in ,

வாய்மை எனப்படுவது யாதெனின்… (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு.

எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்                             

“மஹாகணபதி அகத்தியர் நாடி ஜோதிடம்” என்று எழுதப்பட்டிருந்த போர்டு துருப்பிடித்து, ஒரு கம்பியில் கட்டப்பட்டுத் தொங்கிக்கொண்டிருந்தது. போர்டுக்குக் கீழே லேசாகத் திறந்திருந்த ஒற்றை இரும்புக் கதவைத் தள்ளி உள்ளே எட்டிப் பார்த்தான் வேலுச்சாமி.

ஒருவர் மட்டுமே நடந்து செல்லும் அளவிற்கு ஒரு பாதை சென்று, மாடிப்படியின் கீழே முடிந்திருந்தது. அதில் ஏறிச் சென்றபோது, மாடிப்படிக்கட்டு அவனை ஒரு மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றது. மொட்டை மாடியின் வலது புறம் பெயருக்கேற்றவாறு மொட்டையாக விடப்பட்டு, அங்கங்கே தூக்கில் துவைத்துக் காயப்போடப்பட்ட துணிகள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன.

மொட்டை மாடியின் இடதுபுறம் ஆஸ்பெஸ்டாஸ் சீட் இறக்கப்பட்டு, அதன் உள்ளே நாடி ஜோதிடம் பார்க்க வருபவர்கள் உட்காருவதற்காக, பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருந்தன. வேலுச்சாமி உள்ளே நுழைந்தபோது இரண்டு பேர் அவனுக்கு முன்னதாகவே வந்து காத்துக் கொண்டிருந்தனர். நண்பன் மாணிக்கம் எச்சரித்தது அவனுக்கு இப்போது ஞாபகம் வந்தது.

‘டேய்… வழக்கம்போல ஆடி அசைந்து போகாதே.. காலையில் எட்டு மணிக்கு நீ அங்கே இருக்க வேண்டும். ஒரு அளவுக்கு மேல் அவர் யாருக்கும் நாடி ஜோதிடம் பார்க்க மாட்டார். கருணை காட்டாமல் திருப்பி அனுப்பி விடுவார். ஆனால் அவர் சொல்வது எல்லாம் நூறு சதவீதம் சரியா இருக்குதாம். அதனால் கூட்டம் கண்டிப்பாக இருக்கும். இவர் மூலமாவது உனக்கு விடிவு காலம் வருதான்னு பார்க்கலாம். வெளியில் யாருக்கும் சொல்லி விளம்பரப்படுத்தாமல் போய் வா..’ என்று அவன் சாதாரணமாகக் கூறினாலும், உன் சம வயதுடைய நான் கல்யாணம் ஆகி, இரண்டு குழந்தைக்கும் தந்தையாகி விட்டேன், நீ இன்னும் மொட்டையாக சுற்றிக் கொண்டிருக்கிறாயே என்ற ஏளனத் தொனி அவன் குரலில் ஒலித்தது போல் வேலுச்சாமிக்குத் தோன்றியது.  

நண்பன் குத்திக் காட்டியது தவறில்லை என்றுதான் வேலுச்சாமிக்கும் தோன்றியது. காரணம், வேலுச்சாமிக்கு இருபத்தியாறு வயது தொடங்கியதில் இருந்தே அவனின் பெற்றோர்கள் அவனுக்குப் பெண் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

பெற்றோருக்கு ஒரே பையனான வேலுச்சாமிக்கு தோட்டம், வீடு என்று ஏராளமான அசையாச் சொத்துக்களும், கையில் தாராளமாகப் புழங்கும் பணமும் இருந்தும், ஏனோ சரியான பெண் அமையாமல் பிரம்மச்சாரியாய் அவன் முப்பத்திரண்டு வயதைத் தாண்டியிருந்தான்.

பெற்றோர்கள் மறைவுக்குப் பின்னும், என்ன காரணம் என்று தெரியாமலேயே, திருமணம் ஆகாமல் அவன் நாற்பது வயதைக் கடக்கத் தொடங்கியிருந்தான். தமிழ்நாட்டில் அவன் பார்க்காத ஜோசியரோ, போகாத கோயிலோ இல்லை என்ற நிலைமை வந்த போதுதான் மாணிக்கம் இந்த நாடி ஜோதிடரைப் பற்றிச் சொல்லி அனுப்பி வைத்திருந்தான்.    

உட்கார்ந்திருந்த இரண்டு பேரில் நடுத்தர வயதுடைய அந்தப் பெண்மணி அவனிடம் பேச்சுக் கொடுத்தார்.

‘உங்களுக்குத்தான் நாடி ஜோதிடம் பார்க்க வந்திருக்கிறீங்களா?’ என்று ஆரம்பித்தார்.

‘ஆமாங்க…’ என்றவுடன் கடகடவென அவனுக்கு வழிகாட்டத் தொடங்கினார்.

‘நீங்க அந்த ரூமுக்கு உள்ளே போனா, முன்னால ஒரு சேர் போட்டு சின்ன சாமி உட்கார்ந்திருப்பார். முதலில் நூறு ரூபாய் பணம் கட்டினால், உங்க வலதுகை கட்டைவிரல் ரேகையை ஒரு பேப்பரில் எடுத்து வைத்துக்கொண்டு உங்களுக்கான ஓலைச்சுவடியைத் தேடத் தொடங்குவார். உங்களுக்கான‌ ஓலைச்சுவடி கிடைத்தவுடன், பூஜை அறையில் உட்கார்ந்திருக்கும் பெரிய சாமி உங்களைக் கூப்பிட்டு வாக்குச் சொல்லுவார். அப்படி இங்கே ஓலைச்சுவடி கிடைக்கலேன்னா, வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள நாடி ஜோதிட இல்லத்தில் தேடிக் கண்டுபிடிப்பார்கள். சில பேருக்குக் கிடைக்கும், சில பேருக்குக் கிடைக்காது… அது அவரவர்கள் அதிர்ஷ்டம்..’ என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அந்த அம்மாள் கூறியது போல‌ அன்று வேலுச்சாமிக்கு அதிர்ஷ்ட தினம் போலும். காத்திருந்தவர்களில் அவனையே முதலில் கூப்பிட்டார்கள்.

பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு முன், பெரிய சாமி சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தார். அவர் அணிந்திருந்த தூய வெள்ளை ஆடை, அவர் நெற்றியில் பூசியிருந்த திருநீற்றுக்கு மேட்ச்சாக இருந்தது. மற்றபடி பயமூட்டும் அலங்காரமோ, தோற்றமோ இல்லாமல் சாதாரணமாகவே இருந்தார்.

அவர் முன்பு நான்கைந்து ஓலைச்சுவடிகள் ஒரு தட்டில் வைக்கப்பட்டிருந்தன. சாம்பிராணியின் வாசமும், ஊதுபத்தியின் மணமும் ஒன்று கூடி அங்கே ஒரு பக்திச் சூழ்நிலையை உருவாக்கி இருந்தன. பெரிய சாமி அவனைப் பார்த்துப் பேசினார்.

‘உங்களுடைய கை ரேகையின் அடிப்படையில் பொருந்தி வரக்கூடிய நான்கைந்து ஓலைச்சுவடிகள் கிடைத்துள்ளன. இதில் எது உங்களுடையது என்பதை நீங்கள் சொல்லும் ‘ஆம்’, ‘இல்லை’ என்ற உங்களின் பதிலை வைத்துத்தான் முடிவு செய்ய இயலும். ஆகவே என்னைப் பரிசோதிக்க‌ நினைக்காமல், உங்கள் குலதெய்வத்தை நம்பி உண்மையை மட்டும் சொன்னால் போதும். எதையும் மறைக்க முயற்சிக்க‌ வேண்டாம். இங்கு பேசும் பேச்சு எதுவும் வெளியில் போகாது. ஓலைச்சுவடியில் உள்ள‌ வரிகள் அனைத்தும், பாடல் வரிகளாகத்தான் இருக்கும். பாடலில் வரும் வரிகளுக்குப் பொருள் புரியாவிட்டால், இடைமறித்து விளக்கம் கேட்கலாம். சரி, ஆரம்பிக்கலாமா?’ என்று கேட்டுவிட்டு ஒரு நிமிடம் கண்ணை மூடிப் பிரார்த்தனை செய்து விட்டு ஒரு ஓலைச் சுவடியைக் கையில் எடுத்தார்.

எடுத்த சுவடியில், வேலுச்சாமியின் தாயின் பெயர் சரியாக வந்தது. ஆனால் தந்தையின் பெயர் சரியாக‌ வரவில்லை. இப்படியே மூன்று சுவடிகள் பொருந்தி வராமல், நான்காவது சுவடி அவனுடையதாக இருந்தது. பாடலில் அவனின் அம்மாவின் பெயர் காளியம்மாள் என்பதை ருத்ர ரூப அம்மன் என்றும், அப்பாவின் பெயரான தங்கவேல் என்பதை சிவனின் மைந்தன் கையில் உள்ள மின்னும் ஆயுதம் என்றும் குறிப்பிடப்பட்டு அவனுக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை என்பதையும் குறிப்பிட்டதுடன், அவனுக்கு இதுவரை திருமணம் நடைபெறாததற்கான காரணத்தையும் தெளிவாக்கியிருந்தது.  

‘உங்கள் திருமணம் தடை பெற்றிருப்பதன் காரணம் நீண்ட பாடலாக எழுதப்பட்டிருக்கிறது. இதை நான் படித்து விட்டு, உங்களுக்குப் புரியும் வகையில் உரைநடையாகச் சொல்லுகிறேன்’ என்று சொல்லிவிட்டு ஒரு இரண்டு நிமிடம் ஓலைச் சுவடியைப் படித்துவிட்டுச் சொல்லத் தொடங்கினார் பெரிய சாமி.

‘இந்தப்பிறவியில் வேலுச்சாமியாக இருக்கும் நீங்கள், போன பிறவியில் மோகனசுந்தரம் என்ற பெயர் கொண்டு, ஒரு நிதி நிறுவன அதிபராக இருந்தீர்கள். நிதி நிறுவன அதிபராக ஆவதற்கு முன்பு, வார வட்டி, மாத வட்டி என்ற பெயரில் ஏழைகளுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்து, அவர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி அதிக வட்டி வாங்கி செல்வத்தைக் குவித்து நிதி நிறுவனத்திற்கு அதிபரானீர்கள். வட்டி வசூலின்போது கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தியும், பயமுறுத்தியும் வசூல் செய்து அதை உங்களின் திறமை என்று பறைசாற்றிக் கொண்டீர்கள். உச்சபட்சமாக, உங்கள் பெரியப்பாவின் பெண், அதாவது உங்கள் தங்கை, உங்களின் நிதி நிறுவனத்தில் வாங்கியிருந்த கடன் தொகைக்கு வட்டி கட்ட முடியாமல் இருந்த போது, சிறிதும் கருணையின்றி தங்கையின் மகள் நிச்சயதார்த்த தினத்தன்று ஆட்களைக் கூட்டிச் சென்று பணம் கேட்டு கலாட்டா செய்து, அப்பெண்ணுக்கு திருமண பாக்கியமே இல்லாமல் செய்து பாவத்தைச் சம்பாதித்துக் கொண்டீர்கள். திருமணமாகாமலேயே இருந்து, நாற்பது வயதில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அந்தப் பெண்ணின் சாபம்தான் உங்களின் திருமணத்திற்குத் தடையாக இருக்கிறது’ என்று முடித்தார்.

தன் முற்பிறவியின் ரகசியத்தைக் கேட்ட அதிர்ச்சியில் இருந்த வேலுச்சாமி, சுதாகரித்துக் கொண்டு பெரிய சாமியிடம் கேட்டான், ‘இதற்கு பரிகாரம் ஏதும் உண்டா சாமி?’.

‘உங்க வாழ்க்கை, ஓலைச்சுவடியில், காண்டம் காண்டமாகப் பிரித்து எழுதப்பட்டிருக்கும். தொழில், கல்வி, செல்வம், திருமணம் போன்ற பலவகைப்பட்ட காண்டங்கள் இருக்கும். இனி உங்களின் திருமண காண்டத்தைப் படித்துப் பார்த்தால்தான் பரிகாரம் கண்டுபிடிக்க முடியும். பார்க்க வேண்டும் என்றால், நீங்கள் ஒருமணி நேரம் காத்திருந்தால் ஓலைச்சுவடியைத் தேடி எடுத்து உங்களுக்கான பரிகாரம் சொல்கிறேன்’ என்றார்.

அடுத்த அரைமணி நேரத்தில் பெரிய சாமியின் முன் பவ்யமாக அமர்ந்திருந்தான் வேலுச்சாமி. பரிகாரம் என்ன இருக்குமோ என்ற பதைபதைப்பு உள்மனதில் இருந்தாலும், தான் தன் வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் இருப்பதை அவன் உணர்ந்து கொண்டிருந்தான்.

‘நீங்கள் நாற்பது வயது வரை திருமணமாகாமல் அனுபவித்த வேதனையே ஒரு தண்டனையாகக் கருதப்படுகிறது. இனி உங்களுக்கு வாழ்க்கையில் திருமணம், குழந்தைகள் என்ற சுகங்கள் மற்றவர்களுக்குக் கிடைப்பது போலவே கிடைக்கப் போகிறது. போன பிறவியில் திருமணமாகாமல், நாற்பது வயதில் தற்கொலை செய்து கொண்ட பெண்தான் இப்பிறவியில் முப்பத்து மூன்று வயதாகியும் இன்னும் திருமண பந்தம் கூடாமல் உங்களுக்க்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள். தங்களின் ஊரில் இருந்து வடமேற்குத் திசையில் இருக்கும் மூன்று எழுத்து ஊர். அந்த ஊரிலேயே, அந்த ஊரின் பெயரிலேயே ஓடிக்கொண்டிருக்கும் நதி. அந்த நதியின் பெயர்தான் அப்பெண்ணின் பெயரும். புரிகிறதா? இல்லை நான் சொல்லட்டுமா?’ என்றார்.

‘பவானி’ என்றான் வேலுச்சாமி.

‘சரி’ என்று ஆமோதித்த பெரிய சாமி, ‘நீங்க கொஞ்ச நேரம் காத்திருந்தால், இன்னும் கூடுதல் விபரங்கள் தருகிறேன். வருகிற வெள்ளிக்கிழமை ஒன்பது மணிக்கு நீங்கள் நேரடியாகச் சென்று பேசலாம். எந்த நிபந்தனையும் இன்றி அப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் உங்கள் வாழ்க்கை சிறக்கும்’ என்றார்.

‘நிச்சயமாங்க ஐயா..’ என்றான் வேலுச்சாமி நன்றியுடன்.

தனக்கும் ஒரு திருமண வாழ்க்கை கிடைக்கப் போகிறது என்பதே பெரிய மகிழ்ச்சியாக இருந்தது அவனுக்கு. மனதிற்குள் தன்னை இங்கு அனுப்பிய நண்பன் மாணிக்கத்திற்கு நன்றி சொல்லிக்கொண்டான்.

சின்ன சாமியைக் கூப்பிட்டார் பெரியசாமி. ‘போன வாரம், முப்பத்து மூன்று வயதாகியும் தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று நம்மிடம் ஜோதிடம் கேட்க வந்தாரே ஒரு பெரியவர், பவானியில் இருந்து… அவரின் முகவரியை இப்போ வந்துள்ள வேலுச்சாமியிடம் கொடுத்து அனுப்பிவிடு. பெரியவரை போனில் கூப்பிட்டு வருகிற வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு அவர் வீட்டிற்கு வருகிற வேலுச்சாமிதான் அவர் பெண்ணுக்கு மாப்பிள்ளை என்றும் கூறிவிடு’ என்று கூறி அனுப்பினார்.

பெரிய சாமியின் கட்டளைகளை நிறைவேற்றிவிட்டு, திரும்பி வந்து, பெரிய சாமியைக் குறுகுறுவென்று பார்த்துக் கொண்டு நின்றார் சின்ன சாமி. ‘என்ன?’ என்பதைப் போல் பார்த்த பெரிய சாமியிடம் கேட்டார் சின்ன சாமி,

‘போன பிறவியில் செய்த பாவத்தை ஓலைச்சுவடியில் இருந்து படித்துக் காட்டிய வரை சரி… அதற்குப் பின்னால் பரிகாரம் என்று நீங்கள் இந்தப் பையனையும், அந்தப் பெண்ணையும் இணைத்து வைத்தது எந்தச் சுவடியிலும் இல்லாதது ஐயா… இப்படி நீங்கல் செய்தது தொழில் தர்மம் ஆகுமா?’ என்றார்.

‘சில நன்மைகள் செய்ய வேண்டுமென்றால், சில சமயம் நாம் சில நியமங்களில் அடம் பிடித்து நிற்காமல், நன்மை ஒன்றையே குறிக்கோளாக வைத்துச் செயல்பட வேண்டும். ஆனால் அந்தச் செயல் யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் சொல்லும் பொய், சில நன்மைகளை உண்டாக்கும் என்றால் அதைச் சொல்வது தவறில்லை.

இதைத்தான் ஐயன் வள்ளுவன் ‘வாய்மை எனப்படுவது யாதெனின்..’ என்ற குரளில் தெளிவாகக் கூறியிருக்கிறார். எந்தத் தொழிலாக இருந்தாலும், தொழிலின் இலக்கு எல்லோருக்கும் நன்மை பயப்பதாக இருக்க வேண்டும் என்பதே. அந்த வகையில் நான் என் தொழில் தர்மத்தை எப்பொழுதும் மீற மாட்டேன். அந்த தெய்வம் நமக்கு துணை இருக்கும். கவலைப்படாமல் கடமையைச் செய். நல்லதே நடக்கும்..’ என்றார் அமைதியாக. 

எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)   

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நூல் விமர்சனம் – 47 நாட்கள் (சிவசங்கரி) – தி. வள்ளி, திருநெல்வேலி

    புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி