எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வாடிக்கையாளர்களுக்கு பால் ஊற்றி விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான் சரவணன். பத்து மணி இருக்குமா. எவ்வளவு சீக்கிரம் கிளம்பி வந்தாலும் வீட்டுக்கு போக நேரமாயிடுது. வாணி இன்னைக்கு என்ன சொல்லப் போறாளோ . இந்த வேலையே அவளுக்கு பிடிக்கலை.
என்னாலும் நேரத்துக்கு வீட்டுக்கு போக முடியலை, சரவணனின் மனம் அங்கலாய்த்தது. மனைவியை சமாளிப்பது எப்படின்னு புத்தகம் ஏதாவது இருக்கான்னு தேடி பார்க்கணும். இப்படி நினைத்ததும் சரவணனுக்கு சிரிப்பு வந்து விட்டது.
கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்கே இந்த நிலைமை அப்பா அம்மாவை எப்படி முப்பது வருஷமா சமாளிக்கிறாரு. ஆனா அவங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கு. அதான் இரண்டு பேரும் ஆதர்ச தம்பதிகளா இருக்காங்க. இப்படி எதை எதையோ யோசித்தபடி வந்தவன் காதில் சைரன் ஒலி கேட்டது. போச்சு டா எங்கே யானை வந்திருக்குன்னு தெரியலையே என்று நினைத்தபடி தன் வீடு இருக்கும் இடத்திற்கு திரும்பினான்.
சரவணனின் வீடு மருதமலை அடிவாரத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு நகரின் அருகில் இருந்தது. அந்த இடம் அவர்களது பூர்வீக இடம். பல வருடங்களுக்கு முன் அவன் தாத்தா அங்கே சின்னதாக வீடு ஒன்றை கட்டிக் கொண்டு பால் வியாபாரம் செய்து வந்தார். வியாபாரம் செழிக்க வீடும் பெரிதானது. அந்த இடத்தில் மொத்தம் நான்கு வீடுகள் தான். மற்ற இடங்கள் காலி மனைகளாகவே இருந்தன.
காம்பவுண்ட் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து டூவீலரை நிறுத்தினான் சரவணன், வண்டி சத்தம் கேட்டு வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு வந்த அவன் அம்மா “சீக்கிரம் உள்ள வா சரவணா யானை ஊருக்குள்ள வந்து இருக்கும் போல “என்றார்.
“எனக்கும் சைரன் கேட்டதும்மா” என்றவன் “வாணி எங்கே தூங்கிட்டாளாம்மா” என்று தயக்கத்துடன் கேட்டான்.
“தூங்கிட்டாளா தெரியலை நீயும் சாப்பிட்டு போய் படு ” என்றார் பாசமாக.
“நீ போய் படும்மா நானே போட்டு சாப்பிட்டுக்கறேன் காலையில அப்பா நேரத்திலயே உன்னையும் பால் கறக்க எழுப்பி விட்டுருவாரு” என்றான் சரவணன் கொட்டாவியுடன்.
சரவணன் மனைவி வாணி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தாள். பெண் பார்க்க வந்த சரவணனை அவளுக்கு மிகவும் பிடித்துப் போனதால் அவன் கிராமத்து இளைஞன் என தெரிந்தும் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாள்.
ஆனால் புகுந்த வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே அவள் புகுந்த வீட்டார் மாட்டுத் தொழுவத்தில் செய்யும் கடினமான வேலைகளைப் பார்த்து சரவணனிடம் “மாடுகளை பார்த்து பால் கறந்து வியாபாரம் செய்யறது எல்லாம் லேசு பட்ட காரியமா. நீங்கதான் டிகிரி முடிச்சு இருக்கீங்க ஏதாவது ஒரு வேலைக்கு போகலாம் தானே” என அவ்வப்போது கூறுவாள்.
சரவணனோ ” வாணி இது எங்க வீட்டில் பரம்பரையா செய்து வர தொழில் சின்ன வயசுல இருந்து மாடு கன்னுகளைப் பார்த்து எனக்கும் இது பிடிச்சு போச்சு என்பவனிடம்
“அது இல்லைங்க வேலைக்கு போனா நிரந்தர வருமானம் வருமில்ல ” என்பாள் வாணி
“என் தாத்தா அப்பா மாதிரி இந்த தொழிலை இன்னும் பெரிசா விரிவுபடுத்தி முன்னேறுவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு நீ கவலைப்படாத சரியா” என்று அவளை சமாதானம் செய்வான் சரவணன் .
ஆனால் வாணிக்கு அந்த வீட்டின் சூழலே பிடிக்க வில்லை. புண்ணாக்கு தவிடு பருத்திக்கொட்டை மூட்டைகள் வீட்டின் முன் புறம் அடுக்கி இருப்பது வீட்டில் வீசும் பால் பொருட்களின் வாசனை பால் கறப்பதற்காக விடியலில் எழுவது காலை மாலை இரு வேளைகளிலும் டவுனின் பல இடங்களுக்குச் சென்று பால் ஊற்றி விட்டு இரவு பத்து மணிக்கு மேல் வீட்டுக்கு வருவது என எதுவுமே அவளுக்கு பிடிக்கவில்லை.
அவ்வப்போது வரும் மருமகளின் முகச் சுழிப்பிலிருந்து இந்த வீட்டின் தொழில் மருமகளுக்கு பிடிக்கவில்லை என்று சரவணனின் பெற்றோருக்கும் புரிந்தது. டவுனில் வளர்ந்த பிள்ளை அதான் இப்படி இருக்குறா . கொஞ்ச நாள் போனா சரியாயிடும் என்று தங்களுக்குள் சமாதானம் சொல்லிக் கொள்வர்.
மாமியார் மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்து விட்டு வந்தால் வாணிக்கு அவர் மேலேயே சாணத்தின் நாற்றம் வீசுவது போல் இருக்கும். “என்னம்மா வீடு எப்போதும் எல்லாரும் மாடுங்க பக்கத்திலேயே வேலை செய்யறாங்களா அதனால் எல்லார் மேலேயும் கவுச்சி வாடை அடிக்குதும்மா” என்று தன் வீட்டில் வந்து குறை கூறுவாள் வாணி.
“அவங்க எல்லாம் நல்ல குணமானவங்க வாணி நீ கொஞ்சம் அனுசரிச்சு போகணும்” என்பார் அவள் அம்மா.
வாணியோ தன் தந்தையிடம் “அப்பா உங்க மாப்பிள்ளைக்கு நம்ம வீட்டு பக்கத்தில் ஒரு இடம் பார்த்து மளிகைக் கடை ஒண்ணு வைச்சு கொடுத்துருங்க அவருக்கு சொந்தமா தொழில் பண்ணத்தான் ஆசை. கடை நம்ம வீட்டுக்கு பக்கமே இருந்தா நானும் என் வேலைக்கு போக வசதியா இருக்கும் “என்பாள் பிடிவாதமாக.
அவள் தந்தை பெண்ணின் போக்கை எண்ணி கவலை ஆனார். “இது மாதிரி பேசிட்டு இருந்தா புருஷன் கூட சண்டை போட்டுக்கிட்டு வந்துட போறா. மாப்பிள்ளை வீட்டில் எல்லாரும் நல்லவங்க அது புரிய மாட்டேங்குது இந்த புள்ளைக்கு என மனைவியிடம் புலம்புவார்.
“மகளை கொஞ்சம் விட்டு பிடிப்போம் மாப்பிள்ளை புரிஞ்சுக்குவாரு நீங்க கவலைப்படாம இருங்க” என அவர் மனைவி கணவரை சமாதானம் செய்வார்.
அடிக்கடி வாணி வேலைக்கு போகும்படி சொல்வதைக் கேட்டு ஒரு நாள் கோபத்தில் சரவணன் “நான் சொந்தமா தொழில் செய்யறேன்னு தெரிஞ்சு தானே என்னைக் கட்டிக்கிட்ட அப்புறம் எதுக்கு இதையே சொல்லி கடுப்பு ஏத்தற” என்றான். அவனை முறைத்த வாணி உங்களுக்கு நல்லதுதான் சொல்றேன் அதை ஏன் புரிஞ்சுக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறீங்க” என்றவளிடம் “தாயே நீ எந்த நல்லதும் சொல்ல வேண்டாம் எனக்கே தெரியும் நீ உன் வேலையை பாரு” என அவளை கடிந்து கொண்டான்.
வாணியும் விடாமல் “அப்படி நீங்க சொந்த தொழில் தான் செய்யணும்னு பிரியப் பட்டா என் அப்பாகிட்ட சொல்றேன் அவர் உங்களுக்கு எங்க வீட்டுக்கு பக்கமா மளிகை கடை வைச்சு தந்துருவாரு” என்றாள் பெருமையாக.
“ஏன் நீ உங்க வீட்டிலேயே தங்கிக்கலாம்னு திட்டம் போடறயாக்கும்.இங்க பாரு வாணி இது எங்க வீட்டில பரம்பரையா செய்து வர தொழில் மட்டும் இல்லை எனக்கு ரொம்ப பிடிச்ச தொழிலும் கூட அதிலும் இதை நான் ஒரு சேவையா செய்யறேன் புரியுதா” என்று கூறியவனை எரிச்சலுடன் பார்த்த வாணி “எங்க வீடு டவுனில் இருக்குது அது மளிகை கடை வைக்க தோதான இடம் அதை புரிஞ்சுக்கங்க நீங்க” என்றாள் வெடுக்கென்று.
அன்று முதல் தினம் ஏதோ ஒரு வாக்குவாதம். சில சமயம் இருவரும் இரண்டு நாட்கள் பேசாமல் இருப்பது என்று அவர்களின் ஊடல் வளர்ந்து கொண்டே போனது. இது என்னைக்கு பெரிசா வெடிக்குமோ தெரியலையே. சரவணன் பயத்துடன் இருந்தான். சரவணனின் பெற்றோரும் இவர்களின் ஊடலை கவனித்து கொண்டு தான் இருந்தனர்.
சரவணனின் தந்தையோ சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவனிடம் “தம்பி அந்தப் புள்ளைய நல்லா பார்த்துக்கப்பா உன்னை நம்பித்தான் நம்ம வீட்டுக்கு வாழ வந்திருக்கு ” என்பார் பூடகமாக.
” அப்பா நான் நல்லாதான் பார்த்துக்கறேன் சில விஷயங்களை புரிஞ்சுக்காம கொஞ்சம் வாக்குவாதம் செய்யறோம் சரியாயிடும்” என்று கூறி சமாளிப்பான் சரவணன்.
அவன் அம்மாவோ வாணியிடம் “கண்ணு நம்மகிட்ட வாடிக்கையா பால் வாங்கும் நிறைய பேர் சொல்லுவாங்க உங்க மாட்டு பால் குடிச்சுதான் எங்க வீட்டு பிள்ளைங்க வளருதுங்கன்னு அதுனாலயே சரவணன் இது வேலை இல்லம்மா சேவை அப்படின்னு சொல்லுவான் அவன் எதுவும் கோபமா பேசினா நீ எதுவும் மனசுல வைச்சுக்காத தங்கம் . எதுனாலும் என் கிட்ட சொல்லு நான் அவனை கேட்கிறேன்” என்பார் பிரியமாக.
அதற்கு வாணி அவரிடம் தலையை மட்டும் அசைப்பாள் அதிகம் பேச மாட்டாள். ஆனால் சரவணனிடம் மட்டும் தொட்டதற்கெல்லாம் கோபப் பட்டாள்.
அன்று மாலை பள்ளியில் இருந்து வந்த வாணி சரவணனிடம் ஏதோ சொல்ல ஆசையோடு மாட்டுத் தொழுவத்திற்கு வந்தாள். சரவணன் தலையில் துண்டை உருமாலாக கட்டிக் கொண்டு இடுப்பு வேட்டியை தார்பாய்ச்சாக கட்டி பால் கறந்து கொண்டு இருந்தான். கர்மம் ஒரு பெர்முடாஸ் போட்டா என்ன பட்டிக்காட்டான் மாதிரி வேட்டியை தூக்கி கட்டிக்கிட்டு இந்த மனுஷனை என்னன்னா சொல்லுறது என மனதில் புலம்பினாள் வாணி.
அங்கு மனைவியைப் பார்த்து “அட தொழுவத்துக்கே வரமாட்ட என்ன அதிசயமா இருக்குது” என்று கேலி செய்தான் சரவணன்.
“ம்.. பேய்க்கு வாக்கப்பட்டா “என்று நிறுத்தியவளிடம் “சாட்டை அடிக்கு பயப்பட கூடாது” என்று முடித்தான் சரவணன்.
“உங்க கிட்ட போய் ஒரு விஷயம் பேச வந்தேன் பாருங்க என்னை சொல்லணும்” என்று கோபத்துடன் கூறி விட்டு வீட்டுக்கு போய் விட்டாள் வாணி. மாட்டுத் தொழுவம் வீட்டுக்கு கூப்பிடு தூரத்தில் தான் இருந்தது. சரவணன் சிரித்து கொண்டே வேலையில் கவனமானான்.
இரவு உணவை சாப்பிட்டு விட்டு மனைவியை சமாதானம் செய்யும் நோக்கத்துடன் தங்கள் அறைக்குள் நுழைந்தான் சரவணன். அறையில் படுத்திருந்த வாணி அவன் உள்ளே நுழைந்ததும் எழுந்து உட்கார்ந்தாள்.
“நான் நாளைக்கு காலையில் எங்க வீட்டுக்கு போறேன்” என்று செய்தி சொல்வது போல் வாணி கூறியதும் “சுர்” என்று ஏறிய கோபத்தில் சமாதானம் செய்ய வந்ததை மறந்து கோபத்துடன் “போ” என்றான் சரவணன் ஒற்றை சொல்லில்.
“ஏன்னு கேட்க மாட்டீங்களா” என்றாள் வாணி கோபத்துடன். “உனக்கு தான் இங்கே யாரையும் பிடிக்க மாட்டேங்குதே” சரவணன் சுள்ளென பதில் அளித்தான்.
“பிடிக்கல்லைன்னு நான் சொன்னேனா” என்றவளிடம் “உன் நடவடிக்கையே அதை தெளிவா காட்டுது, இங்க பாரு வாணி நீ சொல்றதையே நான் கேட்கணும்னா அது முடியாத காரியம் உனக்கு உன் வேலை உங்க வீட்டாளுங்க எப்படி முக்கியமோ அது மாதிரி எனக்கு என் வேலை எங்க வீட்டாளுங்க முக்கியம்” என்றான் குறிப்பாக
“இப்ப எதுக்கு இத்தனை வியாக்கியானம் பேசுறீங்க ” என்று சலிப்பாக வாணி கேட்கவும் சரவணனுக்கு பயங்கரமாக கோபம் வந்தது.
இனிமேல் இவளுடன் பேசினால் தான் கை நீட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என நினைத்து சட்டையை மாட்டிக் கொண்டு கோபமாக அறையை விட்டு வெளியேறினான். வாணியும் எதுவும் கேட்காமல் அமர்ந்து இருந்தாள். வாழ்வின் சந்தோஷத் தருணங்களை கொண்டாடத் தெரியாமல் இருவரும் வார்த்தைகளால் மனதை காயப்படுத்திக் கொண்டு உறவையும் சிக்கலாக்கினர்.
வாணி நல்லவதான் ஆனா பிடிவாதம் கொஞ்சம் அதிகம் என நினைத்தபடி நடந்தவன் அவனையும் அறியாமல் மாட்டுத் தொழுவத்தின் வாசலில் வந்து நின்றான். கதவை திறந்து உள்ளே சென்று அங்கு கதவருகில் இருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தவன் உடனே எழுந்து ம்..இன்னைக்கு தூக்கம் இங்கதான் என்று முணுமுணுத்த படி கதவை சாத்தி தாள் இட்டான்.
பின் ஏதோ யோசித்தவன் “அட நாளைக்கு சனிக்கிழமை இல்லை அதான் வார விடுமுறையில் அவங்க வீட்டுக்கு போறேன் சொன்னாளா வாணி. நான்தான் கொஞ்சம் கடுமையா பேசிட்டேனோ என்று ஏதேதோ எண்ணியபடி உடல் சோர்வில் கட்டிலில் சாய்ந்து உறங்கிக் போனான்.
திடுமென விழித்த சரவணன் மரம் முறிபடும் சத்தமும் பச்சை வாசனையையும் உணர்ந்தான். அவனுக்கு புரிந்தது தொழுவத்திற்கு வெளியே யானை நிற்கிறது என. அசைவற்று கிடந்தான் சரவணன். மாடுகளும் இவன் அங்கிருப்பதாலோ என்னவோ அவைகளும் சத்தம் போடாமல் இருந்தன.
தன் மேலேயே வழுவழுவென்ற ஈரமான யானையின் துதிக்கை படருவதை உணர்ந்தான். தொழுவத்தின் கதவு சாத்தியிருந்ததால் மேல் பக்கமாக யானை துதிக்கையை உள்ளே விட்டு துழாவியது. தொழுவத்தில் தவிடு மூட்டைகள் இருந்ததால் எந்த நேரமும் கதவை உடைத்துக் கொண்டு யானை உள்ளே வரும் சாத்தியக்கூறு இருந்தது .
சரவணனின் நெஞ்சு திம் திம் என துடித்தது. சற்று நேரத்தில் தன் சாவு நிகழப் போகிறது. சாவின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட அவனுக்கு வாழ்க்கையின் அருமை புரிந்தது. வாழ்க்கை அநித்யமானது இது தான் நிதர்சனம் கடவுளே என் உயிரை நீ காப்பாற்றிக் கொடுத்தா வாணியோட சண்டை போடாம அவளை சந்தோஷமா பார்த்துக்குவேன் அவன் கண்கள் நீரை பெருக்கியது.
என் அப்பா அம்மாவையும் நல்லா பார்த்துப்பேன். கேவல் சத்தம் வெளியே வந்து விடாமல் மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டான். அவன் உடல் முழுவதையும் தொட்ட யானை தன் துதிக்கையை வெளியே இழுத்துக் கொண்டது. சரி கதவை உடைத்துக் கொண்டு யானை உள்ளே வரப் போகிறது மாடுகள் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓட போகின்றன . ஒரு நொடியில் நினையாததெல்லாம் நடப்பது தான் வாழ்க்கையா? நான் என்னாவேனோ பயந்து கிடந்தான் சரவணன்.
சைரன் ஒலியும் பட்டாசு வெடிக்கும் ஓசையும் வீட்டுக்கு அருகில் கேட்டதும் ஹால் சோபாவில் அமர்ந்திருந்த வாணி பயத்துடன் எழுந்தாள். சரவணனின் அம்மாவும் தூக்கம் கலைந்து எழுந்து ஹாலுக்கு வந்தார்.
அங்கு பயத்துடன் அமர்ந்து இருந்த வாணியை பார்த்து “ஏன் தங்கம் யானை வீட்டுக்கு பக்கமா வந்திருக்குதேன்னு பயந்து போனயா அதெல்லாம் ஆபீஸ்காரங்க வெடி போட்டு யானையை காட்டுக்கு துரத்தி விட்டுருவாங்க நீ பயப்படாத கண்ணு என்று ஆறுதலாக கூறினார்.
அத்தை என்று அவர் அருகில் சென்று கைகளைப் பிடித்து கொண்டு விம்மினாள் வாணி. “ஏன் கண்ணு சரவணன் எங்கே உள்ளே தூங்குறானா” என்று கேட்டார்.
“அத்தை அவர் என்கூட கோவிச்சுகிட்டு அப்பவே வெளியே போனாரு இன்னும் வரலை எனக்கு பயம்மா இருக்குது அத்தை” என்று சொன்னவள் உடல் நடுங்கியது.
சரவணன் கண்களை இறுக மூடிக் கொண்டு யானையின் அசைவுக்காக காத்திருந்தான். திடீரென பட்டாசு வெடிக்கும் ஓசையும் வனக்காவலர்களின் சத்தமும் சைரன் ஓலியும் மாறி மாறி கேட்டன. தட் தட் என்ற ஓலி யானை நகர்ந்து போவதை அவனுக்கு உணர்த்தியது. சரவணன் நிம்மதி பெருமூச்சு விட்டான் .
வாணியின் பயத்தை தணிக்க சரவணனின் அம்மா அவளை அணைத்து முதுகில் தட்டிக் கொடுத்தார். “பயப்படாத தங்கம் அதெல்லாம் சரவணன் பார்த்து பத்திரமா வந்திடுவான்” என்று கூறி அவளை சோபாவில் அமர்த்தி குடிக்க தண்ணீர் கொடுத்து அவள் அருகில் அமர்ந்து நடுங்கும் அவளை அணைத்து ஆசுவாசப்படுத்தினார்.
வாணி அவர் மடியில் படுத்துக் கொண்டாள். பத்திரிகையில் அவ்வப்போது வரும் செய்திகள் அவள் மனதில் ஓடியது. காட்டு யானை தாக்கி இளைஞர் பலி ஐயோ இப்படி செய்தி வருமா சரவணனும் யானை மிதிச்சு செத்துடுவானா அவன் ரொம்ப நல்லவன் நான் தான் அவனை புரிஞ்சுக்காம ஏதேதோ பேசி எரிச்சல் படுத்துவேன் அருமையான இந்த நல்ல வாழ்க்கை தொலைந்து போய் விடுமா?
நீ ஏன் இப்ப அவன் கூட சண்டை போட்டேன்னு ஒரு வார்த்தை கேட்காத இந்த பெரியவங்களை நான் மதிக்கவில்லை. வாணியின் கண்கள் கண்ணீரை பெருக்கியது. கடவுளே சரவணனை காப்பாற்று என அவள் இதயம் இறைஞ்சியது. சரவணனின் தந்தையோ “நான் வேணா அவங்க ஃபிரணட்ஸ்களுக்கு போன் செய்து அவன் அங்க வந்தானான்னு கேட்டு பார்க்கிறேன் ” என்று பரபரத்தார் .
சற்று நேரத்தில் அனைத்து ஓசைகளும் அடங்கியது. அப்போது வாசல் கதவை திறந்து கொண்டு சரவணன் வீட்டிற்குள் நுழைந்தான். அவனைப் பார்த்த அவன் பெற்றோர் ஒரு நிம்மதி பெருமூச்சுடன் அவனிடம் “இரா நேரத்தில எங்க போன சரவணா முதல்ல வாணியை கவனி பயந்து போய் கிடக்கா பாரு” என்றனர்.
வாணியோ அவனை உயிருடன் கண்டதும் தேம்பி தேம்பி அழுதாள். “நான் தான் நல்லபடியா வந்துட்டேனே அழாதம்மா” என்று கூறி அவள் அருகில் வந்து அவளை அணைத்துக் கொண்டான் சரவணன்.
மனங்கள் மெளன மொழி பேசின. பரஸ்பரம் மன்னிப்பு இருவரிடமும் எழுந்தன. சில நொடிகளில் நம் வாழ்க்கையின் போக்கே மாறியிருக்கும். அதற்குள் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறோம். வாழும் காலம் கொஞ்சமே, அதுவும் அது ஒரு வழி பாதை போனால் திரும்ப வராது. அதில் இனி இருவரும் இணைந்து சந்தோஷம் பொங்கும் ஒரு புது வாழ்க்கையை தொடங்குவோம். இருவர் மனதிலும் அந்த உறுதி தோன்றியது. இதுவரை அவர்களை பிரித்து இருந்த தடைகள் மறைந்து நெருக்கம் உருவானது.
எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings