எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மாலை ஆறு மணி வாக்கில் வீட்டிற்குள் நுழைந்த சுகுமார் தன் மூத்த சகோதரிகள் இருவரும் வந்திருப்பதை அறிந்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
“அம்மாவோட வேலையாத்தான் இருக்கும்… அவங்கதான் போன் பண்ணி இவளுக ரெண்டு பேரையும் வரச் சொல்லியிருப்பாங்க” தனக்குள் சொல்லியவாறே தன் அறைக்குள் புகுந்து கொண்டான்.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு லுங்கி பனியனுடன் அறைக்குள்ளிருந்து வெளியே வந்தவனை வழி மறித்து நின்ற சகோதரிகள் இருவரும், “ஏண்டா… சுகுமாரா… நீ பண்றது உனக்கே நல்லாயிருக்காடா?” கோரஸாய்க் கேட்க,
“எதைக் கேட்கறீங்க?” புரியாதவன் போல திருப்பிக் கேட்டான் சுகுமார்.
“சும்மா தெரியாத மாதிரி நடிக்காதடா!… அந்தக் கரூர்ப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க “சரி”ன்னு தலையை ஆட்டிட்டியாமே?… அம்மா சொல்றா… அது உண்மையாடா?” பெரியக்கா சரசு கேட்டாள்.
“ஆமாம்… அதிலென்ன தப்பு?… எனக்கு அந்தப் பெண்ணைப் பிடிச்சிருந்தது… ஒத்துக்கிட்டேன்… இதுல் உங்களுக்கென்ன வருத்தம்?” கேட்டான்.
“உனக்கு அந்தப் பெண்ணைப் பிடிச்சதும் தப்பில்லை!… அவளையே நீ கல்யாணம் பண்ணிக்கறதும் தப்பில்லை!… ஆனா… அவங்க போட்ட அந்தக் கன்டிஷனுக்கும் நீ சம்மதம் சொல்லிட்டியாமே?… அதுதான் தப்பு” என்றாள் சின்ன அக்கா ஈஸ்வரி.
“எனக்கு… அதுல… எந்தவிதமான தப்பு இருப்பதாகவும் தெரியலை!” என்றான் சுகுமார்.
“ச்சை… அப்படியொரு கண்டிஷனை ஒத்துக்க எப்படி… எப்படிடா மனசு வந்தது உனக்கு?… நம்ம பரம்பரைல யாரும்… இதுநாள் வரைக்கும் ஒத்துக்கிட்டதில்லைடா இப்படியொரு கேவலத்துக்கு” பெரிய அக்கா சரசு முகத்தை அஷ்ட கோணலாக்கிக் கொண்டு சொன்னாள்.
“அக்கா… இப்படி மூஞ்சியை அருவருப்பா வெச்சுக்கிட்டு… கேவலம்…ன்னு சொல்ற அளவுக்கு அது தப்பான விஷயமா எனக்குப் படலைக்கா… அதான் சரின்னு சொல்லிட்டேன்…” தன் நிலைப்பாட்டில் உறுதியாய் நின்றான் சுகுமார்.
“த்தூ… வீட்டோட மாப்பிள்ளையா ஒரு வீட்டுக்குப் போறதுக்கு பதிலா நாண்டுக்கிட்டுச் சாவலாம்…” இது சின்னக்கா ஈஸ்வரி.
பதிலேதும் சொல்லாமல் மிருதுவாய்ப் புன்னகைத்தான் சுகுமார்.
“ஏண்டா… நாங்க வயிறெரிஞ்சு பேசறோம் நீ சிரிக்கறியா?” சின்ன அக்கா ஈஸ்வரி பொரிந்தாள்.
“இதுல… நீங்க வயிறெரியறதுக்கு என்ன இருக்குன்னு தெரியலை எனக்கு” நிதானமாய்ச் சொன்னான்.
“அட விவரங் கெட்டவனே… வீட்டோட மாப்பிள்ளையாப் போறதும் அடிமையா… கொத்தடிமையாப் போறதும் ஒண்ணுடா… அவங்க இழுக்கற இழுப்புக்கெல்லாம் நீ ஆடணும்… உட்காருன்னா உட்காரணும்… எந்திரின்னா எந்திரிக்கணும்… உன் பொண்டாட்டிக்காரி பொடவை துணியையெல்லாம் துவைச்சுப் போடச் சொன்னாக் கூடத் துவைக்கணும்… அவ மட்டுமல்ல, மாமியார்… மாமனார்..ன்னு அத்தனை பேரும் உன்னை ஆட்டிப் படைப்பாங்க…” பெரியக்கா சரசு மத்தாப்பாய்ப் பொரிந்தாள்.
“மொத்தத்துல நீ ஒரு சம்பளமில்லா வேலைக்காரன் அவங்களுக்கு… இங்க ஆம்பளையில்லா வீட்டுல ஒத்தை ஆம்பளையா… தனிக்காட்டு ராஜாவா இருந்திட்டு இப்ப… கூண்டுக்கிளி ஆக ஆசைப்படறியே… உனக்கு என்ன சொல்லிப் புரிய வைப்பேன்…” இது சின்னக்காவின் வியாக்கியானம்.
சமையலறைக்குள்ளிருந்து வேக வேகமாக வெளியே வந்த அம்மாக்காரி, அவள் பங்கிற்கு, எதையோ சொல்ல வாயெடுக்க கையமர்த்தினான் சுகுமார்.
“போதும்மா போதும்… நீயும் உன் பங்குக்கு எதையாவது சொல்லி என்னை வெறுப்பேத்தாதே!… த பாருங்க… உங்க மூணு பேருக்கும் இப்ப சொல்றேன் நல்லாக் கேட்டுக்கங்க… நீங்க சொன்ன மாதிரி வீட்டோட மாப்பிள்ளைங்கறது அடிமைத்தனம் சம்மந்தப்பட்ட விஷயமில்லை… அன்பு… பாசம்… நேசம்… பிரியம்…இவைகள் சம்மந்தப்பட்ட விஷயம்!… பொண்ணைப் பெத்தவங்க எல்லோருமா தங்களுக்கு வீட்டோட மாப்பிள்ளை வேணுமின்னு கேட்கறாங்க?… ஒரு சிலர் மட்டும் கேட்கறாங்கன்னா… அதுக்கு என்ன அர்த்தம?… அவங்களால தங்களோட மகளை.. விட்டுப் பிரிய முடியலை… பிரிய மனசில்லேன்னுதான் அர்த்தம்!… ஆக… அங்க மேலோங்கி நிற்பது பணத்திமிரோ… அந்தஸ்தோ… அல்ல… அவங்களோட பாசம்…அன்பு..”
“டேய்… நீ என்ன வேணா சொல்லுடா…ஆனா..”
“ப்ச்…இருக்கா… நான் சொல்லி முடிச்சிடறேன்… சில வீடுகள்ல … அதாவது பொண்ணுக மட்டுமே இருக்கற வீடுகள்ல பெத்தவங்களுக்கு தங்களுக்கும் ஒரு மகன் இல்லையேங்கற ஏக்கம் இருக்கும்… அதன் காரணமாய்க் கூட அவங்க தங்களுக்கு வரப் போற மருமகனை மகனா நெனச்சு வீட்டோட வச்சுக்கிட்டு தங்களுடைய பிள்ளைப் பாசத்தை அவன் மேல் காட்ட நினைக்கலாம்…”
“அதில்லைடா… உன்னைய ஆளாளுக்கு…”
“அதிகாரம் பண்ணுவாங்கன்னு சொல்றியா?… பண்ணட்டுமே… அது நியாயம்தானே?… என்னையும் அவங்களோட குடும்பத்துல ஒருத்தரா நெனைக்கறதினாலதானே அப்படியொரு உரிமையை அவங்க எடுத்துக்கறாங்க…”
“உனக்கெல்லாம் சொல்லிப் புரிய வைக்க முடியாதுடா!… நீ எக்கேடோ கெட்டுப் போ… அதைப்பத்தி நாங்க இனிமே பேசலை… அம்மாவை என்ன செய்யப் போறே?”
“ம்… என் கூடவே கூட்டிட்டுப் போகப் போறேன்”
“உன் மாமியார் வீட்டுக்கா?,.. அது செரி நீயே ஒட்டுண்ணியாகப் போறே… உனக்குத் துணையா இன்னொரு ஒட்டுண்ணியா?” கேட்டு விட்டு நக்கலாய்ச் சிரித்தாள் சின்னக்கா.
“ஒரு உண்மையைச் சொல்றேன் நல்லாப் புரிஞ்சுக்கங்க!… அவங்களோட அந்தக் கன்டிஷனை ஆரம்பத்துல நானும் ஒத்துக்கலை!… ஏன்னா நானும் உங்களை மாதிரித்தான் நான் அங்க போயிட்டா… அம்மாவோட நிலைமை என்ன?ன்னு யோசிச்சேன்!… அதைச் சரிக்கட்ட ஒரு யோசனையாய் அவங்க கிட்ட ஒரு பதில் கண்டிஷன் போட்டேன்!… அதாவது நான் உங்க வீட்டு மாப்பிள்ளையா வரணும்ன்னா… என் அம்மாவும் என் கூட வருவாங்க!… அது என் கண்டிஷன்!.. இதுக்கு நீங்க சம்மதம் சொன்னா… நானும் உங்க கண்டிஷனுக்கு சம்மதிக்கறேன்”னு ஒரு போடு போட்டேன்!… அவங்க “தாராளமா கூட்டிட்டு வாங்க… வீட்டுல ஒரு வயசானவங்க இருப்பது ரொம்பவும் நல்லது”ன்னுட்டாங்க”
அவனின் அந்தப் பதிலுக்கு இரண்டு அக்காக்களிடமிருந்தும் எந்தவித ரீயாக்ஷனும் வராது போக, அவனே தொடர்ந்தான், “அதாவது… அவங்க பிள்ளைப்பாசத்தை நான் புரிஞ்சு அதுக்கு மரியாதை குடுத்த மாதிரிதான் அவங்களும் என்னோட தாய்ப்பாசத்தைப் புரிஞ்சு மதிப்புக் குடுத்திருக்காங்க…”
சுகுமாரின் தாய் வாயடைத்துப் போய் நிற்க, சகோதரிகள் இருவரும் சத்தமில்லாமல் வெளியேறினர்.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings