எழுத்தாளர் கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வீட்டைப்பூட்டி சாவியை கைப்பையில் போட்டபடி தெருவில் நடந்தாள் மாதவி. தெருவிலிருந்து பிரிந்து பிரதான சாலையை அடைநததும், தெருவிற்குள் வளர்மதி நுழைவதற்கும் சரியாக இருந்தது. பிடித்துக்கொண்டு விட்டாள்.
‘என்ன மாதவி… வேலைக்கு லேட்டா கிளம்பிட்டியா?’ எரிச்சல் வந்தது. தெரிந்தே கேள்விகள் கேட்டு கழுத்தையறுப்பாளே! ‘
ஆமாக்கா! பஸ்ஸ பிடிக்கணும்’ அவசரம் நடித்து நடைக்கு வேகமூட்டினாள்.
‘அட நில்லு! பஸ்ஸு அதுக்குள்ள போயிராது…பாப்பாவ அந்த தறிக்கார வீட்டுலதான விட்டுட்டுப் போற?’
‘ஆமாக்கா’
‘என்னம்மோ ஒன்பேர்ல இருக்க பாசத்தில சொல்றேன். அந்த தறிக்காரன் மவ அவ்வளவு நல்லவ கிடையாது. புருசங்காரன் வேலைக்குப் போன பின்னாடி கண்டவன்லாம் வரானாம். ஆளுக பேசிக்கிறாங்க! பொட்டபுள்ளய விட்டுட்டு வர, காலங்கெட்டு கிடக்குது. அவ்வளவுதான் சொல்வேன்’.
இன்றைக்கு வெறும்வாயை மெல்ல நான் மாட்டிக்கிட்டேனே! போலியாக புன்னகைத்தபடி ‘வேற இடம் பாத்துகிட்டு தாக்கா இருக்கேன். காசு கம்மியா கேட்டா மாத்திடலாம்னு இருக்கேன், பஸ் வந்தரும்க்கா, அப்பறம் பாக்கலாம்’ திரும்பிப் பார்க்காமல் நடந்தாள் மாதவி.
நல்லவேளை! அவள் நிறுத்தத்தில் வந்து நிற்கவும் பஸ் வரவும் சரியாக இருந்தது. ஏறினாள். டிரைவருக்குப் பின் இருக்கை காலியாக இருந்தது. அமர்ந்து கொண்டாள்.
டிக்கெட் வாங்கி கைப்பையில் போட்டுவிட்டு, அந்த சின்ன தண்ணீர்க்குப்பியை எடுத்து, ஒரு மிடறு குடித்துக்கொண்டாள். நகரத்துக் காற்றெல்லாம் பஸ்ஸுக்குள் வந்துவிட்டது போல. லேசாக குளிரடித்தது. ஆனால் இதமாக இருந்தது.
ரித்திகாவைப்பற்றி ஞாபகம் வந்தது. கூடவே வளர்மதி சொன்னவையும். தறிக்கார குடும்பம் என்று அறியப்படும் மணிமேகலை டீச்சர் வீடு ஒருகாலத்தில் தறிநெய்தலில் பேர் பெற்ற குடும்பமாக இருந்தது. நாளடைவில் டீச்சரின் அப்பா, தொடர்ந்த அம்மா, பிறகு தம்பி என்று இறந்துபோக, டீச்சரின் கணவனும் இரண்டு பிள்ளுகளுமாக சுருங்கியது குடும்பம்.
மணிமேகலைக்கும் மாதவிக்கும் ஒரே வயதுதான் என்றாலும் மாதவி அவளை டீச்சர் என்று தான் அழைப்பாள். வளர்மதியின் மற்றவர்களும் கூறுவதுபோல மணிமேகலையொன்றும் மோசமானவள் கிடையாது.
அவள் கணவனின் மரக்கடைக்கு தேவையான மரங்களையும் பிறசாமான்களையும் எடுத்துப் போக ஆட்கள் வருவார்கள். அவர்களுடன் மணிமேகலை நன்றாகப் பேசுவது பிடிக்காமல் இப்படி சொல்லிக் கொள்கிறார்கள்.
தன்னைப் பற்றியும் என்னவெல்லாம் பேசுவார்கள்?! அவளுக்கு பத்துவருட தனிமை வாழ்க்கை மனிதர்களை நன்றாகப் புரிந்து கொள்ள உதவியது. வாழ்ந்து கெட்ட குடும்பம் மீண்டும் மேலேறி வந்தால் இந்த சமூகத்திற்குப் பிடிக்காது.
அதிலும் கணவனோ துணையோ இன்றி குழந்தையுடன் ஒரு பெண் தனியாக வாழ்ந்தால் சகித்துக் கொள்ளாது. சினிமாவிலும் சீரியலிலும் மட்டும் இப்படியான நாயகிகளை உச்சுக்கொட்டிக் கொள்ளும். உண்மையில் ஆயிரம் கண்ணுகளுடன் துரத்தும்.
அவரவருக்குத் திருப்தியான கதைகளை வடித்து பரப்பிக்கொள்ளும். அதையே உண்மை என்று நம்பி வாழும். வதந்திகளுக்கு காது கொடுத்தால் வாழமுடியாது. அவளிறங்க வேண்டிய இடத்தின் பேரைக்கூவ, நினைவுகலைந்து இறங்கினாள். அலுவலகம் நோக்கி நடந்தாள்.
ரித்திகா பிறந்து இரண்டு மாதங்களில் அவளது கணவன் சாலை விபத்தில் இறந்து போனான். இப்போது அவளுக்கு பத்துவயது. பள்ளிக்கூடம் இருக்கும்போது கவலையில்லை. ரித்திகா பள்ளிவிட்டு வருவதற்குள் வீட்டிலிருக்கலாம். இப்போது கோடை விடுமுறை என்பதால் அவளை மணிமேகலை வீட்டில் விட்டுவிட்டு வர வண்டியிருக்கிறது. தனியாக வீட்டில் விடுவதைவிட இது மேல்.
டீச்சரின் இரண்டு மகள்களும் பார்த்துகொள்ள இருநதனர். வெளியாட்களில் யாரிடமும் பழக விடுவதில்லை. மாதவியும் ரித்திகாவிற்குப் புரிகிறவகையில் நல்லது கெட்டதுகளை சொல்லிக் கொடுத்திருக்கிறாள். பேப்பரில் வரும் செய்திகளை வாசித்துக் காட்டி புரிய வைத்திருக்கிறாள்.
பள்ளி திறக்கும் வரை மாதம் 2500ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். ஆனாலும் பாதுகாப்பிருக்கிறதே! ஆபிஸிற்குள் நுழைந்ததும் ஆபிஸ்பாய் குமாரின் வணக்கம் வந்தது.
பருத்தித்துணிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அந்த நிறுவனத்தில் துணைகணக்காளராக வேலைசெய்கிறாள். பகுதிநேர வேலைதான். மதியம் இரண்டு மணிக்கு இறங்கலாம். ஆனால் நிறைய கணக்குகளை நேர்செய்ய, கணினியில் பதிவுசெய்ய, முதல்நாள் கணக்குகள் சரிபார்க்க என்று வேலை சரியாக இருக்கும்.
சிலநாள் மதியம் மூன்றுகூட ஆகலாம். என்றாலும் வீட்டில் வந்து மதியச்சாப்பாட்டை நிதானமாக சாப்பிட்டுவிட்டு ரித்திகா வருவதற்குள் மெதுவாக வேலைகளை செய்யலாம். இந்தமாதம் மட்டும வேலை முடிந்து போகும்போது ரித்திகாவையும் கூட்டிவரவேண்டும்.
வேலைக்குத் தகுந்த சம்பளமும், அலவன்ஸும் கிடைக்கிறது. ஒரு ஸ்கூட்டி வாங்குவது தான் இப்போதைய கனவு. வீட்டுவாடகை, கல்விச்செலவு, மளிகைச்செலவு இன்னபிற செலவுகள் போக, மீதமிருப்பதில் அந்த மாதம் முழுவதும் வாழ சரியாக இருப்பதால், வண்டி வாங்கும் கனவு தள்ளிக்கொண்டே போகிறது.
மதியம் ரித்திகாவை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வருகையில் வளர்மதியின் அடுத்த வீட்டுக்காரி பிரபாவதி பார்த்துவிட்டாள்.
‘மாதவி!’ கூப்பிடுகிறாள். கேட்காததுபோல் போகமுடியாது. நின்றாள்.
‘ஒன்கிட்ட கொஞ்சநாளா ஒண்ணு சொல்லணும்னு நினைச்சுகிட்டு மறந்து மறந்து போயிடறேன்’
‘சொல்லுக்கா’
‘அந்த வளர்மதி இருக்கால?! அவ ஒன்னப்பத்தி எல்லார்கிட்டேயும் என்னா சொல்லிட்டு திரியுறா தெரியுமா?’
அலுப்பாக இருந்தது மாதவிக்கு. ‘இப்பதான் வரேன், இன்னும் சாப்பிடலக்கா, இவளுக்கும் பசிக்குது. அப்புறமா வரட்டா பேச?’
‘அட! இதக்கேட்டுட்டுப்போ! அதுக்குள்ள பசி ஒண்ணும் பண்ணாது!’ ஏன் பாப்பா?’ ரித்திகாவைப் பார்த்து கேட்டுவிட்டுச் சொன்னாள். ‘நீ மதியம்வரைக்கும் வேலைன்னு சொல்லி எங்கயோ சுத்திட்டு வரயாம். சரியான முறைல சம்பாதிக்கலயாம்…’ அவள் மேலே ஏதேதோ சொல்லிக்கொண்டிருப்பது கேட்கப்பிடிக்காமல் ‘அப்புறம் பேசலாம்க்கா, வேலையிருக்கு’ என்றுவிட்டு வேகமாக வீடு நோக்கி நடந்தாள் மாதவி.
வதந்திகளின் கைகள் பின்னால் நீண்டுவருவது தெரிந்தும்.
எழுத்தாளர் கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings