எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஹாலிலுள்ள கடிகாரம் எட்டு முறை அடித்து ஓய்ந்தது. வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. இந்த நேரம் யாராக இருக்கும் என்று யோசித்தவாறே கதவை திறந்தாள் வசந்தி..
“ஸ்ரீ..” என்று ஆச்சரியப்பட்டவள். “வாம்மா ஆபீஸிலிருந்து நேர வர்ரியா… மாப்பிள்ளை வரலையா?” என்று கேட்ட அம்மாவை எரிச்சலோடு பார்த்தாள் ஸ்ரீநிதி..
“மாப்பிள்ளை ஊர்வலத்தில வர்றாரு… ஆரத்தி கரைச்சு ரெடியா வச்சுக்கோ!” என்று கடுப்பாக சொல்லிவிட்டு, ஹாலில் உட்கார்ந்திருந்த அப்பாவிடம் கூட எதுவும் பேசாமல் செருப்பை வேகமாக உதறிவிட்டு மாடிப்படி ஏறினாள்.
“என்னங்க இது.. பழையபடி மாப்பிள்ளைக்கும் இவளுக்கும் சண்டை போலிருக்கே” என்ற வசந்தியிடம் தேவராஜ்…
“நீயா எதுவும் கேட்காதே.. தானா சொல்லட்டும்.” என்றார்.
மகளை கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட்டு நிம்மதியாக காலம் கழிக்கலாம் என்று நினைத்த வசந்திக்கும், தேவராஜ்க்கும் பெரிய ஏமாற்றம். சின்ன சின்ன காரணங்களுக்கெல்லாம் சண்டை போட்டு விட்டு பிறந்தகம் வருவது… பிறகு சமாதானமாகி தன் வீட்டுக்குப் போவது… அடிக்கடி நடக்கத்தான் செய்கிறது… என்றாலும் ஒவ்வொரு முறை வரும்போதும் கலங்கித்தான் போனார்கள் இருவரும்.
வசந்தி மாடிப்படியேறி ரூம் கதவை தட்டப் போனபோது அவள் தன் பிரெண்ட் நித்யாவிடம் பேசிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது…
“முட்டாள்… ஈகோயிஸ்ட்… இவன் இஷ்டத்துக்குப் பேசிக்கிட்டே இருக்கான்டி …என்னமோ இவனுக்கு மட்டும் தான் வேலை இருக்கிற மாதிரி. கம்பெனியே இவன் தலை மேல தான் ஓடுதுன்னு நெனப்பு. சனிக்கிழமை பார்ட்டிக்கு வர முடியுமான்னு தெரியலங்கறான். என் பிறந்தநாளை விட இவனுக்கு வேலை முக்கியமா போச்சாடி போடா ன்னு கத்திட்டு அம்மா வீட்டுக்கு வந்துட்டேன். பேசாம நோட்டீஸ் கொடுத்துடலாம் தோணுது” என்று வித்யாவிடம் பொரிந்து தள்ளினாள்.
வசந்திக்கு அடி வயிறு கலங்கியது. மாப்பிள்ளை விக்னேஷ் ரொம்ப நல்லவன்.. அன்பானவன்.. வேலை அதிகமாக இருந்திருக்கும்.. அதனால் தான் அப்படி சொல்லியிருப்பான் என்று புரிந்து கொண்டாள். ஆனால் அதை ஸ்ரீயிடம் சொல்ல முடியாது. அவனுக்குப் பரிந்து பேசினால், அதற்கும் தாம்தூம் என்று குதிப்பாள் என்று எண்ணியவாறே கதவை தட்டாமல் கீழே இறங்கினாள்.
###########
மதியம் அலுவலகத்தில் விக்னேஷ் சாப்பிட கிளம்பினான். தாரிகாவும் கிளம்பினாள்.
“என்ன விக்கி! ரொம்ப டல்லா இருக்க… ஸ்ரீ கூட சண்டையாப்பா… நான் உன் பெஸ்ட் பிரெண்ட். என்கிட்ட சொல்றதுக்கு என்னடா?” என்றாள்.
“என்னத்த சொல்ல தாரிகா! என் கஷ்டத்தை ஸ்ரீ புரிஞ்சுக்க மாட்டேங்குறா.. போன மாதம் டீம் மீட்டிங்ல இப்போ போய்கிட்டு இருக்கே அந்த பிராஜக்ட் டெட்லைன் அடுத்த மண்டே. அதுக்குள்ள கண்டிப்பா முடிக்கனும்னு டீம் லீடர் சொல்லிட்டாரு. சனி, ஞாயிறு உட்கார்ந்து ஒர்க் பண்ணினா கூட முடிக்க முடியுமான்னு தெரியல. முக்கியமான கிளையண்ட்… முக்கியமான ப்ராஜக்ட்… ஏதாவது தப்பு பண்ணினா கேரியர்ல பாதிப்பு வரும். பிறந்தநாளை வீட்ல கேக் கட் பண்ணி கொண்டாடிட்டு.. சண்டே ஈவினிங் பார்ட்டிய வச்சுக்கலாம்ன்னு சொன்னா அதுக்கு கோபப்பட்டுகிட்டு அம்மா வீட்ல போய் உட்கார்ந்திருக்கா.. என்னோட கஷ்டத்தை அவ என்னைக்குமே புரிஞ்சுகிட்டது கிடையாது. அவ விஷயம் தான் அவளுக்கு எப்பவுமே பெருசு” என்றான் வருத்தமாக ..
“சரி விடு! அவளுக்கு தெரிந்தது அவ்வளவுதான். அவளும் ஐடி ஃபீல்டுல இருக்கறா… உன் கஷ்டம் அவளுக்கு புரிய வேண்டாமா? எல்லாம் பார்த்துக்கலாம். நீ சாப்பிட வா..” என்றாள் தாரிகா.
சனிக்கிழமை ஸ்ரீயின் பிறந்தநாள்.. புது ட்ரஸ் போட்டுக் கொண்டு அப்பா, அம்மாவுடன் கோயிலுக்குப் போய் வந்தாள். செல்போனை எடுத்துப் பார்த்ததில் 10 மிஸ்டு கால் ..விக்கி நம்பர்… கரெக்டாக இரவு 12 மணிக்கு கூப்பிட்டு இருந்தான்.
மெசேஜ் மூலம் வாழ்த்துச் செய்தியும் அனுப்பியிருந்தான். பிரண்ட்ஸ் எல்லோரும் போனில் விஷ் பண்ண.. ஸ்ரீ அன்று பூராவும் பிஸியாக இருந்தாள். வசந்திக்கு தன் மகள் மனதில் சந்தோஷம் இல்லாதது புரிந்தது. இந்த பெண் எதற்காக தானும் கஷ்டப்பட்டு, கணவனையும் கஷ்டப்படுத்துகிறாள் என்று நினைத்துக் கொண்டாள்.
####################
மாலை பிரண்ட்ஸ் எல்லோரையும் இன்வைட் பண்ணி விட்டு ஹோட்டலுக்கு டின்னருக்கு கிளம்பினாள்
‘இந்தக் குட்டி ஹால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது “ஹாப்பி பர்த்டே ஸ்ரீ ” என்ற வாசகங்கள் வரவேற்றன. அழகானதொரு கேக் மேஜைமேல் வைக்கப்பட்டிருந்தது . பலூன் தோரணங்கள் அழகை மேலும் கூட்டியது. இதை எதிர்பார்க்காத ஸ்ரீ ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள்
“ஹேப்பி பர்த்டே டு யு ஸ்ரீ” பிரண்ட்ஸ் எல்லோரும் வாழ்த்து பாட… ஸ்ரீ நெகிழ்ந்து போனாள். பிரண்ட்ஸ் இவ்வளவு ஏற்பாடுகள் பண்ணி இருந்தது அவளை கண்கலங்க வைத்தது .இருந்தாலும் விக்கி இல்லாதது ஒரு பெரிய குறையாக தெரிந்தது.
“ஸ்ரீ …உனக்கொரு சர்ப்ரைஸ் கிப்ட்” சொன்ன தோழிகள் சடாரென்று விலக.. அங்கே விக்கி நின்று கொண்டிருந்தான். விக்கியை பார்த்ததும் பிரமித்துப் போனவளாய்.. ஓடிப்போய் அவனை கட்டிக் கொண்டு கண்கலங்க “ஐ லவ் யூ டா …மிஸ் யூ டா …” என்றாள்.
“ஹாப்பி பர்த்டே கண்ணம்மா..” என்றவன் தன் கையில் இருந்த சிறு பெட்டியைத் திறந்து அதில் இருந்த அழகான வைர மோதிரத்தை அவள் கையில் போட்டு விட்டான்.
“ஸ்ரீ.. இந்த பார்ட்டி ஹால் ..கேக்.. டெக்கரேஷன்.. எல்லாம் ஏற்பாடு பண்ணினது விக்கி தான்” என்று பிரண்ட்ஸ் கூற, ஸ்ரீயின் கண்களில் ஆனந்த கண்ணீர்.
வீட்டில் ஸ்ரீயின் அம்மா வசந்தி தன் கணவனிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.
“இந்த தலைமுறை பிள்ளைகளை புரிஞ்சிக்கவே முடியலை.. அன்புனாலும் சரி.. சண்டை போட்டாலும் சரி.. எல்லாமே எக்ஸ்ட்ரீம் தான்…ஒவ்வொரு நாளும் நாம தான் பயந்து பயந்து நாளைக் கழிக்க வேண்டியிருக்கு”
டின்னர் சந்தோஷமாக முடிந்தது. வரமாட்டேன்னு சொன்ன கணவன் எப்படி வந்தான் என்று ஸ்ரீ யோசிக்கவில்லை. அவள் யோசிக்க மாட்டாள்… என்பது விக்கிக்குத் தெரியும்.
வெள்ளிக்கிழமை காலை ஆபீஸ் போனவன், இரவு முழுவதும் அங்கேயே தங்கி, சனிக்கிழமை மாலை வரை ஆபீஸிலிருந்து வேலை பார்த்து விட்டு நேராக ஹோட்டலுக்கு வருகிறான்.
ஸ்ரீ யையும் திருப்திபடுத்த முடிந்தது. மனதிற்குள் எல்லா ஏற்பாடுகளையும் அவன் பேரில் பண்ணிய தாரிகாவிற்கு நன்றி சொல்லிக் கொண்டான்.
பார்ட்டி முடிந்ததும் ஸ்ரீ அம்மாவுக்கு போன் பண்ணினாள்.. “அம்மா விக்கி வந்திருக்கான்ம்மா …அவன் என்ன ரொம்ப மிஸ் பண்ணியிருக்கான். எனக்கு அருமையான கிப்ட் பிரசண்ட் பண்ணி இருக்கான். நான் நேர அவன் கூட என் வீட்டுக்கு போறேன். அப்பாகிட்ட சொல்லிடு, நாளைக்கு பேசுகிறேன் காரை கூட நான்தான் டிரைவ் பண்ண போறேன்” என்றாள்.
பேசிவிட்டு சந்தோஷமாக காரை ஸ்டார்ட் பண்ண… பக்கத்தில் உட்கார்ந்திருந்த விக்கி எப்போதோ தூங்கிவிட்டிருந்தான். வசந்தியும் மகள் அடுத்த சண்டை போட்டுவிட்டு வீட்டுக்கு வரும் வரை நிம்மதியாக தூ ங்குவாள்.
எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings