in ,

வானில் பறக்கும் பட்டம்! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

வந்ததிலிருந்து நித்யாவை கவனித்துக் கொண்டிருந்தாள் சுமித்ரா.

அவளுக்கும்  அருணுக்கும் ஏதாவது ஒரு விஷயத்தில் சண்டை வந்து கொண்டு இருந்தது. மூன்று வருடத்துக்கு முன் பார்த்த அருணா இது! எவ்வளவு நல்ல பையனாக இருந்தான். எதற்கெடுத்தாலும் சண்டை, கோபம்! எதிர்ப்பு! சின்னப் பையன் வளர்ந்து விட்டான் என்று புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால் ஏன் இத்தனை பிரச்சினைகள். அதைத்தான் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. பழக்க வழக்கம்  சரியில்லையோ என்ற ஐயம் தோன்றியது.பல காரணங்களால் அவளால் இங்கு வரமுடியாமல் போய்விட்டது. சரி, இந்த முறை பார்ப்போம் என்று கவனிக்க ஆரம்பித்தாள் அவள்.

இஷ்டம் போல் எழுந்திருப்பது , தான் நினைத்ததை மட்டும் செய்வது.ஏதாவது சொன்னால் எரிந்து விழுவது என்று இன்றைய தலைமுறையின் சகல லட்சணங்களும் பொருந்தியவனாக இருந்தான்.

கூடுதலாக இப்போது அலைபேசி, லாப்டாப்,  தொலைக்காட்சிகளின் தாக்கம் அதிகம். திருடனைப்போல  முக்கியமான நேரங்களைஎடுத்துக்கொள்கிறது என்பது இப்போது பெரியவர்களுக்கே தெரிவதில்லை ! தெரிந்தாலும் அதை சட்டை செய்வதில்லை. இப்போதெல்லாம் எல்லாவற்றுக்கும் ஒரு மாற்று இருக்கிறதே! சமைக்க முடியவில்லையா? துரித உணவு உடனே கிடைக்கும்.

பள்ளி, கல்லூரி சம்பந்தமான எந்த ஒரு புரொஜெக்ட்,  விவாதம் போன்றவற்றிற்கு இருக்கவே இருக்கிறது கூகிள்.நிமிடத்தில் எத்தனை விதமான விவரங்கள் அருவி போல கொட்டும்!

புத்தகங்களை புரட்டி குறிப்பு எடுத்து, மாய்ந்து மாய்ந்து படிப்பதெல்லாம் இப்போது கிடையவே கிடையாதே!  கவனிக்கும் திறன் , ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுதல் எதற்கும் இப்போது அவசியமில்லாமல் போய் விட்டது. 

அதனால் இஷ்டம் போல நேரத்தை செலழிக்கத்தான் எல்லா வயதினரும் விரும்புகிறார்கள். முதலில்  அவனைத் திருந்த சொல்லு அப்புறம் நான் திருத்துகிறேன்  என்று தப்பித்துக் கொள்கிறார்கள் .

விளைவு பல விதமான நோய்கள் பிரச்சினைகள் .இளம் தலைமுறையினரின் வேண்டாத போக்கு .எதைக் கவனிப்பது! எதை விடுவது! 

அவள் யோசித்தாள். முதலில் நித்யாவிடம் பேசிப் பார்க்கலாம்.சாதாரணமாக பேச ஆரம்பித்ததுமே அவள் படபடவென பொரிந்தாள்.

“என்ன வேண்டுமானாலும் அடம் பிடிச்சு வாங்கிக்கறான். சொன்னபேச்சு கேட்கிறதே இல்லை. தினமும் போராட்டம்தான்.ஸ்கூல் விட்டு வந்தா செல்லும் லாப்டாப்பும் தான். எதைக் கேட்டாலும் ஒரு வார்த்தையில் பதில்.வேற ஏதாவது பேசினா, எப்போ பார்த்தாலும் ஏதாவது லெக்சர் கொடுக்காதே! நான் ஒண்ணும் சின்னப் பையன் இல்லை” என்று வெடு வெடுங்கிறான்.

‘என்ன பண்றதுன்னே தெரியலை’.

சுமித்ராவுக்கும் பதில் சொல்ல தெரியவில்லை.

அருண் எதனால் இப்படி மாறினான்! கேள்விகள் விசுவரூபமாக படையெடுத்தன.

இப்போதெல்லாம் பயிர்களை காப்பது போல பிள்ளைகளையும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. ஆனால் எப்படி என்று தான் தெரியவில்லை. நிறைய பெற்றவர்கள் சறுக்குவது இந்த இடத்தில் தான்.கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தால் மட்டும் பாசமாக இருப்பது ஆகுமா? இந்தகால பிள்ளைகள் என்ன எதிர்பார்க்கிறார்கள்! அது அவர்களுக்கே தெரியவில்லை. கண்டிக்க கூடாது .கண்காணிக்கக் கூடாது. எத்தனை கண்டிஷன்கள் போடுகிறார்கள்! மெதுவாக  மென்மையாக சொல்ல பெற்றவர்களுக்கு நேரமில்லை. சத்தமாக சொல்வது இளையவர்களுக்கு பிடிக்கவில்லை.கூட்டுக்குடும்பங்களில் இருந்த அந்த  அந்நியோன்யம், சிநேகபாவம், விட்டுக்கொடுத்தல் , பொறுமை , பாசம் எல்லாம்  எங்கே போயிற்று! .

சந்தர்ப்பம் பார்த்து அருணை நெருங்கினாள் சுமித்ரா.

“வரயா! கொஞ்சம் வெளியே போய்ட்டு வரலாம்.”

 ‘எங்கே! ‘

“இந்தப் பக்கத்தில் இருக்கிற பார்க் வரைக்கும்.”

‘சரி ‘என்று ஒத்துக் கொண்டு வந்தான்.

பெஞ்ச்சில்  உட்காரும் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. 

“அட்வைஸ் பண்ணக் கூட்டிட்டு வந்திருக்கேன்னா, ஸாரி! வெறுப்பேத்தாதே!”

முகத்தை திருப்பிக் கொண்ட அவனை ஆராய்ந்தாள் அவள். பிடிவாதத்தை எடுத்துக் காட்டும் மோவாய்,  அலட்சியமாக வாரப்பட்ட தலை.

“யார் சொன்னாங்க அப்படி! நான் உன்னைப் பாராட்டத்தான் நினைத்தேன்”.

‘நிஜமாவா?’ சந்தேகத்துடன் அவன் விழிகள் அவளை ஆராய்ந்தன.

“உண்மையா! நீ கராத்தே  க்ளாஸ் போறே ! ஸ்விம்மிங் கத்துக்கிட்டே! இப்போ கீ போர்ட் வேற வாசிக்கிறியாமே! “

அவன் மகிழ்ச்சியுடன் அவளைப் பார்த்தான்.

‘உனக்குத் தெரியுமா!’

“ஊம்! அதுதான் எப்படி இவ்வளவும் பண்ண முடிஞ்சுது அப்படின்னு ஆச்சரியமா இருந்தது.”

“நீ ஆச்சரியப் படறே! ஆனா அம்மா ஒரு தடவை கூட என்னைப் பாராட்டினதே இல்லை!எப்பவும் ரிங் மாஸ்டர் மாதிரி படி படி என்று துளைத்து எடுப்பாள்.”

“அவளோட வேலை அப்படி! எக்கச்சக்கமான அழுத்தம்! வீட்டுக்கு வரும்போது களைச்சுப் போயிடறா.”

“அதுசரி! அதுக்கு என் மேல் பாயணுமா!”

“அவ வரும் போது நீ என்ன செஞ்சுக்கிட்டு இருப்பே! “

“நான் என் செல்லில் விளையாடிக் கொண்டிருப்பேன்.”

“அங்கே ஆஃபீஸிலும் எத்தனையோ பிரச்சினைகளை சமாளித்து விட்டு வருகிறாள்.

இந்த மாசம் ஒரு  ப்ரொஜெக்ட் ரிலீஸ் பண்ணனுமாம். கஷ்டப்பட்டுகிட்டு இருக்கா! ஏகப்பட்ட இடைஞ்சல்கள் எல்லாம் முட்டி மோதி வீட்டுக்கு வந்தால் இங்கேயும் எதுவுமே சரியாயிருக்காது அதான், அவளுக்கு கோபம் வருகிறது. நீ என்னிக்காவது வீடு க்ளீன் பண்ணியிருக்கியா! துணிகளை அடுக்கி வச்சிருக்கியா? “

“நான் ஏன் அதெல்லாம் பண்ணனும்!”

“இது உங்க வீடு தானே ! செஞ்சா என்ன !படிச்சிட்டு இருந்தா சரி ! விளையாடிட்டு தானே இருக்கே! நீ சின்ன சின்ன உதவி செஞ்சு பாரு! ஒரு பத்து நிமிஷம் புக்ஸ் ஒதுங்க வச்சு உன்னோட டிரஸ் எடுத்துட்டுப் போய் அலமாரியில் வை. அவள் வரும் போது உனக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமானு கேளு!”

‘சரி இதெல்லாம் நான் பண்றேன்! ‘

அவன் அரைமனதாக வழிக்கு வந்தான்.

“அம்மா வந்துதான் எல்லாம் பண்ணுவாள். நான் பார்த்துக் கொண்டு தான் இருப்பேன்.”

“நீ அவகிட்ட எதுக்கெடுத்தாலும் சத்தம்  போடாதேன்னு சொல்றியா!”

“சரி, சொல்றேன்.”

அவர்களுக்குள் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.

சட்டென்று அங்கே ஒரு பரபரப்பு ஏற்பட்டது. நிறைய பையன்கள் ஓடி வந்தார்கள். பட்டம் ஒன்று மரத்தின் கிளையில் மாட்டிக் கொண்டிருந்தது.

ஒருவன் மரத்தின் மீது  ஏறப் பார்த்தான்.கீழேயிருந்தே ஒரு குச்சியை வைத்து எடுக்கப் பார்த்தான் இன்னொருவன். அங்கே அந்த சூழ்நிலையே மாறிவிட்டது. சுமித்ராவும் அருணும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“இந்த பட்டம் ஏன் மாட்டிக்கிட்டது தெரியுமா?” 

‘ஏன்! ‘

“நிறைய சொல்லலாம். நூல் சரியில்லை , பறக்க விடத் தெரியலை. இல்லைன்னா ஏதோ வேற ஒரு பட்டம் அதை கீழே தள்ளியிருக்கும் .அது மாதிரி தான் நம்ம எவ்வளவு கவனமாக இருந்தாலும் சில சமயம் ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக்குவோம் . நூலை சரியா இழுக்கிறதா நினைச்சு சில பேர் நிறைய கண்டிப்பு காட்டுவாங்க. சிலபேர் இஷ்டம் போல விட்டுடுவாங்க. உன்னைக் கண்டிக்கறதா சொன்னே! உன்மேல் இருக்கிற கரிசனம் தான் அதுக்கு காரணம். எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே அப்படின்னு ஒரு பாட்டில் வரும்.டீன் ஏஜ் வந்தாலும் இன்னும் நீ சின்னப் பையன்தான்.கையிலிருந்து உயரபறக்க விட்டு பார்த்துகிட்டு இருக்காங்க. நிறைய விஷயங்களை உன் இஷ்டம் போல நடக்க விடுறாங்க இல்லையா!

“ஆமாம் !  அதை நீ ஏன் புரிஞ்சுக்கலை!”

‘தப்புத் தான்! திட்டினா கோபம்தான் வருது.’

“இப்போ எல்லாக் கெட்ட பழக்கமும் முன்னாடி வந்து நிற்கும். சிகரெட் போதை மருந்து  குடி எதிலும் மாட்டிக் கொள்ளக்கூடாது இல்லையா?

அது சிலந்தி வலை மாதிரி எந்த பக்கமும் போகவிடாது. பெத்தவங்க சொல்றது எல்லாம் நல்லதுக்குத்தான்”. 

“பாட்டி, நீ பெரிய ஆள்தான். அட்வைஸ் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு நல்லா உருவேத்திட்டே.”

அவள் மகிழ்ச்சியுடன் சிரித்தாள்.

இதுவரை பாட்டி என்று சொல்லாதவன் இப்போது கூப்பிட்டதும் அவளுக்குள்ளும் சந்தோஷம் எட்டிப்பார்த்தது.

“டேய்! கண்ணா! நீ நல்லா படிக்கிறது மட்டுமில்லை, நல்ல பழக்க வழக்கங்களும் கத்துக்கணும். கஷ்டப் படறவங்களை பார்த்தா உதவி செய்யணும்! சரியா!”

“ஸ்டாப் ! இன்னிக்கு கோட்டா ஓவர் பாட்டி!”

மழை விட்ட வானம் போல  தெளிவான மனதுடன் இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    துடுப்பு இல்லாத படகுகள்! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

    தேவதை வந்தாள் வாழ்விலே! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்