2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“மாங்குயிலே… பூங்குயிலே சேதியொண்ணு கேளூ…” எஃப்.எம்.மில் கரகாட்டக்காரன் பாடிக் கொண்டிருக்க, நேற்று வந்த சைக்கிளின் வீலை பெண்ட் எடுத்துக் கொண்டிருந்தான் ஆறுமுகம்.
அப்போது, தன் சைக்கிள் கடை முன் வந்து நின்ற கைனடிக் ஹோண்டாவிலிருந்து இறங்கிய அந்த இரண்டு பெண்களும் தன்னை நோக்கி வேகவேகமாக வருவதை குழப்பத்துடன் பார்த்தான். “யாரு இவளுக?… எதுக்கு இத்தனை வேகமா வர்றாளுக?… ஒரு வேளை அந்த வண்டிக்கு காத்தடிக்க முடியுமா?ன்னு கேட்பாளுகளோ?”
வந்ததும் வராததுமாய், “இங்க… ஆறுமுகம்…ங்கறது யாரு?” செம்பட்டைத்தலையுடனிருந்த சுடிதார்க்காரி மிரட்டல் தொணியில் கேட்க,
“ஏன்?… நான்தான்!… ” கண்களைச் சுருக்கிக் கொண்டு சொன்னான் ஆறுமுகம்.
“நாங்க “செந்தாமரை மாதர் சங்கத்திலிருந்து வர்றோம்!.. எங்க சங்கம் சார்புல அஞ்சு முக்கு ரோட்டுல நாங்க வெச்சிருந்த பேனரைத் திருடினது நீயா?” விழிகளை விரித்துக் கொண்டு கேட்டாள் இன்னொருத்தி.
ஒரு சிறிய யோசனைக்குப் பின் “ம்ம்ம்… திருடலை… எடுத்திட்டு வந்தேன்… அவ்வளவுதான்” சாதாரணமாய்ச் சொன்னான் ஆறுமுகம்.
“அதுக்குப் பேரு திருட்டில்லாம வேறென்ன.. அன்பளிப்பா?” பற்களைக் கடித்துக் கொண்டு கேட்டாள் செம்பட்டைத் தலை.
“அப்படியா?… அதுதான் திருட்டா?… அடடே… இத்தனை நாளு எனக்குத் தெரியாமப் போச்சே” என்றான் ஆறுமுகம் வெகு அலட்சியமாக,
“என்னா மேன்..? பேனரைத் திருடினதுமில்லாம… தெனாவெட்டாப் பேசறே… உன்னோட ஆம்பளைத் திமிரையெல்லாம் வேற எங்கியாச்சும் காட்டு… எங்ககிட்ட வெச்சுக்காதே”
“த பாருங்கம்மா… என்ன நோக்கத்தோட நான் அதை எடுத்தேன்னு…” ஆறுமுகம் சொல்ல,
அவனைப் பேச விடாமல் இடையில் புகுந்த சுடிதார்க்காரி “அந்த விளக்கமெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை… நீ எடுத்தியா?…”
அவளை மேலும் கீழும் பார்த்து விட்டு, “ஆமாம் எடுத்தேன்… இப்பென்ன அதுக்கு?”
அவன் பதிலில் கோபமுற்ற இன்னொரு பெண்மணி “அட… படிப்பறிவில்லாத முண்டமே… அந்த பேனரோட மதிப்பு தெரியுமா உனக்கு?… அட்லீஸ்ட் அதுல என்ன எழுதியிருந்ததுன்னாவது தெரியுமா உனக்கு?” கத்தலாய்ச் சொல்ல.
“சரி… நீங்களே சொல்லிடுங்களேன்… அப்படி என்னதான் எழுதியிருந்தது?”
“உங்களை மாதிரி திமிர் பிடிச்ச ஆண் வர்க்கம் காலங்காலமா எங்க பெண் இனத்தை அடிமைப் படுத்தியிருக்கறதை தடுக்கற வாசகங்கள்… எங்க பெண் இனத்தோட உரிமை கோஷங்கள்…”
“ப்பூ… அவ்வளவுதானா?” வெகு சாதாரணமாய் சொன்ன ஆறுமுகத்தை எரித்து விடுவது போல் பார்த்த சுடிதார் சுந்தரி
“என்னய்யா… எங்களைப் பார்த்தா உனக்கு நக்கலாயிருக்கா?… பொம்பளைங்கதானே!ன்னு சாதாரணமா நெனச்சிட்டியா?… நாங்க நெனச்சா…”
“ப்ரியா… எதுக்கு இவன்கிட்ட அநாவசியப் பேச்சு… த பாருய்யா…எங்களோட பேனரைத் திருப்பித் தரப் போறியா… இல்லை போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணவா?”
சில நிமிடங்கள் அமைதியாய் யோசித்த ஆறுமுகம் “சரி வாங்க அது இருக்கற எடத்தைக் காண்பிக்கறேன்… முடிஞ்சா எடுத்திட்டுப் போங்க”
சொல்லி விட்டு வேகவேகமாக நடந்த ஆறுமுகத்தின் பின்னால் ஓட்டமும் நடையுமாகச் சென்றனர் அந்தப் பெண்களிருவரும்.
“அதோ… அங்க இருக்கு உங்க பேனர்… போய் எடுத்துக்கங்க”
அவன் காட்டிய திசையில் திரும்பிப் பார்த்த அப்பெண்களிருவரும் அதிர்ச்சி வாங்கி நின்றனர்.
மாநகராட்சி பெண்கள் கழிப்பிடத்தின் ஒரு பக்கச் சுவராய் நின்றிருந்தது மாதர் சங்கத்தின் பெண்ணுரிமை பேனர்.
“என்னம்மா முழிக்கறீங்க… அது பொம்பளைக் கழிப்பிடம்… போன தடவை அடிச்ச மழைல அதோட அந்தப்பக்கச் சுவர் மொத்தமா விழுந்திடுச்சு. பாவம்… இந்த ஏரியா பொம்பளைக… அதிலிருந்து பகல்ல போக முடியாம… ராத்திரி வரைக்கும் பொறுத்துக்கிட்டு… வெளிப்படையா சொல்லனும்னா… ராத்திரி வரைக்கும் அடக்கிக்கிட்டு… இருட்டானதும் மட்டுமே போய் வந்திட்டிருக்காங்க… கார்ப்பரேஷன்ல சொல்லிச் சொல்லி ஓய்ஞ்சு போச்சு… சரி… நம்ம பொம்பளைகளோட சிரமத்தை இப்படியாவது தீர்ப்போம்னு நான்தான் உங்க பேனரை எடுத்துட்டு வந்து வெச்சேன்… அது தப்பா?”
அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
“த பாருங்கம்மா… சும்மா… “பெண்ணினத்தைக் காப்போம்”.. “பெண்ணுரிமைக்காகப் போராடுவோம்”ன்னு பேனர் எழுதி வெச்சாப் பத்தாது… இது மாதிhp அவங்களோட அடிப்படைப் பிரச்சினைகளைப் புரிஞ்சுக்கிட்டு… அதைத் தீர்க்கறதுக்கு வழி பண்ணனும்… வெறுமனே மேல் மட்டத்தை மட்டுமே பார்த்தாப் பத்தாது… கீழ் மட்டத்துக்கும் இறங்கி வரணும்”
அவர்களிருவரும் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர,
ஆறுமுகம் தலை நிமிர்ந்தபடி நடந்தான்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
அருமை அருமை 👌👌👌