in

வாடகைத் தாய் (குறுநாவல்) – ✍ பேராசிரியர் முனைவர். வளர்மதி சுப்ரமணியம், சென்னை

ஜூன் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பொங்கல் விழா முடிந்து, ஊர் மக்கள் ஏர் பூட்டுதல் விதைகள் விதைப்பு, நாற்றாங்கால் பாத்தி அமைத்தல் என புது வாழ்வை நோக்கி நடை போடுகின்றனர். காளியம்மாள் தனது இரண்டாவது குழந்தை பிறக்கும் நாட்களை நோக்கி காத்திருக்க, கணவன் திம்மப்பன் பொங்கல் விழா முடித்து வயலில் ஏர் பூட்டி விதைகள் விதைக்க அவரது பூர்வீக நிலம் இருக்கும் புளியம்பட்டிக்குச் சென்று விடுகிறார்.

தன் அக்கா வீடும் கணவனின் அக்கா துளசி வீடும் வெங்கடதாரஹல்லியில் இருப்பதால், காளியம்மாள், திம்மப்பனை மணந்த பிறகும் புளியம்பட்டிக்குச் செல்லாமல் திம்மப்பன் அக்கா வீட்டிலேயே இருந்து விடுகிறாள்.

தை பிறந்தால் வழி பிறக்கும், ஆனால் சில தைகள் வழியை அடைத்தும் விடும். ஆம், காளியம்மாவின் வாழ்க்கையை அடைத்து வைத்த தை மாதம்தான் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து இரண்டு தை எட்டாம் நாள்.

அன்று ஊர் மக்கள் அனைவரும் உழவு வேலை செய்த களைப்பில் உறங்கிக் கொண்டிருக்க நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு தலைவிரி கோலத்தில் கைக்குழந்தையுடன் அக்கா கௌரம்மாள் ஓடோடி வந்து  தன்னிடம் இதை கேட்பாள் என கனவிலும் நினைக்கவில்லை தங்கை காளியம்மாள்.

ஐந்து வயதில் தாயை இழந்த காளியம்மாளுக்கு அவளை விட மூன்று வயதே மூத்த அக்கா கௌரம்மாள் தாயாகிறாள். அதன் பிறகு மூன்று வருடங்களில் தந்தையும் இறந்து விடுகிறார். தாய் தந்தை இருவரையும் பறிகொடுத்த காளியம்மாள் மற்றும் கௌரம்மாள், அவர்களது ஒன்று விட்ட சித்தப்பா வீட்டில் வளர்கின்றனர்.

தூரத்து உறவு ஒருவர் மனைவியை இழந்த முப்பது வயதான மூக்கப்பனை அறிமுகம் செய்கிறார். கௌரம்மாளை மூக்கப்பனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார் அவளது பெரியப்பா.

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபது வரை பால்ய விவாகம் சமூகத்தில் பரவலாக இருந்தது. அந்த வழக்கம் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுக்கு பிறகு பல சமூக புரட்சியாளர்களின் விடாத முயற்சியால் சிறிது சிறிதாக மாறி இப்போது எங்கோ சில கிராமங்களில் இந்த வழக்கம் தொடர்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

பன்னிரண்டே வயது ஆன கௌரம்மாளுக்கும் முப்பது வயதான மூக்கப்பனுக்கும் நிச்சய தாம்பூலம் முடித்து கௌரம்மாள் பருவமெய்தும் முன்பே திருமணம் நடைபெறுகிறது. சிறு வயதில் திருமணம் நடந்தாலும் கட்டிய மனைவி பூப்பெய்தும் வரை கணவன் அவளுடன் உடலுறவு வைத்துக் கொள்ள கூடாது என்பது அவ்வூர் வழக்கம். மனைவி பூப்பெய்த பின் சாந்தி முகூர்த்தம் என்ற விழாவினை கொண்டாடிய பின்னரே உடல் உறவு கொள்ள வேண்டும். பால்ய விவாகம் என்ற பிற்போக்கு தன்மை இருப்பினும் பருவமெய்துமுன் உடல் உறவு கூடாது என்னும் மாண்பு இந்த பகுதி மக்களிடம் இருந்தது போற்றுதற்குரியது.

 திருமணம் முடிந்து மூன்று அண்டுகளுக்குப் பிறகே கௌரம்மாள் பூப்பெய்துகிறாள். அதுவரை, அக்கா தங்கை இருவரும் மூக்கப்பன் வீட்டிலேயே அவரது தாயார் தங்கம்மாவை ‘பாட்டி… பாட்டி’ என வாஞ்சையுடன் அழைத்து, வீட்டின் பின்புறம் அமைந்துள்ள வீட்டுத் தோட்ட்டத்தில் பகல் நேரங்களிலும் அந்தி சாயும் நேரத்தில் ஊர் தெருக்களில் ஓடி ஒளிதல் போன்ற பல  விளையாட்டுகள் விளையாடியும் மகிழ்வாக வாழ்கின்றனர்.

பெற்றோர் இழந்த பெண்கள் என்ற கரிசனமும், அதிகமான சொத்துக்கு வாரிசுகள் என்பதாலும் மூக்கப்பன் வீட்டில் அக்கா தங்கை இருவரும் இளவரசிகளாகவே உலா வருகின்றனர். அவ்வப்போது ஏதேனும் வேலைகள் செய்யும் ஆர்வம் காட்டினாலும், “ஐயா எங்கள திட்டுவாரு, நீங்க போங்க” என்று வேலைகாரர்கள் இருவரையும் அனுப்பி விடுவர். பட்டாம்பூச்சிகளாக மகிழ்வுடன் அந்த வீட்டில் இருவரும் வலம் வருகின்றனர். 

இந்த நேரத்தில் கௌரம்மாள் பூப்பெய்துகிறாள். அவளது சுதந்திர செயல்பாடுகள் பல கட்டுபடுத்தப்படுகிறது. அவள் தெருவில் சென்று விளையாடுவதற்கு தடைபோடுகிறார் தங்கம்மா பாட்டி. இதனால்  காளியம்மாள் தனிமை ஆக்கப்படுகிறாள்.

இதனை உணரும் கௌரம்மாள் பாட்டியிடம், “காளிம்மாளுக்கு பதிமூன்று வயதாகி விட்டது இந்த ஊரிலேயே யாருக்காவது திருமணம் செய்து வைக்கலாமே” என கேட்க, அவர் வரன் பார்க்க ஆரம்பிக்கிறார். தாயில்லாமல் வளர்ந்த தன் தங்கையை ஒரு தாயாக கவனித்து கொள்ளக் கூடிய வீட்டில் கட்டி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறாள் கௌரம்மாள்.

 புளியம்பட்டியிலிருந்து வெங்கடதாரஹல்லிக்கு மருமகளாக வந்து ஒரு நல்ல தாரமாகவும் தாயாகவும்  தனது தம்பி தங்கைகளையும் சேர்த்து கவனித்து கொள்ளும் செல்லம்மாள் மகள் துளசி நினைவுக்கு வருகிறார்.

“அவரது உறவில் யாராவது அமைந்தால் பார்க்கலாம்” என தங்கம்மா பாட்டி அவரை விசாரிக்க

அவரோ, “முதல் தம்பி திம்மப்பன் மற்ற அனைவருக்கும் திருமணம் முடித்து வைத்து இருபத்தைந்து வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வயல், கோவில் என தனது வாழ்க்கையை கழிக்கிறார். அவரை வேண்டுமானால் பார்க்கலாம்” என கூற

தங்கம்மா பாட்டி, “முறை இருந்தால் அவரையே திருமணம் செய்து விடலாம்” என விருப்பம் தெரிவிக்கிறார். அதன் பின் துளசியின் முதல் தம்பி திம்மப்பனுக்கும் கௌரம்மாள் தங்கை காளியம்மாளுக்கும் இருவரது அக்காக்களும் அன்னைகளாக நின்று திருமணம் நடத்தி வைக்கின்றனர்.  

திம்மப்பன் நிலம் புளியம்பட்டி என்ற ஊரில் இருப்பதால், அவர் அங்கு விவசாயம் செய்து கொண்டு, வார இறுதி நாட்களில் மட்டுமே தனது அக்கா வாழும் வெங்கடதாரஹல்லிக்கு வந்து போவது வழக்கம்.

நிலம் மட்டுமில்லாமல் அந்த ஊரில் திம்மப்பன் பாட்டன் பூட்டன் காலத்திலிருந்து கோவில் ஒன்றை நிறுவி பராமரித்து வருகின்றனர். பசுவ ஈஸ்வரன் என்ற அந்த கோயில் பல நூற்றாண்டுகளைக்  கடந்து இன்றைக்கும் அப்பகுதி மக்களிடையே பிரபலமாக உள்ளது. வருடந்தோறும் அக்கோவிலில் நடைபெறும் தீ மிதித் திருவிழா மிக பிரபலம்.

பரம்பரையாக அக்கோவிலின் தர்மகர்த்தாவாகவும், பூசாரியாகவும் இருப்பது திம்மப்பன் குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டுமே. எனவே விவசாய வேலை மட்டுமில்லாமல் கோயில் வேலைகளையும் சேர்த்து பார்த்துக் கொள்வதால் திருமணம் முடிந்தும் திம்மப்பன் அக்கா ஊர் வெங்கடதாரஹள்ளிக்கு வாரம் ஒரு முறை மட்டுமே வருகிறார்.    

துளசி வீட்டில் விளையாடி மகிழ பல வாண்டுகள் கிடைத்ததில், காளியம்மாள் கணவனைப் பற்றி சிந்திப்பது கூட இல்லை. அது மட்டுமில்லாமல் அவர்  ஞாயிறு திங்கள் மட்டுமே வீட்டிற்கு வருவது வழக்கம். அந்நேரத்தில் துளசிப் பாட்டியின்  முந்தானையில் அடைகலம் ஆகி விடுவாள் காளியம்மாள். நிமிர்ந்து பார்த்துகூட அவள் கணவனின் இலையில் சோறு போடுவது இல்லை. அப்படி ஒரு வெட்கம்.

ஆனால் திம்மப்பன் வருகைக்காக அந்த ஒரு வார காத்திருப்பு அதன் வேதனை எதிர்பார்ப்பு கலந்த சுகம் என, காளியம்மாள் மட்டுமே அறிந்த ஒரு ரகசிய உணர்வு, அவளுக்குள்ளேயே பூட்டி வைத்திருந்தது திம்மப்பன் கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

திருமணமாகி ஒரு வருடத்தில் காளியம்மாள் பூப்பெய்தி அவர்களது சாந்தி திருமணமும் இனிதே நடைபெறுகிறது. அதன் பிறகும் காளியம்மாள் துளசிப் பாட்டி வீட்டிலேயே இருக்கிறாள். திம்மப்பன் நிலம் இருக்கும் புளியம்பட்டி வீட்டில் பெரியவர்கள் எவரும் இல்லாததால் காளியம்மாளை தனது வீட்டிலேயே வைத்துக் கொள்கிறார் துளசி.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் அக்கா கௌரம்மாள் வீட்டிற்கு சென்று கிணற்று அருகில் இருக்கும் இடத்தில் அமைந்துள்ள காய்கறி தோட்டத்தில் இருவரும் அமர்ந்து நேரத்தைக் கழிப்பர். காளியம்மாள் அந்த தோட்டத்து செடிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் வைத்து அச்செடிகளை பெயரிட்டு அழைப்பது வழக்கம்.

பூப்பூத்த கத்தரி பார்த்து, “சிரிடி சிரி… காயான பின்னால மாமன்கிட்ட மாட்டின என் அக்கா மாதிரி நீ என் கையில சிக்கப் போற… சிரிடி சிரி…”

“இதோ பாருடா இந்த மல்லி செடிய, ஒன்னு ரெண்டு பூ பூத்தா எப்படி? நெறைய பூத்தா தானே அக்கா உன்ன தலையில வெச்சி மாமன மயக்க?” என்று செடிகளுடன் பேசுவது காளியம்மாளின் பொழுது போக்கு.

அப்படி பேசிக்கொண்டிருக்கும் போது ஒருநாள் தங்கம்மாப்  பாட்டி அங்கு வர, “மயங்கி இப்போ என்ன பிரயோஜனம்? வெச்சி மூணு மாசத்துல இந்த தோட்டத்தில் உள்ள செடிங்க பூக்க ஆரம்பிச்சிடுச்சு. மூணு வருஷம் ஆகியும் உன் அக்கா வயித்துல ஒன்னும் இல்லையே” என்று சாடையாக கூறுகிறார். இதைக் கேட்கும் கௌரம்மாள் கண்களில் கண்ணீர் பெருகுகிறது.

காளியம்மாள் பதற்றத்துடன், “அக்கா மாமனுக்கும் உனக்கும்?” என கேட்க, “அதெல்லாம் நல்லா தான் இருக்கோம்” என்று கூற

“அப்புறம் ஏன் நிக்கல?” என வினவ, “நிக்குது ஆனா பத்து பதினஞ்சி நாள்ல கலஞ்ஜிடுது” என கௌரம்மாள் கூறுகிறாள்.

 “அக்கா மாமாவ யாராவது மருத்துவச்சிகிட்ட கூட்டிட்டு போகச் சொல்லு” என சொல்ல, “அதெல்லாம் பெத்தவங்க இருந்தா செய்வாங்க, செனக்கி வராத மாட்டுக்கும், புள்ளை நிக்காத பொண்ணுக்கும் இந்த உலகத்துல மரியாதை இல்லை. வேலகாரங்களாவது சாயிங்காலம் ஆனா செத்த நேரம் கண்ண மூடுவாங்க, ஆனா என்னோட நிலைமை இருபத்து நாலு மணி நேரமும் கடிகாரத்தோட சேர்ந்து ஓட வேண்டி இருக்கும்.” எனக் கண்ணீர் மல்க கூறுகிறாள். 

அக்காவின் வார்த்தைகளை சிரத்தையுடன் கேட்டுக் கொண்டிருக்கும் காளியம்மாள், “புரியுது அக்கா… கவலைபடாத உனக்குன்னு ஒரு சிங்கம் பொறக்கப் போகுது, அத என் மடியலதான் நான் வெச்சி கொஞ்சுவ” என குழந்தைத்தனமாக கூறி, அக்காவை சிரிக்க வைக்க முயல்கிறாள்.

நாட்கள் போகப் போக தங்கம்மாப் பாட்டி தனது அக்காவுடன் வெறுப்புணர்வோடு இருப்பதை உணர்கிறாள் காளியம்மாள். சில மாதங்களில் அந்த வெறுப்பு உணர்வு மேலோங்கி காளியம்மாள் மீதும் வீச, அவள் அங்கு செல்வதை குறைத்துக் கொள்கிறாள்.

நூறு மீட்டர் வாசல் கொண்ட மூக்கப்பன் வீட்டின் பின்புறம் காளியம்மாள் வசிக்கும் துளசி வீட்டின் வாசல் தொடங்கும். சுற்றுச் சுவர் அமைக்கும் வழக்கம் இல்லாத அந்த கால கட்டத்திலேயே, தங்கம்மா மகன் மூக்கப்பன் அவர்களது வீட்டிற்கு சுற்றுச்சுவர் அமைத்து இருந்தார்.

அதனால் நூறு மீட்டர் நடந்து  முன் வாசல் வந்து மீண்டும் நூறுமீட்டர் பின்னோக்கி நடந்து வந்துதான் காளியம்மாளும் கௌரம்மாளும் பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. தங்கம்மாளின் வெறுப்பு பேச்சு அக்கா தங்கைகளின் சந்திப்பு தருணங்களை குறைக்கிறது.

சில நேரங்களில் முன் வாசலிலே காளியம்மாளை தங்கம்மாள் தடுத்து, “கௌராம்மாள் வேலையாக இருக்கிறாள்… நீ உன் வீட்டுக்கு போ” என அனுப்பி விடுவார். அந்நேரங்களில் கௌரம்மாள் வீட்டின் பின்சுவற்றின் வழியே இருவரும் பேசிக் கொள்வர். 

பாத்திரம் கழுவும் சத்தம் கேட்டால், “அக்கா” என்று குரல் கொடுப்பாள். கௌரம்மாள் பதில் குரல் வந்தால் இருவரும் பேசிக் கொள்வர். இல்லையெனில் சிறிது நேரம் அங்கு காத்திருந்த பின் காளியம்மாள் சென்று விடுவாள்.

இந்த சமயத்தில் ஆள் நடமாட்டமில்லாத உச்சி வெயில்  நேரத்தில் காளியம்மாள் அந்த மதில் சுவரில் ஓட்டை ஒன்றை துளைக்கிறாள். அது மண் சுவர் என்பதால் சுலபமாக துளைக்க முடிகிறது. ஒரு வாரத்தில் அரை அடி விட்டம் கொண்ட ஓட்டையை துளைத்து விடுகிறாள். யாரும் அறியாவண்ணம் அதில் ஒரு துணியையும் சொருகி விட்டு, அக்கா குரல் கொடுத்தால் அந்த துணியை எடுத்துவிட்டு, அதன் வழியே அவளிடம் பேசுவாள்.

சில நாட்களில் அக்கா புறக்கடைக்கு வருவதும் குறைந்து விடுகிறது. சில நேரங்களில் வேறு பெண் அங்கு தெரிவாள். பேச வேண்டும் என ஆசையாக இருந்தாலும் தான் அங்கு செல்வது தங்கம்மாள் பாட்டிக்கு பிடிக்கவில்லை என்பதால் அக்காவின் பிம்பம் புறக்கடையில் தெரிகிறதா என சிறு சத்தம் கேட்டாலும் ஓடிச் சென்று அவ்வோட்டையின் வழியே பார்ப்பாள். தெரிந்தால் குரல் கொடுத்து அக்காளை வரவைத்து அக்காவையும் அங்குள்ள செடிகள் அனைத்தையும் நலம் விசாரிப்பாள். 

இந்நிலையில் காளியம்மாள் கற்பம் தரிக்கிறாள். இந்த தகவலை தனது அக்காளிடம் கூற, அவ்வோட்டை வழியே பார்க்க அவள் நடமாட்டம் தெரிவதில்லை. அவள் வரும் வரை காத்திருக்கும் பொறுமை இல்லாமல், முன் வாசலை நோக்கி ஓடோடிச்  செல்கிறாள். வாசலில் சோளத்தை காற்றில் விட்டுக்கொண்டு முகமெல்லாம் தூசு படிந்து அங்கு வேலை செய்யும் மற்ற பணிப்பெண்கள் போல காட்சி தருகிறாள் கௌராம்மாள்.

காளியம்மாள் அந்த காட்சியினைக் கண்டு மனம் குமிறி அழுகிறாள். தான் சொல்ல வந்த தகவலை மறந்து விடுகிறாள். இளவரசியாக வலம் வந்த தன் அக்காள் கௌரம்மாளுக்கா இந்த நிலை? அக்காளை கை பிடித்து அழைத்து கொண்டு வாசலிலிருந்து வீட்டிற்கு செல்ல, நீண்ட அந்த வீட்டு திண்ணையில்  தங்கம்மாள் வெற்றிலை பாக்கு மடித்து வாய்க்குள் போட்டுக் கொண்டிருக்கிறார்.

ஐந்து அறைகளையும் இணைத்தவாறு பெரிய திண்ணை ஒன்று இருக்கும் அந்த வீட்டின் முதல் அறைக்கு முன்னால் ஒரு படிக்கட்டும் அதற்கு இடது புறம் மாடுகள் தண்ணீர் குடிக்க, குளித்தி என்னும் வட்ட வடிவ மண்ணால் ஆன அகல வாய் கொண்ட குடுவை புதைக்கப்பட்ட திட்டு அமைக்கப்பட்டிருந்தது. மீதமிருந்த நான்கு அறைகளின் நடுவே ஐந்தடி அகலம் கொண்ட படிகள் அமைக்கப்பட்டிருந்தது.

காளியம்மாள் வேகமாக திண்ணையின் மீது ஏறிச் செல்கிறாள்.  ஐந்து தனி வாசற் கதவு அமைந்த அந்த வீட்டின் முதல் அறை சமையல் அறை. இரண்டாம் அறையில் தானியங்கள் சேமித்திருக்கும் பானைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். மூன்றாவது அறையில் அக்காவும் மாமாவும் இருப்பர். நான்காம் அறையில் தங்கம்மாள் இருக்க, ஐந்தாம் அறை சும்மா இருந்தது. 

கிடுகிடுவென மூன்றாம் அறையை நோக்கிச் சென்று கதவை தட்டி, “மாமா… மாமா…” என்று காளியம்மாள் அழைக்க, பதில் ஏதும் வருவதில்லை.

திரும்பி திண்ணையில் அமர்ந்திருக்கும் தங்கம்மாளிடம் “பாட்டி மாமா எங்க” என்று கேட்க, “என்ன புள்ள வேணும்” என்று கேட்டுக் கொண்டு ஐந்தாம் அறையிலிருந்து மூக்கப்பன் வெளியே வருகிறார், பின்னாலேயே புடவையையை சரி செய்தபடி ஒரு பெண் வர, காளியம்மாள் திகைத்து சிலை போல் நிற்கிறாள்.

மீண்டும் மூக்கப்பன் “என்ன புள்ள இந்த அவசரம்” என்று கேட்க, சுதாரித்துக் கொண்டு, “தலைக்கு தண்ணி ஊத்தல… ரெண்டு மாசம் இருக்கும்… அதான் அக்காவோட…” என்று கூறும் போதே

தங்கம்மாள், “உன் அக்கா இந்த சிறுக்கி என் வீட்டுக்கு இன்னும் ஒரு வாரிச குடுக்கலையே? பாருடி நேத்து வயசுக்கு வந்தவ வயித்துல புள்ளையோட நிக்கறா… கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சி… இன்னும் ஒரு புழு பூச்சி நிக்கல” என்று சாடுகிறார்.

உடனே குறுக்கிட்டு “பாட்டி புள்ள நிக்கும், மூணு வருஷம் தானே ஆச்சு… ஏன் மாமா… அக்காவுக்கு புள்ள நிக்கலன்னு, இப்படி” என காளியம்மாள் கூறும் போதே

தங்கம்மா பாட்டி, “அவளுக்கு இனிமே எங்க நிக்கப் போகுது” என்று சத்தமாக கூறுகிறார்.

“அதெப்படி பாட்டி நீங்களே முடிவு பண்ணிடுவீங்களா?” என்று கேட்க

“எம்மா பாசக்கார தங்கச்சி உன் அக்கா பண்ணியிருக்கற வேலைய நீயே கேளுன்னு” சொல்கிறார். அதற்குள் கௌரம்மாள் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் ஊற்றெடுக்க, “அக்கா என்ன ஆச்சி, மாமா இன்னொரு பொம்பளைய வீட்டுள்ள கூட்டி வர அளவு என்ன செய்த” என்று கேட்க, கௌரம்மாள் திண்ணையில் அமைக்கப் பெற்றுள்ள ஒரு தூணை அணைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுகிறாள். 

பின் கௌரம்மாள் எதையும் கூறாமல் கண்ணீரை துடைத்துக் கொண்டே திரும்பி வேலை செய்து கொண்டிருந்த வாசற்களத்தை நோக்கி நடக்க ஆரம்பிக்க, “பாட்டி நீயாவது சொல்லு” என்று காளியம்மாள் கேட்கிறாள்.

“ஏண்டிம்மா, இங்க உனக்கும் உன் அக்காவுக்கும் ஏதாவது குறை வெச்சோமா? உன் அக்கா இப்படி எங்க குலத்த நாசம் பண்ணிட்டாளே!… பாரு வயசுக்கு வந்து நாலு மாசத்துல நீ உண்டாகிட்ட, உன் அக்கா?”

“அவளுக்கும் உண்டாகும், கொஞ்சம் பொறுத்து…” என காளியம்மாள் கூறும் போதே

“அவளுக்கு இந்த ஜென்மத்துல புள்ள பொறக்காது, சண்டாளி, ஏதோ தாய் தகப்பன இழந்த புள்ள நல்லபடியா வாழுவான்னு கட்டினு வந்தா இப்படி நாசம் பண்ணிட்டாளே… போம்மா போய் நீயாவது உன் புருஷனோட நல்லா வாழு” என்று அங்கலாய்த்து கொள்கிறார். 

“பாட்டி என்ன நடந்ததுன்னு சொன்னா தானே தெரியும்” என காளியம்மாள் கேட்க

தங்கம்மாள், “என்னனு சொல்ல, உன் அக்கா உனக்கு கல்யாணம் ஆகற  வரைக்கும் தனக்கு புள்ள நிக்கக் கூடாதுன்னு நம்ம சென்னுகிட்டதான் ஏதோ கஷாயத்த வாங்கி குடிச்சிருக்கா. அது அவளோட கற்பப்பைய பாதிச்சி இனி கருவே உண்டாக்காம ஏதோ பண்ணிடுச்சி. இத இவ போன மாசம் தான் சொல்றா” என தங்கம்மாள் கூற, இடி விழுந்தார் போல் அந்த திண்ணையில் அமர்கிறாள் காளியம்மாள்.

என்ன சொல்வதென்றும் என்ன செய்வதென்றும் தெரியாமல் மெதுவாக எழுந்து கண்களில் கட்டுக்கடங்காமல் வழிந்தோடும் கண்ணீரோடு நடந்து செல்கிறாள். 

கௌரம்மாளின் கண்ணை கட்டிய தங்கை பாசம், அவளது வாழ்க்கையை இப்படி சீரழிக்கும் என கனவிலும் நினைக்கவில்லை. மூன்று வயதே மூத்தவள் ஆனாலும், முப்பது வயது நிரம்பிய ஒரு தாயின் மனபக்குவத்தோடு தன்னை வளர்த்தவள். இப்படி கிடைத்த வாழ்க்கையை முட்டாள்தனமாக ஒரு காரியம் செய்து கெடுத்துக் கொண்டாளே என மனதிற்குள் குமறுகிறாள்.

கௌரம்மாள் செய்த முட்டாள்தனத்தை யாரிடம் சொல்ல… கை வைத்தியம் என்று இந்த அறை குறை மருத்துவச்சியிடம் சில சிகிச்சைகள் சரியாகி உள்ளன, பல சிகிச்சைகள் வேறு மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட ஒருவர் கௌரம்மாள்.

அவள் எதிர்பாராமல் நடந்த விளைவு. அதுவும் இனி குழந்தையே நிற்காது என்றும் உறுதியாகவும் சொல்வதற்கில்லை. இந்த சூழலில் தங்களை இளவரசிகளாக கவனித்துக் கொண்ட மூக்கப்பனும் தங்கம்மாள் பாட்டியும் இப்போது ஒரு வேலைக்காரிக்கு கொடுக்கும்  மரியாதையும் அன்பும் கூட தன் அக்காளுக்குத் தருவதில்லை என புரிந்து கொள்கிறாள்.

பிள்ளைபேறு பெறாத பெண்களை குடும்பமும் சமூகமும் புறக்கணித்து அவர்கள் வாழ தகுதி அற்றவர்களாக கருதப்பட்ட காலம் அது. இன்றைக்கும் குழந்தை திருமணம் நடக்கும் சில இடங்களைப் போல் குழந்தை பேறு இல்லாத பெண்களைச் சாடும் சமூகமும் இருந்து வருவதை நாம் பார்க்க முடிகிறது.

தன் அக்காள் செய்த காரியம் முட்டாள் தனமானாலும் தனக்காக அவள் வாழ்வையே இப்படி பணையம் வைத்து விட்டாளே என ஆதங்கப்படுகிறாள் காளியம்மாள். பிறந்த ஊரில் அரவணைக்கத்  தாய் தந்தை இல்லை. புகுந்த ஊரில் ஆதரித்த கட்டிய கணவனும் பாட்டியும் சாடுகின்றனர். தனக்காக இப்படியொரு செயலைச் செய்த கௌரம்மாளை நினைத்து நினைத்து வருத்தமடைகிறாள்.

இதை கவனிக்கும் துளசியம்மாள், விவரத்தை அறிந்து தான் பேசி ஏதாவது வழி செய்வதாகக் கூறி சமாதானம் செய்கிறார். பின் அவரே தங்கம்மாள் இல்லத்திற்குச் சென்று, “கௌரம்மாளை தொங்கனூர் மருத்துவரிடம் அழைத்து சென்று பார்க்கலாம். ஏதோ சின்னப் பெண் தவறு செய்து விட்டாள். சிகிச்சை அளித்து பார்க்கலாமே” என அக்கறையுடனும் “பெத்தவங்களை தொலைச்சிட்டு நிக்கற புள்ள… தெரியாம பண்ணிட்டா, மன்னிச்சி அவள கூட்டிட்டு போ எக்கா… வேணுன்னா நானும் காளியம்மாளுக்கு மருத்துவம் பாக்கணும்னு கூட வர்ற. தப்புதான்… ஏதோ புத்தி கெட்டு செஞ்சிட்டா. அவ செஞ்சத பெருசு பண்ணாம, வைத்தியம் பாத்துக்கலாம்னு” கரிசனத்துடனும் கூறுகிறார்.

தங்கம்மாள் அதற்கு ஒத்து கொள்ள, தொங்கனூர் சென்று மருத்துவம் பார்க்கத் தொடங்குகின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பது போலவே மூன்றே மாதத்தில் கௌரம்மாள் கற்பம் நிலைக்கிறது.

காளியம்மாள் இப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள். அவர் குழந்தை பெறுவதை விட தனது அக்கா குழந்தை பெறப் போவதைக் கொண்டாடுகிறாள். சுகபிரசவத்தில் பிறந்த மகனுக்கு காளியம்மாள் ராமலிங்கம் என பெயர் சூட்டி மகிழ, அவனது எட்டு மாத பருவத்தில் கௌரம்மாள் ஒரு பெண் பிள்ளையை பிரசவிக்கிறாள்.

தான் பெற்ற குழந்தையை கூட கவனிக்காமல் எப்போதும் அக்காவையும் அவள் பெற்ற மகள் லதாவை கவனித்து வருகிறாள் காளியம்மாள். தங்கம்மாளும் மூக்கப்பனும் முன்பு போல அன்பாக இருக்க, இரண்டு வருடம் செல்கிறது. 

மீண்டும் காளியம்மாள் கற்பம் தரிக்க, கௌரம்மாளுக்கு அவ்வாய்ப்பு ஏற்படுவதில்லை. என்னதான் ஒரு பிள்ளை இருந்தாலும், அது பெண்ணாக இருப்பதால் அடுத்த குழந்தை நிற்கவில்லை என்ற குற்றம் கௌரம்மாள் மீது சுமத்த, மீண்டும் அந்த வீட்டில் வேலைக்காரி நிலைக்கு தள்ளப்படுகிறாள்.

மீண்டும் அதே பெண் ஐந்தாம் அறைக்கு வந்து செல்ல, இம்முறை அப்பெண்ணின் அதிகாரமும் அவ்வீட்டில் கோலோச்சுகிறது. இரண்டு வயது குழைந்தையைப் பட்டிணி போடும் அளவு அப்பெண்ணின் அந்த அதிகாரம் மேலோங்குகிறது. கௌரம்மாள் தான் செய்த தவறுக்கு இது தண்டனை என்று தன்னை சமாதானப்படுத்திக் கொள்கிறாள்.

நாளாக நாளாக அப்பெண் அவ்வீட்டின் எஜமானியாகவே ஆகிவிடுகிறாள். அதை ஊரும் அறிய வேண்டும் என தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தத் தொடங்குகிறாள் அப்பெண்.   

அந்த நாள் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து இரண்டு, தை மாதம் எட்டாம் நாள், கைக்குழந்தையோடு தலைவிரி கோலமாக கௌரம்மாள் காளியம்மாளிடம் ஓடோடி வருகிறாள்.

“விடிந்தால் மூக்கப்பன் மாமாவிற்கும் ஐந்தாம் அறையில் தங்கி செல்லும் அந்த  பெண்ணிற்கும்  திருமணம், என்று தங்கம்மா பாட்டி சொல்லிட்டாங்க. இனி அந்த வீட்டில் தான் வேலைக்காரியாக இருப்பது கூட கடினம். சாவதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை” என அழுகிறாள்.

காளியம்மாள் துளசியைப் பார்க்க, துளசி தான் பேசி பார்த்ததில் “தங்கம்மாளும் மூக்கப்பனும் இன்னொரு திருமணத்தில் பிடிவாதமாக இருக்கிறார்கள். தான் ஒன்றும் செய்வதற்கில்லை” என்று கூறுகிறார். தான் இனி அவ்வீட்டில் வாழ முடியாது என விம்மி அழுகிறாள் கௌரம்மாள் .

விடிந்தால் திருமணம், இந்த இரவில் என்ன செய்துவிட முடியும். தாயாகத் தன்னை வளர்த்த அக்காளுக்குத் தாயாகிறாள் காளியம்மாள். தோள் மீது கௌரம்மாளின் இரண்டு வயது மகளையும், மடி மீது இருபததைந்து வயது அக்காவையும் தட்டிக் கொடுத்து உறங்கச் செய்கிறாள்.

இரவு முழுதும் தான் உறங்காமல் அக்காவையும் அவள் பெற்ற மகளையும் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே “இளவரசியாக வலம் வந்த தன் அக்காவிற்கு இந்த நிலை என்றால், அந்தப் பெண்ணை மாமன் மணந்து கொண்டால்? பெண்ணாகப் பிறந்து விட்ட இந்த பிஞ்சு குழந்தையின் நிலை? நினைக்கவே மனம் வலிக்கிறது. நல்லவேளை தாங்கள் இருவரும் பிறந்த வீட்டில் சித்தப்பனுக்கும் பிள்ளைகள் இல்லை என்பதால் பெண் பிள்ளைகளை சீராட்டி வளர்த்து விட்டார்கள். இங்கோ தனக்கு ஆண் பிள்ளை, தன் அக்காளுக்கு பெண் பிள்ளை, கட்டாயம் தங்கம்மாள் சும்மா விட மாட்டார். அக்காவிற்கு இந்த ஒரு பிள்ளைப் பிறந்ததே ஆபத்தானது என தொங்கநூர் மருத்துவர் கூறினார். இனி அவள் பிள்ளை பெறும் வாய்ப்பு இல்லை. என்னதான் செய்ய?”

ஏதோ மனதில் தோன்ற, தோள் மீது தூங்கிய அக்கா பெண் லதாவை தறையில் கிடத்திவிட்டு, துளசி பாட்டியின் கால்களை வணங்கிய பின், சுவற்றில் மாட்டி இருந்த தனது திருமண படத்தை பார்த்து விட்டு, புறக்கடைக்கு சென்று தண்ணீர் தொட்டியிலிருந்து தண்ணீரை வாரி வாரி கட்டிய புடவையோடு தன் மீது ஊற்றிக் கொள்கிறாள். ஈரம் சொட்டச் சொட்டச்  வாசலில் வந்து சிலையாக சிறிது நேரம் நிற்கிறாள் காளியம்மாள்.

தை மாதக் குளிரில் உடல் நடுங்கினாலும் அவள் மனம் திடமாக இருகிறது. திண்ணையில் பெரியம்மா, கௌரம்மாள் அருகே படுத்திருந்த ராமலிங்கம் எழுந்து வந்து காளியம்மாள் கைகளை பிடித்துக் கொண்டு சிலையாக நிற்கும் தன் அம்மாவை வியப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறான். புடைவையிலிருந்து தண்ணீரும் கண்களில் இருந்து கண்ணீரும் வழிந்து கொண்டே இருக்க, மெலிதாக மேள தாள சத்தம் தொடங்குகிறது.  

காளியம்மாள் உண்மையான காளி அவதாரம் எடுத்த பெண்ணாக தலைவிரி கோலமுடன் மூக்கப்பனுக்கு திருமணம் நடக்க இருக்கும் ஊர் கோவிலுக்கு தனது மகன் ராமலிங்கத்தை அழைத்து கொண்டு செல்கிறாள். 

அம்மன் கோவில் முன்னே காளி அவதாரமாக அமர்கிறாள் காளியம்மாள். திருமண மணப்பெண் மணமகன் வருகையை நோக்கி காத்திருக்கிறாள். ஆறு மணிக்கு மணக்கோலத்தில் கோவில் வாசலில் வந்து நிற்கும் மணமக்களை நோக்கி காளியம்மாள் நடக்க, கூடியிருக்கும் மக்கள் என்னவென்று அறியாமல் திகைத்து நிற்கின்றனர்.

காளியம்மாள் மூக்கப்பனைப் பார்த்து, “மாமா இன்னொருத்தருக்கு என்னை கல்யாணம் பண்ணி கொடுத்திட்டா, ராமலிங்கமும் இப்போ வயித்துல சுமந்திட்டு இருக்கற இந்த சிசுவும் உனக்கு உண்டானது இல்லைன்னு ஆயிடுமா? இந்த பொண்ணு கழுத்துல நீ தாலி கட்றதுக்கு முன்னால உன்னோட இந்த பிள்ளைங்களுக்கு ஒரு பதிலை சொல்லு…” என்று கேட்க, அனைவரும் என்ன நடக்கிறது எனப் புரியாமல் திகைப்போடு பார்கின்றனர். 

அந்த சமையம் அங்கு கௌரம்மாள் வந்துவிட, தூரத்தில் துளசி பாட்டியும், தங்கம்மா பாட்டியும் நிற்கிறார்கள் (கணவனை இழந்தவர்கள் கோவிலுக்குள் வரக் கூடாது என்பது அவ்வூர் வழக்கம்).

எல்லோரும் என்ன சொல்வது என சுற்றி நின்று வேடிக்கைப்  பார்க்க, மணப்பெண் கழுத்திலிருந்து மாலையை கழற்றி அருகே நிற்கும் மணமகன் தோழனிடம் தந்துவிட்டு கீழே இறங்கிச் செல்கிறாள்.

அப்போது வேகமாக கீழே செல்லும் பெண்ணை ஒருவர் அழைத்து, “அம்மா கல்யாணம் நடக்கட்டும், காளியம்மா விஷயம் பஞ்சாயத்துல பேசிக்கலாம்.” என்பதற்கு

அப்பெண் “ஐயா… கௌரம்மாளே எஜமானுக்கு ரெண்டாம் தாரம், இதுல காளியம்மா அவங்க வீட்லே வளர்ந்தவங்க… அவங்க சொல்றதுல உண்மை இருக்கும். நாளைக்கு எனக்கும் ஆம்பள புள்ள பொறக்கலைன்னா இன்னொரு பொண்ணு  இந்த வீட்டுக்கு வருவா… அதான் காளியம்மாளுக்கு ஒரு பையன் இவரோட வாரிசா இருக்கே? அவன எப்படி விட்டுட முடியும். நடந்தது நடந்திடுச்சி எஜமான் காளியம்மளோட குடும்பம் நடத்தறதுதான் நல்லது. நான் போற” என்று கூறி விட்டு, கழுத்திலிருந்த மாலையை, காளியம்மாள் கழுத்தில் போட்டு விட்டு, “இப்போவாவது சொன்னியே… யம்மா யாராவது ஒருத்தனுக்கு பொண்டாட்டிய…” என்று அவள் கூறும் போதே, மூக்கப்பன் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறார்.

பின் கோபமாக, “இன்னும் ஒரு வார்த்தை என் குடும்பத்த பத்தி தப்பா பேசுன, உசுரோட இந்த ஊர விட்டு போக மாட்ட…” என்று கத்துகிறார். அப்பெண் விடுக்கென கீழே இறங்கி அவ்வூரை விட்டு சென்று விடுகிறாள்.

காளியம்மாள் பொய் சொல்கிறாள் என்று, துளசி, தங்கம்மா, கௌரி, மூக்கப்பன் என நால்வருக்கு மட்டும் நன்றாக தெரிந்தாலும், இப்படி கோவில் நுழைவாயிலில் நின்றுகொண்டு காளியம்மாள் கூறும் குற்றசாட்டை எப்படி இல்லை என ஊர் மக்கள் நம்புவர்? அப்படி தாங்கள் கூறினாலும் கோவிலில் நின்று ஒரு பெண் தான் பெற்ற பிள்ளையின் தகப்பன் இவன் என்று கூறும்போது ஊர் மக்கள் அதை நிஜம் என்றுதான் வாதிடுவார்கள்.

சாமியின் முன் யாரேனும் பொய் சொல்வார்களா? அதுவும் பிள்ளையை யாருக்கு சுமக்கிறேன் என்று அந்த பெண்ணே கூறிய பின் அங்கு வாதிடுவதற்கு என்ன இருக்கு? அனைவரும் வார்த்தைகளின்றி நிற்க, இராமலிங்கத்தை அழைத்து கொண்டு கோவிலை விட்டு வீட்டை நோக்கி காளியம்மாள் நடை போட, மாப்பிள்ளை கோலத்தில் செய்வதறியாமல் சிலை போல நிக்கிறார் மூக்கப்பன்.

சிறிது நேரத்திற்கு பிறகு கௌரம்மாள் மூக்கப்பன் கையை பிடித்து, “வாங்க வீட்டுக்கு போகலாம்” எனக் கூறி அழைத்துச் செல்கிறாள்.

தெருவிலிருந்து மூக்கப்பன் வீட்டு வாசலிற்கு திரும்பும் இடத்தில் நடுத்தெருவில் நிற்கிறாள் காளியம்மாள். மூன்று வயது இராமலிங்கம் தாயின் கைகளை பிடித்தபடி நிற்கிறான். ஊர் மக்கள் அவரவர் வீடுகளுக்குச் சென்று விட மூக்கப்பனும் கௌரம்மாளும் அவர்கள் வீட்டு வாசல் திண்ணையில் அமர்ந்து தெருவில் காளி அவதாரமாக நிற்கும் காளியம்மாளை விடை தெரியாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

செல்லம்மாளும் துளசியும் அங்கு வர சிறிது நேர அமைதிக்குப் பின் துளசி வெடிக்கத் தொடங்குகிறாள்.

“அக்காவும் தங்கச்சியும் இந்த ஊருக்கு வந்து எங்க குடும்ப மானத்த இப்படி நடுத்தெருவுக்கு கொண்டு வந்துடீங்களே? என் தம்பி உனக்கு என்னம்மா குறை வச்சான்? நல்ல வேலை இந்த கன்றாவியெல்லாம் அவன் நேர்ல பாக்கல… எம்மா பாசக்கார தங்கச்சி உனக்கு உன் அக்கா முக்கியம்னா, எதுக்கு என் தம்பிய கட்டிகிட்ட? நீ பண்ண காரியத்த கேட்டா என் தம்பி என்ன பண்ணுவானோ? இன்னும் யாரோட குடிய கெடுக்க இங்க நிக்கற? அதான் உன் மாமன் மூக்கப்பனுக்குதான் இவன பெத்தன்னு சாமி முன்னால சொல்லிட்ட இல்ல? போ உன் அக்கா வீட்டுக்கே போ” என்று கூறி கோபத்தில் சிறிது தள்ளி விட, தரையில் விழுகிறாள் காளியம்மாள்.

மூக்கப்பன் அவளை தூக்கிவிட திண்ணையிலிருந்து ஓடி வர, அவனைத் தீண்ட அனுமதிக்காது தானாக எழுகிறாள் காளியம்மாள். பின் தரையில் இருந்து சிறிது மண்ணை எடுத்து தன் தலையில் போட்டுக் கொண்டு வலது புறம் திரும்பி மூக்கப்பன் வீட்டிற்குள் நுழைகிறாள் காளியம்மாள்…

இந்நிகழ்விற்குப் பிறகு திம்மப்பன் புளியம்பட்டி ஊரிலிருந்து வெங்கடதாரஹல்லிக்கு வருவதே இல்லை. தன் கணவன் வரும் போது தன்னிலை விளக்கம் தந்து புரிய வைக்கலாம் என நினைத்து ஒவ்வொரு நாளும் திம்மப்பன் வரவை நோக்கி காத்திருக்கிறாள் காளியம்மாள். நாட்கள் மாதங்கள் ஆகிறது. மாதங்கள் வருடங்கள் ஆகிறது. இரண்டு வருடம் ஆகியும் திம்மப்பன் அவ்வூருக்கு வரவில்லை.  

இந்நிலையில், மூக்கப்பன் கௌரம்மாளிடம், “ராமலிங்கம் என் வாரிசு இல்லை எனினும் நான் ஏற்று கொண்டேன். காளியம்மாள் பொய் சொன்னாள் என்பது அறிந்தும் நான் அமைதியாக இதுவரை உள்ளேன். இனியும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. திம்மப்பன் இரண்டு வருஷமா வரல… ஏன்னா… அவன் ராமலிங்கமும் ஜெயாவும் எனக்குப் பிறந்ததாக இவள் கூறியதை நம்பி இருக்கிறான். இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் அவன் வரப் போவதில்லை. அப்படியே வந்தாலும் இவளுடன் அவன் வாழ்வான என தெரியாது. ஒன்று நீ காளியம்மாவிற்கு எடுத்து சொல்லி எனக்கான வாரிசை பெற்று தரச்சொல். அதற்காக நான் திம்மப்பன் பிள்ளையை கை விடப் போவதில்லை. ஆனாலும் எனக்கான ஆண் வாரிசு தேவை தானே? அவளுக்கு நீதான் புரியவைத்து, எடுத்து சொல்ல வேண்டும்” எனக் கேட்கிறார்.

காளியம்மாள் கணவனின் பிள்ளைகளை விட்டுக் கொடுத்தாளே தவிர, கணவனை அவள் ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டாள். தனது பிள்ளையை தாரை வார்ப்பாளே தவிர, ஒருபோதும் தன் மகன்  மூக்கப்பனின் வாரிசுகளை சுமக்கும் தாயாக மாட்டாள் என்பது தங்கம்மாளுக்கு தெரியும்.

அவள் திம்மப்பனின் மனைவியாகவே வாழ்கிறாள் என்பது அவ்வீட்டில் அனைவரும் அறிவார்கள். தங்கம்மாளுக்கு ஊர் அறிய தன் மகன் வாரிசு என ராமலிங்கம் கிடைத்தாலும், எத்தனை நாள் அது நிலைக்கும். உண்மை ஒரு நாள் ஊருக்குத் தெரிய வரும் போது, தனது மகனின் மானம் என்னவாகும்?

அதற்குள் காளியம்மாளை தன் மகன் வாரிசை சுமக்கச் செய்து விட்டால் இனி ஆண் பிள்ளை பிறக்கவில்லை எனினும், ராமலிங்கமும் காளியம்மாளும் திம்மப்பனிடம் திரும்பப் போகும் வாய்ப்பு வரவே வராது. எப்படியாவது இந்தப் பெண்ணை தன் மகனுடன் சேர்த்துவிட வேண்டும் என தங்கம்மாள் ஒரு பக்கம், ஜாடை மாடையாக கௌரம்மாளிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

இரண்டு வருட காத்திருப்பு நான்கு வருடமாகிறது. கணவன் திம்மப்பன் வெங்கடதாரஹல்லிக்கு வருவதே இல்லை. ஊர் கோயில் வாசலில் சாமியின் முன் சொன்ன சொல்லாயிற்றே! பொய்யே எனினும் திம்மப்பன் கடவுள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை, அவரை காளியம்மாள் வாழ்வில் வர விடாது. நான்கு வருடமாக இந்த பிள்ளைகளைக் கூட பார்க்க வரவில்லை. இனி அவர் வரவே மாட்டார் என காளியம்மாள் புரிந்து கொள்கிறாள்.

மூக்கப்பனின் பேச்சும், தங்கம்மாளின் ஜாடை மாடை சொற்களும், தன்னிடம் எதையும் அவர்கள் காட்டுவதில்லை எனினும், தன் அக்கா தினமும் நெருப்பு சொற்களை தாங்கிக் கொண்டு, அது தன்னைச் சுடாமல் ஒரு பாதுகாப்பு அரணாக இன்னும் எத்தனை நாட்கள் கடக்க முடியும். யாருக்காக தன் கணவனுக்கு பெற்ற பிள்ளைகளை வேறு ஆணுக்கு பெற்றேன் எனக் கூறினாளோ அவள் ஒவ்வொரு நாளும் நரக வேதனையில் இருப்பதைக் கண்டு வருத்தமடைகிறாள் காளியம்மாள். 

சாமியின் முன்பு சொன்ன வார்த்தையை விடவா இந்த வைராக்கியம் பெரிது. கட்டிய கணவனை அவமானப்படுத்தியதை விடவா, இந்தத் தன்னிலை விளக்க காத்திருப்பு பெரிது. ஊர் முன் கூறிய வார்தைகள் விடவா தான் கணவனிடம் சொல்ல நினைக்கும் வாக்கு பெரிது. கற்பு அன்றே செத்து மடிந்து விட்டது. இனியும் என்ன இந்த பொய் வேட கற்பு? யாருக்கும் உதவாத இந்த கற்பு. இனி அக்காவிற்காக வாழ காளியம்மாள் முடிவு செய்கிறாள்.

அன்று தங்கம்மாளிடம் காளியம்மாள் கூறுகிறாள், “பாட்டி இனி நான் அந்த ஐந்தாவது அறையில் இருந்து கொள்கிறேன். மாமா வந்தா…” என கூறி முடிப்பதற்குள்

தங்கம்மாள் காளியம்மாளை கட்டி அணைத்து, “மகராசி… என் வீட்டு குலவிளக்கு… எம்மா… எனக்கு கையும் ஓடல காலும் ஓடல… ஏ கௌரம்மாள்… சொன்னல்ல இந்த வீட்ல தொட்டிலுக்கு வேலை வரும்னு… எம்மா இந்தா இந்த புடவைய கட்டிக்கோ.” என்று முகூர்த்த புடவை ஒன்றை அவளிடம் தருகிறார்.

அதை வாங்கிய அன்றிலிருந்து காளியம்மாள் மௌனம் என்னும் சிறை, தான் அக்காளிடம் பேசத் துளைத்த அந்த அரை அடி விட்ட ஓட்டையின் அருகே அமரும் சிறை, தினமும் மலரும் புறக்கடை பூக்களிடம் புன்னகை காட்டாத சிறை, உயிரை விட்டு உடலை விலக்கி மனதிற்கு போட்ட சிறை எனத் தன்னைத் தானே சிலையாக்கி தியாக வாழ்க்கை என்னும் சிறையில் தன்னை அடைத்துக் கொள்கிறாள்.       

தான் எடுத்த முடிவு இதில் மாமன் மூக்கப்பன் தவறோ, தன் கணவன் திம்மப்பன் தவறோ அக்கா கௌரம்மாள் தவறோ இல்லை. தானே அனுபவித்தாக வேண்டும் என்று முடிவு செய்து, மாமன் மூக்கப்பனின் வாரிசுகளை வயிற்றிலும், திம்மப்பன் நினைவுகளை மனதிலும் சுமந்து கொண்டு ஒரு ஆண் பிள்ளையையும் மூன்று பெண் பிள்ளைகளையும் பெற்றுத் தருகிறாள்.

இப்படி ஓடோடிப் போன அந்த பத்து வருடங்களில் ஒரு நாள் கூட அவள் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தது இல்லை. அவ்வப்போது அந்த ஓட்டையின் வழியே தான் வாழ்ந்த துளசியின் வீட்டைப் பார்ப்பாள். அங்கேயே அமர்ந்து கொண்டு பல மணி நேரம் வானத்தைப் பார்ப்பாள். சில நேரங்களில் கண் மூடி உறங்கியும் போவாள். 

அப்படி ஒரு நாள் உறக்கிப் போன பின், திம்மப்பன் வானத்திலிருந்து கீழே அவளை நோக்கி வருவது போல கனவில் பிம்பம் வருகிறது. இது தினமும் கனவில் வரும் உணர்வு எனினும் அன்று திம்மப்பன் காளியம்மாள் அருகே வந்து வா என அழைப்பது போன்ற உணர்வு. அப்படி அவர் அழைக்க அவர் பின்னால் பலர் அவர் கைகளை இழுக்க, சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிறது. சிறிது நேரத்தில் அந்த சத்தம் கனவில் இல்லை நிஜத்தில் என்பதை உணர்கிறாள் காளியம்மாள்.

கனவிற்கும் நிஜத்திற்கும் இடையில் குழப்பமான ஒலிகள் காளியம்மாளை எழுப்பி விட, சட்டென அவள் ஒற்றைக் குரலை உணர்கிறாள். துளசியின் அழுகுரல் அது. திம்மப்பன் தன்னை அழைக்கவில்லை, இவ்வுலகை விட்டு சென்ற பின் தன்னை பார்க்க வந்துள்ளார் திம்மப்பன் என்பதை உணர்கிறாள்.

பன்னிரண்டு வருடங்கள் தன்னை சுவரில்லா சிறையில் அடைத்துக் கொண்ட காளியம்மாள் வாசலை நோக்கி ஓடோடி வருகிறாள். பன்னிரண்டு வருடங்கள் மௌன சிறை கொண்ட காளியம்மாள் வீரிட்டு அழுகிறாள். 

காளியம்மாள் குரல் கேட்டு ஊரே அங்கு கூடி நிற்க, துளசி காளியம்மாளின் கைகளை பற்றி நெற்றியில் வைத்து விம்மி விம்மி அழுகிறார். வெற்று காலில் தலைவிரி கோலமாக முதல் முறையாக கணவனின் ஊர் புளியம்பட்டிக்கு செல்கிறாள். அங்கு தான் அணிந்திருக்கும் அணிகலன்களை, திம்மப்பன் உடல் மீது கழற்றிப் போடுகிறாள்.

அப்பொழுதுதான் மற்றவருக்கு தெரிகிறது காளியம்மாள் அணிந்திருந்த தாலி திம்மப்பன் கட்டியது என்று. அவள், மூக்கப்பனை திருமணம் செய்து கொள்ளவில்லை. அவளது அக்காவிற்காக, திருமணமாகாமலே வாடகைத் தாயாக வாழ்ந்துள்ளாள். 

திம்மப்பன் இறந்த பிறகு காளியம்மாள் விதவை கோலத்திலேயே வாழ்ந்து வருகிறாள். பேரன் பேத்திகள் கொள்ளு பேரன் பேத்திகள் என அவள் குடும்ப உறவுகள் அனைவரும் “காளியம்மாள் பாட்டி ஏன் தாத்தா உயிரோடு இருந்தும், பூ வைப்பதில்லை, வளையல் போடுவதில்லை” என்ற கேட்காமல் மனதில் நினைத்த கேள்விக்குப் பதிலாக அவர் யாரிடமும் சொல்லாமல் வாழ்ந்த வாழ்க்கை முறை மட்டுமே பதிலாக இருந்தது. அவர் ஒரு போதும் யாரிடமும் தன்னிலை விளக்கம் அளித்தது இல்லை.  

சொல்லாமல் பிள்ளை வரம் கேட்ட அக்கா… கேளாமல் வாடகைத் தாயான தங்கை.  இவர்களது சொல்லாத கதையை அந்த ஊரில் அறியாதவர்கள் இல்லை.  பிள்ளை வரம் வேண்டுவோற்கு அவ்வூர் தெய்வம் காளியம்மாள். 

கடவுளாக அல்ல… தன்னலமற்ற தங்கத் தாரகையாக. தங்கை தியாகியாக!

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தரையில் விழுந்த மீன்கள் (நாவல் – பகுதி 2) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி

    விடியலைத் தேடும் விழிகள் (சிறுகதை) – ✍ இரஜகை நிலவன், மும்பை