in ,

வாழும் வரை போராடு (கட்டுரை) – இரஜகை நிலவன்

வாழ்க்கையே ஒரு போராட்டம்தான்! இந்தப் போராட்டத்திலே, நமக்கு எத்தனையோ வெற்றி, தோல்விகள்! இன்ப, துன்பங்கள்! மாறிமாறித் தோன்றி மறைவது இயல்பே! இருப்பினும், நாம் இந்தப் போராட்டத்தைத் தவிர்க்க முடிவதில்லை!

குழந்தைப் பருவத்திலே நமக்கு இந்த வாழ்க்கையோடு உள்ள போர் ஆரம்பித்து விடுகிறது. சூழ்நிலைக்குத் தக்கவாறு நம்மைச் சுற்றியுள்ள சீதோஷ்ண நிலைக்கு தக்கவாறு நம் உடல் நிலை மாறாத சூழ்நிலையில் உடலில் சுகவீனம் ஏற்பட்டு நம்மைப் போருக்கு அழைத்து விடுகிறது இந்த வாழ்க்கை. ”வா, நண்பனே! என்னோடு போராடு! நாளை வெற்றி கொள்ள உன் வாளையும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டு முன்னேறி வா! உன் ஒவ்வொரு விடியலும் நம் போரின் ஆரம்ப காலமாக இருக்கட்டும்! வெற்றிகளை எதிர்பார்த்து விழிப்புணர்வோடு வா! தோல்வி என்னும் மாயையில் துவண்டு விடாதே! தினமும் நீன்னை சந்தித்தே தீர வேண்டும்”  என வாழ்க்கையைப் பற்றி எழுதின ஒரு கவிஞன் நாம் தினமும் போராட்டத்தில் இறங்கியே தீர வேண்டும் என்பதை அழகாகக் குறிப்பிடுகின்றார்.

குழந்தை பருவம் முதல் மாணவப் பருவத்திலும் வாலிபப் பருவத்திலும் எத்தனை விதமாய் நாம் இந்த வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது?

உணவிற்கு, உடுத்துவதற்கு, பணம் தேடுவதற்கு முன்னால் நாம் தனித்துவம் பெறுவதற்கு என எத்தனையோ விஷயங்களுக்காக நமக்கு நாமே கேடயம் ஏந்தித் தயாராகிறோம்!

வாழ்க்கையை உணர்ந்து அனுபவித்து சகித்து வாழ்வதற்காக நமக்குள் எத்தனை போட்டி, பொறாமைகளைச் சந்திக்க வேண்டிய நிர்பந்தங்கள்  ஏற்பட்டுள்ளன!

இந்தச் சாதாரண எதிர்கொள்ளல்களைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியாது. எதிர் நின்று நின்று தன்னால் ஜெயிக்க முடியும் என்ற விவேகத்தோடு போரிட முடியாத கோழை நண்பர்கள். இறுதியில் தற்கொலைப் பாதைக்கு வழிதேட… ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்களால் இந்த உலகத்தில் தாங்கள் பிறந்ததின் நோக்கத்தையே புரிந்து கொள்ள முடியாமல் இந்தப் போராட்டத்தை என்னால் எதிர்கொள்ள முடியாது என்ற சோக முடிவிற்கு வந்து, இந்த வாழ்க்கையையே இழக்க துணிந்து விடுகிறார்கள்.

வாழ்க்கை என்பது என்ன என்பதை நாம் புரிந்து கொண்டோமானால் அதனுடைய ருசியை நம் நாக்குகள் தெரிந்து கொண்டால், நம்மால் சுக ஜீவனமாக இந்த வாழ்வை நடத்திச் சென்று,முக்தி பேறு பெற முடியும்!

ஆசைகளை வெறுத்துப் போனதாகச் சொன்ன ஞானிகளும், துறவிகளும், சாதுக்களும் கூட வாழ்க்கையின் தூய்மையை உணர்ந்து “நீ இப்படிப் போராடு மானிடனே! இந்த வாழ்வை வென்று காட்டலாம்..” என வழிகாட்டியாய் வாழ்ந்து விட்டுப் போயிருக்கிறார்களேயொழிய அவர்களும் வாழ்வின் ஒரு பக்கத்தை அனுபவித்து, அதனோடு போராடி வெற்றிப் பெற்றுச் சென்றிருக்கிறார்கள்…! ஆசைகள் என்று ஒதுக்கி விட்டுத் துறவறம் பூண்டவர்களும் அந்தத் துறவறம் என்னும் ஆசை அனிகலன்களை அணிந்து கொண்டுதான் வாழ்க்கை மலையை மோதிப்பார்த்து வெற்றியும் கண்டிருக்கிரார்கள்!

நம்மில் ஒருசாரார், இன்னும் இந்தப் போராட்டம் எனக்குத் தேவை இல்லைஎனச் சோர்ந்து போய் விடுவதால்தங்கள் வாழ்வின் உன்னதத்தை உணர மறுக்கப்படுகிறார்கள்! ஷாஜஹான் வாழ்க்கைப் போராட்டம் செய்யாம லிருந்தால், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் நம் நாட்டில் தோன்றியிருக்க முடியுமா? சாதாரண சினிமா நட்சத்திரமாக இருந்த ஜெயலலிதா , வாழ்க்கையை எதிர் கொள்ளா விட்டால், தமிழக முன்னாள் முதல்வராக மாறியிருக்க முடியுமா?

இன்னும் எத்தனையோ விஞ்ஞான அதிசயங்கள், நமக்கு சேவை செய்யப் பிறந்திருக்குமா? ஆதிகாலம் தொட்டு தீயைக் கண்டு பிடிக்க ஆரம்பித்த கற்கால மனிதன் முதல்இன்றைய மனிதன் வரை தன் வாழ்க்கையோடு போராடித்தான் பற்பல வெற்றிக் கொடிகளை நாட்டியிருக்கிறார்கள்!

போராட்டம் என்பது மனிதனுக்கு மனிதன் இடத்துக்கு இடம் மாறுபடுமே தவிர, வாழ்க்கையோடு சேர்ந்து ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற நம் மூளை என்னும் ஆயுதத்தோடு தினமும் நாம் நம் சுற்றுப்புற சூழல் எதிரிகளோடு தினமும் போராடியே தீர வேண்டிய சூழ்நிலை! அல்லது நமது பிறப்பில் எழுதி வைக்கப்பட்ட வாழ்க்கையின் கட்டாயம் எனக் கூடச் சொல்லலாம்!

இதையேதான் ஒரு புதுக்கவிஞன் “வாளெடுத்துப் போராடும் போர்க்களத்தை வான் முகிலின் மஞ்சள் நிற விடியலில், வாழ்நாள் முழுவதும் கற்பனைத் திரையில் வண்ண வடிவில் வெற்றியா? தோல்வியா? என வரயறுக்க முடியாது. எதிர்காண்கிறேன்” என்று குறிப்பிடுகின்றான்.

பிறந்த அன்றே நம்மோடு பிணைக்கப்பட்ட இந்த வாழ்க்கைப் போராட்டத்தை நாம் மதியால் போரிட்டு வென்று தினம், தினம் வெற்றியையே குவித்திடுவோம்! தோல்வி வந்திடினும், வெற்றியின் முதல் படியே எனக்கருதி மதியுகத்தோடு வாழ்க்கையில் போராடி மானிடனாய் வாழ்ந்திடுவோம்!

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தீவிரவாதம் தேவையா? (கட்டுரை) – இரஜகை நிலவன்

    வாழ்க்கை (கட்டுரை) – இரஜகை நிலவன்