2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
இதுவரை தந்தையை தவிர மற்ற அந்நிய ஆடவர்களுடன் பேசி பழக்கமில்லாத பவானிக்கு,…சரவணனின் ஆழமான, அறிவான பேச்சும், பெண்களையும் சக நண்பர்களாக பார்க்கும் குணமும் அவன் மேல் மரியாதை கலந்த அன்பு கொள்ள காரணமாக அமைந்தது.
தன் சக தோழிகளில் சிலர் அவனை அண்ணா என்று உரிமையுடன் அழைத்தனர். இவளுக்கு அப்படிக் கூப்பிட மனம் விரும்பவில்லை.
லஞ்ச் பிரேக்கில் சாப்பிட்டு முடித்ததும் சவிதா சரவணனிடம், “அண்ணா….செமினார்ல உங்க ஸ்பீச் அருமை. மெடிக்கல் சீட் கிடைக்காததனால மனமுடைஞ்சு போற மாணவர்களுக்கு நீங்க கவுன்சிலிங் பண்ணலாம்” என்றாள்.
சரவணன் சிரித்துக்கொண்டே “எங்க சார் கூட ஒரு தடவை என்கிட்ட அப்படி சொன்னாரு… நான் கிராமத்துல படிச்சு வளர்ந்ததாலும், விவசாயிகளும், கூலி வேலை செய்யறவங்களும் படற கஷ்டத்த பார்த்தாலும் தான், இந்த படிப்பை விரும்பி எடுத்தேன். என்னோட இலட்சியமே எங்க கிராமத்துல விவசாயம் இன்னும் வளர்ச்சியடையணும்.. வாழ்வாதாரம் முன்னேறனும். அதுக்கு முதல் கட்டமா விவசாயத்தைப்பத்தி முழுசாத் தெரிஞ்சுக்கணும் தான் சேர்ந்தேன். எங்க பண்ணையார் தயவால கொஞ்சம் பண உதவி கிடைச்சது. என்னோட மார்க்கு னாலும் ஸ்காலர்ஷிப் இந்த காலேஜ்ல கிடைச்சது”
“நீங்க எந்த கிராமம்…ணா?”
“மாஞ்சோலை கிராமம்”
“அட, எங்க பக்கத்து கிராமம்தான்” என்றாள் பவானி.
“எது அல்லிக்குளமா?” என்று கேட்ட சரவணனிடம்
“இல்ல..இல்ல..இந்தப்பக்கம் பூந்தோட்டம் கிராமம்”
“ஆமா,….இவ அந்த கிராமத்துப் பண்ணையாரு மகள்” என்றாள் சவிதா.
“அப்போ , இவங்க எங்க சின்ன எஜமானி” என்று ஆச்சரியம் கலந்த உற்சாகக் குரலில் சிரித்துக் கொண்டே சொன்ன சரவணன் பவானியை விரித்த கண்களால் பார்த்தான்.
பவானி, புரியாமல் லேசாக சிரித்தபடி கேள்விக்குறியாக நெற்றியைச் சுருக்கினாள்.
“உங்க நிலத்துல தான் எங்க அப்பாரு வேல செய்யறாரு” என்றான்.
“ஓ…அப்படியா?” என்றாள்.
“உங்க அப்பாவோட நல்ல குணத்தினால தான் நிறைய கிராமப்புற ஏழை மாணவர்கள் இங்க படிக்கிறாங்க .. …ரொம்ப நல்லவரு” என்று புகழ்ந்தான்.
பவானிக்கு தன் தந்தையைப் பற்றி பெருமையாக இருந்தது.
“அவரும் பி.எஸ்.ஸி.அக்ரி படிச்சவரு…நீங்க சொல்ற மாதிரி தான் அப்பாவும் அடிக்கடி சொல்வாரு…. கிராமங்களின் வளர்ச்சியை உங்கள மாதிரி இளைய தலைமுறை தான் உயர்த்தணும்…னு… எங்கப்பாவோடக் குடும்பமும் சாதாரண விவசாயக்குடும்பம் தானாம்……தனக்கு இருந்த படிப்பறிவாலயும், கடின உழைப்பாலயும் தான் பண்ணையாரா உயர்ந்தேன்னு….சொல்லுவாரு”
“சரி…நேரமாச்சு….எல்லாரும் வாங்க….இன்னும் ஒருமணி நேரம் கிளாஸ் இருக்கு. .. வாங்க எஜமானியம்மா” என்று பவானியை அழைத்தான்..
“அப்படி என்னை நீங்க கூப்பிடக்கூடாது” என்றாள் பவானி சிறிது கோபமாக.
“ஸாரி…ஸாரி…. இனிமே அப்படி சொல்லல” என்று சிரித்தான். எல்லோரும் சிரித்தார்கள்.
சரவணன், பவானி இருவரின் மனங்களையும் ஒரு மெல்லிய அன்புக்கோடு இணைத்தது.
அடுத்தடுத்த வந்த களப்பணி பயிற்சியில் லீடராக வேறு மாணவன் வந்தான். அவன் பெயர் கார்த்திக். அவனுக்கும் சவிதாவிற்கும் இறுக்கமான நட்பு உண்டானது. இருவரும் சென்னைவாசிகள் என்பதால் சுலபமாக நண்பர்களாயினர்.
அன்று வெள்ளிக்கிழமை. மதிய உணவிற்குப் பிறகு பவானியும், சவிதாவும் ஊருக்கு கிளம்ப தயாரானார்கள்.
“சவி…சவி..”
“ம்….சொல்லு…”
“எங்கப்பா….காரு அனுப்பமாட்டேண்டாரு” என்று உதட்டைப் பிதுக்கி அழுவது போல பாவனை செய்தாள் பவானி.
“அப்பறம்…. ஆசை மகளுக்கு ப்ளேனே.. அனுப்பறாராமா?”என்று கேட்டுவிட்டு சிரித்தாள் சவிதா.
“ம்…ஹூம்…பஸ்ல வரச் சொல்லிட்டாரு” சோகமாகச் சொன்னாள்.
“ஏன்….?”
“இனிமே நீ பஸ்ல தான் வரணும். அப்பத்தான்…. வாழ்க்கையை……புரிஞ்சிக்க முடியும். நிழலோட அருமை வெய்யில்ல வெந்தாத்தான் தெரியும்…..அப்படீன்னு டயலாக்….கா …வுடறாரு” என்று .நீட்டி முழக்கினாள்.
“ஹஹ்….ஹா.ஹ்…ஹா” என்று பவானி ஒரு கையை இடுப்பில் வைத்துக்கொண்டு.. இன்னொரு கையை ஆசிர்வதிப்பது போல வைத்து ஆட்டி ஆட்டி பேசுவதைப் பார்த்த சவிதா கடகடவெனச் சிரித்தாள்.
“ஏய்…பஸ்ல ஜாலியா இருக்கும். அதுவும் ஜன்னல் கிட்ட சீட் கிடைச்சா அந்த எக்ஸ்பீரியன்ஸே தனி தான்.. என்ஜாய்” என்றாள் சவிதா.
“எனக்கும் அது பிடிக்கும். ஆனா கூட்ட நெரிசலான பஸ்ல எப்படி என்ஜாய் பண்ண முடியும்?” என்றபடியே முதுகில் புத்தகப்பையை மாட்டிக்கொண்டாள் பவானி.
இருவரும் வெளியே வந்து ரூமைப் பூட்டினர். சவிதாவுக்கு கார்த்திக்கிடமிருந்து கால் வந்தது. சவிதா பேசிவிட்டு பவானியிடம், “பவா…உங்க ஊருக்குப் போற பஸ் இன்னும் பத்து நிமிஷத்துல கிளம்பிடுமாம்….அடுத்த பஸ் வராதுன்னு….பேசிக்கிராங்களாம்…..சீக்கரம் போ” சவிதா அவசரப்படுத்தினாள்.
“அப்போ…..கண்டிப்பா கூட்டம்தான்…3 மணி நேரம் போரடிக்கும்.. ஓ.கே..பை…சவி” என்று வேகமாக நடந்தாள்.
பஸ்ஸில் ஜன்னல் சீட் கிடைத்தது பவானிக்கு. அவ்வளவாகக் கூட்டமில்லை. கல்லூரி மாணவ, மாணவிகளால் பாதி இருக்கைகள் நிரம்பியிருந்தது. எதேச்சையாக பின்னால் பார்த்தாள்.சரவணன் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தான். இருவரும் சிநேகமாகப் புன்னகைத்துக் கொண்டார்கள். பவானி மனதில் பேருந்தில் புதிதாக பயணிக்கும் பயம் நீங்கி பாதுகாப்பாக உணர்ந்தாள்.
ஒருமணி நேரம் கழித்து நின்ற ஒவ்வொரு நிறுத்தத்திலும் நிறைய பயணிகள் ஏறினார்கள். அதில் அதிகமாக வயதானவர்கள் பெரிய பெரிய கூடைகளுடனும், மூட்டைகளுடன் ஏறினார்கள்.
சரவணன் அவர்களுக்கு உதவி செய்தான். உரிமையுடன் அவர்களிடம் பேசினான். பவானி அதையெல்லாம் பார்த்துக்கொண்டே வந்தாள். பஸ்ஸில் கூட்டம் அதிகமாகியது. பவானி ஒரு மூதாட்டிக்கு இடமளித்து தான் நின்று கொண்டே வந்தாள். இயற்கை காற்றின் குளுமை பயணத்தை இனிமையாக்கியது.
வயதான காலத்தில் இவர்கள் ஏன் இவ்வாறு கஷ்டப்படுகிறார்கள்? எதிர்காலத்தில் இவர்கள் கஷ்டத்தைப் போக்க நான் ஏதாவது செய்வேன் என்று மனதில் சபதம் செய்துகொண்டாள் பவானி.
கூட்டம் சிறிது சிறிதாகக் குறைந்து அல்லிக்குளம் வரும்போது பவானியும் சரவணனும் இன்னும் சில மாணவர்களும், இரண்டு மூதாட்டி மட்டுமே இருந்தனர். தன் நிறுத்தத்தில் இறங்கும் சமயம் பவானி சரவணனைத் தேடினாள். அவன் இல்லை. யோசனையுடன் இறங்கிய பவானி அவனும் இறங்கி நிற்பதைக் கண்டாள்.
“அடுத்த ஸ்டாப் தானே உங்க ஊரு,…இங்கேயே இறங்கிட்டீங்க?” என்று கேட்டாள் .
“இல்ல, உங்க வீட்ல ஒரு வேலை இருக்கு…அதனால தான்…”
“எங்க வீட்லயா? என்ன வேலை?”
“உங்க அப்பாக்கிட்ட உன்னப் பத்தி சொல்லணும்”
“என்ன சொல்லணும்?” பயம் வந்தது பவானிக்கு
“நீ ஒழுங்கா படிக்கறதில்லையாம்….. புரொஃபசரையெல்லாம் கிண்டல் பண்றியாம்…. உங்கப்பாகிட்ட கம்ப்ளைன்ட் பண்ண சொல்லி என்னை அனுப்பிச்சாங்க” என்றான் சரவணன் கொஞ்சம் கோபமான முகத்துடன்.
பவானிக்கு அழுகை வந்துவிட்டது. “நா….ன்…அப்படியெல்லாம் இல்ல….நல்லாத்தான் படிக்கிறேன்….புரஃபஸருக்கு பேர்….வைப்பேன்….. அவ்வளவு….தான். ஏன் எல்லாரும் தான்…. என்னைக் காட்டிலும் ஜாஸ்தி கிண்டல் பண்றாங்க” என்று கூறிவிட்டு. விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தாள் பவானி
பின் நின்று….சரவணனை ஆழமாகப் பார்த்துக் கேட்டாள்.
“நிஜமாவே ….அதுக்குத்தான் வந்திருக்கியா?”
“ஆமா” என்றான் அழுத்தமாக
“ம்…ஹும்…நான் நம்ப மாட்டேன்”
“சரி…..நம்பாத..”
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings