இருந்தது. அதிகாலை 5.00 மணிக்கு ரசிகர்களுக்காக சிறப்பு தனி காட்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மாநில தலைமை ரசிகர் மன்றத்தின் மூலம் சிறப்பு காட்சிக்கு ஒரு டிக்கெட் ரூ.2000/- வீதம் தன் இரண்டு மாத சம்பள பணம் ரூ.20,000/- கொடுத்து பத்து டிக்கெட்டுகள் வாங்கி தன் நண்பர்களுக்கு கொடுத்தான் குணா.
படம் வெளியாவதற்கு முந்தைய தினம் தன் நண்பர்களுடன் காலை 6.00 மணிக்கெல்லாம் படம் வெளியாகும் தியேட்டர்க்கு வந்து பிளக்ஸ் பேனர்கள், ராஜ்திலக்குமாரின் 150 அடி உயர கட் அவுட், ரசிகர் மன்ற கொடிகள், ஸ்டார்கள் என்ற செலவுகளுக்காக இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கி செலவு செய்து, அந்த தியேட்டரை அலங்காரம் செய்து கொண்டிருந்தான் குணா.
அப்போது அங்கு வந்த அந்த தியேட்டர் உரிமையாளரின் தந்தை குணாவைப் பார்த்து “ஏம்பா தம்பி இதெல்லாம் தேவையா? எதுக்கு இவ்வளவு செலவு பண்ணி, இந்த மாதிரி அலங்காரம் செய்யறே?, இதனால் உனக்கு என்ன லாபம்?” 150 அடி உயர கட்அவுட் கட்டும் போது மேலேயிருந்து கிழே தவறி விழுந்து கை, கால் உடைஞ்சா என்ன பண்ணுவே?” என்று கேட்க ,
அய்யா “இது எங்க தலைவரின் ஐம்பதாவது படம், ஐம்பதாயிரம் ரூபாய் வட்டிக்கு கடன் கேட்டிருந்தேன். ஆனால் இருபத்தி ஐந்தாயிரம் தான் கிடைத்தது. ஐம்பதாயிரம் கிடைத்திருந்தால் என் தலைவனின் படம் வெளியாகும் அன்று அன்னதானமும் செய்திருப்பேன். ஐம்பது லிட்டர் பால் ஆர்டர் கொடுத்திருக்கேன், நாளை காலைல எங்கள் தலைவரின் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ய, எங்கள் தலைவனுக்காக என் உயிரையும் தருவேன்” என்று கூற,
“உங்களையெல்லாம் திருத்தவே முடியாதுப்பா” என்று கூறி, தன் தலையில் அடித்து கொண்டே தியேட்டரின் உள்ளே சென்றார்.
குணா தன்னுடன் தியேட்டரின் வெளிப்புறத்தில் மேற்கண்ட அலங்காரங்கள் செய்து கொண்டிருந்த தன் தலைவரின் ரசிகர்களும், தன் நண்பர்களுமான அவர்களுக்கு அன்று காலை காபி ,டிபன், மதியம் சாப்பாடு, மாலை டீ, இரவு பரோட்டா என்று சகலமும் தன் சொந்த செலவில் வாங்கி கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தி வேலை வாங்கி கொண்டிருந்தான். எல்லா வேலைகளும் முடிந்து எல்லோரும் அவரவர்கள் வீட்டுக்கு செல்வதற்கு இரவு 12.00 மணி ஆகிவிட்டது.
மறுநாள் காலை 5.00 மணி சிறப்பு காட்சிக்கு கிளம்புவதற்காக 4.00 மணிக்கு அலாரம் வைத்துக் கொண்டான் குணா.
4.00 மணிக்கு அலாரம் அடிக்க, உடனே எழுந்து குளித்து விட்டு அவசர அவசரமாக தன் நண்பன் ஒருவனின் வீட்டுக்குச் சென்று அவனையும் அழைத்துக் கொண்டு தன் நண்பர்கள் அனைவருக்கும் போன் செய்து தியேட்டருக்கு வந்து விடும்படி கூறி விட்டு , தியேட்டர் வந்தடைந்தான்.
தியேட்டரில் நடிகரின் ரசிகர்கள் யாரும் இல்லாமல், தியேட்டர் காலியாகவே இருந்தது. குணா தன் நண்பனைப் பார்த்து “என்னடா இன்னைக்கு தானே நம்ம தலைவரின் படம் வெளியாகுது..? சிறப்பு காட்சிக்கு டிக்கெட் வேற வாங்கியிருக்கிறோம், தியேட்டர் காலியாக இருக்கே..!” என்று கேட்க, அதற்குள் அவன் நண்பர்கள் பத்து பேர் மட்டும் அங்கு வந்தனர்.
“தியேட்டரின் உரிமையாளருக்கு போன் செய்து கேட்டு பார்க்கலாமே” என்று ஒருவன் கூற,
அதுவும் சரிதான் என்று தியேட்டரின் உரிமையாள ளருக்கு போன் போட்டான் குணா, போன் ஸ்விட்ச் ஆஃப்” என்று பதில் வந்தது. “டேய் போன் ஸ்விட்ச் ஆஃப்டா..! என்னடா செய்யலாம்? ” என்றான் குணா
“மச்சான் லேண்ட் லைனுக்கு பண்ணி பாருடா” என்று ஒருவன் கூற,
குணா அந்த எண்ணுக்கு பல முறை போன் பண்ணினான். யாரும் எடுத்து பேசவில்லை. குணாவிற்கு கோபம் வந்தது, மணி வேறு ஆறு ஆனது.
“தலைமை மன்றத்திற்கு போன் பண்ணுடா” என்று மற்றொருவன் கூற,
குணா தலைமை மன்றத்திற்கும் பல முறை போன் செய்தும், அங்கேயும் போன் ஸ்விட்ச் ஆஃப் என்று தான் பதில் வந்தது. அப்போது மணி ஏழு.
“டேய் யாருக்காவது நம்ம தலைவரின் மேனேஜர் போன் நம்பர் தெரியுமாடா?” என்று குணா கேட்க , அப்போது மணி எட்டு.
அவன் நண்பன் ஒருவன் தன் மொபைலில் தேடிப் பார்த்து சொல்வதாக கூறி, தேடிப் பார்த்து அந்த நெம்பரை குணாவிடம் கூறும் போது மணி ஒன்பது ஆயிற்று.
தியேட்டரை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்தனர். இவர்கள் பத்து பேர் ஒன்றாக நிற்பதை பார்த்து விட்டு “ஏம்பா என்ன வேண்டும் உங்களுக்கு காலையில் இங்கே வந்து நிற்கிறீங்க” என்று கேட்டார் ஒருவர்.
“இன்னிக்கு எங்க தலைவர் படம் வெளியாகுது, காலை 5.00 மணி சிறப்பு காட்சிக்கு டிக்கெட் வாங்கியிருக்கோம். ஆனா தியேட்டர்ல யாரையும் காணோம். அதான்..!” என்று இழுத்தான் குணா.
“நீங்க எல்லாம் படிச்ச பசங்க மாதிரி இருக்கீங்க, விஷயம் எதுவும் தெரியாம இருக்கீங்களே” என்று ஒரு தரையை கூட்டிக்கொண்டே பெண்மணி ஒருவர் சொல்ல,
“என்ன விஷயம்?” என்று குணா கேட்க,
“நேற்று ராத்திரி டி.வி. செய்தியை பார்க்கலையா..? உங்க தலைவரு படம் இன்னைக்கு ரீலிஸ் ஆகாது. அவருக்கு இந்த படத்தை தயாரிச்ச தயாரிப்பாளர் சம்பள பாக்கி தரலையாம், அதனால இன்னிக்கு படம் ரீலிஸ் பண்ண கூடாதுன்னு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்காராம்..!, உங்க தலைவரு அதான் படம் இன்னிக்கு வெளிவரல. அவரு வருமானத்தை, அவர் பொழப்பை அவர் பார்க்கிறாரு..!, நீங்க போய் உங்க பொழைப்ப பாருங்கப்பா..! உங்க அப்பா, அம்மா எப்படி, எப்படியோ? கஷ்டப்பட்டு உங்களை படிக்க வைக்கிறாங்க. நீங்க என்னடான்னா காலை 5.00 மணிக்கு தலைவர் படம் பார்க்கணும்னு இங்க வந்து நிற்கிறீங்க” என்று கூறவும் ,
அப்போது அங்கு பலமான மழை வர, இவர்கள் அனைவரும் ஒரு நாள் முழுவதும் கஷ்டப்பட்டு செய்த வேலைகள் அனைத்தும் வீணாகி போனது. அன்பு தலைவருக்காக, வட்டிக்கு கடன் வாங்கி குணா செலவழித்த பணம், அவன் சம்பள பணம் எல்லாம் அந்த மழை நீரில் காணாமல் போனது.
எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings