எழுத்தாளர் கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அவன் தெருவுக்குள் நுழைந்ததும் மின்சாரம் மிகக் குறைவாகி தெருவிளக்குகள் மங்கலாக மாறின. தெரு நீண்டு போய் கண்பார்க்கமுடியா தூரத்தில் வளைந்துபோனது.
‘அதுதான் தெரு முடிவா?’ குழப்பமாக இருந்தது அவனுக்கு. அவன் மெதுவாக நடந்து ஐந்து வீடுகளை கடந்திருந்தான். அவனது இடப்பக்கம் ஒரு சிறு தெரு பிரிந்து வீடுகளுக்கிடையே சென்றது.
‘இந்த வழியாக இருக்குமோ?’ ஒரு கணம் யோசனையில் நின்றான். பின் முன்னோக்கி நடந்தான். பத்து வீடுகள் தாண்டியிருந்தான். மீண்டும் வீடுகளுக்கிடையே தெரு பிரிந்தது. இம்முறை இரண்டு பக்கமும் இருந்தன. வலப்பக்கம் ஆறு வீடுகளுடன் தெரு முடிந்திருந்தது. இடப்பக்கம் நீண்டு போனது.
‘எந்த வழியில் போவது?’ என்று குழம்பி நின்றான். ஆனாலும் அவன் தேடிவந்த வீடு அந்தவழிகளில் இல்லை என்று தெரிந்தது. மீண்டும் நேராக நடந்தான். ஒரு வீட்டில் இருந்து குழந்தை வீறிட்டழும் சத்தம் கேட்டது.
தெருவின் இடப்பக்கத்தில் ஒரு சிமெண்ட் தொட்டி இருந்தது. அதனருகே தெருவிளக்குக் கம்பம். ‘இந்த இடத்தை இதற்கு முன் பார்த்திருக்கிறோமா?’ திடீரெனக் குழப்பமாக இருந்தது. எங்கிருந்தோ நடுநிசி பண்ணிரண்டரை என்பதை கடிகாரம் அடித்து ஒலித்தது. நாய் ஒன்று எங்கிருந்தோ ஊளையிட்டது. பயந்தான்.
‘அம்மா தூங்காமல் காத்திருப்பாளே?’ என்ற எண்ணம் வந்தபோது கவலையாக இருந்தது. யாரும் கேட்டால் சிரிப்பார்கள். சொந்த வீட்டைத் தேடி அலைகிறான். அலைபேசியை அலுவலகப்பையில் வைத்திருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால் பை கையிலில்லை.
வழக்கம் போல ஆறுமணிக்கு அலுவலகத்திலிருந்து புறப்பட்டது நினைவிலிருந்தது. ‘பை எடுத்திருந்தோமா?’ என சிந்தித்துப் பார்த்தான். ஆச்சரியமாக இருந்தது.
‘அதெப்படி பையை மறந்துவிட்டு பல மைல் தூரம் நடந்துவரமுடியும்?’ நின்றான். இளம் மஞ்சள் நிறம் பூசிய அந்த வீடு ‘நிச்சயம் அவள் வீடுதான்’ உறுதிப்படுத்தினான்.
அவன் அலுவலகம் விட்டு தினமும் வருகிற பேருந்தில்தான் மாலையில் அவளும் வருவாள். பழக்கமில்லை. அன்றாடம் பார்ப்பதால் என்றாவது ஒரு புன்னகை கிடைக்கும். அவனுக்கு பைக் இருந்தது.
ஆனால் அவனது அம்மா ஜோசியர் சொன்ன ஆருடத்திற்கு பயந்து இரண்டு வருடங்கள் வண்டியைத் தொடக்கூடாது என்றிருந்தாள். அவனுக்கு அதில் நம்பிக்கையில்லை, என்றாலும் அம்மாவுக்காக ஏற்றுக்கொண்டான்.
அவனது குடும்பத்தின் ஒரே பொருளாதார நம்பிக்கையாய் இருந்த அப்பா இறந்ததும், தொடர்ந்து அவனையும் அக்காவையும் நல்லநிலைக்கு கொண்டுவர அம்மா பட்ட பாட்டையும் அவன் அறிந்திருந்தான். அதனாலேயே அவன் அம்மா சொல்வதை மறுப்பதில்லை.
‘அந்த வீட்டிற்கு சென்று உதவி கேட்கலாமா?’ என யோசித்தான். தன்னை பைத்தியம் என்று நினைப்பார்கள். சொந்தவீட்டைத் தேடி ஒருவன் நடப்பதும், அதும் நள்ளிரவில் அதற்காக உதவி கேட்பதும்…யாராக இருந்தாலும் நம்பமாட்டார்கள்.
அதுவுமில்லாமல் அவர்களோடு இதுவரை பேசியதுமில்லை. ‘அவனது வீடு அவர்களுக்கு தெரிந்திருக்குமா?’ யோசித்தபடியே நடந்தான். தெருநாய் ஒன்று அவனைக்கடந்து தயங்கி நின்று உற்றப்பார்த்தது. பின் மெல்லிய குரலில் குரைத்தது.
‘தன்னை அறிந்த நாயாக இருக்குமோ?’ வாய்ப்பில்லை. தெருநாய்க்களுக்கு உணவு இடுவதையோ பழகிக் கொள்வதையோ அவன் விரும்பியதில்லை. ‘பிறகு இது ஏன் தன்னைத் தொடர்கிறது?’
பின் தொடர்ந்த நாயை விரட்டினான். ஆனாலும் அது மெதுவாக பின்னாலேயே வந்தது. ‘ஒருவேளை நான் இந்தத் தெருவிற்கு புதிதோ? மாறி வந்து விட்டேனா?’ குழம்பினான். ‘இருக்காது. அப்படியிருந்தால் நாய் கடுமையாகக் குரைத்திருக்குமே?’
முப்பதடி தூரத்தில் அந்த பச்சைநிறம் பூசப்பட்ட வீடு தெரிந்தது. அவன் வீடு! ஒருவழியாக கண்டடைந்து விட்டான். சந்தோஷமாக இருந்தது.
ஆனால்!? ‘இதென்ன…? வீட்டின் முன் ஆட்கள்! அக்கம்பக்கத்தினர் தான். அய்யோ..அம்மாவுக்கு ஏதாவது..?’ நினைப்பதே தாங்கமுடியாமல் ஓடினான்.
கேட்டைக் கடக்கையில் அக்கா அழும் குரல் கேட்டது. யாரையும் பொருட்படுத்தாமல் ஆட்களுக்கிடையில் ஓடி முன்னறக்குள் நுழைந்தான்.
அம்மாவைக் கெட்டிப் பிடித்துக் கொண்டு அக்கா அழுது கொண்டிருந்தாள். ‘அக்கா என்னாச்சு?’ கேட்டான். கவனிக்காததுபோல் இருந்தாள். ‘அம்மா! அம்மா!’ அரற்றினான்.
வெளியே ஆம்புலன்ஸ் ஒன்று சத்தமிட்டபடி வந்து நின்றது. இரண்டு ஊழியர்கள் யாரோ ஒருவரது உடலைச் சுமந்துகொண்டு வந்து தரையில் விரித்திருந்த பாயில் கிடத்தினார்கள். அந்த உடல்! அதன் முகம்! ‘இது..இது..இந்த முகம்..’ அதிர்ச்சியில் உறைந்து போனான்.
‘பாவம்பா இந்தம்மா பையன். ஆபிஸ் விட்டு வரும்போது ரோட்ல திடீர்னு நெஞ்சுவலி வந்து இறந்துட்டானாம்’ யாரோ யாரிடமோ சொல்வது கேட்டது.
எழுத்தாளர் கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
” Paavamappa intha than aluvalaga vElaiGaL mudunthu thannudaiya veettIRkE vanthu kondirunthaan road-lE avanukku nenju vali (Heart attack) vanthu iRanthu vittaanaam enRu innoruvaridam chollikkonDu irunthaar. Ithaith thaan ‘confusion worst confounded’ enRa vazhakkaththin padi cholliGinRaargaL without understanding what actually had happened; araikuRaiyaagach chollikkondE. Avarudaiya iru kaNgaLilum kaNNeer pola pola enRu thathumbuGinRana. AnthO.”
— “M.K.Subramanian.”