in , ,

வாராயோ வெண்ணிலாவே (பாகம் 3) – சுபாஷினி பாலகிருஷ்ணன்

இந்த தொடர்கதையின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

முன்கதைச் சுருக்கம்:

ரகு மைதிலி தம்பதிக்கு இரு மகன்கள். ஒரு மகள்.  எப்போதும் அமைதியாக இருக்கும் ரகு. படபடவென பொரிந்து தள்ளும் மைதிலி. ஏதோ காரணத்தினால் சோர்ந்து போகும் கார்த்திக்கை கவனித்த ரகு கார்த்திக்கை கோவிலுக்கு அழைத்துச் செல்கிறார்.

இனி:

இருவருமாக முருகப் பெருமானை தரிசித்து விட்டு வலம் வரும் வழியில் துர்கையையும், பெருமாளையும், நவக்கிரகங்களையும் தரிசித்துவிட்டு இறுதியாக கொடிக்கம்பத்திற்கு முன்பு இருவருமாக விழுந்து வணங்கிவிட்டு மண்டபத்தில் உட்கார,

‘நீ போய் பாம்பாட்டி சித்தர் குகைக்கு போய்ட்டு வாடா’ என்றதும்,

“வேண்டாம்ப்பா. உன்னை தனியா விட்டுட்டு போகல” என்றவனிடம்,

“போய்ட்டு வாடா. நான் இங்கயே கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துண்டு இருக்கேன். சித்தர்கள் ஜீவசமாதியான  இடத்துக்கு தனி சக்தி உண்டு” என்றதும்,

“ம்……சரிப்பா” என்றவன் அப்பாவிற்கு கையிலிருந்த தண்ணீர் பாட்டிலைக் கொடுத்துவிட்டு பாம்பாட்டி சித்தர் குகைக்குச் சென்றான்.

அமைதியாக ஐந்து நிமிடங்கள் அங்கே  உட்கார்ந்து தியானம் செய்தவன், சித்தர் சமாதியை தரிசித்துவிட்டு திரும்பி நடந்து வரும் வழியில் பக்கவாட்டில் இருந்த ஒரு பாறையின் நடுவே ஒரு இடுக்கிலிருந்து படமெடுத்த  நாகத்தினைப் பார்த்ததும், ஒரு நிமிடம் சிலிர்த்துப் போனான் கார்த்திக்.

பிறகு எதையும் யோசிக்காமல் படியேறி வந்தவன் ரகுவிடம் நடந்த விஷயத்தைச் சொல்ல, “சித்தரின் அருள் உனக்கு நிறையவே இருக்குடா. எங்களுக்கு கல்யாணமாகி ரெண்டு வருஷம் கழிச்சு தான் நீ பொறந்த. இன்னைக்கு மாதிரி அன்னைக்கு இல்ல. பார்க்கிறவங்க எல்லாரும் எங்ககிட்ட முதல்ல என்ன குழந்தைன்னு தான் முதல்ல கேப்பாங்க. நிறைய தடவை வருத்தப்பட்டிருக்கோம். அப்பறம் தெரிஞ்சவங்க ஒருத்தர் உங்கம்மாகிட்ட சஷ்டி விரதத்தைப் பத்தி சொல்ல, தொடர்ந்து சஷ்டி விரதம் இருக்க ஆரம்பிச்சா. அப்படி சஷ்டி விரதம்  தவமா இருந்து  கார்த்திகை மாசம் கார்த்திகை நட்சத்திரத்துல பொறந்தவன்டா நீ. அதனால தான் உனக்கு கார்த்திகேயன்னு பேர் வச்சோம்” என்று ரகு சொல்லவும்

“இத்தனை நாள் ஏம்ப்பா இவ்வளவு பேசல” என்றவனிடம்

“நாம வளர்ற சூழ்நிலை தான் எல்லாத்துக்கும் காரணம் கார்த்தி.  ஆசாபாசம் யாருக்கு தான் இருக்காது? நான் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆனா, அப்பாவ சின்ன வயசுலயே இழந்தவன்டா நான். எனக்கடுத்து ஒரு தங்கை. அம்மாவ, என் கூடப் பொறந்த தங்கையை பாத்துக்கணும்னு என்னை அறியாமலே என் மேல இருந்த பொறுப்பு  என்னை அமைதியானவனா மாத்தியிருக்கலாம். என்னை விட குறைச்சலா மார்க் வாங்கினவங்க கூட  காலேஜ் சேர்ந்தப்ப, வீட்டு சூழ்நிலையால நான் மில்லுல வேலைக்கு சேர்ந்தேன். இன்னைக்கு வரைக்கும் என் வாழ்க்கைக்கான ஆதாரமா இருந்ததே நான் இத்தனை காலம் வேலை செஞ்ச மில் (பஞ்சாலை) தான்.  அதனால  அது எனக்கு தெய்வம் மாதிரிடா” என்று சொல்லவும்,

அதற்கு மேல் அப்பாவிடம் எதையும் கேட்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தவன், “புரியறதுப்பா”  என்றதோடு, “வீட்டுக்கு போலாமாப்பா?” என்றான்.

“ம்… என்று எழுந்து நடக்க ஆரம்பித்த ரகு, கடைசியா உங்கிட்ட ஒன்னு சொல்லணும். ஆனா, இப்போதைக்கு அதை வீட்டுல யார்கிட்டேயும் நீ சொல்லக் கூடாது. நேரம் வரும் போது  நானாதான் சொல்வேன்” என்று பீடிகையுடன் பேச,

“அப்பா, எதுவா இருந்தாலும் மறைக்காம சொல்லுப்பா” என்றான் கார்த்திக்.

“எனக்கு நுரையீரல் கேன்ஸர் மூணாவது ஸ்டேஜ்டா” என்றதும் கலங்கிப்  போனான் கார்த்திக்.

“எ…ன்…னப்பா சொல்ற?” என்று கண்கலங்கியபடி கேட்க

“எல்லாத்துலயும் ஒரு நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். இத்தனை வருஷமா பஞ்சு மில்லே கதினு இருந்திருக்கேன். எனக்கு கூட பரவாயில்லை. நிறைய பேருக்கு இன்னும் சின்ன வயசுலயே இந்த நோய் வந்திருக்கு. என்னால முடிஞ்சவரைக்கும் குடும்பத்தை காப்பாத்திடுவேன்டா. ஆனா, எனக்கப்பறம் நீதான் பாத்துக்கணும்” என்று அமைதியானார்.

“என்ன, உனக்கும் என்னோட தலையெழுத்தையே குடுத்துடுவனோன்னு  தான் பயமா இருக்குடா“ என்றதும்

“அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாதுப்பா. நான் பாத்துக்கறேன்” என்றவன் அப்பாவுடன்  தேவஸ்தான பேருந்தில் ஏற, இருவரும் அடிவாரம் வந்து அங்கிருந்து காந்திபுரம் பேருந்தில் ஏறி  கல்வீரம்பாளையம் வந்திறங்கினார்கள். அவர்களுக்கிடையே இருந்த சில நிமிட மெளனம் புரிதலையும் அதிகப்படுத்தியது.

“கொஞ்சம் மருந்துக்கடை வரைக்கும் போய்ட்டு வந்துடுவோமா?”

“சரிப்பா”

இருவரும் சேர்ந்து வந்ததைப் பார்த்த கடைக்காரர் ஒரு நிமிடம் யோசிக்க, சூழ்நிலையைப் புரிந்து கொண்ட ரகு, “ஒன்னும் பிரச்சினை இல்ல. பையனுக்கு எல்லாம் தெரியும். மாத்திரையை வாங்கி வச்சுட்டீங்களா?”

“நேத்து மத்தியானமே மாத்திரை வந்துடுச்சு சார். தனியா எடுத்து வச்சுட்டேன்” என்று அடுக்கி தயாராக ட்ரேயில் ஓரமாக வைத்திருந்த மருந்து கவர்களில் ஒன்றை பெயர் சரிபார்த்து எடுத்துக் குடுத்தார் கடைக்காரர்.

உடனே கார்த்திக் மருந்துக் கடைக்காரரைப் பார்த்து, “நீங்களாவது எங்கிட்ட சொல்லியிருக்கலாமில்லண்ணா? என்று கேட்க

“தம்பி, அப்பா தான் தன் வீட்டுல யாருக்கும் தெரியவேண்டாம்னு கேட்டுகிட்டார். ஒவ்வொருத்தர் வீட்டோட சூழ்நிலை ஒவ்வொரு மாதிரி இருக்கும் தம்பி. அதனால நாங்களா எதையும் சொல்றது இல்ல” என்றவரிடம் இருந்த நியாயத்தைப் புரிந்து கொண்டான் கார்த்திக். பின்னர் இருவருமாக வீட்டுக்கு வந்தனர்.

“அப்பாடா…. வந்துட்டீங்களா? என்னாச்சுடா கார்த்திக்? டாக்டர் என்ன சொன்னா?” என்று இருவருக்குமாக தண்ணீரைக் கொடுத்தவாறே கேட்டாள் மைதிலி.

“அப்பாவுக்கு ஒன்னுமில்லம்மா. ஹீமோகுளோபின் கொஞ்சம் குறைவா இருக்கு. நெஞ்சு சளியும்  இருக்கு. ஆன்டிபயாட்டிக் குடுத்திருக்கா. மாத்திரை எடுத்துண்டு நல்லா ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியா போயிடுமாம். சரி…. எனக்கு கொஞ்சம் படிக்க வேண்டியிருக்கு. நீங்க ரெண்டு பேரும் பேசீண்டு இருங்கோ” என்ற கார்த்திக் உள்ளே சென்றான்.

“ஏன் ரொம்ப கிடுகிடுன்னு இருக்கேள்?”  என்றவளிடம்

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்ல. அவன் தான் சொன்னானே. அப்பறம் நீ கார்த்திக்கை  ஒன்னும் கேட்டுக்காத. இனி அவன் பாட்டுக்கு எதையும் நினைக்காம படிப்பான்” என்றவனுக்கு தொடர்ந்து இருமல் வந்தது.

“சரி… ஆனா, நீங்க ஏன் இப்பல்லாம் தொடர்ந்து இருமீண்டே இருக்கேள்? என்னதான் பண்றது? அதைக் கேட்டேளா?” என்றவளிடம்

“வயசாலயா? வெளிய போய்ட்டு வந்தது கொஞ்சம் அசதியா இருக்கு. நான் போய் சித்த நேரம் படுத்துக்கறேன்” என்று தன் அறைக்குச் சென்று படுத்துக் கொண்டார் ரகு.

அதன் பிறகு கார்த்திக் எதைப் பற்றியும் யோசிக்காமல் படிப்பதில் அதிகம் கவனம் செலுத்துவதை மைதிலி கவனிக்கத் தவறவில்லை. கார்த்திக், கிருஷ்ணா பள்ளித்  தேர்வுகளை முடிக்க ரஞ்சனி அந்த வருடம் அவளுடைய முதுகலைப் பட்டத்தை முடித்தாள்.

அடுத்த வருடம் தன் கல்வித்தகுதிக்குள் வந்த எல்லா அரசுத் தேர்வுகளையும் எழுதியவன், ராணுவ வீரர்களுக்கான அரசுத் தேர்வில் வெற்றிபெற்றான்.

அவன் தேர்வில் வெற்றி பெற்றதை முதலில் அவனுடைய நண்பர்கள் வந்து சொல்லி தான் கார்த்திக்கிற்கே விஷயம் தெரிந்தது. உண்மையில் இராணுவத் தேர்வில் தேர்ச்சி அடைந்ததை அவனாலேயே நம்ப முடியவில்லை.

விஷயம் தெரிந்ததும் அப்பாவிடம் போய் தெரிவித்தான் கார்த்திக். ஆனந்தக் கண்ணீரோடு கார்த்திக்கின் தோளைத் தட்டியவர், “நான் தான் சொன்னனேடா.  லைஃப் சயின்ஸ் தான் உன் பலம். எதுக்கும் கலங்க மாட்ட. எதுவா இருந்தாலும் பாத்துக்கலாமங்கற குணத்தால எப்படியும் மேல வந்துடுவன்னு தெரியும்டா” என்று சொல்லவும்

“எல்லாத்துக்கும் தேங்க்ஸ் பா” என்றான் கார்த்திக்.

“போடா. அம்மா, ரஞ்சு, கிருஷ்ணாகிட்ட சொல்லு போ” என்றார் ரகு.

அம்மா சந்தோஷத்தில் வாயடைத்துப் போனாள். முதலில் பதினோரு ரூபாயை எடுத்து குலதெய்வத்துக்கு முடிந்து வைத்தவள்,

“எந்த கண் திருஷ்டியும் இல்லாம நல்லபடிக்கு வேலைல சேரணும். அப்பறமா குடும்பத்தோட எல்லாரும் ஒருதரம் குலதெய்வம் திருச்செந்தூர் முருகனைப் போய் பாத்துட்டு வந்துடணும்” என்றாள் மைதிலி.

“அதுதான. என்னடா நம்ம முருகனை விட்டுவயோன்னு பார்த்தேன். அவருக்கும் எத்தனை வேலைதாம்மா குடுப்ப. நான் நல்லா படிக்கணும், ரஞ்சுவை நன்னா கல்யாணம் பண்ணிக் குடுக்கணும், கார்த்திக் நல்ல வேலைல சேரணும். இப்படி நம்ம வீட்டையே பாத்துண்டு இருந்தா மத்தவாளை அவர் எப்பதான் பார்ப்பார்னு சொல்லு?” என்று கிருஷ்ணா விளையாட்டாய் கிண்டலடிக்க

“நீ பேசலடா. உன் வயசு பேசறது. குலதெய்வம்னா என்ன நெனச்ச? எத்தனை ஸ்வாமி இருந்தாலும் குலதெய்வத்துக்கு இருக்கற சக்தி தனிடா. நம்மாத்து மனுஷாகிட்ட எத்தனை உரிமையா பேசுவோமோ, அப்படி உரிமையா குலதெய்வத்துகிட்ட நம்ம குறையை மனசார சொன்னாலே பாதி பிரச்சனை தீர்ந்து போயிடும். மீதி நம்மளோட முயற்சி. இத்தனை‌ வருஷத்துல நான் கண்ட, அனுபவிச்ச உண்மை இது” என்றாள் மைதிலி.

“அப்படியெல்லாம் இல்லம்மா. நான் நன்னா படிச்சா நல்ல மார்க் வாங்குவேன். இவன் வேலைக்கு அப்ளிகேஷன் போட்டான். அதனால வேலை கிடைச்சது. இது முழுக்க முழுக்க அவங்கவங்க முயற்சி சம்பந்தப்பட்ட விஷயம்” என்ற‌வனிடம்

“இன்னைக்கு வேலை கிடைச்சிருக்கலாம். ஆனா, இதுக்கு அப்ளிகேஷன் போடறதுக்கு ஒரு உந்து சக்தி இருந்திருக்கும் தான. அதைத் தான் கடவுளோட ஆசீர்வாதம்ங்கறது. இதையெல்லாம் விதண்டாவாதம் பண்ணினா புரிஞ்சுக்க முடியாது. வாழ்க்கைல நமக்கு ஏற்படற அனுபவப்பாடம் தான் நிறையவே நமக்கு கத்துக் கொடுக்கும்” என்றாள் மைதிலி.

ஒரு நிமிடம் கார்த்திக்கும் ரகுவும் ஒருவரையொருவர்  பார்த்துக் கொள்ள,  “விடு மைதிலி. அவன் சின்ன பையன். அவங்கிட்ட போய் எல்லாத்தையும் விளக்கீண்டு” என்றார்.

“இல்லண்ணா. இப்படி பெரியவா நாம விட்டு விட்டு தான், இன்னைக்கு எந்த விஷயத்தையும்  முழுசா தெரிஞ்சுக்காம, அரைகுறையா தப்பா புரிஞ்சுண்டு அதைப் பெருமையா வேற எல்லார்கிட்டயும் சொல்லீண்டு திரியறா. என்னால முடியும்ங்கற நம்பிக்கை இருக்கறது சரி. என்னால மட்டும் தான் முடியும். யாரோட உதவியும் தேவையில்லைங்கற மனப்பான்மை இன்னைக்கு நெறைய பேர்கிட்ட பார்க்க முடியறது. அதைத் தான் தப்புன்னு சொல்றேன். கை நிறைய காசு இருந்தாலும் எடுத்து சாப்பிட கை வேணும். அதனால எப்பவும் பணிவோட, “ஆண்டவா நீயே கூட இருந்து  வழிநடத்து”னு சொல்லி நம்ம வேலையை செஞ்சா, அந்த காரியம் நல்லபடியா நடக்கும். அது கடவுள் மேல நாம வக்கற பக்தியா இருந்தாலும் சரி, இல்ல எனக்கு மீறி ஒரு சக்தி இருக்குன்னு நான் நெனக்கற அந்த எண்ணம் குடுக்கற பலமா இருந்தாலும் சரி. ரெண்டுமே நல்லதுதான” என்றாள் மைதிலி.

“சரி… சரி… விடும்மா” என்ற கார்த்திக்கின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டவள், “நம்ம தான் நல்லா படிக்கறோம்னு இவனுக்கு திமிரு இருக்குடா. அது நல்லதுக்கில்ல” என்றவளை

“உங்கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன். எனக்கு ட்ரெயினிங் பிரியர்ட் ஹரியானா கண்ட்டோன்மென்ட்டில் போடுவாளாம். அப்பறம் போஸ்டிங்  வேற எங்கயாவது   இருக்கும்னு கேள்விப்பட்டேம்மா ” என்று பேச்சை மாற்றினான் கார்த்திக்.

“எந்த ஊரா இருந்தா என்னடா? இந்தியாவுல தான இருக்கு. நல்லபடியா போய்ட்டு வருவயாம். அப்பறம் இன்னைக்கு நைட் நாம எல்லோரும் சேர்ந்து ஹோட்டல் போய்ட்டு வரலாம்னு உங்கப்பா சொன்னார்டா” என்ற மைதிலி, “எனக்கென்னமோ உங்கப்பா எதையோ நம்மகிட்ட மறைக்கறாளோன்னு தோன்றதுடா. எப்பவும் அதிகம் பேசாதவர் இப்பப்ப கொஞ்சம் பேசறார். குடும்பத்தோட வெளியில போகலாங்கறார், தன்னோட  ரூமை விட்டே பெருசா வெளிய வராத மனுஷன். ஒருவேளை நீ ஊருக்குப் போறது துக்கமா இருக்கோ  என்னவோ. சொல்லித் தொலைச்சா தான் முத்து உதிர்ந்திடுமே” என்று தான் அனுமானித்தைச் சொன்னாள்.

இருவரும் குழந்தைகள் மூலம் பேசிக்கொள்வது கூட ஒரு அந்யோன்யம் என்பதைப் புரிந்தவன், “இத்தனை பேசற நீ அப்பாகிட்ட ஏம்மா பெருசா பேச மாட்டேங்கற” என்றவனிடம்

“ஆமாண்டா. இப்ப தான் நேத்து கல்யாணமாகி இன்னைக்கு மாமியார் ஆத்துக்கு வந்திருக்கேன் பாரு. வரன் அமைஞ்சு நம்ம ரஞ்சுவுக்கு கல்யாணமானா மாமியார் ஆகப் போறேன். இப்ப உட்கார்ந்து உங்க அப்பாவோட ஜாலியா பேசீண்டு இருக்கறது ஒன்னு தான் குறைச்சல். பேசற காலத்துலயே ரொம்ப பேசீட்டேன் பாரு” என்று தன் நிறைவேறா ஆசையை ஒரு வார்த்தையில் சொன்னவள், “உங்க எல்லாருக்கும் நல்லபடியா என் கடமையை முடிச்சா சரி” என்று விழியோரம் வந்த கண்ணீரைத் தன் புடவைத் தலைப்பால் துடைத்தபடி அடுத்த வேலையைப் பார்க்கப் போனாள் மைதிலி.

‘அம்மாவிடம் அப்பாவின் உடல்நிலையைப் பற்றி சொல்லலாமா?’ என ஒரு நிமிடம் யோசித்த கார்த்திக், பிறகு வீட்டில் தற்போது இருக்கும் சந்தோஷமான மனநிலையைக் கெடுக்க வேண்டாம் என நினைத்தவனாய் விட்டுவிட்டான். ஆனால் அப்பாவை நல்ல டாக்டரிடம் சிகிச்சைக்கு சீக்கிரமே அழைத்துச் செல்ல வேண்டும் என்று மட்டும் உறுதி எடுத்துக் கொண்டான்.

“எப்பவும் சுமாரா தான படிப்ப. எப்படிடா நீயெல்லாம் கவர்மென்ட் எக்ஸாம்ல செலக்ட் ஆன? அவ்வளவு ஈஸியாவா  கேள்வி கேட்டாங்க“ என்று  கிருஷ்ணா விளையாட்டாய்க் கேட்க

சிரித்துக் கொண்டே, “அதை கவர்மென்ட்கிட்ட தாண்டா போய் கேக்கணும். நான் நல்லா எழுதினேன். கிடைச்சுது. ‌அவ்வளவுதான்” என்றவன் தன்னுடைய இராணுவப் பயிற்சிக்குக் கிளம்பத் தயாரானான்.

வீட்டிலிருந்து பருப்புப் பொடி, இட்லி மிளகாய்ப் பொடி, தேங்காய் மிளகாய்ப் பொடி, ஊறுகாய் வகைகள், வடகம், புளிக் காய்ச்சல் என கார்த்திக்கின் துணிமணி பைகளுக்கிடையில் தான் கட்டிவைத்த ஒரு பெரிய சாப்பாடுக் கூடையையும் சேர்த்து எடுத்து வைத்தாள் மைதிலி.

“ஏம்மா, இவ்வளவு பையை நான் எப்படிம்மா தூக்கீண்டு போவேன்?” என்றவனிடம்

“ஊருக்குப் போனா ட்ரெயினிங்’க்கு நடுவுல வீட்டுக்கெல்லாம் விட மாட்டான்னு சொன்னயே. அங்க எல்லா இடத்துலயும் சப்பாத்தி, பூரி தான் கிடைக்குமாம். இங்கேத்து மாதிரி இட்லி, தோசையெல்லாம் கிடைக்காதாம். முடிஞ்ச போது அரைஉழக்கு சாதம் மட்டும் வச்சுண்டா பருப்பு பொடி, தயிர் சாதமாவது சாப்பிடுவ. எதுவும் கிடைக்கும் போது அருமை தெரியாது. கிடைக்காம இருக்கும் போது தேவாமிர்தமா இருக்கும்” என்றவள்

“ஒரு டிகிரி முடிச்சுட்டு வேலைக்குப் போயிருந்தா கூட எனக்குத் தெரியாதுடா கார்த்தி. ப்ளஸ் டூ முடிஞ்சதும் இப்படி உடனே இராணுவத்துல சேருவன்னு எதிர்பார்க்கலடா. நான் தான் உன்னை நெனச்சு பைத்தியக்காரி மாதிரி பாசத்தைக் கட்டீண்டு அழுதுண்டு இருக்கப் போறேன். நீங்க எல்லாரும் பேரும் ப்ராக்டிகலா தான் இருக்கேள்” என்றாள் மைதிலி.

“இந்த ட்ரெயினிங் பிரீயட் முடிஞ்சதும் நம்ம எல்லாரும் குவார்ட்ஸ்’க்கு போயிடலாம்மா. அப்பறம் நேரம் கிடைக்கும் போது ஃபோன் பேசறேன். நீ அழாம என்னை வழியனுப்பும்மா. இல்லண்ணா எனக்கு அங்க இருக்கவே ஒட்டாது” என்றவனிடம்

“சேச்சே……ஏதோ மனசு கேக்காம அழுதுட்டேன். இனி அம்மா அழமாட்டேன். வாழ்க்கைல நீ இன்னும் மேல மேல நன்னா வருவடா. நல்லபடியா போய்ட்டு வா” என்று கார்த்திக்கை கட்டிக் கொண்டாள் மைதிலி.

எல்லோரும் பஸ் ஸ்டாப் வரை வந்து வழியனுப்ப, அம்மா, அப்பா, ரஞ்சனி மற்றும் கிருஷ்ணாவை விட்டு தனியாக வடஇந்தியா போவதை எண்ணி தனக்குள் உள்ளூர ஒரு பயம் இருந்த போதிலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாதவனாய் வாழ்வின் அடுத்த கட்ட பயணத்துக்கு தயாராகினான் கார்த்திக்.

இந்த தொடர்கதையின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வாராயோ வெண்ணிலாவே (பாகம் 2) – சுபாஷினி பாலகிருஷ்ணன்

    தமிழன்னையே (கவிதை) – பாலாஜி ராம்