in ,

வானமடி நீ எனக்கு ❤ (பகுதி 6) – ராஜேஸ்வரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4   பகுதி 5

“ஐயா ராசா… வாத்யார்ட்ட, உங்கப்பாரு ரூவா குடுத்து வுட்ருக்காரு…. வாங்கிக்க…. பொறவு…. அப்பாருக்கு உடம்பு நோவு….” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே

பின்னாலிருந்து அவன் அப்பாவின் குரல், “ஏய் சும்மாக் கெட… பொறவு மனசு கஸ்டப்படும்ல… படிப்பு ஓடாது. அதெல்லா ஒண்ணுமில்ல ராசா…. லேசா தடிமம் பிடிச்சிருக்கு”

மீண்டும் அம்மா பேசினாள்.

“கண்ணு….மலை காலமாருக்கு…. சுக்கு தண்ணி வெச்சுக்க. என்ன ராசா” என கத்திவிட்டு “சரவண…. சொல்லே… காதுல விழமாட்டேங்குது….என்ன யலவு போனு” என்று பேசிக் கொண்டே துண்டித்தாள்.

பவானியும் சிரித்துக் கொண்டாள். மொபைலில் அவனுடைய புகைப்படத்தை பார்த்ததும்  ஒரு லேசான பயம்கலந்த அவசரத்துடன் தன் மொபைலுக்கு ஷேர் செய்தாள்.

சரவணன் வந்தான்..”தேங்க்ஸ்….ப்பா” என்று கூறி மொபைலை விரல்படாமல் வாங்கிக் கொண்டான்..

“ஸாரி…. ப்பா….எனக்காக…. .உன்ன நிப்பாட்டிட்டேன்…..”

“ஆமா…எதுக்கு இங்க வந்த?” என்று அக்கறையுடன் கேட்டான்.

தான் வந்த காரணத்தையும், அவன் மொபைலில் அவன் அம்மா பேசியதைப்பற்றியும் சொன்னாள்.

“ஏற்கனவே அம்மா இரண்டு தடவக் கூப்பிட்டுச்சு. சிக்னல் கிடைக்காம கட் ஆயிருச்சு…. புரொஃபஸர் வேறக் கூப்பிட்டாரு….அதா…நல்லவேளை உன்னப் பாத்தேன். மொபைல் குடுத்தேன்” என்று சரவணன் பேசிக்கொண்டே இருவரும் நடக்கும்போது திடீரென சடசடவென பெரிய தூறல் விழ ஆரம்பித்தது.

இடதுபுறமாக இருந்த ரோஜா தோட்டத்தின் உள்ளே இருவரும் ஓடினர். ஆஸ்பெட்டாஸ் கூரை போடப்பட்டிருந்த நீளமான அறைக்குள் நடுவில் பாதை விட்டு ஐந்து வரிசைகளில் பல வண்ண ரோஜாச் செடிகள் வளர்ந்து சின்ன மொட்டுக்களும், மலர்ந்த ரோஜாக்களும் மணம் வீசிக்கொண்டிருந்தன.

மஞ்சள் ரோஜாக்களை ஆசையாய் பார்த்தாள் பவானி. சரவணன் தோட்டத்தின் வாசலில் இவளுக்கு முதுகு காட்டி, மழையைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.

பவானி ஒரு மஞ்சள் நிற ரோஜாவைப் பறித்தாள்.  கையில் வைத்துக்கொண்டு சரவணனைப் பார்த்தாள்.

“சரவணா” என்றழைத்தாள் மனதிற்குள்.

சடாரெனத் திரும்பிப் பார்த்தான் சரவணன்.

“கூப்பிட்டியா?…”

“இல்….இல்ல…” திடுக்கிட்டுத் தடுமாறினாள்.

“இங்க ரோஜாவை பறிக்கக்கூடாது..” என்றான்.

“தெரியாமப் பறிச்சிட்டேனே …”

என்றாள் லேசானப் பதட்டத்துடன்.

“சரி…பரவால்ல….யாரும் இல்ல….இங்க போர்டு இருக்குமே…. பறிக்காதீர்கள்..னு.” என்று தேடியபடி உள்ளே வந்தான்.

“இதோ இருக்கு….மழைக் காத்துல கீழே விழுந்திருக்கு…..” என்றபடி தூக்கி நிறுத்தினான்.

ரோஜாவுடன் இருக்கும் அவளைப் பார்த்து, “சரி,..அதை தலைல வெச்சுக்கோ” என்றான்.

ஆசையாகத் தலைப்பின்னலின் மேல் செருகிக் கொண்டாள்.

சரவணன் கண்கள் பவானியின் கண்களை சந்தித்தது. சந்தித்த கண்கள் இரண்டும் விலகவில்லை சில நொடிகள். கண்கள் நான்கும் கலந்த நொடியில்…….வண்ணமயமான காதல் வானத்தில் சுதந்திரமாக இறக்கை விரித்துப் பறந்தன இருவரின் மனமும் கைக்கோர்த்துக் கொண்டு…

மொபைலில் சவிதாவின் அழைப்பினால் இருவரும் இந்த உலகத்திற்கு வந்தனர்.  அந்த மழைக்காலம் முழுவதும் அவர்களுக்கு காதல் காலமாய் வாசம் வீசியது. நாளொரு பார்வையும், பொழுதொரு பேச்சும், சிரிப்புமாக அவர்கள் அன்புக் காதல் வளர்ந்தது.

வெற்றுப் பேச்சுக்களைத் தாண்டி, பிடித்த விஷயங்கள், பெண்களின் முன்னேற்றம், சமூக அவலங்கள், விவேகானந்தரின் பொன் மொழிகள், பசுமைப்புரட்சி,மூட நம்பிக்கைகள் ..இவற்றைப் பற்றிய இவர்களின் சிந்தனைக் கருத்துக்கள் ஒரே பாதையில் பயணித்து இலட்சியக் காதலாக வலம் வந்தது.

இருவரும் தனித்து இருக்கும் சந்தர்பத்திலும் பண்பாடுடன் நடந்து கொண்டார்கள். தன் அத்தைமகன் முருகேசனின் எண்ணத்தையறிந்த பிறகுதான் அவளுக்கு கவலை என்பதே வந்தது. அவள் முருகேசனுக்குப் பயப்படவில்லை.

அவனுக்கு நேரே தான் சரவணனைக் காதலிப்பதை உணர்த்தினாள். ஆனால் வீட்டில் தன் அத்தையின் பேச்சையும், அதற்கு தன் தந்தையும், தாயும்  பதிலுறைக்காமல் இருப்பதையும் கண்டு மனம் பதைபதைத்தாள்.

சரவணனுடன் சேர முடியாமல் போய் விடுமோ? என்கிற பயம் அவளை ஆட்கொண்டது. அதனால் சரவணன் கல்லூரியை விட்டு போவதற்குள் ஒரு முடிவு எடுத்துவிட தீர்மானித்தாள்.

இந்து கலாச்சாரத்தில் ஊறிய அவள் மனம், சரவணன் கையால் தாலி கட்டிக்கொள்வது ஒன்றே இந்த பிரச்சனைக்கு தீர்வு என ஆணித்தரமாக முடிவு செய்தது. தன் எண்ணத்தை சரவணனிடம் அடிக்கடி வெளிபடுத்தினாள்.

சரவணனுக்கு இதில் சிறிது குழப்பமாக இருந்தது. இதுவரை தன் எதிர்கால முன்னேற்றத்தைப் பற்றியே சிந்தித்த அவன், பவானியின் எதிர்காலமும் தன் பொறுப்பு என உணர ஆரம்பித்தான். இதை எவ்வாறு எதிர்கொள்வது என தடுமாறினான். காதலின் கற்பனை உலகம் மெல்ல மெல்ல மறைந்து யதார்த்தம் அவனை பயமுறுத்தியது.

மிகப் பெரியப் போர்களத்தில் தான் தனியாக விடப்பட்டதாக உணர்ந்தான். போராடும் மனதைரியம் இருந்தது. ஆனால் எதிரில் நிற்பவர்கள் உறவினர்கள். அவர்களை எதிரிகளாய் நினைக்க மனம் இடம் கொடுக்கவில்லை.  பாரதப் போரின் அர்ஜூனனாய் நின்றான். தனக்கு வழி காட்டும் கிருஷ்ணனனைத் தேடினான்.

அன்று பாரதப்போர் உரிமைக்காக நடந்தது. தர்மம் நிலைநிறுத்த நடந்தது. இதுவும் உரிமைப் போர் தான். என் வாழ்வின் உரிமை.என் மனம் விரும்பும் அன்பைப் பெற நடக்கும் போர். ஆனால் இதில் போராடாமல்  பெறவும் வழி இருக்கிறது.

அதைத்தான் பலரும் தேர்ந்தெடுப்பது. பவானியும் அதைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறாள்.  இதில் வளர்த்தவர்களின் எதிர்பார்ப்பை, கண்மறைக்கும் பாசத்தை, அவர்களின் பாரம்பரிய நம்பிக்கையை கொன்று போட வேண்டும்.

அந்த தைரியம் காதலின் வேகத்திற்கு உண்டு. ஆனால் பிறர் உயிரை துச்சமாக மதிக்கும் துரியோதனன்கள் அரிவாளை தூக்கி விடுவார்களே என்று அஞ்சினான்.

தன் உயிருக்கும், தன் உயிருக்கு உயிரான பவானிக்கும் துன்பம் நேர்ந்தால் பரவாயில்லை. தன்னைப் பெற்ற பாவத்திற்காக அவர்கள் உயிரை பணயம் வைக்க வேண்டுமே எனத் தவித்தான்.

பவானியிடம் தன் எண்ணங்களை முழுதாக சொல்லி தன்னுடைய நிலைமையைப் புரிய வைத்தான்.

“பவானி….நா சொல்றது.. புரியுதா?…இல்ல என்னைப் பத்தி தப்பா நினைக்கறியா?” என்று நிதானமாகக் கேட்டான்.

“ம்…ம்…நீங்க சொல்றது நல்லாப் புரியுது…. எனக்கும் அந்த பயம் இருக்கு…. முருகேசனையாவது நான் சமாளிச்சுருவேன். எங்க அத்தையையும், மாமாவையும் எங்க அப்பாவாலயே சமாளிக்கறது கஷ்டம். அதுவும் மாமா சண்டையை இழுக்கவே வருவாரு…. ஆளக் கொல்லறதுக்கு யோசிக்கவே மாட்டாரு….. அத நினைச்சா எனக்கும் ரொம்ப பயமாத்தான் இருக்கு….ஆனா அதை விட நீ…நீங்க..எனக்கு கிடைக்காம என்னால…வாழறது அத விட கொடுமை…என்னோட உசுரு தாங்காது…”

கைகள் இரண்டிலும் முகத்தை புதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். சரவணனுக்கும் நெஞ்சம் விம்மியது. மெதுவாக எழுந்து நடுங்கும் தன் கைகளால் அவள் முகத்தை தன் நெஞ்சில் வைத்து அழுத்திக் கொண்டான். குனிந்து உச்சியில் முத்தமிட்டான்.

பவானியின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாய் கட்டுக்குள் வந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்துப் பார்த்தாள். சிவந்த கண்களில் ஈரம் மின்னியது.

சரவணனின் கைகளைப்பற்றி  தன் இதழ்களில் ஒற்றினாள். இருவரும் எழுந்து கைக்கோர்த்தபடி நடந்தனர். ஏதோ ஒரு மன நிம்மதியை இருவரும் ஒரு சேர அனுபவித்தார்கள்.

(வானம் விரியும்… தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    என்ன சொல்லப் போகிறாய் ❤ (சிறுகதை) – மலர் மைந்தன்

    பயம் (சிறுகதை) – Writer Susri, Chennai