in ,

வாழ நினைத்தால் வாழலாம் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அந்திவானம் ஆயிரம் ஆயிரம் வர்ணஜாலங்களைக் காட்டி காண்போரைக் கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தது. அதை ரசித்தபடி கடல்அலைகள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன.

இவற்றையெல்லாம் ரசிக்கக் கூடத் தோன்றாமல் வெறித்துப் பார்த்தபடி மௌனமாக உட்கார்ந்திருந்தான் செந்தில். அவன் மனதுக்குள் இருந்த போராட்டம் இயற்கையின் இந்த மாயாஜாலத்தை எல்லாம் ரசிக்க விடவில்லை.

உயிரோட்டம் இல்லாத வெறித்த பார்வை, சலனம் இல்லாத முகம், எதிலும் பற்றில்லாத சிந்தனை, உலகத்தில் இருக்கும் வெறுப்பெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து செந்தில் மனதில் ஆழமாக அஸ்திவாரம் போட்டு உட்கார்ந்திருந்தன.

வெகுநேரமாகக் கடற்கரையில் இப்படி உட்கார்ந்து கொண்டு, சுற்றுமுற்றும் வெறித்த பார்வையோடு பார்த்துக் கொண்டிருந்தான் செந்தில். அவன் மனத்தில் ஓடிய எண்ணங்கள் அவன் எடுத்திருக்கும் முடிவை நியாயப்படுத்திக் கொண்டியிருந்தன.

‘இந்த உலகம் அனைவருக்கும் சந்தோஷத்தைத் தான் தந்திருக்கிறது… என்னைத் தவிர. அனைவருமே அவரவர் வாழ்க்கையை நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அலைகள்கூட எதைப்பற்றிய கவலையும் இல்லாமல் ஓடி வந்து கரையைத் தொட்டுத் தொட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றன.

சுற்றிலும் இருக்கும் மக்கள் கூட்டத்தில் யாருக்கும் கவலையில்லை. அனைவரும் அலைகளில் கால் நனைப்பதும், மணலைக் குவித்து விளையாடுவதும், ஏதேதோ பேசிச் சிரிப்பதும், கைப்பேசியில் இயற்கையைப் படம் பிடித்து ஒளித்து வைத்துக் கொள்வதுமாக எந்தக் கவலையுமின்றித் தான் இருக்கிறார்கள்… என்னைத் தவிர.

அப்படியானால் இந்த உலகில் வாழத் தகுதியற்றவன் என நான் எடுத்த முடிவு சரிதான். தகுதி இல்லாத ஒரு வாழ்க்கையை எதற்காக வாழ வேண்டும்? இப்படியே எழுந்து, கொஞ்சம் கொஞ்சமாகக் கடல் அலையில் கால் நனைத்துக் கொண்டு, அப்படியே கடலோடு காணாமல் போய்விட்டால் எந்தக் கவலையும் இல்லாமல் நிம்மதியாகப் போய் விடலாம்.

நான் விருப்பப்பட்டபடி படிக்க இயலவில்லை. அதனால் எதிர்பார்த்த வேலையும் கிடைக்கவில்லை. யாருக்கும் உபயோகமில்லாமல் வெறுப்புடன் வாழ்க்கையை வாழ்வதில் என்ன இருக்கிறது?

பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆசைப்படுவதற்குக் கூட வசதி வாய்ப்புகள் தேவையாயிருக்கிறது இந்த உலகில். வசதி குறைவான குடும்பத்தில் பிறந்தது என்னுடைய தவறா?

மளிகைக் கடை வைத்திருக்கும் தந்தை, குடும்பத் தலைவியாய் இருக்கும் தாய், திருமண வயதை எட்டி நிற்கும் மூத்த சகோதரி, இப்படி இருக்கும் குடும்பச் சூழலில் என்னைப் பொறியியல் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைக்க வசதிப்படாது என்று அப்பா சொல்லிவிட்டார்.

குடும்பச் சூழ்நிலை புரிந்திருந்தாலும் எப்படியாவது பொறியியல் கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மனதில் வேர்விட்டுப் படர்ந்திருந்தது. எப்படியாவது அது சாத்தியப்படாதா என்று கனவுகள் இருந்தன.

கனவுகள் அனைவருக்கும் சாத்தியப்படுகிறதா என்ன? கல்லூரி சேரும் முன் அப்பா பேசியது இப்போதும் நினைவில் பசுமையாக இருக்கிறது.’

மனத்துக்குள் பேசிக்கொண்ட செந்தில் அந்த நாளை நினைத்துப் பார்த்தான்.

“யப்பா செந்திலு…. நம்ம குடும்பம் இருக்கற நிலைமை உனக்குத் தெரியாதாப்பா? பெரிய காலேஜ்ல எல்லாம் படிக்க வைக்க இயலாது பா. சாதாரண காலேஜ்ல சேர்ந்து ஒரு டிகிரி முடிச்சுட்டு ஏதாவது வேலைக்குப் போனா என்கூட சேர்ந்து நீயும் குடும்ப பாரத்தைச் சுமக்கலாம். உனக்கு மூத்தவ வடிவு. அவளுக்குக் கல்யாணம் காட்சினு நல்லபடியா பண்ண வேண்டாமா?

உன்னைப் படிக்க வைக்கறதுக்கு செலவு பண்ணிட்டா நாளைக்கு யாருகிட்டயும் போய் கையேந்தி நிக்க முடியாதுப்பா.”

அப்பா இப்படிச் சொன்னபோது செந்திலுக்குக் கண்கள் கலங்கின. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அப்பா இந்த பதிலை எவ்வளவு வலியோடு சொல்லியிருப்பார் என நினைத்தபோது மனமும் கண்களும் கலங்கின. இரண்டாவது, தன் நியாயமான ஆசையைக் கூட நிறைவேற்றிக் கொள்ள இயலவில்லையே என்ற ஆற்றாமை மனதில் வேதனையைத் தந்து கண்ணீரை வரவழைத்தது.

அலைகளைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்த செந்தில் மனதில், இந்த எண்ணங்கள் எல்லாம் வந்துவந்து மோதிக் கொண்டிருந்தன. வேறு வழியில்லாமல் குடும்பச் சூழ்நிலை காரணமாகப் பொறியியல் கல்லூரி ஆசையை மூட்டை கட்டி வைத்துவிட்டு பிகாம் படித்து முடித்தான்.

படிப்பு முடிந்து ஒரு வருடமாகிறது. ஆனால் வேலை கிடைத்தபாடில்லை. பலவிதங்களில் முயற்சி செய்து பார்த்து ஓய்ந்து விட்டான் செந்தில். மனம் தளர்ந்து போனது அவனுக்கு. அவனுடன் படித்த நண்பர்களுக்கு வேலை கிடைத்துவிட்டதாக வரும் செய்திகள் எல்லாம் செந்தில் மனதில் இன்னும் கலக்கத்தை அதிகப்படுத்தியது.

தன்னுடைய கனவு மட்டும் கலைந்து போனதாக எண்ணி எண்ணிக் குமைந்தான். ஆசைப்பட்ட படிப்பைப் படித்திருந்தால் கண்டிப்பாக நல்ல வேலை கிடைத்திருக்கும் என்று அவன் மனதில் புரையோடியிருந்த எண்ணம் அவனை நேர்மறையாகச் சிந்திக்க விடாமல் தடுத்தது.

யாராவது அறிவுரை சொன்னாலும், ஆலோசனை சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லை. தான் இப்படி வேலையில்லாமல் இருப்பதால்தான் ஆளாளுக்கு அறிவுரை சொல்கிறார்கள் என்று கோபப்பட்டான்.

வேலை தேடிக்கொண்டே குடும்பத்திற்கு பாரமாக எவ்வளவு நாட்கள் இருப்பது? அதனால்தான் வெறுப்பின் உச்சத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து கடற்கரைக்கு வந்திருக்கிறான். இன்னும் சற்று நேரத்தில் அதை செயல்படுத்திவிடவும் தீர்மானமாக இருந்தான்.

“அண்ணா…. சுண்டல் வேணுமா? சுண்டல்… சுண்டல்… வேணுமா அண்ணா? சுண்டல்…”

வேண்டாமெனத் தலையசைத்து விட்டு மீண்டும் அலைகளைப் பார்த்தான் செந்தில்.

“ஏ…. நீ நம்ம முருகேசு மவன் தானே…?

“அட… பாவநாசம் அண்ணாச்சியா? சுகமா இருக்கீயளா அண்ணாச்சி? சுண்டல் சாப்டுதீயளா?”

இந்த உரையாடலால் செந்திலின் கவனம் திசை திரும்பியது. சட்டென்று பின்னால் திரும்பிப் பார்த்தான். இவனிடம் சுண்டல் கேட்டு வந்த அந்த வாலிபனிடம் இன்னொருவர் பேசிக் கொண்டிருந்தார். சுண்டலை விற்கும் அந்த வாலிபனுக்குக் கிட்டத்தட்ட செந்திலின் வயது தான். இப்போதுதான் அவனை நன்றாகப் பார்த்தான் செந்தில்.

தன் வயதில் இருக்கும் ஒரு வாலிபன் சுண்டல் விற்பதையும், அவன் இவ்வளவு உற்சாகமாகப் பேசிக் கொண்டிருப்பதையும் பார்த்து ஆச்சரியப்பட்டான். அதனால் அவர்கள் உரையாடலை கவனிக்கலானான்.

“எலேய்…. சுண்டல் கிடக்கட்டும்லே. கேட்டதுக்கு பதில் சொல்லுடே. நீ முருகேசு மவன் தானே? உன் பேரு…”

“என் பேரு முத்து அண்ணாச்சி. நான் முருகேசு மகன் தான். நீங்க என்ன அண்ணாச்சி இந்தப் பக்கம்? வீட்ல இருந்து எல்லாரும் வந்திருக்காகளா?”

“இல்லப்பா, நான் ஒரு ஜோலியா இங்கன வந்தேன். அதிருக்கட்டும்… உன்னைய காலேஜ்ல சேர்த்துவிடப் போறதால்ல முருகேசு சொன்னாப்ல. நீ என்ன இப்படி சுண்டல் யாபாரம் பண்ணிட்டிருக்கே? படிக்கப் போகலையா டே?”

“காலேஜ் தான் படிக்கறேன் அண்ணாச்சி.”

“பொறவு எதுக்கு இப்படித் தூக்குச் சட்டில சுண்டல வச்சுட்டு இங்கன லாந்திட்டிருக்கே?”

“இல்ல அண்ணாச்சி, அப்பாவுக்கு கால்ல அடிபட்டுருச்சுல்லா. ரெண்டு மாசமாவது ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. அதனால அம்மா தான் டீக்கடையைப் பார்த்துக்கிடுதாக.

ஆஸ்பத்திரி செலவு, குடும்பச் செலவு எல்லாத்துக்கும் வெறும் டீக்கடை வருமானம் காணாதுல்ல அண்ணாச்சி. அதான் நான் என்னால முடிஞ்சதச் செய்யுதேன். காலைல காலேஜ் போகும் முன்ன நியூஸ் பேப்பர் போடுதேன்.

பொறவு காலேஜ் போயிட்டு வாரதுக்குள்ள அம்மா சுண்டல் செஞ்சு வைக்கும். அதை இங்கன கொண்டு வந்து வித்தா நல்லா யாபாரம் ஆயிடும் அண்ணாச்சி. இத வித்துட்டு டீக் கடைக்குப் போய் அம்மாகூட கொஞ்சம் வேலை செய்வேன். அதனால ஓரளவுக்கு சமாளிக்க முடியுது அண்ணாச்சி.”

“என்ன டே சொல்தே? முருகேசுக்கு அடிபட்டது எனக்குத் தெரியாதே பா. தெரிஞ்சிருந்தா வந்து பார்த்திருப்பம்லா.”

“இப்ப பரவாயில்ல அண்ணாச்சி. கால்ல கட்டு போட்டிருக்காக.”

“எலும்பு முறிவா முத்து? நம்ம ஊரா இருந்தா இன்னேரத்துக்கு நம்ம பண்டாரவிள நாடார் முட்டப் பத்து போட்டு விட்டிருப்பார்லா.”

“ஆமா அண்ணாச்சி. இங்கனயும் பத்து போட்டு தான் விட்டிருக்காக. எலும்பு சேரணும்லா…. அதான் அப்பாவை அங்கன இங்கன அசையவிடாமப் பாத்துக்கிட வேண்டியிருக்கு.

அப்பா பரபரன்னு தான் வாராரு. வேலை செஞ்சிட்டே இருந்தவரை வெறுமனே படுத்துக்கிடக்கச் சொன்னா கேப்பாகளா? வீட்ல ஆச்சி இருக்காங்கல்லா…. ஆச்சி தான் அப்பாவப் பாத்துக்கிடுதாக.”

“ஏ பரவால்லப்பா முத்து, நீ இம்புட்டு பொறுப்பா இருக்கியே. கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு டே. சரி, நீ முருகேசுகிட்ட நான் விசாரிச்சதா சொல்லு என்ன. நான் இன்னைக்கு நைட்டு ட்ரெயினுக்குக் கிளம்புதேன் டே. இல்லன்னா ஒரு எட்டு வந்து முருகேசப் பார்த்திருப்பேன். தெரியாமப் போச்சு.”

“இல்ல… பரவால்ல அண்ணாச்சி. நான் அப்பாட்ட சொல்தேன். அப்பாவும் ரொம்ப சந்தோஷப்படுவாக. ஆச்சிதான் எப்பவும் உங்களைப் பத்திப் பேசிட்டே இருக்கும். உங்க ஜவுளிக்கடைல ஜவுளி எடுத்தாத்தான் ஆச்சிக்குப் பிடிக்கும். இங்கன எடுக்கறதெல்லாம் பிடிக்கலனு அப்பாட்ட புலம்பிட்டே இருக்கும்.”

“அப்படியா…. ஆச்சிய நான் ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லு என்ன.”

“சரி அண்ணாச்சி, நான் கிளம்பட்டா? இன்னும் அரை மணி நேரத்துல இங்கன வியாபாரத்தை முடிக்கணும். வரட்டுமா…”

“சரி டே. பார்த்து பத்திரமா போயிட்டு வா.”

இருவரும் பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர். செந்திலுக்கு யாரோ கன்னத்தில் ஓங்கி அறைந்தது போல் இருந்தது.

‘கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் முத்து எவ்வளவு உற்சாகமாகவும், நம்பிக்கையுடனும் பேசுகிறான். ஆனால் படித்துமுடித்த நான் இப்படி முட்டாள்தனமாக குடும்பத்தைப்பற்றி யோசிக்காமல் தற்கொலையைத் தேடி வந்திருக்கிறேனே. என்னை நம்பியிருக்கும் குடும்பத்தைப் பற்றி கவலையேபடவில்லை. வேலை கிடைக்கவில்லை என்று ஒரு வருடமாக வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறேன்.

அப்பா இவ்வளவு வருடங்களாகத் தனியாகத்தான் குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். அம்மா நேரம் கிடைக்கும் போதெல்லாம் அப்பாவுக்குக் கடையில் உதவி செய்வார். அப்பாவின் மளிகைக் கடை ஒன்றும் பிரமாதமான பெரிய கடையில்லை. தெருமுக்கில் இருக்கும் சாதாரண சின்னக் கடை. அதில் லாபம் பார்ப்பதே பெரிய விஷயமாகத்தான் இருக்கிறது.

அப்பா படித்ததில்லை. ஆனால் வியாபார நுணுக்கங்கள் நன்றாகத் தெரியும். இருந்தாலும் இப்போது மாறிவிட்ட அறிவியல் யுகத்தில் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டு அதற்கு ஈடுகொடுக்க அப்பா மிகவும் சிரமப்பட்டார். அப்போதெல்லாம் என்னிடம்தான் உதவி கேட்பார்.

நானாக முன்வந்து அப்பாவுக்கு உதவி தேவையா என்று கேட்டதில்லை. அப்பாவுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவே இல்லை. நான் படித்துவிட்டேன் என்ற அகந்தையாலா? மளிகைக் கடையி்ல் எல்லாம் வேலை செய்யக்கூடாது என்ற எண்ணத்தினாலா?

ஏன் இதைப்பற்றிய சிந்தனையே எனக்கு வரவில்லை. முன்பின் தெரியாத இந்த முத்து படித்துக்கொண்டே இவ்வளவு வேலைகளைச் செய்யும்போது, நான் படித்து முடித்த இந்த ஒரு வருடத்தில் அப்பாவுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று யோசிக்கக்கூட இல்லை.

அப்பாவும் என்னிடம் அதைப் பற்றிப் பேசவில்லை. ஒருவேளை நான் ஏற்றுக் கொள்வேனோ இல்லையோ என்ற தயக்கத்தில்கூட அப்பா சொல்லாமல் விட்டிருக்கலாம். என்னைச் சுற்றி எவ்வளவோ வேலைகள் இருக்கத்தான் செய்கின்றன. நான்தான் அதையெல்லாம் யோசிக்காமல் வேறு எங்கோ தேடிக் கொண்டிருக்கிறேன். இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பதற்கு ஆசைப்படுவது என்று இதைத்தான் சொல்கிறார்கள் போல.

இவ்வளவு ஏன்… பன்னிரண்டாம் வகுப்புவரை மட்டுமே படித்த வடிவு அக்காகூட வீட்டிலேயே தையல் இயந்திரத்தில் அக்கம்பக்கம் இருப்பவர்களுக்குத் தைத்துக் கொடுத்து நூறு, இருநூறு என்று சம்பாதிக்கிறார். நான் மட்டும் இப்படி… படித்தும் பக்குவமில்லாமல் இருந்து விட்டேன்.

அப்பா வைத்திருக்கும் மளிகைக் கடையில் எனக்கு வேலை இருக்காதா என்ன? சொந்தத் தொழில் செய்யும் அப்பாவுடன் சேர்ந்து வியாபாரத்தைப் பெருக்கியிருந்தால் இந்த ஒரு வருடத்தில் எவ்வளவோ சாதித்திருக்கலாம். வெளியில் வேலை தேடி காலத்தையும், உழைப்பையும் விரயம் செய்திருக்கிறேன்,’ என்று தன்னைத் தானே நொந்துகொண்டான் செந்தில்.

கலங்கிப் போயிருந்த அவன் மனதில் இப்போது தெளிவு பிறந்திருந்தது. இப்போது அலைகளும், சுற்றியிருப்பவர்களும் அவன் கண்ணுக்கு வித்தியாசமாக இருந்தன. அலைகள் ஓடி வந்து கரையைத் தொட்டுத் தொட்டுச் செல்வதைப் பார்த்தபோது நம்பிக்கை பிறந்தது. அதன் விடாமுயற்சி உற்சாகத்தைத் தந்தது.

சுற்றிலும் இருப்பவர்கள் தங்களுக்குள் ஆயிரம் கவலைகளும், ஏமாற்றங்களும் இருந்தாலும், எல்லாவற்றையும் ஓரமாக ஒதுக்கிவிட்டு மகிழ்ச்சியாக வாழப் பழகிக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது.

புது மனிதனாக உணர்ந்தான் செந்தில். நம்பிக்கையுடன் எழுந்தான். ஒட்டிக் கொண்டிருந்த கடற்கரை மணலைத் தட்டிவிட்டவன், தன் மனத்தில் ஒளிந்து கொண்டிருந்த தற்கொலை எண்ணத்தையும் அந்த மணலோடு சேர்த்து தட்டிவிட்டான்.

புது மனிதனாக, வாழ்கையை வாழ்ந்து பார்த்து வெற்றி காணும் உற்சாகத்தோடு தன் அப்பாவின் மளிகைக் கடை நோக்கிப் பயணப்பட்டான்.

பேருந்துப் பயணம் முழுவதும் அவன் மனதில் பலப்பல புது சிந்தனைகள் எட்டிப் பார்த்தன.

‘மளிகைக் கடையில் அப்பாவுக்குத் தெரிந்தபடிதான் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். நான் படித்த படிப்பை வைத்து நிறைய புதுமையான மாற்றங்களைக் கொண்டு வரலாம்.

கடையில் வாடிக்கையாக வாங்குபவர்களின் கைப்பேசி எண்களைச் சேமித்து வைத்து, அவர்களின் அவசரத் தேவைகளை கைப்பேசியிலேயே பட்டியலிட்டு அனுப்பச் சொல்லி, வீட்டிற்கே பொருட்களைக் கொண்டு சேர்க்கலாம். அது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும், கடையின் வருமானத்தையும் அதிகரிக்கும். நிறைய புதிய வாடிக்கையாளர்கள் வருவதற்கான வாய்ப்பாகவும் அமையும்.

சந்தையில் கிடைக்கும் தரமான பொருட்களை வாங்கிக் கடையில் பார்வையாக அடுக்கி வைக்கவேண்டும். சுற்றியுள்ள மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் சாமான்களை அதிகமாகக் கொள்முதல் செய்யலாம்.’

வெறுத்துப்போன மனதோடும், வாழ்வை முடித்துக் கொள்ளும் எண்ணத்தோடும் கடற்கரைக்கு வந்த செந்தில், திரும்பிப் போகும்போது புது மனிதனாகத் திரும்பிப் போகிறான். பேருந்துப் பயணத்திலேயே மளிகைக் கடையை எப்படியெல்லாம் முன்னேற்றலாம், வியாபாரத்தை எப்படிப் பெருக்கலாம் என்று கற்பனையில் கணக்கு போடத் துவங்கியது அவன் மனம்.

அவனுக்காக எதிர்கால வாழ்க்கை பிரகாசமாகக் காத்துக் கொண்டிருப்பது போல் ஒரு புதிய நம்பிக்கை அவன் மனதில் இப்போது இருந்தது. வாழ்க்கை வாழ்வதற்காகத்தான், தொலைத்துக் கொள்வதற்காக அல்ல. நம்பிக்கையுடன் உழைத்தால் வாழ்க்கையில் முன்னேற நேர்மையான, நியாயமான வழிகள் நிறைய இருக்கின்றன என்பதைத் தீவிரமாக இப்போது அவன் மனது நம்ப ஆரம்பித்திருந்தது.

வாழ்க்கை அழகானது, வாழ்க்கை வாழ்வதற்கானது. நம்பிக்கையுடன் நேர்மையான முறையில் உழைத்தால் அனைவருமே வாழ்க்கையை ரசித்து வாழலாம்.

பேருந்திலிருந்து இறங்கி அப்பாவின் மளிகைக் கடையில் வந்து நின்றான் செந்தில். உழைத்து உழைத்து ஒடுங்கிப் போயிருந்த அந்தத் தந்தையின் முகத்தில் நம்பிக்கையின் புன்னகை பிறந்தது.

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

6 Comments

  1. அருமையான கதை மா! படிக்கும் ஒவ்வொருவருக்கும் நேர்மறை எண்ணங்களைத் தோற்றுவிக்கும் விதத்தில் எழுதி இருப்பதற்குப் பாராட்டுக்கள் மா!

  2. அற்புதமான சிந்தனைகளை அழகாக மனதில் விதைக்கும் எழுத்துக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐🤝.

உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 13) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

உண்மையும் பொய்யும் கரையும் (சிறுகதை) – ச. பூங்குழலி, வடசேரி