in ,

உறவுக்கோலங்கள் (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

‘அவள் அப்பன் வீட்டில் அங்கேயே இருக்கட்டும்.  இங்கே கூட்டி வர வேண்டாம். பிரசவத்திற்குப் போகும்போதே சொல்லித்தான் அனுப்பிச்சேன். பையன் பொறந்தா வா… இல்லாட்டி அங்கேயே உங்கப்பன் வீட்ல இருந்துக்கோனு… முதல்லதான் பொண்ணு.. இதாவது பையனா பெத்துத் தர வேண்டாமா?’  என்றாள் அம்மா கருப்பாயி ஆங்காரத்துடன்.

அம்மாவின் பேச்சு வேலுச்சாமிக்கு உள்ளுக்குள் சிரிப்பை வரவழைத்தாலும், இரண்டாவதும் பெண்ணாகப் பிறந்ததற்கு சிவகாமி எப்படி பொறுப்பாக முடியும் என்ற கேள்வி அவனுள் எழுந்தது. மனைவிக்கு ஆதரவாகப் பேசினால் அம்மாவின் கோபம் மேலும் அதிகமாகும் என்பதால் மெளனம் காத்தான்.

அம்மா எரிச்சலுடன் மறுபடியும் தொடர்ந்தாள், ‘உன்னோட அண்ணனைப் பாரு… இரண்டும் சிங்கக்குட்டி மாதிரி ஆண்பிள்ளைக‌ள்.  ஒண்ணு அவனுக்குக் கொள்ளி போட… மற்றொன்று உன்னோட அண்ணிக்காரிக்கு கொள்ளி போட.  உங்க ரெண்டு பேருக்கும் ரத்த சம்பந்தம் இல்லாத எவனெவனோ கொள்ளி போடப்போறான்.  உன் தலையெழுத்து அப்படி..’ என்று எதிர்காலத்தைக் குறித்துப் பேசி வேலுச்சாமியையும் பயமுறுத்தினாள்.

அம்மா கருப்பாயியின் அகங்காரப் பேச்சுக்கு, அவள் இரண்டும் பையன்களாய்ப் பெற்றுக் கொண்டதும் ஒரு காரணம். கருப்பாயிக்கு பிறந்தவர்களில் மூத்தவன் லோகநாதன், இளையவன் வேலுச்சாமி.  இரு பையன்களுக்கும் கல்யாணம் செய்து, விவசாய பூமியை சமமாகப் பங்கிக் கொடுத்து, அடுத்தடுத்து இரண்டு வீடுகள் கட்டி, நடுவே ஒரு சுவரை எழுப்பிக் கொடுத்தவுடன் தன் கடமை முடிந்து விட்டதாகக் கண்ணை மூடிவிட்டார் வேலுச்சாமியின் அப்பா.

அம்மா பெரும்பாலும் பெரிய மகன் லோகநாதன் வீட்டிலேயே இருப்பாள். வேலுச்சாமியின் வீட்டில் இருக்க‌ மனம் இருந்தால் எப்போதாவது ஒரு மாதம்போல் இருப்பாள்.

இளைய மருமகள் சிவகாமி மாமியார் வம்புக்குப் போகாவிட்டாலும் கூட, வலிய சண்டைக்கு இழுக்க முயற்சி செய்வதும், வேலுச்சாமியின் மூன்றாவது படிக்கும் மகள் வெண்ணிலாவை ஏதாவது வேலை சொல்லி குற்றம் கண்டுபிடிப்பதும் வழக்கமாகக் கொள்வாள்  கருப்பாயி.

அம்மாவின் பேச்சை வேலுச்சாமியோ அல்லது சிவகாமியோ பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.  கிராமத்துச் சூழ்நிலையிலேயே பிறந்து, அதே சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கருப்பாயியின் அறிவும், நாகரிகமும் அந்தக் கிராம எல்லைக்குள்ளேயே அடங்கி விட்டதால் அவளின் பேச்சும், செயலும் அப்படித்தான் இருக்கும் என்பதை புரிந்து கொண்டிருந்தனர் இருவரும்.

வேலுச்சாமி அம்மாவின் பேச்சைக் கேட்பதாக இருந்திருந்தால், இவர்கள் இருவரும் வாழ்க்கையில் எப்போதோ பிரிந்திருக்க வேண்டும். அம்மா என்ற உறவுக்கும், வயதிற்கும் கொடுக்கும் மரியாதைக்காக அம்மாவிடம் அமைதி காப்பான் வேலுச்சாமி.  ஆனால் மகள் வெண்ணிலா அப்படி அல்ல. பாட்டி கருப்பாயி நியாயமில்லாமல் ஏதாவது பேசும்போது எதிர்த்துக் குரல் கொடுப்பாள்.  அப்பா, அம்மா என்று யார் சொன்னாலும் கேட்க மாட்டாள்.

‘பொட்டப்புள்ளைக்கு வாயப் பாரு… நீயெல்லாம் எப்படி அடுத்தவன் வீட்ல போய் பொழைக்கப் போறயோ?’ என்று சாபம் கொடுத்துவிட்டு மூத்தமகன் வீட்டுக்கு நழுவி விடுவாள் அம்மா.  வேலுச்சாமியும், சிவகாமியும் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வார்கள், தங்களால் முடியாததை மகள் வெண்ணிலா செய்கிறாளே என்று.

வெண்ணிலா த‌ன் அம்மாவை அழைத்துவர‌ வற்புறுத்தியதாலும், வீட்டை தனியாக‌ நிர்வகிக்க சிரமமாக இருந்ததாலும், குழந்தைக்கு மூன்று மாதம் ஆகியவுடன் சிவகாமியை ஒரு நல்ல நாள் பார்த்து மாமியார் வீட்டிலிருந்து தன் வீட்டுக்குக் கூட்டி வந்துவிட்டான் வேலுச்சாமி.

வெண்ணிலாவுக்கு தங்கச்சிப் பாப்பாவைப் பார்த்தவுடன் தலைகால் புரியவில்லை. தங்கையின் பளபளக்கும் நிறத்தையும், பட்டுப்போன்ற பாதத்தையும் பக்கத்தில் இருந்து எப்போதும் ரசித்துக் கொண்டிருந்தாள்.

‘தங்கச்சி என்னை விட சிவப்பு, உன்னை மாதிரி… இல்லையா அம்மா?’ என்பாள் சிவகாமியிடம்.

‘நீயும் சிவப்புத்தானே..’ என்று சமாதானப்படுத்துவாள் சிவகாமி.

‘அம்மா.. தங்கச்சி முகத்தைப் பாரேன். நட்சத்திரம் மாதிரி ஜொலிக்கிது. இவளுக்கு ‘நட்சத்திரா’ ன்னு பேரு வைக்கலாம் அம்மா..’ என்று கெஞ்சினாள்.

‘நீ சொன்ன பேரையே வைக்கலாம்’ என்று சிவகாமி சொன்னவுடன் திருப்தியாக பள்ளிக்குக் கிளம்பினாள் வெண்ணிலா.

குழந்தையைப் பார்க்க அண்ணன் லோகநாதனும் அண்ணி பழனியம்மாளும் வந்திருந்தனர். கூடவே புலம்புவதற்கு கருப்பாயி அம்மாவும் வந்து விட்டார். பட்டும் படாமலும் பேசிக்கொண்டிருந்து விட்டு தங்களின் இரு பையன்களின் பெருமைகளை மறக்காமல் பறை சாற்றிவிட்டுச் சென்றனர் அண்ணனும், அண்ணியும்.

அம்மா கருப்பாயி வழக்கம்போல் பாட்டுப் பாடினார், ‘செலவெல்லாம் குறைத்துக் கொண்டு ரெண்டு புள்ளைகளுக்கும் சொத்து சேர்த்து வைடா. இரண்டுக்கும் நகை நட்டு போட்டு கல்யாணம் செய்ய வேண்டாமா? உனக்கு இனி மேல் செலவுதான்’  என்று வேலுச்சாமிக்கு  அறிவுரை வழங்கினார்.

ஊரில் உள்ள சொந்த பந்தங்கள் குழந்தையைப் பார்க்க அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருந்தனர். சிலர் இரண்டும் பெண்ணாகிவிட்டதே என்று அங்கலாய்த்தனர். இன்னும் சிலர் வீட்டிற்கு இரண்டு லஷ்மிகள் வந்துள்ளதாக நல்ல வார்த்தை கூறிச் சென்றனர். குழந்தையைப் பார்க்க வந்திருந்த பங்காளி காளியண்ணன் ஆச்சரியப்பட்டுக் கேட்டான்,

‘என்னப்பா… உனக்கு குழந்தை பிறந்திருப்பதை உங்கண்ணன் லோகநாதன் நம்ம ஊர் டீக்கடையில் கொண்டாடிக் கொண்டிருக்கிறான். நியாயமா நீதானே அதைச் செய்ய வேண்டும்?’.

தலையும் புரியாமல், காலும் புரியாமல் வேலுச்சாமியும் சிவகாமியும் அவனைக் குழப்பத்துடன் பார்த்தனர்.

‘இன்னைக்குக் காலையில் இருந்து, டீக்கடைக்கு வருபவர்களுக்கு வடையும், டீயும் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் உங்கண்ணன் லோகநாதன். கேட்டதற்கு தம்பி வீட்டிற்கு லஷ்மி வந்து பிறந்திருப்பதால்  பார்ட்டி கொடுப்பதாகச் சொல்லுகிறார். உன்னை விட அவர்தான் உனக்குப் பெண் பிறந்ததை சிறப்பாகக் கொண்டாடுகிறார் போ’  என்றான் காளியண்ணன்.

வேலுச்சாமியும் சிவகாமியும் மீண்டும் ஒரு முறை ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தத்துடன் புன்முறுவல் செய்து கொண்டனர்.

எச்சில் கையால் காக்கையை ஓட்டாதவர், ஊருக்கெல்லாம் டீ சப்ளை செய்கிறார் என்றால், அவர் தன் ஆழ்மனதில் உள்ள மகிழ்ச்சியை தன்னையறியாமல் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட புன்னகை அது.

பிள்ளைகள் வளர்ந்து கொண்டிருந்தார்கள். கருப்பாயி பாட்டிக்கும் வயசாகி தள்ளாமை வந்து விட்டது, ஆனாலும் வாய் மட்டும் குறையவில்லை.  குச்சியை ஊன்றிக்கொண்டே வந்து வெண்ணிலாவையும், நட்சத்திராவையும் வம்புக்கு இழுப்பாள்,

‘நேத்து உங்க பெரியப்பன்கூட பக்கத்துத் தோட்டக்காரன் சண்டைக்கு வந்தபோது உங்கண்ணங்க ரெண்டு பேரும் சேர்ந்து அவனை அடிச்சு தொரத்திட்டாங்க… ம்ம்.. உங்கொப்பனுக்குத் தா ஆதரவு இல்லாம போயிட்டது. நீங்க‌ ரெண்டு பேரும் பொம்பள புள்ளயா போயிட்டீங்க’  என்பாள்.

‘அதான் நீ இருக்கறயே பாட்டி… வாயிலயே சண்டை போட்டு தொரத்திடமாட்டே?’ என்ற பிள்ளைகளின் கிண்டலுக்கு முகத்தைச் சுழித்துக்கொண்டு சென்று விடுவாள் பாட்டி.

மற்றொரு நாள் வந்த போது பேத்திகளிடம் பெருமைப் பட்டுக் கொண்டாள் கருப்பாயி. ‘பொண்ணுகளா, உங்க பெரிய அண்ணன் எட்டாவதோடு படிப்பை நிறுத்திவிட்டு கட்சியில் சேர்ந்து பெரிய ஆளாயிட்டான். எப்பவும் அவனைச் சுற்றி ஆட்கள்தான்… மந்திரியே ஆனாலும் ஆயிருவான் பாரு’ என்றாள்.

வேலுச்சாமியும் சிவகாமியும் அர்த்தத்துடன் புன்னகைத்துக் கொண்டனர். ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளருக்கு அல்லக்கையாக அவன் ஊரில் வெட்டியாக வலம் வந்து கொண்டிருக்கிறான் என்பது அவர்களுக்குத் தெரியும். அதைச் சொன்னால் கருப்பாயி ஒப்புக்கொள்ள மாட்டாள் என்பதும் தெரியும் என்பதால் இருவரும் அமைதி காத்தனர்.

வெண்ணிலா வளர வளர, அவளின் ஆர்வம் பறக்கும் பொருள்களின் மீது தாவியது. பறக்கும் பட்டாம்பூச்சியில் ஆரம்பித்து விமானம் வரை அவள் கேட்கும் ஆராய்ச்சிக் கேள்விகளுக்கு வேலுச்சாமிக்கும், சிவகாமிக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை.

பள்ளியில் ஆசிரியர்கள் ‘எதிர்காலத்தில் நீங்கள் என்னவாகப் போகிறீர்கள்?’ என்று கேட்கும் கேள்விகளுக்கு பட்டென பதில் சொல்வாள்,’ நான் விமானம் ஓட்டப்போகிறேன்..’.

பைலட் ஆவதற்கு என்ன படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசிரியர்களைக் கேட்டு அதற்கான பாடங்களைத் தேர்ந்தெடுத்தாள். கல்லூரியிலும் ‘ஏரோனாடிக்ஸ்’ கோர்ஸ் படித்து, போட்டித் தேர்வுகள் எழுதி தகுதி பெற்று விமான ஓட்டியானாள். அவளின் திறமையின் மேல் உள்ள நம்பிக்கையில் வேலுச்சாமியும், சிவகாமியும் எந்தக் கேள்வியும் கேட்காமல் அவளைப் படிக்க வைத்தனர்.

இளையவள் நட்சத்திராவோ, தான் ஐ.ஏ.எஸ். படிக்கப் போவதாகக் கூறி பள்ளியிலிருந்தே அதற்கான பாடத்தினைத் தேர்வு செய்து படிக்கத் தொடங்கினாள். சக்திக்கு மீறிச் செலவழித்து அவள் கேட்ட புத்தகங்களையெல்லாம் வாங்கிக் கொடுத்தான் வேலுச்சாமி. எல்லா தேர்வுகளையும் முதல் தடவையிலேயே பாஸ் செய்துவிட்டு இந்திய அளவில் முப்பதாவது இடத்தை அவள் பிடித்தபோது அந்தக் குடும்பமும், ஊரும் அவளால் பெருமைப்பட்டுக் கொண்டது.

அண்ணன் லோகநாதனின் மூத்த மகன் அரசியலில் வேகமாக வளர்ந்து வந்தான். கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்து, அந்தத் தொகுதி ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு நெருக்கமானான்.

சிறிய மகன் தத்தித் தத்தி பத்தாவது பாஸ் செய்துவிட்டு திருப்பூருக்குச் சென்று, தொழில் கற்றுக்கொள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான்.

கருப்பாயி பாட்டிக்கு பெருமை பிடிபடுவதில்லை. எங்கே சென்றாலும் தன் பேரன்களின் அருமை பெருமைகளை தம்பட்டம் அடிக்கத் தவறுவதில்லை.

அதே சமயம் தனது சிறிய மகன் வேலுச்சாமி, பெண்களுக்கு மாப்பிள்ளை பார்க்காமல், காசையெல்லாம் அவர்களின் படிப்பிற்கு செலவழித்துவிட்டு, கையில் காசில்லாமல் இருப்பதாக ஊரில் வதந்தி பரப்பிக் கொண்டிருந்தாள்.

ஒரு நாள் குளிக்கச் சென்ற கருப்பாயி பாட்டி, தள்ளாமையால் குளியலறையில் வழுக்கி விழுந்து பின் மண்டையில் அடிபட்டு திடீரென உயிரை விட்டு விட்டாள். பெரியவர் லோகநாதனே கொள்ளி வைத்து அம்மாவின் கடைசிக் காரியங்களைத் தன் வீட்டில் நடத்தி முடித்தார்.

எல்லாம் முடிந்து கிளம்பும்போது வேலுச்சாமி அண்ணனிடம் கேட்டான். ‘அம்மா செலவு எவ்வளவு ஆச்சுங்க அண்ணா?’.

வீட்டுக்குள் சென்று பழனியம்மாளிடம் குசுகுசுவென்று பேசிவிட்டு வெளியே வந்து ஒரு பெரிய தொகையைச் சொன்னார் லோகநாதன். எதுவும் பேசாமல் செலவில் பாதித் தொகையை மடியிலிருந்து எடுத்துக் கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தான் வேலுச்சாமி.

‘நிஜம்மா அவ்வளவு செலவாகியிருக்குமா?’ என்ற சிவகாமியின் கேள்விக்கு விரக்தியாக பதில் சொன்னான் வேலுச்சாமி,

‘அண்ணன் சொன்ன செலவுத் தொகையில் பாதிதான் ஆகியிருக்கும். அம்மாவின் சாவுச்செலவில் கணக்குக் கேட்பது அம்மாவையே அவமானப்படுத்துவதாக எனக்குப் பட்டது. அதுதான் பேசாமல் கொடுத்திட்டு வந்திட்டேன். விடு… அவரவர்கள் பாவமும் புண்ணியமும் அவரவர்களோடு’ என்று அவளை சமாதானப்படுத்தினான்.  வழக்கம்போல் அமைதியாகிவிட்டாள் சிவகாமி.

வெண்ணிலா லீவில் ஒரு நாள் ஊருக்கு வந்திருந்தபோது அப்பா அம்மாவிடம் பேசினாள். ‘அப்பா, என்னோட பைலட்டா இருக்கிற ஒருத்தர கல்யாணம் செய்து கொள்ளலாம்னு இருக்கிறேன். அவர் பெங்களூர்க்காரர். நீங்க சரின்னா அவர் அப்பா அம்மாவோடு நம்ம வீட்டுக்கு வர்ரதா சொன்னாரு’.

வேலுச்சாமியும், சிவகாமியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பெண் அழகாக வளர்ந்து நிற்பது அப்போதுதான் புத்தியில் உறைத்தது வேலுச்சாமிக்கு. காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது? சுண்டு விரலைப் பற்றிக்கொண்டு தன்னைச் சுற்றி சுற்றி வந்த பெண் இன்று தன் கல்யாணத்தைப் பற்றி, தானே பேசுகிறாள்.

சிவகாமியின் பார்வையில் என்ன படித்தானோ தெரியவில்லை, வேலுச்சாமி உடன் சொன்னான், ‘வரச் சொல்லம்மா… பேசிக்கலாம்’.

கொஞ்சமாவது எதிர்ப்பை எதிர்பார்த்திருந்த வெண்ணிலாவுக்கு இந்த பதில் அதிர்ச்சியளித்தது.  ஓடி வந்து அப்பா அம்மாவைக் கட்டிக்கொண்டாள்.

‘மற்ற அப்பா, அம்மாக்களைப் போல ஏம்ப்பா என்னத் திட்டல?’ என்றாள்.

சிவகாமி சொன்னாள், ‘ஏன்னா, நீ இதுவரைக்கும் உன் வாழ்க்கையில் எந்த தப்பான முடிவும் எடுத்ததில்ல. அந்த நம்பிக்கைலதான் நீ எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்க குறுக்க நிக்கறதில்ல’.

வெண்ணிலாவின் திருமணம் பெங்களூருவில் சிறப்பாக நடந்து முடிந்தது.

மதில் சுவருக்கு அப்பால் இருந்து லோகநாதனின் குரல் கேட்டது. ‘டேய் வேலு.. ஒரு நிமிசம் வந்துட்டுப் போ’.

காரணமில்லாமல் அண்ணன் கூப்பிட மாட்டார் என்று எண்ணிக்கொண்டே அவர் வீட்டிற்குள் சென்றபோது அதிசயமாக அவரின் இரண்டு மகன்களும் வீட்டில் இருந்தனர்.

‘பெரியவனுக்கு இந்த முறை எம்.எல்.ஏ. சீட் கொடுப்பதாக கட்சியில் சொல்லியிருக்கறாங்களாமா.. ஆனா எலெக்சனில் செலவு செய்ய கையில் பணம் இருந்தால்தான் சீட் உறுதியாக்கப்படுமாம். சின்னவனும் திருப்பூரில் பனியன் கம்பெனி வைக்க பணம் கேட்கிறான். அதனால என்னோட பத்து ஏக்கர் நிலத்தையும், இந்த வீட்டையும் வித்து ரெண்டு பேருக்கும் கொடுக்கலாம்னு இருக்கேன். இப்ப உன்ன கூப்பிட்டது எதுக்குன்னா… நீ நிலத்தை வாங்கிக்கறயா? இல்ல வெளியில யாருக்காவது கொடுக்கட்டுமான்னு கேக்கத்தான்’ என்றார்.

ஒரு கணம் அதிர்ந்து போன வேலுச்சாமி, ‘அண்ணா நல்லா யோசனை பண்ணி செய்யலாமே? எல்லாத்தையும் வித்திட்டா கடைசி காலத்தில உங்களுக்குன்னு எதுவும் இருக்காதே?’ என்றார் தழதழப்புடன்.

‘சித்தப்பா… இங்க உங்கள கூப்பிட்டது நீங்க வாங்கிக்கறீங்களா இல்லையான்னு கேட்கத்தான். பஞ்சாயத்துப் பண்ண அல்ல’ என்றான் பெரியவன் கண்டிப்புடன்.

முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்று தெரிந்தவுடன் பட்டென பதில் சொன்னான் வேலுச்சாமி. ‘நிலத்தை வாங்குமளவிற்கு என்னிடம் பணம் இல்லை. எல்லாம் புள்ளைங்க படிப்பிற்கே சரியாப் போச்சு. நீங்க வேற யாருக்காவது கொடுத்திருங்க’.

லோகநாதன் பத்து ஏக்கர் நிலத்தையும் வீட்டுடன் சேர்த்து விற்றுவிட்டதாகவும், வீட்டில் குடியிருப்பதற்கு ஒரு வருடம் வரை, வீட்டை வாங்கியவர் அனுமதி கொடுத்திருப்பதாகவும் ஊரார் பேசிக்கொள்வதிலிருந்து தெரிந்து கொண்டனர் வேலுச்சாமியும், சிவகாமியும்.

பணத்தை பையன்கள் இருவருக்கும் சரிபாதியாக லோகநாதன் பிரிந்த்துக் கொடுத்து விட்டார் என்றும் காற்றுவாக்கில் செய்தி வந்தது. பெரியவன் கட்சிக்கு பணத்தைக் கட்டி அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. சீட்டை தனக்கு உறுதி செய்து கொண்டான்.  மீதமுள்ள பணத்தை உபயோகித்து தொகுதியில் பிரச்சாரத்தையும் சுறுசுறுப்பாக ஆரம்பித்து விட்டான். ஆனால் விதி வேறு மாதிரி வேலை செய்தது.

நாமினேசன் தாக்கல் செய்ய இரண்டு நாள் இருக்கும்போது, எதிர்கட்சி ஆட்களிடம் ஏற்பட்ட கொடிக்கம்பம் நடும் சண்டையில், உணர்ச்சிவசப்பட்டு ஒருவனை பட்டப்பகலில் வெட்டிக் கொன்று விட்டான் பெரியவன். அவன் நம்பியிருந்த கட்சி, கருணையின்றி அவனைக் கை கழுவி விட, பத்து வருட கடுங்காவல் தண்டனையில் ஜெயிலுக்குச் சென்று லோகநாதனையும், பழனியம்மாவையும் துயரத்தில் முழுக வைத்தான் பெரியவன். அவன் கொண்ட ஒரு நிமிட வெறி, அவன் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.

அண்ணனுக்கு தம்பி சளைத்தவன் இல்லை என்று நிரூபித்தான் சிறியவன். கம்பெனி தொடங்குவதாகச் சொல்லி வாங்கிச் சென்ற பணத்தை யாரோ ஒரு மோசடிக்காரனின் பேச்சைக் கேட்டு ஏமாந்து, கேரளாவிற்கு எடுத்துச் சென்று நோட்டு இரட்டிப்பாக்கும் கும்பலில் சிக்கி பணத்தை இழந்தது மட்டுமின்றி, தங்கியிருந்த ஹோட்டல் ரூமில் மின்விசிறியில் கட்டித் தொங்கவிடப்பட்டான். அவனின் பணத்தை உபயோகித்தே, அது தற்கொலை என்று கேசை முடித்தது அந்த மோசடிக் கும்பல்.

எல்லாத் துயரங்களிலும் வேலுச்சாமியும், சிவகாமியும் அருகில் இருந்து லோகநாதனும், பழனியம்மாளும் உடைந்து போகாமல் பாதுகாத்தனர். இருவரையும் தனிமையில் விடாமல் யாராவது ஒருவர் அருகில் தொடர்ந்து இருந்து ஆறுதல் கூறி வந்தனர்.

ஒரு தீபாவளி நாளன்று ஊருக்கு வந்திருந்த வெண்ணிலாவும், நட்சத்திராவும் அப்பா அம்மாவுடன் பெரியப்பா வீட்டிற்கு வந்தனர்.

கையில் வைத்திருந்த பத்திரத்தை பெரியப்பாவிடம் கொடுத்த வெண்ணிலா சொன்னாள் ‘நானும், தங்கச்சியும் இந்த வீட்டை வாங்கியவரிடம் இருந்து கொஞ்சம் அதிக தொகை கொடுத்து வாங்கி,  பழையபடி உங்க பெயருக்கு  மாற்றி விட்டேன். இனி யாரும் உங்களை வீட்டை விட்டுப் போகச் சொல்ல முடியாது. அது மட்டுமல்ல.. நாளை முதல் உங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு செய்யவும், உங்களை கவனித்துக் கொள்ளவும் ஒரு அம்மாவை ஏற்பாடு செய்துள்ளோம். அவங்க எப்பவும் உங்ககூடவே இருப்பாங்க. மாதா மாதம் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் மளிகைக் கடையிலிருந்து இரண்டு வீட்டுக்கும் வந்து சேர்ந்து விடும்.  நேரம் கிடைக்கும்போதெல்லாம் அப்பாவும், அம்மாவும் இங்கே வந்து உங்களை கவனித்துக் கொள்வார்கள். இன்னும் ஏதாவது தேவைன்னா கேளுங்க பெரியப்பா’ என்றாள் வெண்ணிலா.

தயக்கத்துடன் அவளைப் பார்த்த லோகநாதன்,  ‘ஒண்ணே ஒண்ணு செய்யும்மா… இந்த ரெண்டு வீட்டையும் பிரிச்சுக்கிட்டு இருக்கிற இந்த சுவத்த இடிக்கச் சொல்லும்மா..’ என்றார் குரல் தழதழக்க.

‘நாளைக்கே நான் ஏற்பாடு செய்கிறேன்..’ என்றாள் நட்சத்திரா.

‘கலெக்டர் அம்மாவே சொல்லிட்டாங்க.. அப்புறம் என்னங்க பெரியப்பா’ என்று வெண்ணிலா சொன்னவுடன் சூழ்நிலையின் இறுக்கம் தணிந்து அனைவரின் முகத்திலும் புன்முறுவல் பூத்தது.

கண் இமைகளின் விளிம்பில் நீர் கோர்த்திருந்த பழனியம்மா,  ஜாடையில் வெண்ணிலாவையும், நட்சத்திராவையும் அருகில் வரும்படி அழைத்தாள்.  வாஞ்சையுடன் தன் இரு கைகளாலும் அவர்கள் இருவரின் தலையைத் தடவிக்கொண்டே, ‘நீங்க ரெண்டு பேரும் என் வயித்தில பொறந்திருக்கக் கூடாதா’  என்றார்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கண்ணா…வருவாயா? (கவிதை) – ராஜேஸ்வரி

    இதுதான் நிஜம் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை