எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
எதிரே நின்று கொண்டிருந்த சாரதாவைப் பார்த்ததும் ஒரு நிமிடம் திகைத்தவள் சுதாரித்துக் கொண்டு, “உள்ளே வாங்க” என்று அழைத்தாள்.
அவள் முகத்தில் தெரிந்த அவஸ்தையான உணர்வை பார்த்து விட்டு பாத்ரூம் அந்தப்பக்கம் என்று கை காட்டினாள்.
முகம் கழுவிக் கொண்டு வந்தவளிடம் உட்கார சொல்லிவிட்டு, “என்னம்மா புவனா இல்லையா?” என்றாள்.
“ஆமாம்மா, கதவு பூட்டியிருக்கிறது, எங்கே போனாளோ தெரியலை” என்றவள், ‘ஸாரிம்மா’ என்றாள்.
“எதுக்கும்மா ஸாரி!” என்றவளிடம், “இல்லம்மா!, என் பொண்ணு உன்னை எவ்வளவோ அலட்சியப்படுத்துறா, வேண்டும் என்றே ரம்யா கல்யாணத்துக்கு கூப்பிடாம வெறுப்பேத்தினா. எனக்கு கஷ்டமா இருந்தது” என்றவளிடம்
“அதுபத்தி நீங்க ஏம்மா கவலைப்படுறீங்க! புவனா வரவரைக்கும் இங்கே உட்கார்ந்திருங்க” என்றவள் சில்லென்று இஞ்சி கறிவேப்பிலை போட்ட மோரைக் கொண்டுவந்து நீட்டினாள்.
“மண்பானைத் தண்ணீர்தாம்மா”, என்றவளை ஏறிட்டுப் பார்த்தாள் சாரதா. வயதில் பெரியவர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்று உணர்ந்து நடந்து கொள்கிறாள்.
சாந்தமான முகம். எளிமையான அலங்காரம். இளம் பச்சை வண்ணத்தில் புடவை கட்டியிருந்தாள். இவளைத்தான் புவனா அந்தப் பேச்சு பேசுகிறாள்.
திமிர் பிடித்தவள், அகம்பாவம் பிடித்தவள் என்று விதம் விதமாக அடைமொழி கொடுக்கிறாள். “பக்கத்து பக்கத்து ஃப்ளாட்டில் இருக்கீங்க, அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு போ”, என்று எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டாள். அவள் கேட்பதாக இல்லை . கேட்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு கதை சொல்லுவாள்.
“அந்த வேலைக்காரி சந்திராவை இரண்டு நாளைக்கு எனக்கு வேலை செய்ய சொன்னேன். முடியாது அப்படின்னு சொல்லிட்டா. எல்லாம் அந்த மகாராணி ராதிகா சொல்றபடி தான் கேட்பா”.
“ராதிகாவா உனக்கு வேலை செய்யக்கூடாது என்று சொன்னா?”
“இல்லைதான். ஆனா அவ ஏதாவது சொல்லாம இவள் இப்படி சொல்லுவாளா!” இரண்டு நாள் கழித்து தற்செயலாக சந்திராவை கீழே வாசலில் பார்த்தபோது அவள் வேறு சொன்னாள்.
“அவசரத்துக்கு அப்படின்னு கூப்பிட்டு விட்டு அளவுக்கு அதிகமா வேலை வாங்குறாங்கம்மா. நான் நாலு வீடு வேலை செய்றவ. பணம் இல்லைங்கிறதாலே நாங்க மனுஷங்களே இல்லை அப்படிங்கற மாதிரி நடத்தினா வலிக்குதும்மா. ஏற்கனவே வேலை செஞ்சு செஞ்சே உடம்பெல்லாம் வலிக்குது. நாங்க என்ன மூன்று வேளையும் சாப்பிடக் கூட வழியில்லாமத் தானே வேலைக்கு வரோம். அதைப் புரிஞ்சுக்காம அதட்டி உருட்டி வேலை வாங்குறது கஷ்டமா இருக்கும்மா “.
அவளுக்கு அன்று என்ன வேதனையோ இவள் கேட்டவுடன் புலம்பித் தள்ளிவிட்டாள். சாரதாவுக்கு மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. பக்கத்து கடைக்கு கூட்டிச் சென்று ஒரு டீ வாங்கிக் கொடுத்தாள். புவனாவின் குணம் அவளுக்கும் தெரிந்த விஷயம் தான் என்றாலும் இந்த அளவுக்கு போவாள் என்று எதிர்பார்க்கவில்லை. எடுத்துச் சொன்னாலும் விதண்டாவாதம் தான் செய்வாள்.
இப்போது இங்கே உட்கார்ந்து இருப்பதை பார்த்தால் என்ன சொல்லுவாளோ!
“என்னம்மா ! புவனா ஏதாவது சொல்லுவாளோன்னு தானே யோசிக்கிறீங்க!” அவள் மனதைப் படித்தவள் போல ராதிகா கேட்டாள்.
“வந்தது வந்துட்டேன். எல்லா திட்டையும் சேர்த்தே வாங்கிக்கறேன்”, என்று சிரித்தவள், “உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கலாமா? “என்று தயக்கத்துடன் கேட்டாள்.
‘கேளுங்க!’
“இல்லை, உனக்கு என்மேல் கோபம் எதுவும் இல்லையே! என் பொண்ணை என்னால் கண்டிக்கவும் முடியலை, திருத்தவும் முடியலை”. மெய்யான வருத்தத்துடன் சொன்னாள் அவள்.
“என்னம்மா நீங்க! “அருகில் வந்து ஆதுரத்துடன் கையைப் பற்றிக் கொண்டாள் ராதிகா. “உங்களுக்கு தெரியாதில்லை. ரம்யா வந்து பிரகாஷையும் எங்களையும் கல்யாணத்துக்கு கூப்பிட்டா.”
அந்த நாள் அவள் நினைவில் விரிந்தது.
“வாசலில் வாழைமரம் கட்டி பெரிய பெரிய கோலம் போட்டு ஃப்ளாட் முழுக்க கல்யாணத்துக்கு தயாராகிக்கிட்டிருக்கு. நீங்க மட்டும் வரலையென்றால் எப்படி”, என்று கண்கலங்கியவளை ராதிகா சமாதானப்படுத்தினாள்.
“என்ன பண்ண முடியும் ! நான் கூப்பிடுறேன். அப்பாவை வேண்டுமானாலும் வந்து கூப்பிடச் சொல்கிறேன். என்ன பண்ண முடியும் அம்மாவாலே! ” ரம்யா ஆத்திரப்பட்டாள்.
“ஆயிரம் தான் இருந்தாலும் இது அவ பொண்ணோட கல்யாணம். அவளோட சந்தோஷம் நிம்மதி முக்கியம். காலத்துக்கும் இந்த நிகழ்ச்சி தான் ஞாபகம் வரும். எதற்கு தேவையில்லாமல் ஒரு சலசலப்பை ஏற்படுத்த வேண்டும்?” ராதிகா ஆறுதலாக பேசினாள்.
“உன் கல்யாணம் பாண்டிச்சேரி அன்னையோட தரிசன நாளில் வருகிறது. அதனால் நாங்கள் பாண்டிச்சேரி இரண்டு நாட்கள் போய் வரலாம் என்றிருக்கிறோம். அன்னிக்கு நாங்க பெரிய ஹோட்டலில் சாப்பிடப் போகிறோம். நீ தான் பணம் கொடுக்கணும் “,என்ற பிரகாஷை
“அது சரி, நீ எனக்கு கல்யாண கிஃப்ட் தரணுமே !ஒருமாச சம்பளத்தை வெட்டு” என்றதையும் சிரித்துக்கொண்டே சொன்னாள் ராதிகா.
“வீடு கட்டி வந்து பத்து வருஷமாச்சு. இரண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். கல்யாணம் நடக்கும் போது அவள் சிநேகிதி மூலம் வீடியோவில் பார்த்தோம். ரம்யாவுடன் அன்று மாலை பேசக்கூட செய்தோம்.”
ஒரு நிமிடம் நிதானித்தவள், “எதுவுமே நாம பார்க்கிற பார்வையிலே இருக்கும்மா! ஒருத்தர் அலட்சியப்படுத்துவதை நினைத்துக் கொண்டு நாம் ஏன் நம்முடைய நிம்மதியை கெடுத்துக் கொள்ளணும்மா! அவளையே கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம் இல்லையா? அதுமட்டுமில்லை சின்ன வயதிலிருந்தே என்னோட அம்மா சொல்லுவாங்க. யார் வந்தாலும் அவர்களை மனம் கோணாமல் உபசரிக்கணும்னு.”
“தெய்வம் மனுஷ்ய ரூபேண என்று சொல்லுவார்கள். அதுக்கு நிறைய கதை கூட சொல்லுவாங்க. ஒரு முனிவர் அமிர்தம் வேண்டுமென்று தவம் இருந்து வரம் பெற்றாராம். எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் போது தாகம் வரட்டியதாம். ஒரு புலையன் தன்னுடைய அழுக்குத் தோல் பையில் வைத்திருந்த தண்ணீரைக் கொடுத்த போது அமிர்தம்தான் வந்து விடுமே என்பதாலும் அருவருப்பினாலும் மறுத்து விட்டாராம். எதிர்பார்த்த அமிர்தம் வரவில்லை என்றதும் இறைவனிடம் முறையிட்டாராம். நான்தான் மூன்று முறை உன்னிடம் வந்தேனே நீதான் வேண்டாமென்று சொல்லிவிட்டாய் என்றதும் தான் அவருக்கு புரிந்ததாம்.
இப்போ வரலொட்டி ரங்கசாமின்னு ஒரு ஆசிரியர் மீனாட்சி அம்மன் தன்னிடம் வெவ்வேறு வடிவங்களில் வந்து நடக்கும் நடக்கப் போகும் விஷயங்களை விவரிப்பாள் என்று சுவையாக சுவாரஸ்யமாக சொல்லியிருப்பார்.
அலை பாயுதே , பால் வடியும் முகம் பாட்டுகளை எழுதின ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பாடிக் கொண்டிருக்கும் போது ஒரு அழுக்கான குழந்தை அவர் மடியில் வந்து உட்கார்ந்ததாம். சட்டென்று தள்ளிவிட்டதும் கிருஷ்ணன் தன் முகத்தை காட்டி விட்டு மறைந்தானாம்.” அவள் அபிநயத்துடன் சொல்ல சொல்ல வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்த சாரதா, “எனக்கு ஏதோ ஒரு நந்தவனத்துக்குள் வந்த மாதிரி இருக்கும்மா” என்றாள்.
அவளைப் பார்த்து புன்னகைத்த ராதிகா “கொஞ்சம் உள்ளே வாங்களேன்” என்று பூஜை அறைக்கு அழைத்துச் போனாள்.
“இன்றைக்கு என்னோட அம்மாவுக்கு புடவை வைத்து கும்பிட்டேன். ஆடி, தை மாதங்களில் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மாவுக்கு பிடிச்ச நிறத்தில் ஒரு புடவை வைத்து சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் பண்ணுவோம். சுமங்கலிப் பிரார்த்தனை என்று நிறைய பேர் திருமணங்களுக்கு முன் செய்வார்கள். அது மாதிரி நாங்க வீட்டிலே பண்ணுவோம். இந்தமுறை விட்டுப் போச்சு. இன்னிக்கு எங்க அம்மா நட்சத்திரம். அதனால் ஸ்பெஷல் பூஜை” என்றவள் தட்டில் வெற்றிலை பாக்கு மஞ்சளுடன் வைத்திருந்த அந்தப் புடவையை எடுத்துக் காட்டினாள்.
அழுத்தமான ப்ரௌன் நிறத்தில் சின்ன சின்ன கட்டங்கள் போட்ட அந்த புடவையை பார்த்ததும் தன்னையறியாமலே தான் கட்டியிருந்த அதே பழுப்பு வண்ணப் புடவையை புதிதாக பார்ப்பது போல பார்த்தாள். அவள் உடல் அப்படியே சிலிர்த்துப் போயிற்று.
ராதிகா மேலும் தொடர்ந்து சொன்னாள்.
“இன்னிக்கு செயற்கை நுண்ணறிவு என்று மறைந்து போனவர்கள் உயிரோடு வந்து உலவுவது போல காட்டுகிறார்களே! அதே மாதிரி வித்தியாசமாக என் அம்மா எப்போதும் சொல்லுவார்கள். நீ உன்னுடைய அம்மா அப்பா வயதிலோ அதை விட முதியவர்களுக்கோ உண்மையான மனசோட உதவி செய்தால், அது வேறு ஏதாவது ஒரு வடிவத்தில் எனக்கும் வந்து சேரும் என்று. காப்பிப்பொடிக்கலர் என்று இந்த நிறத்தை சொல்லுவாள்” புடவையை வருடியபடி இருந்தவள் மறுபடியும் தட்டில் வைத்துவிட்டு வெற்றிலை பாக்கு மஞ்சளுடன் குங்குமத்தை வைத்து நீட்டினாள்.
“நீ நல்லா இரும்மா” என்று ஆசிர்வதித்தவள் குங்குமத்தை அவள் நெற்றியில் வைத்து விட்டாள்.
புடவை , வெற்றிலை பாக்கு மஞ்சள் எல்லாவற்றையும் அழகாக ஒரு கவரில் போட்டு கைகளில் கொடுத்தாள் ராதிகா. சொல்லத் தெரியாத பரவசத்தில் இருந்த சாரதா அந்த பையை வாங்கிக் கொண்டதோடு “எனக்கும் கொஞ்சம் சர்க்கரைப் பொங்கல் கொடும்மா” என்றாள்.
‘இதோ’ என்று ஓடினாள் அவள்.
“நல்லாயிருக்கும்மா !”என்றவள்” உன்னைப் பார்த்தா எனக்கு ஆச்சரியமாக இருக்கும்மா, சந்தோஷமாகவும் இருக்கு”, என்று மனப்பூர்வமாக சொன்னாள்.
“உன்கிட்ட இன்னொரு விஷயம் கேட்கலாமா! வம்புக்கு அலைகிறதாக நினைக்க மாட்டியே!”
‘இல்லைம்மா , சொல்லுங்க! ‘
“போன வாரம் உன் நாத்தனார் சுஜிதா வந்து போனா இல்லையா!”
“ஆமாம், அவள் பணம் கேட்டு வந்தாள்”.
“நீதான் கொடுக்கக்கூடாதுன்னு சொன்னதா புவனாகிட்டே சொல்லியிருக்கா”. அவள் முடிக்குமுன் ராதிகா கலகலவென்று சிரித்தாள்.
“என்னம்மா!” என்றவளிடம்,
“இல்லம்மா! அவ இப்படித்தான் சொல்லுவா அப்படின்னு எனக்குத் தெரியும். ஆனா இங்கேயே இந்த வம்புக்கடையை விரிச்சிருக்காளேன்னு நினைச்சுத்தான் சிரித்தேன். அவள் கஷ்டப்படுகிறாள் என்று அவள் வீட்டுப் பக்கத்தில் மளிகை சாமான்கள் வாங்கிக் கொள்ள சொல்லிப்பணம் கொடுத்துட்டு வந்தார். ஒரே மாசத்தில் ஐயாயிரம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறாள், இவருக்கு வெறுத்துப் போச்சு. இப்போ ஐம்பதாயிரம் ரூபாய் கேட்டு வந்தாள். அவர் தர முடியாதுன்னு சொல்லிட்டார் . அதுக்கு நான் என்ன பண்ண முடியும்! அப்படியும் நான் அவளுக்கு பழங்கள் காய்கறிகள் ஒரு பையில் போட்டு ஆயிரம் ரூபாயும் கொடுத்தேன்.”
“‘அடப்பாவமே! புவனா அவ சொன்ன அந்தக் கதையைத்தான் இப்போது எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கறாள்” என்றவள் “இவங்களை எல்லாம் என்னம்மா பண்ணுறது” என்று ஆதங்கத்துடன் கேட்டாள்.
“ஒண்ணும் பண்ண முடியாது! சிரிச்சுட்டு போக வேண்டியதுதான்” என்றவுடன் அவளுடன் சேர்ந்து சாரதாவும் சிரித்தாள்.
தடதடவென்று கதவு தட்டப்படவும் எழுந்து வந்து கதவைத் திறந்தாள் ராதிகா. காலிங் பெல்லை அடிக்காமல் கதவைத் தட்டியவள் சிரித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த தன் அம்மாவிடம் பாய்ந்தாள்.
“நான் இல்லைன்னா யார் வீட்டுக்கு வேண்டுமானாலும் போவியா?” திகைத்துப்போய் சட்டென்று எழுந்து நின்ற சாரதா ராதிகாவின் அருகில் வந்து ஆதுரத்துடன் தோளில் தட்டினாள். “வரேம்மா! ரொம்ப சந்தோஷம்”, என்றவளை கடுகடுப்புடன் பார்த்தாள் புவனா.
“உன்னையும் மாத்திட்டாளா! மத்த ஃப்ளாட்டில் யாரும் இல்லை என்றால் இங்கே வந்து விடுவாயா? உன்னை இவள் கூப்பிட்டு நல்லவ மாதிரி நடிக்கிறாளா?நான் இல்லை யென்றால் அப்படியே திரும்பிப் போயிருக்க வேண்டியதுதானே!”
தேவையில்லாமல் வாய்க்கு வந்ததை யெல்லாம் பேசி அனலாக பொரிந்து கொட்டிய புவனாவை வெறித்துப் பார்த்தவள் மறக்காமல் தான் வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டாள்.
“நீ சொன்ன மாதிரி அதைத்தான் செய்யப் போகிறேன்” என்று அமர்த்தலாக சொல்லிவிட்டு வீட்டுக்குள் புன்முறுவலுடன் நிற்கும் ராதிகாவையும் புயலின் சீற்றத்தோடு வெளியில் நின்ற புவனாவையும் கடந்து வாயிலை நோக்கி நடந்தாள்.
“அம்மா!” என்று பின்னால் வந்த புவனா ஒன்றும் புரியாமல் குழம்பி நிற்க திரும்பியும் பாராமல் அந்த தளத்திலேயே தயாராக இருந்த லிஃட்டையும் ஒதுக்கிவிட்டு வேகமாக படிகளில் இறங்கி மறைந்தாள்.
அவளது கோபமும் வருத்தமும் அவள் நடையில் தெரிந்தது. எல்லோரையும் எப்போதும் அவமானப்படுத்தியே பேசும் புவனா, பெற்றவள் தன்னிடம் காட்டிய அலட்சியத்தையும் உதாசீனத்தையும் தாங்கிக் கொள்ள மாட்டாதவளாக பளார் என்று அடிவாங்கிய உணர்வுடன் சிலையாக நின்றாள்.
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings