in ,

வாழ்க்கை பயணம் தொடருமா? (சிறுகதை) – சாமுண்டேஸ்வரி பன்னீர்செல்வம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

சீக்கிரம் கிளம்புடா ரவி,  பஸ் வந்துடும், என்னால பள்ளிக்கூடத்துக்கு கொண்டு வந்து விட முடியாது. அப்புறம் நீ லீவு எடுக்கிற மாதிரி ஆயிடும். ஒழுங்கு மரியாதையா கிளம்பு.

அம்மா ப்ளீஸ்மா இன்னைக்கு ஒரு நாளைக்கு லீவு எடுத்துக்கிறேன் மா, பாடங்கள் அனைத்தும் நடத்தி முடித்து விட்டார்கள். இப்போதைக்கு ரிவைஸ் தான் நடந்து கொண்டிருக்கிறது மா. என்னுடைய வகுப்புல நிறைய பேரு லீவு போட்டுட்டு படிக்கிறாங்க மா.

நீ வீட்டில் இருந்தால் படிக்க மாட்டே,  ஒன்னு டிவி பார்ப்பே, இல்லாவிட்டால் செல்போனை எடுத்து வச்சுக்கிட்டு விளையாடிக்கிட்டு இருப்பே.. சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு கிளம்பற வழியை பாரு.

நீங்கதான் ரொம்ப மோசம் மற்ற அம்மாக்கள் எல்லாம் குழந்தைகள் சொல்வதை சில சமயம் கேட்கிறார்கள் நீங்கள் நான் எது சொன்னாலும் கேட்பதில்லை என புலம்பிக்கொண்டே கிளம்ப தயாரானன் ரவி.

உன்னுடைய அப்பா இல்லாமல் நான் எவ்வளவோ வலிகளை கடந்து உன்னை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.  நீ நன்றாக படித்து ஒரு நல்ல நிலைமைக்கு வந்து தேடிப் பிடித்து உங்க அப்பாவை கேள்வி கேட்க வேண்டும் என்றாள் ரவியின் அம்மா சித்ரா.

தப்பு உன் மேல தான் அம்மா, நீங்கள் உங்க அம்மா அப்பாவை எதிர்த்து திருமணம் செய்து கொண்டீர்கள். அவர்கள் திருமணம் செய்து வைத்திருந்தால் அப்பாவை என்ன என்று கேட்டிருப்பார்கள்.

ஆமாண்டா நான் செஞ்ச ஒரே தப்பு உங்க அப்பாவை என்னுடைய அம்மா அப்பாவை எதிர்த்து திருமணம் செய்து கொண்டது தான் என்றாள் அம்மா.

என் மேல உயிரா தான் டா இருந்தார் உங்க அப்பா, என்னைய விட்டுட்டு போற அளவுக்கு மோசமானவர் இல்லை. இடையில் என்ன நடந்தது என்று எனக்கும் தெரியவில்லை.

நானும் இன்று வருவார் நாளை வருவார் என ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து எதிர்பார்த்து இன்று வரை வரவில்லை. காரணமும் தெரியவில்லை. அவருடைய தாய் மாமன் கொஞ்சம் மோசமான ஆள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவருடைய பொண்ணை தான் செய்து கொள்ள வேண்டும் என்று மிகவும் தாய்மாமன் விரும்பினார். ஆனால் இவருக்கு மாமா பெண்ணை பிடிக்கவில்லை. ஒருவேளை உங்க அப்பாவை அவர் கடத்திக் கொண்டு வைத்திருக்கிறாரா என்று எனக்கும் தெரியவில்லை என ரவியிடம் தாய் புலம்பிக் கொண்டிருந்தாள்.

அப்போது ஏன்?  இன்னைக்கு ரவி பள்ளிக்கூடம் போகவில்லையா? ஸ்கூல் பஸ் வந்துட்டு போயிடுச்சு,  அஞ்சு நிமிஷம் நின்று கொண்டிருந்தது. ரவி வரவில்லை என்று தெரிந்து பஸ் கிளம்பி விட்டது.  ஏன் அவனுக்கு உடல்நிலை சரியில்லையா என்று கேட்டுக் கொண்டே பக்கத்து வீட்டு பாட்டி ரவி வீட்டுக்குள் நுழைந்தாள்.

வாங்க பாட்டி என வரவேற்றான் ரவி.

இதற்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை, ஏன் பள்ளிக்கூடத்துக்கு போகவில்லையா என்று கேட்டாள் பாட்டி.

பாடம் எல்லாம் நடத்தி முடித்து விட்டார்கள் பாட்டி. டீச்சரும் யாரும் வருவதில்லை அதனால் தான் பள்ளிக்கூடம் போகவில்லை என்றான் ரவி.

டீச்சர் வருகிறார்களோ,  இல்லையோ,  நீ கிளம்பி பள்ளிக்கூடத்திற்கு போகணும் தானே, அட்டன்டன்ஸ் எடுக்கும்போது உன்னுடைய வருகை  பதிவு குறைவாக இருந்தால் தேர்வு எழுத விட மாட்டார்கள் இது உனக்கு தெரியுமா என பாட்டி கேட்டார்கள்.

பாட்டியை உள்ள விட்டது தப்பா போச்சு என  ரவி முணுமுணுக்க உடனே பாட்டி என்னடா? வாய்க்குள்ளையே முணு முணுக்கிற என்று கேட்க, இவ்வளவு வயசுலையும் நீங்க எல்லாத்தையும் எப்படி ஞாபகம் வைத்துக் கொள்கிறீர்கள் என எனக்கு நானே கேள்வியை கேட்டுக் கொண்டிருந்தேன் என்றான் ரவி.

உன்னை பற்றி எனக்கு தெரியாதா?  இந்த கிழவியை உள்ள விட்டது தப்பா போச்சு அப்படின்னு தான சொல்லிட்டு இருந்தே என பாட்டி கேட்க,  எப்படிப் பாட்டி?  இவ்வளவு சரியாக சொல்கிறீர்கள் எனக் கேட்டான் ரவி.

ஏம்மா நீ வேலைக்கு கிளம்பலையா என்று ரவியின் அம்மாவை பார்த்து பாட்டி  கேட்டார்கள்.

இல்லம்மா நான் போகல, முதலாளி அம்மா வீட்ல எல்லோரும் வெளியூருக்கு சென்று இருக்கிறார்கள். வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

சிறிது நேரம் கழித்து  அவர்களுடைய  வீட்டை மட்டும் போய் பார்த்துவிட்டு வரவேண்டும் என்றாள் ரவியின் அம்மா.

இவன் சும்மா தானே இருக்கிறான் இவனைப் போய்விட்டு வரச் சொல்லு, என பாட்டி சொன்னார்கள்.

அதற்கு ரவியின் அம்மா சைக்கிள் எடுத்துக் கொண்டு போகிறேன் என்று சொல்வான். முதலாளியம்மா வீட்டுக்கு மட்டும் போய் வந்தால் பரவாயில்லை, ஆனால்  இவர் சைக்கிளை கையில் எடுத்தால் வீட்டிற்கு வருவதற்கு குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும், எங்கேயாவது சுற்றிவிட்டு தான் வருவான் என்றாள் ரவியின் அம்மா.

கொஞ்சமாவது அம்மாவின் கஷ்டத்தை புரிந்து கொள்ளடா, உன்னை மருத்துவத்திற்கு படிக்க வைப்பதற்காக எவ்வளவு செலவு செய்து உனக்கு டியூஷன் எல்லாம் சேர்த்து உள்ளார்கள்.

சரிங்க பாட்டி எனக்கு தெரியும் நான் நல்ல மார்க் தானே எடுத்துக் கொண்டிருக்கிறேன் என ரவி சொன்னான்.

இந்த மார்க் எல்லாம் பத்தாது,  அனைத்திலும் நல்ல மார்க் எடுத்து ஃப்ரீ சீட் கிடைத்தால் தான் மருத்துவம் நான் சேர்ப்பேன்.

நீங்கள் கவலைப்படாதீர்கள், ஃப்ரீ சீட்டு கிடைத்தால் தான் நான் படிப்பேன். இல்லாவிட்டால் நேராக உங்க வீட்டுக்காரர் எங்கே இருக்கிறார் என்று தேடிச் சென்று விசாரித்து நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். எங்களை விட்டு பிரிந்தது நீங்கள் தான்,  நீங்கள் எங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என கேட்பேன் என்றான் ரவி.

ராசா, அந்த தப்பை மட்டும் பண்ணிடாதே,  இவ்வளவு நாள் நான் பாடுபட்டது அனைத்தும் நொடியில் காணாமல் போய்விடும்.

அவர் என்னை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு தானே தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரிடம் பணத்தை வாங்கி நான் வாழ வேண்டுமா, 17 வருடமாக உன்னை வளர்த்து ஆளாக்கி விட்டேன். இனிமேல் அவர் பணம் வந்து ஒன்றும் ஆகப்போவதில்லை.

ஒரு காலத்தில் உங்களுடைய அப்பா அவருடைய நண்பருக்கு நிறைய உதவிகளை செய்து இருக்கிறார். அதற்கு நன்றி கடனாக அவர் உனக்கு செய்கிறார். இதுவே நமக்கு அதிகம் என்றாள் ரவியின் அம்மா.

இலல்லைமா,  நான் சும்மா தான் சொன்னேன். உங்களை விருப்பப்பட்டு திருமணம் செய்து உங்களுடைய வயிற்றில் நான் இருக்கும் போதே தவிக்க விட்டு போய்விட்டாரே, அவரிடம் போய் நான் நிற்க மாட்டேன் என்றான் ரவி.

சரி,  நீங்க வேலைய பாருங்க நான் சாயங்காலம் வருகிறேன் என்று பாட்டி கிளம்பினார்கள்.

சரி நீ போய் சாப்பிட்டுவிட்டு படித்துக் கொண்டு இரு, நான் முதலாளியம்மா வீட்டை ஒரு முறை பார்த்து வருகிறேன் என்று அம்மா சொல்ல,  நான் போய் பார்த்துட்டு பத்து நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லி சென்றவன் வீட்டிற்கு வரும் போது சடலமாக வந்தான் ரவி.

சாலையில் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்ணி லாரி ரவியின் மீது மோத  நிலை தடுமாறி லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரை இழந்தான்.

இதைக்கேட்ட தாய் சித்ரா மயக்கமுற்று கோமா ஸ்டேஜுக்கு சென்றுவிட்டார்கள். மகனின் சடலம் வீட்டிற்குள் வந்ததும் தெரியாது,  அடக்கம் செய்ததும் தெரியாது.

இப்போது அனாதையாக அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றார்கள் ரவியின் அம்மா. பாட்டி தன்னால் முடியும் போது மருத்துவமனைக்குச் சென்று ரவியின் அம்மாவை பார்த்து விட்டு    வருவார்கள்.

இந்த உயிர் வேண்டாம் கடவுளே!  எடுத்துக் கொள் என மன்றாடி விட்டு வருவாள் பாட்டி.

ரவியின் அம்மாவை ஒரு வாரம் சென்று  மருத்துவமனையில் பாட்டி போய் பார்த்த போது அவளோட கணவர் அழைத்து போய் விட்டதாகவும், வேறு மருத்துவமனையில் சேர்ப்பதாகவும் தகவல் கிடைத்தது.

 17 வருடங்களாக மனைவியை எட்டிப் பார்க்காத அவர் இன்று ரவியின் அம்மாவை அழைத்து போயிருக்காரு என்றால் ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்று அங்கிருந்த வரவேற்பறையில் ரவியின் அம்மாவை அழைத்துச் சென்றவரின் முகவரியையும் செல் போன் நம்பரையும் வாங்கிக் கொண்டு மீண்டும் வீடு வந்து சேர்ந்தாள் பாட்டி.

தன்னுடைய மருமகளிடம் கொடுத்து அந்த நம்பருக்கு கால் செய்ய சொன்னாள் பாட்டி. எதிர் முனையில் எடுத்தவரிடம் ரவியின் அம்மாவைப் பற்றியும், நீங்கள் யார் என்றும் விலா வாரியாக கேட்க ரவியின் அப்பா பேசத் தொடங்கினார்.

நான் என் மனைவி சித்ராவை மிகவும் காதலித்தேன்.  அவளை உயிருக்கு உயிராக நேசித்தேன். விருப்பப்பட்டு தான் நானும் சித்ராவும் திருமணம் செய்து கொண்டோம்.  இது என்னுடைய தாய் மாமாவுக்கு பிடிக்கவில்லை. சுமார் ஆறு மாதம் காலமாக இரண்டு பேரும் மறைந்து வாழ்ந்து வந்தோம். என்னுடைய அம்மாவிடம் அடிக்கடி என்றாவது ஒருநாள் உன்னுடைய மகனின் மனைவியை கொல்லத்தான் போகிறேன் என்று சொன்னான்.

அதிலிருந்து எனக்கு சித்ராவை என்னுடைய தாய் மாமன் கொன்று விடுவான் என்று பயந்து போய் தான் சித்ராவை விட்டு விலகினேன். சித்ராவுக்கு என்னுடைய தாய் மாமாவைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறேன்.

ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த போது தான் நான் அவனை பிரிந்து வந்தேன். பிரிந்தது தவறு என்று தெரிந்தும் வேற வழி இல்லாமல் என்னுடைய மனைவிக்கு எந்த விதமான ஆபத்தும் ஏற்படாமல்  இருக்கவே அவளை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்தேன்.

இங்கே என்னுடைய நண்பன் ஒருவர் மூலமாக சித்ராவைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்வேன். அவள் குடியிருந்த வீடு கூட என்னுடைய நண்பன் வீடு தான்.

அவளை என்னுடைய நண்பன் வீட்டில் தான் இருக்க வைத்தேன். பிரசவம் ஆகும் வரை மறைந்து வாழ்ந்தேன். பிரசவத்தின் போது அவளுக்கு பிறந்தது இரட்டை குழந்தை. அதில் ஒரு குழந்தையை டாக்டரிடம் சொல்லி நான் எடுத்து வந்து விட்டேன்.

அந்த குழந்தை என்னிடம் பத்திரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.  இந்த விஷயம் சித்ராவுக்கு எதுவுமே தெரியாது. நானும் என் பையனும் சவுதியில் இருக்கிறோம்.

சித்ரா கோமா ஸ்டேஜில் இருப்பதாகவும் பையனை பறிகொடுத்து விட்டாள் என்றும் கேள்விப்பட்டு என் பையனோடு வந்திருக்கிறேன். அவளை நான்  இருக்கும் இடத்திற்கு அழைத்துப் போகிறேன்.

அங்கே அவளுக்கு மருத்துவ சிகிச்சை சிகிச்சை அளித்து மீண்டும் என் மனைவியோடு நான் வாழத்தான் போகிறேன். நான் ஊருக்கு போவதற்குள் உங்களை வந்து நான் பார்க்கிறேன் என்று ரவியின் அப்பா பாட்டியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

மிகவும் சந்தோசம்,  கண்டிப்பாக சித்ரா கண் விழித்து விடுவாள், அவள் கண் விழிக்கும் போது நீங்கள் அருகில் இருப்பதையும், நீங்கள் வளர்க்கும் மகன் தான் பெற்ற பிள்ளை என்று தெரிந்தால் இன்னும் சந்தோசம் அடைவாள்.

நீங்கள் ஊருக்கு போவதற்குள் ஒரு முறை அவசியம் வாருங்கள் என்று சொல்லி பாட்டி மன நிம்மதியோடு கைபேசியை மருமகளிடம் கொடுத்தாள்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 3) – தி.வள்ளி.  திருநெல்வேலி 

    எதையும் ப்ளான் பண்ணிப் பண்ணனும் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை