எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷன் எப்போதும் போல பரபரப்பை அப்பிக் கொண்டிருந்தது. இன்ஸ்பெக்டர் நிரஞ்சன் சுறுசுறுப்பாக வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு வாரத்துக்கு முன் நடந்த திருட்டுக்கேஸ் அவரை ரொம்பவே சோதித்துக் கொண்டிருந்தது.
திருட்டுப் போனது மந்திரியின் பினாமி வீடு என்பதால் பரபரப்பாக இருந்தது.. திருடியவன் பணத்தை மட்டும் திருடியிருந்தால் பரவாயில்லை, அத்துடன் முக்கியமான ஒன்றையும் சேர்த்துக் கொண்டு போய்விட்டான். அவனைப் பிடிக்கச் சொல்லி நிரஞ்சனுக்கு விடாத பிரஷர்..
அப்போதுதான் ஹெட் கான்ஸ்டபிள் முகுந்தன் “ஐயா யார புடிச்சா அந்த சேகர் பய இருக்கிற இடத்த கண்டுபிடிக்கலாம்ன்னு எனக்குத் தெரியும்” என்று சொல்லிவிட்டுப் போனவர், காளியை கையோடு கூட்டி வந்தார்.
போலீஸ் ஸ்டேஷன் வாசலில் படுத்துக்கிடந்த தெருநாய் காளியை முறைத்தது.
“இந்தா இன்னாத்துக்கு முறைக்கிற.. உன்கு என்ன வசதியான எடத்துல வந்து குந்திக்கின.. வேளா வேளைக்கு பிரியாணி துன்னுட்டு சொகமா படுத்துக்கிடக்க”
“ஏய் காளி அங்க என்ன வேடிக்கை பார்த்துகிட்டிருக்க உள்ள வா”
நய்ஞ்சு போன, கட்டம் போட்ட கைலியும், அழுக்கான ஒரு டி-ஷர்ட்டுடன் தன் முன் நின்ற காளியை இன்ஸ்பெக்டர் நிரஞ்சன் எரிச்சலுடன் பார்த்தார்..
“சார்ர்ர்.. இன்னாத்துக்கு என்ன புச்சாந்திருக்கீங்க. போன தபா அரெஸ்ட்டாயி ஆறுமாசம் உள்ள கெடந்தேன்.. அப்பாலே நீங்க அட்வைஸ் பண்ணி, இப்போ ஒய்ங்கா ஒரு பொட்டி கட வைச்சு பிழைச்சுகினு கீரேன்.. என் பொஞ்சாதியும் ஒய்ங்கா இரு.. இல்லாங்காட்டி ஆத்தா வீட்டுக்கு புள்ளிகள கூட்டிக்கினு போயிடுவேனு மிரட்டுச்சு.. அப்பாலேயிருந்து எந்த தப்பு தண்டாவுக்கும் போறதில்ல. நா உண்டு எங் கட உண்டுன்னு பொழச்சுகினு கீரேன்”
“டேய்.. முதல்ல கைலிய இறக்கி கட்டு.. அய்யா முன்னாடி எப்படி மரியாதையா பேசணும்னு தெரியாதா?” என்றார் முகுந்தன்.
அவசரமாக தன் கைலியை இறக்கி விட்டு, கையை முன்னே கட்டி, பவ்யமாக முதுகை வளைத்து நின்றான் காளி.
நிரஞ்சன் “இருங்க முகுந்தன்.. காளி உன்ன வர சொன்னது வேற ஒரு விஷயத்துக்காக. உங்க கூட்டத்துல, உன் தோஸ்த் ஒருத்தன் சுத்திகிட்டிருப்பானே”
“ஆரு சாரு.. பிளேடு பக்கிரியா.. பட்டாப்பட்டி பரமுவா.. இல்ல ஜேப்படி செல்வமா?”
“அட அவன் இல்லப்பா.. ஆளு பாக்க தோரணையாக இருப்பானே.. சுருட்ட முடியும் மீசையுமா”
“ஐயா.. சோக்கு சேகரவ சாரிக்கீங்கன்னு நினைக்கேன்”
“அவனேதான்.. உனக்கு கண்டிப்பா அவன் இருக்கிற இடம் தெரிஞ்சிருக்கும். அவன் மேல ஒரு திருட்டு கேஸ் இருக்கு”
“ஐய்யா.. ஆத்தா மேல சத்தியம். எனக்கு அந்த பய எங்கிட்டு கீரான்னு தெரீல.. ஒரு பெரீய எடத்துல கார் டிரீவரா வேலிக்கு சேந்தான்.. அப்பால ஒரு பெரிய அமௌண்ட ஆட்டையப் போட்டுட்டு ஓடிபுட்டான்.. அதுக்கப்பால சோக்கு கண்ணில படீலங்கய்யா”
“காளி இப்ப நீ திருந்தி வாழ்ற. அதனாலதான் நான் உன்ன கூப்பிட்டு நல்லபடியா விசாரிக்கிறேன். அவன் இருக்கிற இடத்தை துப்பு கொடுத்தா.. உனக்கு 10,000 ரூபா பணப்பரிசு வாங்கித் தாரேன். முக்கிய புள்ளியோட வீட்டுல திருடியிருக்கான்.. அவனை எப்படியாவது புடிக்கணும்”
“ஐயா சத்தீம்மா நான் அந்தப் பயல இந்த ஏர்யால பாக்கல அவன் நடமாட்ற ஒன்னு ரெண்டு இடம் தெரியும்ங்கய்யா.. சாரிச்சிட்டு அப்பாலே உங்க கையில சொல்லுதேன்”
“சீக்கிரமா சொல்லு.. நாங்களும் விசாரிச்சிட்டுதான் இருக்கோம். அவன் இருக்கிற இடம் தெரிஞ்சதும், அவனை கோழி அமுக்கற மாதிரி அமுக்கிடுவோம்ல”
################
சிந்தனையில் ஆழ்ந்திருந்த காளியைப் பார்த்து சின்னத்தாயி “என்னைய்யா மோட்டு வளையப் பாத்துகினு உக்காந்திருக்க”
“ஒன்னுமில்லடீ சீக்கிரம் சோத்தப் போடு துன்னுட்டு வெளியே போவனும். ஒரு சோலி கிடக்கு. மத்தியானம் கடையில சித்த ஒக்காந்து கிட” சின்னத்தாயி தலையசைத்தாள்.
சாப்பிட்டு முடித்த காளி நேரா குப்பத்துக்குப் போனான். பக்கிரியிடம் “அண்ணாத்த நம்ம சோக்கு சேகர எங்கனாச்சும் பாத்தியா?”
“என்னாச்சு காளி.. திடீர்னு சோக்க சாரிக்கிற”
“கைமாத்தா துட்டு கேட்டுருந்தேன். தரேன்னு சொல்லுச்சு.. ஆள காணும்.. வழக்கமா நம்ப நாயக்கர் டீக்கடையாண்ட இருக்கும்.. காங்கல. ஒனக்கு தீரிஞ்சிருக்கும்ன்னு நெனச்சேன்”
“இல்ல காளி.. முன்னெல்லாம் நேரம் கெடச்சா சோக்கு இங்கிட்டுத் வந்துகினு இருப்பான். கேரம்.. சீட்டு.. வெள்ளாடுவோம். ஆனா இப்ப கொஞ்ச நாளா ஆள காங்கல செயில்லேந்து வந்ததிலேந்து எங்க கீரான்னு தெரீல.. ஏதாவது சம்பவம் பண்ணிட்டு தலைமறவா கீரானோ.. முத்துப்பயலாண்ட கேட்டுப்பாரு அவனுக்குத்தான் ஆரு ஆரு எங்க கீராங்கன்னு அத்துபடி”
அடுத்து காளி முத்துவை தேடிப் போனான்.. முத்துவும் கையை விரித்து விட, வழக்கமான எல்லா இடத்திலும் தேடியும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
அதற்குள்ளேயே முகுந்தன் ரெண்டு தடவை போன் பண்ணி விட்டார்.. துப்புக் கொடுத்தா பணத்துக்கு பணமும் கிடைக்கும்.. போலீசுக்கு நம்ம பேர்ல நம்பிக்கையும் வரும்.. என்று எண்ணம் மனதில் ஓடியது.
சாயங்காலம் போல வந்து சேர்ந்தவன் ..”சின்னத்தாயி நாளிக்கு வெள்ளேன பக்கத்தூரு போயி சாமான்செட்டு வாங்கியாரேன்.. நீ வரியா புள்ள”
“நீ போயிட்டு வாய்யா, எங்க சின்னாத்தா இப்பவோ அப்பவோன்னு கிடக்குது. போய் சேர்ரதுக்குள்ள ஒரு நடை பாத்துட்டு வந்துடுதேன். கடைய தம்பி பாத்துக்கிடும்”
பேருக்கு பெட்டிக் கடை வைச்சிருந்தாலும், அப்படி இப்படி கொஞ்சம் ஆட்டையப் போட்ட பணம் கையிலிருக். வசதியாகத் தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது காளிக்கு. பெட்டி கடை இருப்பதால், போலீஸ் சந்தேகமும் தன் பேரில் திரும்பாது என்ற கணக்கு அவனுக்கு.
மறுநாள் போய் சோலிகளை முடித்துவிட்டு கடைத் தெருவுக்கு சாப்பிட வந்தவனை, “டேய் மருமவனே எப்படே வந்த.. சின்னத்தாய் வரலையா?” காளி திரும்பிப் பார்க்க.. மாமா.
“சோலி முடிஞ்சி போச்சு மாமு.. துன்னுட்டு ஊருக்கு போவனும். பஸ்ஸு ரெண்டு மணிக்கு, அத புச்சா ரெண்டு அவர்ல ஊர் போய் சேந்திடலாம்”
“டே மாப்ள.. நா டெம்ப்போல சாமானை ஏத்திட்டு போறேன்.. உங்க ஊரு வழியா பைபாஸ்லதான் போவோணும் போகையில இறக்கி விட்டுடுதேன்”
இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.. “மாப்ள இந்த ஊர்ல டெண்டு கொட்டால்ல ஒரு டிராமா நடக்குதாம். அந்த நடிக சலசானு பேரு.. அழகா ஆட்டம் போடுதாளாம்.. நடிப்பு பிரமாதமாம்.. பாத்துட்டு ஊருக்கு போவோம்டே”
“சரிதான் மாமு.. எனக்கும் அவசரமா ஒன்னும் சோலியில்ல”
டிக்கெட் வாங்கி தரையிலமர்ந்த மாமனும், மருமகனும் டிராமாவ.. அதுவும் குறிப்பா சலசாவை ரசித்துப் பார்க்க ஆரம்பித்தனர்.. டிராமாவின் நடுவே வந்த போலீஸ் வேடக்காரனை எங்கோ பாத்த மாதிரி இருந்தது. அதுக்குப் பொறகு மனம் நாடகத்தில் போகவில்லை காளிக்கு.”பாத்த மூஞ்சியாகீதே”
“மாமு ஒரு பீடிய வலிச்சிட்டு வரேன்”
“இப்ப பாத்து போறீய மாப்ள, சலசா தனியாட்டம் ஆடுவா”
“நீ பாரு மாமு நான் வரேன்” என்றவன், கொட்டகையின் பின்னாடி வந்தவன், உள்ளேயிருந்து வந்த அந்த போலீஸ் வேடக்காரனை அருகில் பார்த்தும் அடையாளம் கண்டு கொண்டான்.
“டேய் மாப்ள.. சோக்கு சேகர்.. போலீசு வேசங்கட்டி நாடகத்துல நடிச்சிட்டிருக்க. உன்னியத் தேடி ஊரெல்லாம் அலைஞ்சுகினு கெடக்கேன்”
அதிர்ந்து போன சேகர் “பேசாமயிரு காளி.. நான் ஆருன்னு வெளிய காமிக்காம இருக்கன். காம்பிச்சுக் குட்த்துடாதே.. போலீசு என்ன தேடிக்கினு இருக்கானுவ. அவனுக கையில மாட்டாம தெனத்துக்கொரு எடமா அலைஞ்சுகினு கீரேன்”
“சரி அப்டிக்கா மரத்துக்கு பொறத்தால வா..ஒரு விசயம் பேசணும்”.
மரத்துக்கு பின்னால் போய் அவனிடம் பேசிக் கொண்டிருந்த காளி சட்டுடென்று, பாக்கெட்டில் சாமான் கட்ட வைத்திருந்த கயறை எடுத்து அவனை மரத்தைச் சுற்றிக் கட்டினான்.
“சோக்கு வாய தொறக்காத.. கத்துனா நீ ஆருங்கிறத வெளியில சொல்லிப்புடுவேன். நல்லதுக்குத்தான் சொல்லுதேன் பேசாமயிரு”
பிறகு அவசரமா “மாமு சீக்கிரம் வாய்யா.. உம்மோட டெம்போவ இந்த நாடக கொட்டடைக்கு பொறத்தால எடுத்துட்டு வா” என்றான்
அவனுடைய குரலில் இருந்த பரபரப்பை உணர்ந்து கொண்ட மாமா டெம்போவை எடுத்துக் கொண்டு கொட்டகையின் பின்னால் வந்தார். சேகரை டெம்போக்குள் ஏத்தி கயிறால் இறுகக் கட்டியவன் “மாமு போ சீக்கிரம்” என்றான்.
“ஆரு மாப்ள.. இவன் கத்தி ஊர கூட்டுனா நாம் மாட்டிக்கிடுவோம்” என்றார் பதட்டமாக
“அத்ல்லாம் கத்த மாட்டான். நீ பைபாஸ்ல விடு.. நான் இவன பாத்துகிடுதேன்”
பைபாஸ்ஸில் அவர்களை இறக்கி விட, கயிரை இறுக கையில் பிடித்துக் கொண்டு, சோக்குவை இழுத்துக் கொண்டு நடந்தான் காளி. ரொம்ப பிசியா இருந்த சாலையில் அங்கும் இங்கும் போய்க்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் நின்று நிதானமாக இவர்களை வேடிக்கைப் பார்த்தனர். சேகரை போலீசு என்று நினைத்த சனங்கள்..
“போலீஸ்காரரை எப்படி ஒரு சாதாரண ஆளு புடிச்சி இழுத்துட்டு போறான்”னு வியர்ந்தனர்..
அவர்கள் வியப்பே காளிக்கு ஏதோ சாதனை பண்ணியது போல சந்தோஷத்தை கொடுத்தது. ‘எத்தினி தடவ போலீசு நம்ம இழுத்துக்கினு போயிருக்கு. இன்னைக்கு உண்ம்ம போலீஸ இழுத்துகினு போக முடீலன்னாலும், போலீசு வேசத்துலயிருக்கும் இவனயாவது இழுத்துக்கினு போவ முடீயுத’ என்று சந்தோஷப்பட்டு கொண்டான்.
“டேய் காளி என் கையில ராங்கு கட்டாத “
“சோக்கு பேசாம வா.. சவுண்டு விட்ட இடுப்புல பாத்தியா வாழத்தாறு வெட்டுற அருவா.. சீவி புடுவேன். உன்ன புட்ச்சு குடுக்க சண்ட போட்டதில வெட்டு விழுந்திருச்சுன்னு சொல்லி தப்ச்சிடுவேன்”
போலீஸ் ஸ்டேஷனுக்குள் நடந்த காளி, இன்ஸ்பெக்டர் நிரஞ்சனிடம்..
“ஐயா.. சோக்கு சேகர புட்ச்சு இட்டாந்துட்டேன். எம்புட்டு கஸ்டப்பட்டு புடிச்சாந்திருக்கேன் தெரீமா?”
“சரியான வேலை பண்ணியிருக்க காளி! எங்களுக்கு டிமிக்கி கொடுத்துட்டு இருந்தவன நீ பிடிச்சிட்டிய கெட்டிக்காரன் தான்”
“சாமி.. துட்டு குடுத்தா என் கடைக்காச்சும் ஆவும். என் பொஞ்சாதி தெனமும் சாவடிக்கிறா”
“கண்டிப்பா வா உனக்கு ஒரு வாரத்துக்குள்ள சொன்ன பணத்த தந்துடுவோம்” என்று மகிழ்ச்சியுடன் சேகரை ஜெயிலுக்குள் தள்ளினர். தேடிக் கொண்டிருந்த முக்கியமான கைதி சிக்கிய சந்தோஷத்தில், பிரியாணி மற்றும் இதர மரியாதையுடன் காளியை வழியனுப்பி வைத்தனர்.
காளி வீடு வந்து சேர்ந்தான். போலீஸ் குடுக்கும் துட்டுல பாதி சோக்கு பையலுக்கு போயிடும். ஆனா நான் அவனோட போட்ட டீல் இருக்கே.. செம.. மரத்துக்குப் பின் போய் சோக்குடன் பேசியது நினைவுக்கு வந்தது..
“சோக்கு நீ எத்தனி நா தப்ச்சு ஓடுனாலும், போலீசு பெரிய பட அமைச்சிருக்கானுவ. நீ திருட்னது பெரிய வூட்ல. ஏதோ முக்கியமானத எடுத்துகினு வந்துட்டேன்னு டேசன்ல பேசிகினு இருந்தானுவ. அப்படி என்னத்தடே எடுத்துகினு வந்தே”
“நீ வேற காளி.. அவனுக சொல்றத நம்புறீயா? பணத்தோட ஒரு சின்ன டய்ரிதான் இருந்துச்சு. அத்த தவுர நா எத்தையும் எடுத்துகினு வர்ல. நீதான் அஞ்சாங்கிளாஸ் பட்ச்சிருக்கியே இந்த பாரு அந்த டய்ரிய நான் ஜேபிலதான் வச்சிருக்கேன்” என்று எடுத்துக் கொடுத்தான் சோக்கு
“ஒரு டய்ரிக்காகவா இந்த போலீசுகாரவுக நம்மள தாலியறுக்குறானுக.. எங்க எட்த்தா பாப்பம்”
டய்ரியைப் பார்த்தவன் திடுக்கிட்டான். “அடப் பேமானி இது அந்த மந்திரியோட சொத்துக்கு எவன்லாம் பினாமின்னு ஆளு அட்ரஸ் அல்லாம் கீது. இத்த நீ பணத்தோட லவுட்டிட்டு வந்ததுதான் அவனுக டென்சனாயிட்டானுக. அதான் எக்கச்சக்க பேரை களத்துல எறக்கிவுட்டிருக்கானுக”
சோக்கு கண்ணில் ஒரு பயம் தெரிய, “காளி என்னட செய்ய.. திருடும்போது அத்து அரசியல்வாதி ஆளு வூடுன்னு தெரீயாது. என்ன காப்பாத்து காளி..”
“சோக்கு உன்ன போலீசாண்ட ஒப்பட்ச்சிறேன். ஒரு வருசமோ ரெண்டு வருசமோ திருட்னத ஒத்துக்கினு செயிலுக்கு போ.. இந்த லிஸ்ட்ட ஒரு செராக்ஸ் எடுத்துகினு ட்யரிய போலீஸாண்ட கொடுத்துடலாம். இது என்னன்னே தெரீயாத மாறீ காமிச்சுக்கோ. ஒனக்கு படிக்க தெரீயாதுன்னு போலீஸாண்ட சொல்லிடு . திருட்டு கேசுதான சீக்கிரம் வெளியே வந்துடுவ.. ஒன்ன புட்ச்சு குடுத்ததனால போலீசுக்கு எம் மேல முய்க்க நம்பிக்க வந்துடும். நீ வந்ததுக்கப்பால பினாமி லிஸ்டில உள்ளவைய்ங்ககிட்ட கருப்பு பண்த்த திட்டம் போட்டு ஆட்டையப் போடுவோம்..சரியா பிளான் போட்டுக்கினு செஞ்சா மாட்ட மாட்டோம். ஆடு திருடன கள்ளன் மாறீ.. கருப்பு பணம் காணாம போய்ச்சுனா அவுக போலீசுல புகார் குடுக்கமாட்டானுக. சின்ன சின்னதா செஞ்சு வர்றத ரெண்டு பேரும் பிரிச்க்குவோம். இப்ப போலீசு குடுக்கிற பண்த்ல பாதிய உன் வூட்ல குடுத்துடுதேன்.”
சோக்கு சேகர் சந்தோசமாக தலையசைத்தான். “நம்ம ரெண்டாவது இன்னிங்ஸ் ரெண்டு வருஷத்துக்கு பொறவு” என்று இருவரும் சிரித்தனர்.
‘ஒரு சின்ன கயிறை கட்டி ரோட்டில இழுத்து வந்ததற்கு அவன் தப்பிச்சு ஓட தெரியாமலா இருந்தான்’ இது கூட நம்ம போலீசு யோசிக்கலையே’ பலமாக சிரித்தான் காளி.
அதுவும் போலீசு டிரஸ்லயே பல பேர் பாக்க ரோட்டில இழுத்து வந்தது பரம சந்தோஷமாக இருந்தது காளிக்கு. ‘எத்தனை தடவை கேவலப்படுத்தி இருப்பானுவ, அவுகளுக்கு சரியான அடி” நடந்தத நினைச்சு சந்தோஷத்தில் சிரித்துக் கொண்டிருந்தான் காளி
அங்கே போலீஸ் ஸ்டேஷனில்.. “முகுந்தன் இந்த காளி ஒரு சின்ன கயித்துல கட்டி ஈஸியா சேகரை புடிச்சுட்டு வந்துட்டான்.. அதுவும் போலீஸ் டிரஸ்ல.. நம்பள கேவலப்படுத்தனும் தான் இப்படி பண்ணியிருக்கான். அதுவே எனக்கு ரெண்டு பேர் மேலயும் சந்தேகமாயிருக்கு. வரட்டும் இவனையும நம்ம சந்தேக லிஸ்ட்ல வச்சு கண்காணிக்கணும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்..
அடுத்த ஆட்டம் ஆரம்பிக்கட்டும்.. யார் வெல்கிறார்கள் என்று பார்க்கலாம்.. காத்திருப்போம் அடுத்த அத்தியாயத்திற்கு
எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings