in ,

அவளுக்கென்று ஒரு மனம் (சிறுகதை) – தி. வள்ளி, திருநெல்வேலி

எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ரம்மியமான காலைப்பொழுது! சிலுசிலுவென காற்று வீச, கதிரவன் ‘வரட்டுமா, வேண்டாமாவென?’ கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தான்.

சுகமான தூக்கத்தில் இருந்தாள் ஜனனி. முந்திய நாள் காலை ஃபிளைட்டில் தான் கனடாவிலிருந்து, தன் இரண்டரை வயது மகள் கீர்த்தனாவுடன்  வந்திருந்தாள். ஜனனி பிரசவ சமயம் வேதவல்லியும், ராஜசேகரும், கனடா போய் மகளுக்கு உதவி செய்துவிட்டு வந்தது. அதன் பின் இப்போதுதான் பேத்தியை பார்க்கிறார்கள்.

லேசாக தூக்கம் கலைய, தலையைத் தூக்கி மகளை பார்த்தாள். குழந்தை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, தானும் தூங்க முற்பட்டாள். கடகடவென தையல் மெஷின்களின் ஒலி  லேசாக காதில் விழுந்தது. எரிச்சல் எழுந்தாலும், தூக்கம் அழுத்த, ஏசியின் டெம்பரேச்சரை  குறைத்து, குளிர்ச்சியை அதிகப்படுத்தி விட்டு உறங்கிப் போனாள். அது கனடாவில் இரவு என்பதால் தூக்கம் அவ்வளவு எளிதாக கலைவதாக இல்லை.

மதியம் ஒரு மணி வாக்கில் கண்விழித்தவள், குழந்தை பசியில் லேசாக சிணுங்க, படுக்கையில் எழுந்து அமர்ந்தவாறே, “அம்மா” வென குரல் கொடுத்தாள்.

பதில் வராமல் போக, எழுந்து வெளியே வந்தாள். ஹாலில் ராஜசேகர் டிவி பார்த்துக் கொண்டிருக்க, “அப்பா! அம்மா எங்கே? குழந்தை பசியில சிணுங்குறா! பால் கரைக்கணும்! பாட்டில் கழுவணும்!”

“ஜனனி! டேபிள்ள பால் பாட்டில் எல்லாம் கழுவி ஸ்டெர்லைஸ் பண்ணி அம்மா வச்சிருக்கா! பிளாஸ்கில் வெந்நீர் இருக்கு. பக்கத்துல ஆறின வெந்நீர் வைச்சிருக்கா.

சரிப்பா! அம்மா எங்கே?” என்றாள், லேசான எரிச்சலுடன்.

“குழந்தைக்கு பால் கொடுத்துட்டு வாம்மா!  விவரமா சொல்றேன். அப்படியே நீயும் பிரஷ் பண்ணிட்டு வா! சாப்பாடு ரெடியா இருக்கு. உனக்கு பிடிச்ச அவியல், மாங்காய் சாம்பார், வெண்டைக்காய் பச்சடி, எல்லாம் அம்மா பண்ணி வச்சிருக்கா!” என்றார்.

பதில் சொல்லாமல் ஜனனி, பால்மாவு டின்னை திறந்து, வெந்நீர் விட்டு பாலை கரைத்து எடுத்துச் சென்றாள். பாலை குடித்து விட்டு குழந்தை தூக்கத்தைத் தொடர, மெல்ல அறைக் கதவை சாத்தி விட்டு, ஹாலுக்கு வந்து, அப்பாவின் அருகில் அமர்ந்தாள்.

“சொல்லுங்கப்பா! அம்மா எங்கே தான் போனாள்?”

“உங்கம்மா இப்ப வந்திடுவா ஜனனி! நீ சாப்பிட வா! நான் சாப்பாடு போடுகிறேன்!”, என்றார் வாஞ்சையோடு.

அதற்குள் வேதவல்லி உள்ளே வர, அவளை திகைப்புடன் பார்த்தாள் ஜனனி. எப்போதும் சாதாரண சில்க் புடவையில் இருப்பவள், அயர்ன் பண்ணிய காட்டன் புடவை நீட்டாக கட்டி, பின் பண்ணி, தலைக்கு கிளிப் போட்டு கம்பீரமாக காட்சி அளித்தாள். 

“ஜனனி எழுந்துட்டியாடி? குழந்தை தூங்குறாளா?…”, 

அது சரிம்மா நீ எங்க போய்ட்டு வர?”

“ஏங்க ஜனனிகிட்ட சொல்லலியா? ஜனனி நான் 20 ஸ்டூடண்ட்ஸ்க்கு ஹிந்தி கிளாஸ் எடுக்குறேம்மா. உனக்குத்தான் தெரியுமே நான் வளர்ந்தது பாம்பேங்கறதுன்னால எனக்கு ஹிந்தி நல்லா தெரியும்! பத்து நாள் கிளாசுக்கு லீவு சொல்லியிருக்கேன். நடத்திக்கிட்டிருக்கற போர்ஷனை நாலு நாள்ல முடிச்சிடுவேன். எப்படியும் உனக்கு ஜெட்லாக் மூணு நாலு நாள் இருக்கும்ஸ நீங்க தூங்குற நேரத்துல நான் போயிட்டு வந்திடுவேன்”.

ஜனனி முகம் கடுகடுவென மாற, “நீ வேலைக்குப் போற விஷயத்தை  எங்கிட்ட சொல்லவே இல்லையே! காலையில தையல் மெஷின் சத்தம் வேறே!”

“அதுவாடி! தினமும் காலை ஐந்தாறு பசங்க தையல் கத்துக்கிறாங்க. சனி, ஞாயிறு மட்டும் காலை, மாலை இரண்டு பேட்ச் பசங்க வருவாங்க!” ஜனனியின் முகம் மாறுவதை கவனிக்கவே பேச்சை மாற்றினாள்.

“சரி வாடி! குழந்தை தூங்கும் போது, சாப்பாட்டை முடிச்சிடுவோம்”. என்றவள், மடமடவென ரசம், குழம்பு, எல்லாவற்றையும் லேசாக சூடுபடுத்தி, எடுத்து வைத்தாள்.

எரிச்சலையும் மீறி, அம்மாவின் கைமணம், காலையில் சாப்பிடாத பசியும், சேர்ந்து கொள்ள, ரொம்ப நாளைக்கப்புறம் மிக திருப்தியாக சாப்பிட்டாள் ஜனனி! பேத்திக்கு தனியாக மிளகு ரசமும், தாளித்த காயும், சாலட்டும் செய்து வைத்திருந்தாள் வேதம்.

அடுத்து வந்த நாட்களில், வேதம் மகளுக்கும், பேத்திக்கும் பார்த்துப் பார்த்து செய்தாள். தையல் கிளாஸ் வழக்கம்போல நடத்த, ஹிந்தி கிளாஸ் மட்டும் 10 நாள் லீவு சொல்லி விட்டாள்.

தினம் ஒரு பலகாரம் செய்து கொடுத்தாள். வேலை போக மீதமுள்ள நேரத்தை பேத்தியுடன் பாட்டுபாடி, கதைசொல்லி, கூட விளையாடி, சந்தோஷமாக கழித்தாள். மாத முடிவில் கீர்த்தனாவை பிரிய வேண்டுமே!’ அருகிலா இருக்கிறது கனடா?  தேடினால் ஒரு நடை போய் பார்த்து விட்டு வர!’ என நினைத்து ஏங்கினாள். அவள் என்னதான் பாசத்தை கொட்டினாலும், ஜனனி மனதில் ஒரு கோபம் இருப்பது புரிந்தது.

நடுவில் ஒரு நாள் குலதெய்வம் கோயிலுக்குப் போய் பொங்கல் வைத்து விட்டு வந்தார்கள். கீர்த்தனாவுக்காக  பிரார்த்தனை பண்ணியிருந்த வெள்ளித் தொட்டிலில் தவழும் கிருஷ்ணர் பொம்மை வாங்கி சங்கரங் கோவிலுக்குப் போய், பிரார்த்தனை செலுத்திவிட்டு வந்தார்கள்.

“ஜனனி! அதற்குள் மூன்று வாரம் ஓடிடுச்சு! அடுத்த வாரக் கடைசியில், மாப்பிள்ளை வந்திடுவார். நீ திருச்சியில் உன் மாமியார் வீட்டுக்கு போயிட்டு, திரும்ப சென்னை வந்து தானே போறீங்க. அதுக்குள்ள நான் குழம்பு பொடிகள், வத்தல், வடகம், எல்லாம் ரெடி பண்ணி, பேக் பண்ணி வச்சிடுறேன்! பலகாரமும் ரெண்டு நாள் முன்னாடி செஞ்சாத்தான் பிரஷ்ஷாக இருக்கும்.”

“நீ எதுக்கும்மா கஷ்டப்படுற? எல்லாம் நான் கடையில வாங்கிக்கிறேன்! வேலைக்கு போற உனக்கு, இந்த வேலை எல்லாம் செய்ய நேரம் இருக்குமா?” என்றாள் கிண்டலாக. “ஆனாலும் நீ ரொம்பவே மாறிட்ட உன் தோற்றமும் மாறிடுச்சு! என்னை உலகமாக நினைச்சு  வாழ்ந்த என் அம்மா இல்லை இது”. மனதில் இருந்தவை, விஷ அம்புகளாய் வார்த்தைகளில் வெளிவந்தது.

கண்ணீர் திரையிட, மகளை வேதனையுடன் பார்த்தாள் வேதம். ராஜசேகர் எழுந்து வந்து மகள் அருகில் அமர்ந்தார். “அம்மா ஜனனி! நீ உணர்ச்சி பூர்வமாக இல்லாமல், அறிவுப் பூர்வமாய் யோசி!”

“ஓ! எமோஷனல் இடியட்! என்கிறீர்கள்.”

“ஜனனி நான் சொல்வதைப் பொறுமையாக கேளு! பொதுவாக ஆண்கள் வெளியுல ஈடுபாடு காரணமாக, குடும்பத்தில் ரொம்பவும் உணர்ச்சிப்பூர்வமாக ஒன்றுவது இல்லை. ஆனால் உன் அம்மா மாதிரி பெண்களுக்கு வீடும், கணவன், குழந்தைகள் தான் உலகம்! அன்றும் சரி, இன்றும் சரி! அவள் உயிர் மூச்சே நீதான் ஜனனி! நீ கல்யாணம் ஆகி, கனடா போன பின் அவள் ரொம்பவே உடைஞ்சு போயிட்டா. நீயாவது அவ்வப்போது தான் அம்மாவை நினைச்சிருப்பே. ஆனால் இவளோ முழுநேரமும் உன்னை பத்தி தான் நினைச்சுகிட்டிருந்தா.

பிராக்டிகலா பாரு! நீ இங்கு வரப்போவதில்லை, எங்களால் அங்கு வந்து வாழ முடியாது. வெறும் நினைவுகள் மட்டுமே பாலமாய் நம் இருவருக்குமிடையே! வெளிநாட்டு வாழ்க்கையை விரும்பி போற உன் போன்ற பிள்ளைகள், பெற்றோர் மனநிலையை யோசிச்சுப் பார்த்திருக்கிறீர்களா? உன் அம்மா உன் மீது வைத்த அதீத பாசத்தின் சுமையை தாங்க முடியாமல், தள்ளாடிப் போனாள். எப்போதும் பிரமை பிடிச்ச மாதிரி இருந்தா. அவ அப்படி உடைந்து போறத என்னால பார்க்க முடியல!

உன் அம்மாவுக்கு மெல்ல புரிய வச்சேன். ‘பாசம் என்பது மனதில் மணக்கிற ரோஜாவாய் இருக்கணுமே தவிர, தலையில சுமக்கிற பாராங்கல்லா இருக்க கூடாதுன்னு!’, உன் நினைவின் சுமைகளிலிருந்து விடுபட, நீ உனக்கு பிடித்ததை செய்! உனக்காக வாழ கற்றுக் கொள்! என்றேன்.

முதல்ல கர்னாடிக் மியூசிக் கிளாஸ் போனா. கீர்த்தனைகள் கத்துக்கிட்டா. சாயங்காலம் விளக்கேற்றி வைத்து விட்டு, அரை மணி நேரம் பாடுவா. அப்புறம் மெல்ல தையல் கிளாஸ் ஆரம்பிக்கட்டுமானு கேட்டா! நாலு தையல் மெஷினை வாங்கிப் போட்டேன். காலையில் சும்மாதானே இருக்கேன், ஹிந்தி கிளாஸ் எடுக்கட்டுமானு? கேட்டா. சந்தோஷமா சரின்னேன். உங்க அம்மாகிட்ட இவ்வளவு திறமையை கண்டு நான் பிரமிச்சுப் போனேன். அவளை சமையல்கட்டோடு முடக்கிப் போட்டுட்டோம்ன்னு ஒரு குற்ற உணர்வு.

அம்மா ஒண்ணும் நமக்கு சேவை செய்யறதுக்காக பிறக்கலியே! அவளுக்கென்று ஒரு மனசு இருக்கு! அவளுக்குள்ள பல திறமைகள் இருக்கு! இதையெல்லாம் அவ நமக்காக தியாகம் பண்ணனும்னு, நினைக்கிறது தப்பில்லையாம்மா?

இன்னும் ஒரு வாரத்துல நீ கிளம்பிடுவே! உன் குடும்பம், குழந்தைன்னு, பிஸியாயிடுவ! எங்க நிலையை யோசிச்சுப் பாரு! உன்னோட பேத்தியோட கழித்த இந்த ஒரு மாதம் தான் எங்கள் வாழ்வின் பசுமையான நாட்கள்”. என்றவர் தன் மனைவியைப் பார்த்து

“வேதம் நீ வருத்தப்படத் தேவையில்லை. ஒரு மனைவியா, தாயா, உன் கடமையை செஞ்சிட்டே. செஞ்சுகிட்டும் இருக்க. இனி மீதமுள்ள காலத்தை உனக்காக வாழு. இந்த வாழ்க்கை உனக்கே உன்மேல் எவ்வளவு மரியாதையை கொடுத்திருக்கிறது. எக்காரணம் கொண்டும் இதை யாருக்காகவும், இழக்காதே! மீதமுள்ள காலத்தை நாம் கழிக்க, வாழ்க்கையில் நமக்கு ஒரு பிடிப்பு வேணும். ஜனனி அதை புரிஞ்சுக்குவா!”

வேதம் கண்களில் நீர் திரையிட நன்றியுடன் கணவனைப் பார்த்தாள். ஆம்! இனி ஜனனி அவளைப் புரிந்து  கொள்வாள் என்ற நம்பிக்கையுடன்.

எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விளக்கேற்றும் வேளை (சிறுகதை) – தி. வள்ளி, திருநெல்வேலி

    இறுதி ஊர்வலம் (சிறுகதை) – மணிராம் கார்த்திக்