in ,

வைராக்கியம் (சிறுகதை) – கோவை தீரா

straight road through the forest,

எழுத்தாளர்  கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அம்மாவின் கைபேசி எண்ணில் அழைத்தபோது அழைப்பு ஒலி இடைநின்றது. அம்மா திருப்பிக் கூப்பிடுவாள். அழைபபு வந்தது. ‘ஹலோ, சொல்லு தங்கம்!’ தன்னை அழைக்கும் போதெல்லாம் அம்மா அப்படித்தான் கூப்பிடுவாள்.

நேரிலும் அப்படித்தான். ‘தங்கம், செல்லம்’ என்றே அழைப்பாள். சந்தனா என்ற தன் பெயரைச் சொல்லி கூப்பிட்டதேயில்லை.

‘அம்மா, அப்பா போய்ட்டார்…’ அமைதியாக இருந்தது அம்மாவின் கைபேசி.

‘ஹலோ, அம்மா! இருக்கியா?’

‘ம். இருக்கேன். எப்பவாம்?” எந்தவித சுரத்துமில்லாமல் கேட்டாள்.

‘இன்னிக்கு காலங்காத்தால… நாலரைக்கு மாத்திரை குடுக்கப்போனேன்.  அவருக்கு மூச்சு முட்டுச்சு. அஞ்சு நிமிஷத்துல…..’

‘எப்ப எடுக்கறதாம்?’ 

‘மூணு மணிக்கு. வரயா? 

‘வரணுமா?’  கேட்டாள். சந்தனா ஒன்றுமே பேசவில்லை. 

‘வரேன்’. வைத்துவிட்டாள்.

ஆட்கள் ஒவ்வொருவராக வருவதும் பார்ப்பதும் போவதுமாக இருந்தது. சிலர் முற்றத்தில் போடப்பட்ட நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள். அப்பாவிற்கு நிறைய நண்பர்களெல்லாம் கிடையாது.

சொந்தக்காரர்களும் கடைசி காலத்தில்தான் எட்டிப் பார்த்து விட்டு போனார்கள். சந்தனாவிற்கு பத்துவயதான போதுதான் அம்மா எல்லாக் கதைகளையும் சொன்னாள். 

அம்மாவை அப்பா கல்யாணம் செய்தபோது இருவருக்கும் இடையே பதினொருவருடம் வித்தியாசம் இருந்தது. எல்லாக் குடும்பத்தையும் போல அம்மா குடும்பமும் அம்மாவின் மேற்படிப்பையும் எதிர்காலக்கனவையும் வெற்றாக்கி, திருமணம் செய்துவைத்தார்கள்.

அப்பாவின் வீட்டிலோ இன்னும் மோசம். வந்தநாள் முதல் குற்றம் சொல்வதையே வழக்கமாக்கிக் கொண்ட மாமியாரும், இரண்டு நாத்தனார்களும். இயலாமையால் மாமனார் கண்டுகொள்வதில்லை.

அப்பாவோ ‘எல்லாத்தையும் அனுசரித்து நடந்துக்க’ என்பார்.

தொழிலில் நட்டம் வந்து அம்மாவின் குடும்பத்தாருக்கு கடன் சுமை கூடியபோது தூரத்துச் சொந்தத்தில் வரதட்சிணை வாங்காமல் கல்யாணத்திற்கு தயாராக வந்த குடும்பம்தான் அப்பாவினுடையது.

பிற்பாடு ‘என்னதான் வேண்டாம்னாலும், இப்படியா வெறுங்கழுத்தோட அனுப்புவாங்க?! எங்க சம்பந்தி வீட்ல எனக்கு அவமானமா போச்சு. பொண்ணக் குடுத்தாங்களா? இல்ல தள்ளி விட்டாங்களா’ என்று பெரிய நாத்தனார் சாடியது வேறு கதை.

அம்மாவிற்கு வீட்டு வேலை செய்வது பிரச்சினையில்லை. வசவுகள் தான் வேதனையாக இருந்தது. எல்லாவற்றுக்கும் குற்றம். எதற்கெடுத்தாலும் சுயத்தை கேலி செய்வதுபோன்ற பேச்சுக்கள்.

இரண்டு வருடங்களாக ஒன்றும் பேசாமல் சகித்துக்கொண்ட அம்மா, முதன்முறையாக எதிர்த்துப்பேச, வீடு ரண்டுபட்டு, தனிக்குடித்தனம் வரவேண்டியதானது. அதற்குப்பின் தான் அப்பா சூதாடுவதும் குடிப்பதும் தெரிந்தவர்களிடத்திலெல்லாம் கடன் வாங்குவதும் தெரியவந்தது.

பேச்சுக்கேட்க வேண்டாமென்று சீட்டுப்போட்டும் தையலில் சம்பாதித்ததையும் வைத்து கடன் தீர்த்துக் கொண்டிருநாதாள் அம்மா. ஒரு கட்டத்தில் பெண்சகவாசம் தெரியவந்தபோது ஆர்ப்பாட்டம் செய்யாமல் விவாகரத்து கேட்டாள்.

விவாகரத்து தன் குடும்பத்தில் இதுவரை வந்ததில்லை என்றும் தனக்கு எல்லார் முன்னிலும் அவமானமாகி விடுமென்றும் அப்பா மறுத்தபோது தன் வீட்டிற்குச் சென்றாள்.

அங்கும் தான் ஒரு அழையா விருந்தாளி என உணர்ந்த அன்று வெளியேறி லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி உடைதயாரிக்கும் நிறுவனம் ஒன்றுக்கு கண்காணிப்பாளராக வேலைக்குச் சென்றாள். 

அப்பாவின் மோசமான பழக்கங்களைப்பற்றி சொந்தக்காரர்களுக்கோ குடும்பத்தாருக்கோ தெரியாது. அப்படித்தான் நடந்து கொள்வார் அப்பா. எல்லாரையும் தன் போலியான நடிப்பால் தன்வசப்படுத்தி விடுவார்.

அம்மா, அப்பாவைப் பற்றி புகார் ஏதாவது சொன்னால் கூட ‘எல்லாம் உன் தோணல்தான். அவன் தங்கமானவன். உனக்கு அறிவு ஜாஸ்திங்கிற திமிர். அதான் இப்படில்லாம் அவனப்பத்தி சொல்லுற’ என்பார்கள்.

அம்மாவும் பிறகு அமைதியானாள். அம்மாவிற்கு புத்தகங்கள்தான் நண்பர்கள். வாசிப்பது ரொம்ப பிடிக்கும். சோதனை மிகுந்த கட்டங்களில் ஆறுதல் தந்தது இந்தப்பத்தகங்கள் தான் என்பாள். அம்மாவிற்கு விதவிதமாக உடைதயாரிப்பதும் மிகப்பிடிக்கும்.  

‘கல்யாணம் ஆகாமலிருந்தால் இந்நேரம் சொந்த நிறுவனம் வைத்திருப்பேன்’ என புலம்புவாள் அம்மா.

தனியாக வசிக்கும் அம்மாவை அப்பா வந்து பார்த்து கெஞ்சி மன்னிப்புக்கேட்டு ஒன்றாக வாழ்த்தொடங்கி கொஞ்சநாட்களிலேயே மீண்டும் அப்பாவின் பழக்கங்கள் பழையபடி மாறியது.

இம்முறை ‘ஒன்று விவாகரத்து; இல்லையேல் குழந்தையை தத்தெடுத்துக் கொள்வது’ என்ற அம்மாவின் விசித்திர நிபந்தனைக்கு சாட்சியாய் சந்தனா.

‘இப்படிப்படட என் வாழ்க்கையில நீ வந்ததால தான் பிடிப்புவந்திருக்கு’ என்பாள் அம்மா.

சந்தனா வளர வளர அப்பாவைப் பற்றி தெரிந்தது. ஆனாலும் அப்பாவிற்கு சந்தனாவை மிகவும் பிடிக்கும். அவளுக்காக அவர் சிலபழக்கங்களை விட்டுவிட்டு பணம் சேர்க்கத் தொடங்கியிருந்தார்.

சந்தனாவிற்கு அம்மாவை நன்றாகத் தெரியும். அப்பாவையும் விட்டுக் கொடுக்க மாட்டாள். அப்படியாக போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் அப்பாவின் பெண்சகவாசம் உண்டாக்கிய பெருங்கடன் ஒன்று நுழைந்து அம்மாவிற்கு தலைவலியானது.

சந்தனா வளர்ந்ததிருந்தாள். அவளிடம் அப்பாவை இனி தன்னால் பார்த்துக்கொள்ளவோ சேர்ந்து ஒரே வீட்டிலிருக்கவோ முடியாது என்று சொல்லிவிட்டு அம்மா தனியே போனாள். விவாகரத்தை எப்படியோ வாங்கியும் விட்டாள்.

சந்தனாவிற்கு அம்மாவின் நிம்மதி போதுமானதாக இருந்தது. அம்மா, அப்பாவுடன் பேசாமல் பதினைந்து வருடங்கள் ஆகியிருந்தது. அப்பா உடல் மெலிந்து நலிவடைந்து கொண்டிருந்த போது அம்மா சொந்தமாக உடைதயாரிக்கும் நிறுவனம் தொடங்கியிருந்தாள்.

சந்தனா ஐடி கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டே, ஹோம்நர்ஸ் வைத்து அப்பாவையும் பார்த்தக் கொண்டிருந்தாள். கடந்த ஒரு மாதமாக அப்பாவின் உடல் மிக மோசமானது. அம்மா வரவுமில்லை. பார்க்கவுமில்லை. விசாரிக்கவும் இல்லை. வெளியே சில சத்தங்கள் கேட்டது. அம்மா வந்துவிட்டாளா? சந்தனா சென்றாள். 

“தங்கம்!” அவளக் கண்டதும் அம்மா கட்டிக்கொண்டாள். சொந்தக்காரர்களுக்கு அவள் என்றும் அகம்பாவக்காரி! அப்பாவை விட்டுட்டுப்போன ஓடுகாலி! அதைப்பற்றியெல்லாம் அம்மா கண்டுகொள்ளவே மாட்டாள்.

அம்மா தேர்ந்த ஒரு காட்டன் புடவையில் வந்திருந்தாள். சிறிய வட்டப்பொட்டு வைத்திருந்தாள். அதைவிட அதிர்ச்சியாக முற்றத்து மல்லிச்செடியிலிருந்த மல்லிப்பூவை பறித்து தலையில் வைத்தபடி அப்பா உடலைப் பார்க்கச் சென்றாள். எல்லோரது முகத்திலும் கேள்விகளும் குழப்பங்களும்! சந்தனாவிற்கு குழப்பமேயில்லை.

‘பார்த்துகக தங்கம். இரண்டு நாள் கழிச்சு ஃபோன் பண்றேன்’ என்றுவிட்டு புறப்பட்டுப் போய் விட்டாள். 

எழுத்தாளர்  கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வீடடைதல் (சிறுகதை) – கோவை தீரா

    தலைவலி (சிறுகதை) – கோவை தீரா