in ,

வாழ்க்கை வாடுவதற்கே!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ஹாய்! என்று கை அசைத்தபடி நடந்தாள் சித்ரா. வழக்கம் போலவே காலை வேளைகளில் அந்த  குடியிருப்பின் பெண்கள் கூடும் நேரம் அது. நடைப்பயிற்சி, வம்புப்பேச்சு தோட்டத்தில் பூ பறித்தல் எல்லாம் நடக்கும்.

கொட்டிக் கிடக்கும் பவளமல்லியை சேகரிக்கும் சித்ராவை நிறைய பேருக்குத் தெரியும். ஹிந்தி மராட்டி மட்டுமே பேசத் தெரிந்தவர்களிடம், தனக்கு தெரிந்த ஹிந்தியும் ஆங்கிலமும் கலந்து பேசுவாள் அவள்.

சின்ன சின்ன வார்த்தைகள் சைகைகள் மூலமே அவர்கள் மிகவும் நெருங்கியவர்கள் ஆகி விட்டார்கள். 

காலை நேரத்தில் கிளம்பும் பிள்ளைகள், பேரன் பேத்திகளுக்கு சௌகரியமாக இருக்கட்டும் என்று வீட்டை விட்டு வெளியே வந்துவிடுவார்கள். சில பேர் குழந்தைகளை ஸ்கூல் பஸ்ஸில் கொண்டு விட வருவார்கள்.

வழக்கமான குடும்ப பிரச்சினைகளை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வார்கள். ஆறுதல் தேறுதல் என்று எல்லாம் நடக்கும்.  வயதைப் பொருட்படுத்தாத ஒரு நேசம் அவர்களை கட்டிப் போட்டிருந்தது. அவள் கட்டியிருக்கும் சேலையின் நிறம் டிசைன் பற்றி கூட விமரிசனம் நடக்கும்.

ஒருமுறை ஐந்து பேர் சேர்ந்து பெஞ்ச்சில் உட்கார்ந்திருந்ததை  பார்த்து சித்ரா விளையாட்டாக ஒரு கை விரல்களை விரித்து காண்பித்தாள். ‘பாஞ்ச் ‘என்று குதூகலமாக குரல் கொடுத்தார்கள். அதன் பிறகு எப்போது பார்த்தாலும் கை விரல்களை காட்டி மூன்று நான்கு என்று கை காட்டுவார்கள்.

அங்கே ஒரு கோவிலும் உண்டு. உள்ளேயே சின்னதாக கட்டியிருந்தார்கள். அங்கும் கூடுவார்கள். அவர்கள் பேசும் மொழி முழுவதும் புரியாவிட்டாலும்  கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து கொள்ள முடியும்.

பாக்ஷை தான் வேறே தவிர  மனசு  எல்லோருக்கும் ஒன்றாக இருந்தது. வயது அனுபவம் பலவற்றை கற்றுக் கொடுத்திருந்தன. சில‌கஷ்டங்களை , சில அனுபவங்களை எளிதாக கடக்க முடிந்தது.

எல்லா வீடுகளிலும் வரும் மாமியார் மருமகள் பிரச்சினை, தலைமுறை இடைவெளி பேசுவார்கள். நடந்து கொண்டு சில சமயம் உட்கார்ந்துகொண்டு காலைப் பொழுதை இனிமையாக கழிப்பார்கள்.

சுற்றி நடந்துகொண்டிருக்கும் போதே  மாயா சுற்றிக் கொண்டு நடந்து போவதைப் பார்த்தாள்.

“எங்கே ! பால் வாங்கிட்டு வந்தாச்சா! “

சித்ரா குரல் கொடுத்தாள். 

“ஆமாம் , பால் பாக்கெட் வச்சுட்டு வரேன்.” சொல்லியபடியே உள்ளே சென்றவளை  வேடிக்கை பார்த்தாள் சித்ரா.

“ஏன் ! இவங்க வீட்டுக்கு பால் வராதா? “

“அவங்கதான் இரண்டு நாளைக்கு ஒருக்க போய் வாங்கிட்டு வருவாங்க. அப்புறம் ஒரு மூணு ரவுண்டு சுத்துவாங்க.” 

“அப்படியா! “

“மகன் மருமகள் இரண்டு பேரும் வேலைக்கு போறாங்க.பேரன் ஸ்கூல் போய்ட்டு மூணு மணிக்கு வருவான். இவங்க போய் வீட்டில  தனியாத்தான் இருப்பாங்க. அவங்க மருமகள் என்ன ஒரு விஷயத்துக்கு மாயா ஹெல்ப் கேட்டாலும் முதல்லே அதைத் தூக்கி கிடப்பில் போட்டுறுவா. பையன்கிட்டேயும் சொல்ல விட மாட்டா.எல்லார் வீட்டிலும் ஏதாவது பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது.”

“என்ன செய்யறது ! நமக்கு வயதாக  வயதாக முடிஞ்ச வரைக்கும் அனுசரித்துப் போகணும்னு தான் நினைக்கிறோம். அவங்க வேகத்துக்கும்  வேலைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் நம்மால் ஈடு கொடுக்க முடிவதில்லை. என்ன செய்யலாம்!”

அவங்க எக்ஸ்பிரஸ்வேயில் போறாங்க. நம்ம இப்போ மாட்டு வண்டி பாதையில் தானே போகிறோம்!” சிரித்துக்கொண்டே சொன்னாலும் அவளால் அந்த வேதனையை புரிந்து கொள்ள முடிந்தது.

கையாட்டிக்கொண்டே  மாயா வந்ததும் அந்தப் பேச்சு மாறியது.

ஒரு வாரமாக மாயாவை கீழே பார்க்கவே முடியவில்லை. என்ன விஷயம் என்று தெரியவும் இல்லை.

பத்மினி தான் சொன்னாள். “மாயா கீழே விழுந்துட்டாங்களாம். கையில் ஃப்ராக்சர் ஆயிடுச்சாம்.நல்ல வேளை கால்ல ஜாஸ்தி பிரச்னை இல்லை.”

அநுதாபப்பட மட்டும் தான் முடிந்தது. யாருக்கும் அவர்கள் வீட்டுக்குப் போகும் துணிவு இல்லை. அவர்களுக்குள்ளேயே வருத்தத்தையும் கவலையையும் பகிர்ந்து கொண்டார்கள்.

ஒரு வயதுக்கு மேல் நட்புக்கு கூட அனுமதி இல்லாமல் போகும் வயோதிகம். யாரைச் சொல்ல! இன்றைக்கு நடக்கும் எத்தனையோ விஷயங்கள்  ஜீரணித்துக் கொள்ளவே முடிவது இல்லை.

ஒரு யுகம் போல தோன்றிய நாட்களுக்கு பிறகு மாயாவை கீழே பார்க்க முடிந்தது. கையில் கட்டு போட்டிருந்தார். பார்த்ததுமே  எல்லோருமே அவரை சூழ்ந்து கொண்டார்கள்.

“எப்படி இருக்கீங்கம்மா!”

எல்லோருடைய கேள்விக்கும் சிரித்தபடியே பதிலளித்தாரே தவிர  “ஏன் என்னை பார்க்க வரவில்லை !”என்று கேட்கவே இல்லை. கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? என்றுதான் தோன்றியது.

“டாக்டர் என்ன சொன்னார்?” அவர்கள் விசாரணையை தொடர்ந்தனர்.

“அவர் என்ன சொல்லுவார்? வேலை செய்யக்கூடாது அப்படின்னு சொல்லிட்டார். ஒரு கை தானே சரியில்லை. இன்னொரு கையால் காய் நறுக்கலாமான்னு கேட்டேன்.”

“இத்தனை வயசுக்கு உடம்பிலே எங்கேயுமே வலு இல்லை ! எப்படி காய் நறுக்குவீங்க?”

அவர் கேட்டதற்கு நான் ஏதோ பதில் சொன்னேன்.

அதுக்கு என் மருமகள் “வாய் மட்டும் அதே  பலத்தோடு இருக்கு  என்கிறாள்.”

‘ஜோக்’என்று நினைத்து அவர் சிரித்தார். ‘விதியே’ என்று நானும் சிரித்து வைத்தேன்..

அவர் பேச பேச  சுற்றி நின்ற எல்லோருடைய முகமும் நிறம் மாறியது. என்ன செய்வது ! வாழ்க்கையே தண்டனையாக  வாழ வேண்டும் என்று சிலருக்கு கடவுள் பணித்திருக்கிறான் போலிருக்கிறது. 

லேசான புன்னகையுடன் பேசினாலும், அந்த கண்களில் தெரிந்த சோகமும் வேதனையும் சித்ராவின் மனதை ஆழமாக கீறியது. கனத்த மனதுடன் வீட்டை நோக்கி நடந்தாள் அவள்.

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மாறுபடும் பார்வைகள்!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

    நீ உன்னை அறிந்தால்… (நாடகம்-காட்சி 1 to 3) – இரஜகை நிலவன்